Tuesday, December 15, 2015

பீப் பதிவு

காலையில் எழுந்தவுடனே மொபைல் எடுத்துப்பார்த்தேன், வழக்கமா எங்க குரூப்ல நல்ல ஸ்கேண்டில போடுவாங்க. அன்னிக்கு ஒன்னும் வரலை, ப்ச், சரி விடு என்று ஜன்னலைத் திறந்து பார்த்தேன். வழக்கமா வர ஆன்டி அன்னிக்கு காணோம், 2 குழந்தை பிறந்திருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். படபடவென கிளம்பினேன். பைக்கை ஸ்டார்ட் செய்து ரோட்டில் வந்தேன். எவனோ ஒரு பொறம்போக்கு ஆட்டோக்காரன் உரசுற மாதிரி வந்துட்டுப் போனான். வெச்சி நல்லா திட்டிட்டேன். அவுங்கம்மால ஆரம்பிச்சி, அக்கா, தங்கச்சி, ஒருத்தரையும் விடாம திட்டித் தீர்த்தேன். நல்ல வேளை அவன் பாட்டுக்கு ஆட்டோவை நிறுத்தாம போயிட்டான். இவுனுங்களை எல்லாம் ... சரி விடுவோம், அதான் போயிட்டான்ல.




பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் வந்தேன், தங்கையின் ப்ரெண்ட் ஒருத்தி நின்னுட்டு இருந்தா, எப்படியும் பேசி கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கிறேன். எப்பப்பார்த்தாலும் அண்ணா ணொண்ணான்னு கூப்பிட்டு கடுப்படிப்பா. அதுக்குள்ளார பஸ் வந்திருச்சு. தே**** **யன் பஸ் டிரைவர் அஞ்சி நிமிசம் கழிச்சி வந்தாத்தான் என்னவாம்?  இந்த நேரத்தில் டாஸ்மாக் போகுற இரண்டு குடிமகன்கள் அடிக்காத குறையா என்னைத்தாண்டி போனார்கள். அவர்களுக்குத்தெரியாது அங்கே ஏற்கனவே ஒருத்தர் மட்டையாகி தெருன்னுகூட பார்க்காம மட்டையாக கிடந்தான். காலங்கார்த்தாலேயேவாடா? எப்படிடா முடியுது? நமக்கு வேலை இருக்கு, போவோம்.

ஆபீஸ் வந்தேன், தம் பத்த வெச்சி நின்னுட்டு இருந்தேன், போன வாரம் வரைக்கும் ஒன்னா சரக்கடிக்கிற பொண்ணு வந்தா, தம் கேட்டா பத்த வெச்சிட்டு கண்டுக்காம போயிட்டா. அவ எல்லாம் பெரிய பார்ட்டி., கார்ல வரனும் அதுக்கெல்லாம். 8:30 ஆபிஸுக்கு 10:30 மணிக்கு வந்தேன். ஈமெயில் பார்க்கிறதுக்கு முன்னாடி ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம் பார்த்தேன். சிம்பு இவ்ளோ கேவலமா பாடியிருப்பான்னு நினைக்கவே இல்லை. இவனாலதான் இந்தக் கலாச்சாரமே அழிஞ்சு போவுது. ஃபேஸ்புக்ல திட்டிட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சேன். 

Friday, December 11, 2015

முண்டாசுக் கவி


பல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து!
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீ என்ன கட்சியா
ஆரம்பித்தாய்?










பேசினாய் எழுதினாய்,
கரடியாய் கத்தினாய்,
தமிழென்றாய், சுதந்திரமென்றாய்,
சமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,
எவனுக்கு வேணும் உன் வார்த்தை,
இடுப்பு மச்சம் தெரியுதாம்
கிளம்புகிறோம் வெண்திரைக்கு.



உனக்கும் ஜாதிமுலாம் பூசிவிட்டோம்
மறைத்துக்கொள் உன் முகத்தை,
முண்டாசு எதற்கு இருக்கிறது?
அன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,
தலைமேலே இடியே விழுகிறது.

உனக்கு இன்று பிறந்தநாளாமே
யாருக்குத் தெரியும்
எதற்கு தெரிய வேண்டும்?
தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?
வாக்களித்தால் காசு கிடைக்கும்,
உனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா?

அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

உனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்
புத்தகத்தில் வருமென காத்திருப்பவர்கள்.
மனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு
மட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.

பாரதத்தில் பிறந்தாய்,
பாரதியாய் வாழ்ந்தாய்,
பாராமுகமாய் இருக்கிறாய்,
பத்திரமாய் மறக்கப்படுவாய்!

வாழ்க தமிழனும், தமிழும்!

Friday, September 11, 2015

அடக்க முடியாத திமிர்

அந்த பெண்ணிற்கு சுமாராக 42-45 வயதிற்குள் இருக்கலாம்.. அந்தக் கால பெண்கள்,  40 வயதுகளில் மகளிர் சபாக்களுக்குப் போவார்கள். வீட்டுக்காரரும் வேலைக்குப் போய்விட, பசங்களும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போய்விட நேரத்தை தள்ள முடியாமல் கிளப்பு கடைக்குள் தஞ்சம் புகுவார்கள். அதுவரைக்கு வராத பெண்ணியம் வரும், கை வைக்காத ஜாக்கெட்டும், பொருத்தமே இல்லாத உதட்டுச்சாயமும், நுனிநாக்கு ஆங்கிலமும் வரும். இதுவெல்லாம் 80களின் சினிமாவில் நடப்பதாக எண்ணிக்கொள்ளவும்.

சரி, நடந்த விசயத்திற்கு வருகிறேன். புது  வேலையிடம், அறிமுகங்கள் ஆகும் நேரம் இது. என் தலை ஒரு ஆள் சொல்லி சந்திக்கச் சொல்லியிருந்தார். அது நம்மூர் வடக்கத்து அம்மணி என்று பேரைப் பார்த்தவுடனே தெரிந்தது. சில பல ஈமெயில்களுக்குப் பிறகு அம்மணி என்ன சந்திக்க வருவதாகச் சொன்னார். சொன்ன மாதிரியே அம்மணி நேராக என் இடத்திற்கே வந்தார், என் பெயரைச் சொல்லி நாந்தானா என உறுதி செய்துகொண்டார். பிறகு ஆரம்பித்தார், சரியா 10-12 நிமிடங்களுக்கு இடைவிடாத பேச்சு அதுவும் பூராவும் ஹிந்தியில், வேலை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.  இடை இடையே ஆங்காங்கே சிரிப்புகள் வேற. கண்ணை உருட்டி உருட்டி வேறு பேசிக்கொண்டே இருந்தார். எதுக்கும்மா இந்த ஜோதிகாத்தனம் என்று கூட கேட்க நினைத்தேன். நினைத்ததோடு சரி.. பேசி முடித்து ஒரு பெரிய மூச்சை வாங்கிவிட்டு சரியா என்று ஆங்கிலத்தில் கேட்டார். நானோ, சொல்வதற்கு 2 இருக்கிறது என்றேன்.

அவை 1. யார் பேசினாலும் அவரை இடை மறித்துப் பேசும் பழக்கம் எனக்கில்லை, அவர் பேசி முடிக்கும் வரை காத்திருப்பேன்.
2. எனக்கு ஹிந்தி தெரியாது என்று சொன்னேன்.

எங்கேயோ பல்பு உடைந்த சப்தம் கேட்டது, மனதிற்கு ஒரு இனம் புரியாத வன்மம்.

பாவம் நேத்து போன அம்மணிதான், நான் போட்ட ஈ-மெயிலுக்கு கூட இன்னும் பதில் போடவே இல்லை.

Thursday, August 20, 2015

வெள்ளை நிறத்தழகி

பிடித்தமான பெண்கள் : (மனைவி தவிர்த்து)

தை தமிழில் சொல்வது என்றால் "சைட் அடித்தல்" . பார்த்தவுடன் பிடிக்கும் காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது, 30 களில் காலம் ஓட்டும் எனக்கெல்லாம் ரசிப்புத் தன்மை போய்விட்டதோ என்று எனக்கே சில காலம் தோன்றியது உண்டு. பதின்ம காலங்களில் எல்லாப் பெண்களையும் எப்போது பார்த்தாலும் பிடித்தது. 20 களில் சில வரைமுறைகள் வந்தது, இப்படி இருக்க வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று demand வைத்தது மனது. சைட் அடிப்பதற்கா என்று கேட்கலாம். மனது அப்படிதான் செய்யும். அதுவும் 30களில் எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை, உலக அழகி படம் பார்த்தாலே கண்டுக்காமல் போவதுதான் நடக்கிறது. 30களிலே இப்படியென்றால் 40 களும், 50களும் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. பெண்கள் மீதான ரசிப்புத்தன்மை அற்று போய்கொண்டே இருக்கிறது. இது எனக்கே எனக்கான குணம், பலர் இந்த கருத்தில் மாறுபடலாம்.





வ்வாறாக குணம் கொண்ட நான், நாள் தோறும் 500 முதல் 700 பெண்களை வரை கடந்தாலும் ஒருத்தரையும் நின்று ரசிக்க நேரமிருப்பதில்லை, மனசும் இருப்பதில்லை. ஆனால் இன்று நடந்ததோ வேறான கதை. சுரங்கப்பாதை புகைவண்டியில் ஏறியவுடனே சட்டென பிரகாசமாகியது என் மனது. மீண்டும் பதின்ம காலத்திற்கே சென்றது போல ஒரு கணம் தோன்றியது. பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் என்னை ரசிக்க வைக்கும் அழகு அவளிடம் இருந்தது. அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைக்கையில் சட்டென என்னைப் பார்த்துவிட்டாள் அழகி, வழக்கம் போல் ஒரு சிறு புன்னகையை பரிமாறிக்கொண்டோம். அமெரிக்க பழக்கம் இது. இதுவே நம்மூராக இருந்தால் வேறு கதையாகி இருக்கும். ஆனாலும் ரசிக்க நேரம் தந்தால், அந்தப் பயணம் சற்றேறக்குறைய 7 நிமிடங்கள் மட்டுமே.

வள் தன்னுடைய ஒப்பனை பெட்டி அதாங்க, Handbag எடுத்தார், நிறைய பூச்சுகள் செய்து கொண்டார். ஓர் அழகே அழகைப் பார்த்து அழக்கேற்றிக்கொண்டதை இன்று கண்டேன். அவளுக்கு நல்ல உடல், சரியாக உடை அணிந்திருந்தார். அந்த உடைக்கு அவளுக்கு அழகாக பொருந்தியிருந்தது. பார்த்து பார்த்து ஒப்பனை செய்து கொண்டாள். தும்பைப் பூ போன்ற வெள்ளை உடை, அவ்வளவு பாந்தமாக இருந்தாள், ஓர் அழுக்கும் இல்லை. நான் இறங்கும் நிலையம் வந்தவுடனே அவளும் எழுந்திருத்தாள், நான் இறங்கும் இடத்தில்தான் அவளும் இறங்குகிறாள் போலும். என் முன்னே படியேறினாள், அவளின் வெள்ளை உடம்பிற்கு வெள்ளை உடை அப்படியே ஒத்திருந்தது. முன்னழகைப் போலவே  பின்னழகும் அழகு, வெள்ளைக்காரிக்கு வெள்ளை உடை இவ்வளவு அழகாக இருக்குமா என மீண்டும் வியந்தேன். பின்னே சும்மாவா? கல்யாணத்திற்கு வெள்ளை உடை அணியும் ரகசியம் இன்று அறிந்தேன். பல படிக்கட்டுகள் ஏறி நிலையம் வெளியே வர வேண்டும். கடைசி படிக்கட்டு ஏறும் நேரத்தில் படிக்கட்டின் ஓரத்தில் அவள் எச்சிலை துப்பி விட்டு சென்றாள். 10 அடி தள்ளி குப்பைத்தொட்டி தெரிந்தது.


துவரைக்கும் அழகாக தெரிந்த அவள் அருவருப்பாக மாறிப்போனாள். நிலையம் வெளிவந்து அவளைக் கடந்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன், அவளின் நினைவுகள் எல்லாம் அந்த எச்சிலில் தெறித்துப் போயிற்று.

Wednesday, August 19, 2015

சுடுதண்ணீர் வைப்பது எப்படி?

எல்லாரும் சொல்லிடறாங்க, சுடுதண்ணிதான் வைக்கத் தெரியும் அப்படின்னு. எங்கே சுடுதண்ணியை பக்குவமா வைத்து இறக்குங்க பார்ப்போம்? சரியான சூடு என்று எப்படி கண்டு புடிப்பீங்க? ஆம்பிளைங்க அப்படின்னா,  தண்ணீரை குண்டாவுல புடித்து வைத்துவிட்டு வேற வேலை பார்க்கப் போயிடுவாங்க. திடீர்னு ஞானோதயம் வந்து திரும்பவந்து பார்த்தால், தண்ணீர் மொத்தமும் ஆவியாகி, குண்டா கருகி  இருக்கும், இல்லாட்டி அடுப்பை பற்ற வைக்க மறந்து இருப்பார்கள், எதற்கு சொந்த கதையெல்லாம். முதலில் தேவையான அளவு தண்ணீரை முடிவு செய்து அதற்கு ஏற்றார் போல குண்டாவை எடுத்து தண்ணீர் பிடித்து, அடுப்பை பற்ற வைத்து அதற்கு மேல் இந்த குண்டாவை வைக்க வேண்டும். எந்தளவுக்கு சூடு வேண்டுமோ அந்தளவிற்கு சூடு வரும் வரை, பக்கத்திலேயே இருந்து இறக்கி வைத்துவிட வேண்டும்.

பெண்களாக இருந்தால், அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்னால் குண்டா தெரியுமாறு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளவும், சூடு ஆனவுடன் ஒரு செல்ஃபி, இறக்கியவுடன் ஒரு செல்ஃபி, இப்படி நிமிடத்திற்கு 1 செல்ஃபி வீதம் எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதியவும். இதற்கென்றே நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டிருக்கும் 30 மொள்ள மாறிகள், ச்சோ ச்சுவீட், அழகுங்க, எப்படிங்க உங்களால மட்டும் முடிகிறதென்று கமெண்ட்ஸ் போட்டு தனி மெஸேஜில் வந்து வழிவார்கள்.

ஆண்களாக இருந்தால், ஒழுங்காக வேலை பார்க்கப் போகவும். நீங்க படம் போட்டா ஒருத்தனும் சீண்டமாட்டான்.

#WorldPhotographyDay

Monday, July 27, 2015

கரும்புனல் - ஒரு வாசகனின் பார்வை

ங்கே வந்த புதிதில் அமெரிக்கர்கள் படிப்பதைக்  கண்டு வியந்து பார்த்திருக்கிறேன். புகைவண்டி, பேருந்து, பூங்கா, கடற்கரை என்று எங்கேப் பார்த்தாலும் படித்துக்கொண்டிருப்பார்கள். சிலர் நடந்துகொண்டே கூட படிப்பார்கள். இவைகளையெல்லாம் ஆச்சர்யமாக பார்த்திருந்தேன். இந்த நாவலை நான் புகைவண்டிப் பயணத்தில் ஆரம்பித்து, பிறகு நடந்தவாரே படித்து, வேலை முடித்து  மீண்டும் நடந்தும் பயணத்திலுமாய் தொடர்ந்து படித்து முடித்தேன். அவ்வளவு சுவாரஸ்யமான நாவல் இது.

சூழலியல் பிரச்சினை(Situation Based) மையமாகக்கொண்டு வந்த நாவல்கள் குறைவு, கரும்புனல் இதை மையமாக வந்த முக்கியமானதொரு நாவல் என்கிற முன்னுரையுடனே படிக்க ஆரம்பித்தேன். The Volcano படம் முடித்து திரையரங்கத்தை விட்டு வெளியே வந்தபிறகு தலையில் சாம்பல் இருக்கிறதா என தட்டிப் பார்த்துக்கொண்டேன். காரணம், அந்தப் படம் என் மீது அந்தளவுக்கு வியாபித்து இருந்தது. வெளியே வந்தும் எனக்கு சாம்பல் வாசம் அடிப்பதாகவே இருந்தது எனக்கு. 

ப்படியொரு பாதிப்பு இந்த நாவலிலும் ஏற்பட்டது, நாவல் படித்து பல மணி நேரங்கள் ஆகியும் புழுதியை நான் சுவாசிப்பதாகவே உணர்ந்தேன். அதுதான் நாவலின் வெற்றி. இந்த நாவலுக்கான வெற்றியே, ஒவ்வொரு சிறு இடத்திற்கும் ஆசிரியர் அளிக்கும் சிறு சிறு விளக்கங்களும், அந்த இடத்தை வர்ணிப்பதுமே. சரியான அளவில் நறுக்குத் தெறித்தார் போல் கதாநாயகன் போகும் இடங்களையெல்லாம் நம்மையும் பயணிக்கச் செய்கிறார். கதாநாயகன் இருக்கும் அறை அதற்கு ஓர் உதாரணம், அங்கேயிருக்கும் கழுவாத அலுமினிய டீக் குண்டாவும், குண்டாவில் ஒட்டியிருக்கும் மீந்துபோன டீயுமே நம் மனக்கண்ணில் வந்து ஓடும். பீஹாரின் சிறு கிராமங்களும், சிறு நகரங்களும் இப்படித்தான் இருக்கும் என நம் மனதில் ஓடவிடுகிறார் ஆசிரியர்.  சந்துரு கொல்கத்தா செல்வதாக இருக்கும் காட்சியில் என் மனதில் உண்மையாகவே அந்த நகரத்தின் சப்தம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
 
முதலில் நெருடலாய் எனக்குத் தோன்றிய விசயங்கள் இரண்டு.  புதிதாய் மக்கள் போகும் கிராமம் நான் மலை மீது இருப்பதாய் நினைத்துக்கொண்டிருந்தேன். 2. சட்டென முடியும் இறுதிப்பகுதி, வாசகனை இப்படி சடாரென அடித்தால்தான் நிலைகுலைவான் என்று ஆசிரியர் நினைத்திருப்பார் போலும்
இன்னும் கதாநாயகன் குடியிருந்த அறை, அந்தப் புழுதி, கிராமம், குவாரி, எல்லாம் ஒரு வாரமாகியும் மனத்துக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆசிரியருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். 


 
கதையில் மூன்று நிலை மனிதர்கள்.  
  1. பெருநிறுவன அதிகாரிகள் (Corporate Officers) ஓர் அலுவலகத்திலிருக்கும் உயரதிகாரிகளும் அவரது செயல்பாடுகளும் எண்ணங்களும் எவ்வாறு இருக்கும் எனத் தெளிவாக புரிய இந்தப் புத்தகம் படித்தால் போதும். என்னதான் பெரிய பதவிகளில் இருந்தாலும் அவர்களுக்குள் மேலோங்கி வரும் பண ஆசை, ஜாதி வெறி, நேரம் பார்த்து கழுத்தறுக்கும் திறன், தன் எண்ணங்கள் நிறைவேற தன் கீழ் வேலை செய்யும் பணியாளர்களை பகடைகளாக மாற்றி வெற்றி பெரும் சாணக்கியத்தனம், வேலை ஆக வேண்டுமென்றால் எப்படி எங்கே காய் நகர்த்துவது, அதற்காக எதையும் பலி கொடுப்பது.. 
  2. (ஏழை) ஊர் மக்கள், அவர்களது போராட்டம், அவர்களுக்குள் இருக்கும் பிரிவினைகள், தீவிரவாதம், பிடிவாதம், அவர்களின் ஆசை, மீள முடியாது என்று தெரிந்திருந்தும், அதிலும் தம் ஆசைகளை நிர்பந்திப்பது, படித்த மக்களின் பின்னிருந்தாலும் உணர்வுகளுக்கும் சூழல்களாலும் தவறு செய்வது. ஒரு ஆட்டு மந்தைக்கூட்டமாய் என்னவென அறியாது ஓடும் மக்கள். அவர்களுக்கு தலைமை தாங்குபவர்கள்.
  3. கதாநாயகனின் மனவோட்டமும், நேர்மையும், வீரமென்று சொல்லிக்கொள்ளும் கோழைத்தனமும், மேல் அதிகாரிகளால் வஞ்சிக்கப்படுதலும், நல்லது செய்ய நினைத்த மக்களால் பழி வாங்கப்படுதலும், எந்த காலத்திலும் நல்ல பெயர் வாங்க முடியாது என்கிற நடுத்தர வர்க்கத்துக்கேயான ஒரு பாத்திரம்
இந்த மூன்று நிலை மக்களையும் இணைப்பதே இந்த நாவல், அதுவும், பீஹார் மக்கள், வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள், இருக்கும் விவசாயமும் அற்றுப் போனால் அவர்களின் கதி என்னவாகும் என கதாநாயகி சொல்லும் அந்த ஒரு பக்கம்தான் கதைக்கான மூலமாய் நான் நம்புகிறேன். நிலக்கரி சுரங்க தொழில் இவ்வளவு போராட்டமா என்றும் வியந்துகொண்டிருக்கிறேன். 
 

 
 வாசகர்கள் தவர விடாமல் படிக்கக் கூடிய நாவல் இது.


நூல்: கரும்புனல்
ஆசிரியர்: ராம்சுரேஷ்

வெளியீடு:-
வம்சி பதிப்பகம்
19, டி. எம். சரோன்
திருவண்ணாமலை – 606601

விலை:- ரூபாய் 170/-

Saturday, July 18, 2015

நளபாக பிரியாணி

தையும் வித்தியாசமா செஞ்சே பழகிட்டோமா? அதையே சமையலில் செய்யலாம் அப்படின்னு நினைச்சாலும் நமக்கு ருசி அப்படியே வேணும். கொத்து பரோட்டான்னா நம்மூர் தெருவோர பரோட்டா கடை ருசி வேணும், அதுவும் சால்னா அதிகம் விட்டு, வெங்காயம் தூக்கலா வேணும். நியூ ஜெர்சி எடிசன் மற்றும் சுற்று வட்டாரத்தில் சரியான ஹைதராபாத் பிரியாணி கிடைக்கலைன்னு புலம்பிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பல பேர் ”ஏன் வீட்ல செஞ்சிக்க கூடாதா?” அப்படின்னு உசுப்பேத்த நானும் தயாராகிட்டேன்.

மையல் குறிப்பெல்லாம் அங்கே இங்கே தேடி கிடைச்சது, அப்புறம் வெட்டுறது, நறுக்குவது, தாளிப்பது வேக வைப்பது எல்லாம் சரியா நடந்துச்சு. அளவு பார்த்து பார்த்து எல்லாம் சரியா செஞ்சேன். நமக்கு ருசி அப்படியே வேணும் பாருங்க. குக்கர்ல விசில் விட்டு பக்குவமான நேரத்துல சொன்னபடியே இறக்கிட்டேன்.

நமக்கு ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கிறதும் புடிக்கும். இந்த மூடி வைச்சதுக்கு அப்புறம் மூடி திறக்கிறதுக்கு இடையில் பிரியாணிக்கு தொட்டுக்க அதிகமா வெங்காயம் நறுக்கிப் போட்டு தயிர் பச்சடி செஞ்சாச்சு. ஆங், சொல்ல மறந்துட்டேன் பாருங்க,. ஒரே கல்லுல இரண்டு மாங்கா ஞாபகம் வெச்சிக்குங்க.

குக்கர் திறந்து பார்க்கிறேன், அபாரமான வாசம், ருசி பார்க்கிறேன்..ஹ்ம்ம்ம்ம் அபாரம்ம்ம். அப்படியே என்னைக் கிள்ளிப் பார்த்துட்டேன். நளபாகன் நான் அப்படின்னு மனசுக்குள்ள பெருமிதம்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டா இந்தப் பதிவு முடியாது. பிரியாணி கொஞ்சமா பொங்கல் மாதிரி கொழ கொழன்னு இருந்துச்சு. என்ன பண்ணியும் இனி இதை காப்பாத்த முடியாதுன்னு முடிவு செஞ்சி, தட்டுல போட்டு கரைச்சி குடிச்சிட்டேன். ருசி அபாரம். ஒரே கல்லுல இரண்டு மாங்கா பாருங்க, பொங்கல் + பிரியாணி இரண்டையும் ஒரே சமையலில் முடிச்சாச்சு. கண்டிப்பா இது பிரியாணி மாதிரி ருசி இருந்தாலும் பிரியாணி பதத்துல இல்லவே இல்லை, பொங்கல் பதத்துல இருந்ததால பொங்கிரியாணி அப்படின்னு பேர் வெச்சிட்டேன்.

பின் குறிப்பு:


  1. வாசகர்கள் காறி துப்புவதைத் தவிர்க்க நான் செய்த பிரியாணி படங்களைப் பகிரவில்லை.
  2. இங்கே இருக்கும் படங்கள், இணையத்திலிருது எடுத்து வறுத்தவை


Monday, July 13, 2015

NRIக்கும் வீட்டுத் தரகருக்கும் நடந்த லடாய்

ண்பருக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது, அதாவது முதலீட்டுக்காக (Investment Purpose) ஒரு அடுக்ககத்தை (Apartment) சென்னையில் வாங்க வேண்டும் என்று விரும்பினார் . நண்பர் அமெரிக்காவில் வசிப்பவர், Y2K சமயத்தில் அமெரிக்கா வந்தவர் அப்படியே செட்டிலாகிவிட்டார். இங்கே, அவர் வீடு வாங்கி வசதியாகவே வாழ்ந்து வருகிறார். இந்தியா செல்லும்பொழுதெல்லாம் அங்கே ஏறும் விலைவாசியைக்கண்டு அவருக்கும் ஆசை வந்துவிட்டது. ஒரு வீடு வாங்கிப் போடலாம், 10-15 வருடங்களில் எப்படியும் நல்ல விலைக்கு விற்று ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு வீடு வாங்கி, ரிட்டையர்மென்ட் காலத்தில் அங்கே வாழ்ந்து கொள்ளலாம என்று திட்டம் தீட்டியிருக்கிறார்.

"அவர் ரிட்டையர்மென்ட் காலத்தில் சென்னையின் புறநகர் என்பது கன்னியாகுமரியாகக்கூட இருக்கலாம். " 

 இதற்காக என்னிடம் மற்றும் சில நண்பர்களிடமும், உறவினர்களிடமும், எப்படி வாங்கலாம், எப்படி அணுகுவது என்று ஒரு பெரிய பட்டியலே தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.





ரு நன்னாளில், அமெரிக்காவில் இருந்தபடியே விரலசைக்க ஆரம்பித்தார். உறவினர்களிடம் விசாரித்தார், அதாவது உறவினர்கள் இருக்கும் அபார்ட்மென்டிலேயே ஒரு வீடு தேடினார். எதற்காக என்றால் அவர்கள் பக்கத்தில் இருந்தால் வீட்டைப் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று. சில பல இணைய விளம்பரங்களைத் தேடினார். கடைசியாக சில நம்பத்தகுந்த தரகர்களை (broker) தேடிப்பிடித்தார். அந்தத் தரகர்களின் பட்டியலில் ஒருவரை டிக் அடித்தார். காரணம் அவர் நண்பர் கொடுத்த நற்சான்றிதழ். ஒரு நன்னாளில் அந்தத் தரகை அழைத்தார், இரண்டாவது ரிங்கிலேயே எடுத்த தரகர் "ஹலோ சார், சொல்லுங்க" என்று ஆரம்பித்தார். நண்பர், தான் எப்படி அவரை அழைத்தார் எனச் சொல்ல "சரி சார், இன்னொருக்கா கூப்பிடுங்க" என்று சொல்லி அந்த அழைப்பைத் துண்டித்தார். பிறகு நண்பர் அழைத்த அழைப்பிற்கெல்லாம் தரகர் எடுக்கவே இல்லை. கடுப்பாகிட்டார் நண்பர் "என்னடா, நான் காசைக் குடுக்கிறேன், வீட்டைக் காட்டுறதுக்கு அவனுக்கு என்ன கஷ்டம்?, NRIன்னா எவனுமே இந்தியாவுல மதிக்க மாட்டேங்குறான் " என்று திட்டித் தீர்த்தார்.


பிறகு தரகருக்கு நண்பர் பலமுறை அழைத்தும் தரகர் எடுக்கவேயில்லை. எப்படியோ ஒரு நாள் தரகர் ஃபோனை எடுக்க "ஏன் சார், அமெரிக்காவுல இருந்து கூப்பிடறேன், செலவு ஆகுறது ஒரு பக்கம் இருக்கட்டும், உங்க பகல் நேரத்துலன்னா நான் ராத்திரிதான் கூப்பிடனும், அப்படி கூப்பிட்டாலும் எடுக்க மாட்டீங்கிறீங்களே? காசு கறக்க இது ஒரு வழியா" என்று கடுப்பாகவே கேட்டுவிட்டார் நண்பர்.


அதற்கு கூலாக தரகர் "சார், நீங்க எல்லாம் அமெரிக்காவுல இருக்கீங்களோ ஒழிய சென்னை நிலவரம் தெரியறதில்ல. இன்டர்நெட்டுல கண்டதையும் படிச்சுட்டுப் பேசுவீங்க.  நீங்க அடையாறிலியோ, அண்ணா நகரிலோ வீடு கேட்பீங்க. வெளிநாட்டுல வேலை பார்க்கிறீங்கன்னுதான் பேரு, ஆனா  உங்ககிட்ட அவ்ளோ காசும் இருக்காது.  நூறு வீடு கேட்பீங்க, ஆயிரத்தெடுக்கு குறை சொல்லுவீங்க, அப்புறம் ஒன்னையும் புடிக்காதும்பீங்க.  அது பத்தாம, வீட்டுப் படம், ஒரு ரூம் விடாம, டேப் மொதக்கொண்டு டாகுமென்ட் வரை எல்லாத்தையும் ஈமெயில் பண்ணச் சொல்லுவீங்க. ரெட்டை வேலை சார் எங்களுக்கு. இந்த லட்சணத்துல வாஸ்து சரியில்லை, காத்து வராதுன்னு அங்கே இருந்தே சயிண்டிஸ்ட்டாம் கண்டுபுடிச்சி சொல்லுவீங்க. வீடு புடிச்சி குடுத்தாலும் ப்ரோக்கர் காசுக்கு உங்ககிட்ட தொங்கனும், உங்ககிட்ட காசு வாங்க நாங்க ஃபோனா போட்டு காசு அழுவனும். அந்த நேரத்துலதான் நீங்க காந்தி மாதிரி நியாயம் நேர்மை எல்லாம் பேசுவீங்க. ஏன் சார் ஃபோன் பண்ணி தாலி அறுக்கிறீங்க?" டொக்க்க்க்க்க்க்

அத்தோடு அந்தத்  தரகரை அழைப்பதை நிறுத்திவிட்டார நண்பர்.

Sunday, June 14, 2015

குஜ்ஜூ அம்மணி பேசியது என்ன?

வேலைக்குப் போக நியூயார்க் நகரத்திற்கு 2 மணி நேரம் பயணப்பட்ட வேண்டும். ரயிலில் ஒரு மணிநேரம் போகவேண்டியிருக்கும், மீதம் நடந்தும் நியூயார்க் நகர உள்ளூர் ரயிலும் பயணப்பட வேண்டும். அதில்தான் எவ்வளவு சுவாரஸ்யங்கள் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு, செம மொக்கையாக இருக்கும். அதுவும் அமெரிக்க ரயில் பயணங்களில் நீங்களே உங்களை பொழுது போக்கிக்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஒரு மணி நேரப் பயணத்தை தூங்கிக் கழிக்கலாம் என்று பல முறை நினைத்திருக்கிறேன். ஆனாலும் ஏதோவொன்று தினமும் விழித்திருக்கச் செய்துவிடும். 

இன்று காலை ரயிலில் ஏறியதுமே கண்டேன், கூட்டம் குறைவு, வெள்ளிக்கிழமை ஆதலால் வீட்டிலிருந்தே வேலை செய்வது மக்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. சப்தமில்லாமல் இருந்தது நானிருந்த பெட்டி, இருவர் இருக்கைகளில் ஒருவரும், மூவர் இருக்கைகளில் இருவரும் அல்லது ஒருவராக அமர்ந்து ஆக மொத்தம் பெட்டி “நிரம்பி” வழிந்தது. பலர் அரைகுறை தூக்கத்திலிருந்தார்கள், சிலர் வழக்கம் போல அலைபேசிகளில் பாட்டு கேட்டவாறே திரையை தேய்த்துக்கொண்டிருந்தார்கள். தினசரியைப் பிரித்து பக்கத்துல உக்காந்திருக்கிறவங்க மூஞ்சியில உரசுற வழக்கம் இப்போவெல்லாம் குறைஞ்சிருச்சு. அலைபேசிகளுக்கு நன்றி.

சப்தமில்லாமல் இருந்த பெட்டியில், திடீரென ஒரு அலைபேசி மட்டும் உச்சஸ்தாயியில் அலறியது, ஏதோ பக்திப் பாட்டு போல, குஜராத்தியாய் இருக்கலாம். மூவர் அமரும் இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தார், வயது ஐம்பதுகளில் இருக்கும். நான் பல முறை கண்டிருக்கிறேன். குஜ்ஜூக்களில் பலர் காலை, மாலை என இரு வேளைகளிலும், கையில் பக்தி ஸ்லோகங்கள் கொண்ட காகிதங்களுடன் ஏறுவார்கள், பிறகு மனதுக்குள் படிக்க ஆரம்பிப்பார்கள். நாம் அவர்களைப் பார்த்து நாகரிகம் கருதி சிரித்து, வணக்கம் சொன்னால் லேசாக புன்னகைத்துவிட்டு மீண்டும் ஸ்லோகங்களுக்குள் போய்விடுவார்கள்.

வீறிட்டு பக்திப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தது அவருடைய அலைபேசி. பலர் திடுக்கிட்டு விழித்து திரும்பிப் பார்த்தார்கள், குஜ்ஜூ அம்மணியோ சாவதனமாக, கீழேயிருந்த கைப்பையை எடுத்து, நடு இருக்கையில் பையை வைத்து ஜிப்பை மெதுவாக இழுக்க ஆரம்பித்தார். இப்போது பாட்டு இரண்டாம் முறை ஒலிக்க ஆரம்பித்தது. அமைதியாக பக்கத்தில் அமர்ந்திருந்தவர் மனசுக்குள் கடுப்பாக திரும்பி அந்த குஜ்ஜூ அம்மணியைப் பார்த்தார். கு.அம்மணியோ யாரையும் கண்டுக்காமல் கைப்பையிலிருந்த உள் ஜிப்பை திறக்க ஆரம்பித்தார், நான்காம் முறை பாட ஆரம்பித்தது.. இப்போது அதிக சப்தமாக இருந்தது, பெட்டியிலிருந்த அனைவருமே தூக்கம் கலைத்திருந்தார்கள். அதுக்குள்ளிருந்த அலைபேசியை மெதுவாக எடுத்து..... எடுத்து .. எடுத்து .. 

அருகிலிருந்த அப்பிரயாணிக்கோ தாங்க முடியாத கோபம். அம்மணி, மெதுவாக திரையைப் பார்த்தார், எண் சரியாகத் தெரியவில்லை போலும்,  ஐந்தாம் முறையாக ஒலிக்க ஆரம்பித்தது பாடல்..கண்ணாடியைத் தேடி கைப்பையைப் பிரித்தார். அப்பாடா!!!! பக்திப் பாட்டு நின்றிருந்தது. கு.அம்மணி மெதுவாக கண்ணாடியை எடுத்த போது  அலைபேசி சப்தம் போடுவதை நிறுத்தியிருந்தது. ஃபோன் பண்ணினவங்களே கடுப்பாகி கட் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.  அம்மணி அமைதியாக அலைபேசியில் வந்திருந்த எண்ணைப் பார்த்தார், பார்த்தவர் திடீரெனப் பதறினார், ஏதோ குஜராத்தியில் முனகினார்.



இப்பொழுது அலைபேசி அலற ஆரம்பித்தது. அநேகமாக எல்லோரும் அந்தப் பெட்டியிலிருந்த அனைவருமே விழித்தாயிற்று,  ஆடி மாசத்துக்கு வைக்கும் மாரியம்மன் சவுண்ட் சிஸ்டம் கணக்காக  அலறியது அலைபேசி. பதறியபடி எடுத்த அம்மணி மெதுவாக பேச ஆரம்பித்தார், பேசினார். பேசினார்..கொஞ்சமே சப்தம் அதிகம் போட்டு பேசிவிட்டார் போல, ஒரு வெள்ளைக்கார அம்மணி எழுந்திருச்சி "பேசறதுன்னா உனக்கு மட்டும் பேசு, எங்களுக்கும் சேர்த்துப் பேசாதே” என்று சொல்ல, கு.அம்மணி சைகையாலே சரி சரி என்று சொல்லி பேசிக்கொண்டேயிருந்தார். சில நேரத்தில பக பகவென்று சிரித்தார்.  பொட்டி மனிதர்கள் இப்பொழுது பழகிப் போயிருந்தார்கள், அம்மணி சிரித்தால் பொட்டியே சேர்ந்து சிரித்து ஆரவாரம் செய்தது. சொச்சோ என்றால், 10 பேராவது சொச்சோ என்றார்கள். மொழிதான் தெரியவில்லையோ தவிர அனைத்து மக்களும் அவர் உணர்வை பிரதிபலித்தார்கள். இறங்க வேண்டிய இடம் வந்ததும், சிலர் சிரித்தபடியே இறங்கிப் போனார்கள், சிலர் முனுமுனுத்தபடி...

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் தூக்கம் போயிருது என்பதுதான் அந்த கு. அம்மணியின் பக்கத்து இருக்கையில் உக்காந்திருந்த ஆளுக்குக் கவலை.. 

பின் குறிப்பு: இப்போ முதல் பத்தி படிங்க 

Monday, May 4, 2015

குழந்தைகளுக்கு உகந்ததா தமிழ் சினிமா?

"உங்களுக்குப் பிடிச்ச தமிழ்ப் பாடல் ஒன்றைச் சொல்லுங்கள் பார்ப்போம்"
அன்றைய தமிழ் வகுப்பில் நான் கேட்ட கேள்வி அது.  முதல் வகுப்பு என்றால் 7  அல்லது 8 வயது குழந்தைகள் படிப்பார்கள். ஒவ்வொருவராக சொல்ல ஆரம்பித்தார்கள்.

“வாட் அ கர்வாடு"
“கண்டாங்கி கண்டாங்கி"
“டார்லிங் டம்பக்கு"
“செல்ஃபி புள்ள"
“டங்கா மாரி ஊதாரி"
“டண்டணக்கா டண்டணக்கா” - என்ற வரிசையில்

“நான் தமிழ் சினிமா பாடல்கள் பார்க்க மாட்டேன்"

“ஏன்?” - இது நான்


பாடல்கள் எல்லாம் ரொம்ப விரசமாக இருக்கும், நடிகர்களின் நடன அசைவுகள் எதுவுமே குழந்தைங்க பார்க்கிற மாதிரி இருக்காது. முக்கால் வாசி பாடல்கள் குழந்தைகளுக்கானவை அல்ல” - என்று சொல்லி முடித்தாள் அந்தப் பெண். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்கையில் சிக்ஸருக்கு அடிப்பாரே தோனி,  அந்த மாதிரி அடித்து முடித்தாள் அந்தச் சிறுமி.  


    வ்வளவு பெரிய உண்மை அது. யோசிச்சிப் பார்த்தீங்கன்னா அமெரிக்காவில் குழந்தைகளுக்கான படங்கள் என்று வரும். 95% குழந்தைகள் படத்தைப் பார்த்திடறாங்க. பெரும்பான்மை அரங்கிலும், சிலர் வட்டுக்கள் வாயிலாகவும், இன்னும் சொற்பமானவர்கள் வேறு வழியாகவும். வயது வாரியாக நாடகங்கள், கார்ட்டூன் தொடர்கள் என்று எல்லாம் உண்டு. அவர்களுக்கான தனி சேனல்களே 10+ தேறும். PG 14 or R rated திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் எதுவுமே அந்தந்த வயது வரும் வரை குழந்தைகள் பார்ப்பதில்லை, பார்க்கவும் அவர்கள் விரும்புவதில்லை.  இது அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ப்பு முறை மற்றும் சூழல்களால் என்றே நினைக்கிறேன். அவர்களின் நண்பர்களைச் சந்திக்கையில் அந்தந்த வயது வாரியாக படங்கள் பார்ப்பதாக அமையும். 9+ மட்டுமே நடிகர்கள் நடித்த படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அதற்கு குறைவான வயது உடையவர்கள் பார்ப்பது என்னமோ பெரும்பாலும் கார்ட்டூன் சினிமா, தொடர்களாத்தான் இருக்கும்.  

நமது தமிழ் சினிமா குழந்தைகளுக்கானதா? 99.9% சத்தியமாக இல்லை. பசங்க, கோலி சோடா, பூவரசம் பீப்பீ போன்ற சிறுவர்களுக்கான படங்களில் கூட நிறைய வரம்பு மீறல்கள் இருக்கும். குழந்தைகளுக்கு என்று எடுக்கப்படும் படங்களே கம்மி இதுல அவுங்களுக்கான விசயங்கள் கம்மின்னா எப்படிங்க?

நம்ம மக்கள் தமிழ் சினிமாவை எப்படி எடுக்கிறார்கள் ? உண்மையாகப் பார்த்தால் தமிழ் சினிமா வளர்ந்தவர்களுக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது.  சினிமாவுக்காக எழுதப்படும் திரைக்கதையில் எப்படி ஆரம்பிக்கிறோம்? "எல்லாத் தரப்பும் மக்களும் பார்க்கனும், எல்லாருக்கும் ரீச் ஆகனும்" அது யார் இந்த எல்லாரும்? கல்லூரி மாணவர்கள், 20-30 வயதினர், அதுவும் குறிப்பாக ஆண்கள். இவர்கள்தான் சினிமாவை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள். 30-50 வயது மக்கள், ஆண் பெண் என இருபாலினரும். வயது வந்தோருக்கான காட்சிகள் வைத்திருந்தாலே குழந்தைகள் பார்க்க முடியாது. குழந்தைகளுக்கான படத்தை பெரியவர்கள் பார்க்கலாம். ஆனா பெரியவர்களுக்காக எடுக்கப்படும் படங்கள் எப்படி குழந்தைகள் பார்க்க முடியும்? அதில் வரும், கவர்ச்சி நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், ஆடை குறைந்து விரசமாக நடந்து வரும் நடிகைகள் என்று எதுவுமே குழந்தைகளுக்கான காட்சிகள் கிடையாது. நமது திரைப்படங்கள் பெரும்பாலும் காதல் இல்லாமல் வருவதில்லை. அப்புறம் எந்த லட்சணத்தில் குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதாம்?

இப்படி பெரியவர்களுக்கான திரைப்படத்தை எடுத்துவிட்டு, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அத்தனை விரசங்களையும், மனதில் பதிய விட்டு விட்டு பிறகு அவர்கள் பதின்ம வயதில் என்னத்தை அறுவடை செய்வதாம்? தமிழ் சினிமா என்பதே வணிக நோக்கில் எடுக்கப்படும் படங்கள்தாம் என்பது இங்கே தெரியவில்லையா? அதற்கு சமூக நலன் எல்லாம் கொஞ்சமும் இல்லை. அதுவுமில்லாமல், சிறுவர்களுக்காக எடுக்கப்படும் படங்களை பெரியவர்கள் பார்ப்பதே இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே வந்தாலும் நம்ம மக்கள் எத்தனை படத்தை ஓட விட்டிருக்கிறார்கள். எத்தனை வந்திருக்கிறது என்பது ஒரு புறம் கேள்வி என்றாலும். மணிரத்னம் எடுத்த அஞ்சலி பரவாயில்லை என்கிற ரகத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் படத்தில் குழந்தைகள் எல்லாம் வயதுக்கு மீறி பேசும், கதாநாயகிகள்தான் குழந்தைகள் மாதிரி பேசுவார்கள்.


இந்த 5 வருடங்களாத்தான் சோட்டா பீம் வருகிறது, தவிர தமிழில் வரும் 2 சேனல்களை குழந்தைகள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் மொழி பெயர்ப்பில் காது கொடுத்து கேட்க முடியாதளவுக்கு லோக்கல் மொழி என்கிற பெயரில் கொடுமையான மொழியில் வருகிறது. ஒரு நாள் நான் சுட்டி டிவியை எல்லாம் பாதியில் நிறுத்துவதற்கான காரணம் அதன் வசனங்கள் மட்டுமே.


ஒரு புறம் குழந்தைகளை நல்ல வாசகர்களாக, அதாவது புத்தகங்கள் படிக்க வைப்பதில்லை, அது சரி, பெரியவர்களுக்கு அந்தப் பழக்கம் இருந்தால் தானே? பெரியவர்கள் எல்லாம் சினிமா பார்க்கிறார்கள், சினிமா நிகழ்ச்சிகளை கண்டு களிக்கிறார்கள், நடிக நடிகைகளின் கிசுகிசுக்களைப் பேசுகிறார்கள் என்று பெரியவர்களின் பொழுது போக்கு சினிமாவைச் சுற்றியே இருக்கிறது. அப்படி இருக்கும் சினிமா குழந்தைகளுக்கானது அல்ல என்று தெரிந்தும் குழந்தைகளையும் பார்க்க வைக்கிறார்கள். அதில் வரும் அனைத்து கெட்டப்பழங்களையும் மறைமுகமாக பழக வைக்கிறார்கள். பதின்ம வயதில் கற்பழிக்கும் எண்ணத்தை வளர்த்தது யார்? இளம் வயதில் போதைக்கு அடிமையாகும் பழக்கத்தை எங்கிருந்து ஆரம்பிக்கிறார்கள்?


இப்பொழுது அந்தச் சிறுமி சொன்ன விசயத்திற்கே வருகிறேன். சிறுவ சிறுமியர்களுக்கென இல்லாத ஒரு சினிமாவை ஏன் அவர்கள் பார்க்க வேண்டும்? பார்க்க வைக்க வேண்டும்? பார்த்து கெட்டுப் போக வேண்டும்.

Monday, April 13, 2015

சில்லுகளாய் அவள் சில்மிஷத்துடன் நான்

நீ அழகாய்ப் பிறந்தவள், வசதியானவள், வசீகரமானவள்
பளிச்சிடும் புன்னகையுடன் பிரம்மாண்டமாய் உருவெடுத்தவள்
முதலில் உன்னை நான் படங்களில் கண்டேன், சிலாகித்தேன்
ஒரே முறை உன்னை நேரில் கண்டேன்: உற்று நோக்கினேன்
உனக்கது தெரிய வாய்ப்பில்லை, நம்மூரில் இப்படி ஒரு அழகியென
மனதுள் ஒரு பேரானந்தத்துடன் உன்னைக் கடந்து போனேன்.

பிறகு உன்னைப் பற்றி வந்த செய்தியெல்லாம் சோகமானவை
உன் மீது வைத்திருந்த அபிப்பிராயத்தயெல்லாம் மாற்றியமைத்தவை
அழகியென ஆர்ப்பரித்த உள்ளங்களெல்லாம் 
காரணமறியாமல் உன்னை ஏச ஆரம்பித்த காலம்
நீ மட்டும் உன்னை மாற்றி கொள்ளவேயில்லை
மீண்டும் மீண்டும் உன் புத்தியைக் காட்டிக்கொண்டே இருந்தாய்.



 யிற்று இன்னும் இரண்டு நாட்கள்தாம்,
உன்னைக் காண எனக்கும் அமைந்திருக்கிறது ஒரு வாய்ப்பு
மனதில் திடம் வை, உன்னை அணைக்க  நான் ஆசைப்படவில்லை
கண்கள் நோக்குவோம், அழகில் கரைவோம்,
எல்லை தாண்ட நினையாமல் பயணம் தொடர்வோம்,
தொட்டுவிடாமல் இருவருமே கடந்துவிடுவோம்
அது உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.


மனதில் உறுதி பூண், உடலில் திடம் கொள்,
கட்டவிழும் ஆசையை உள்மனதில் வைத்து பூட்டு,
வந்து போவோரிடம் சொல்
“இவன் நல்லவன் இவனிடம் நான் என்னை இழக்க மாட்டேன்,
சில்லுகளாய் உடைய மாட்டேன்" என்று சொல்,
திரும்ப திரும்ப சொல்,
அழுத்திச் சொல்,
உன்மீது நம்பிக்கை வரும்வரை சொல்,




நான் வந்து திரும்பும் வரை உன்னைக் காத்துக்கொள்,
அதன் பிறகும் தீர்க்கமாய் இரு,
உன்னை ஏசும் ஊர் உலகத்துக்கு நீ உடையாதவள் என்று உரக்கச் சொல்
என்னைக் காணாமல் என்றும் உடைந்து விட மாட்டேன் என்று சத்தியம் செய்
என் இனிய அழகிய
சென்னை விமான நிலைய கூரையே!!!

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)