Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, May 11, 2016

Whatsapp விவாதங்கள்

அமெரிக்காவில் வாழ் மக்களின் whatsapp குழுக்களில் ஒன்று. தினமும் காலை எழுந்தததிலிருந்து இரவு படுக்க போகும் வரை பெரிய அடிதடி நடந்துகொண்டே இருக்கும். அதுவும் எதற்கு தெரியுமா? அடுத்து அம்மா ஆட்சி வேண்டுமா? ஐயா ஆட்சி வேண்டுமா? இல்லை கேப்டன் ஆட்சி வேண்டுமா என்று.  இதில் கொடுமை என்னவென்றால் இணையத்தை விட கேவலமா எதிர் கட்சியைத் திட்டிக்கொள்வதுதான், குழுவில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்கள் என்பது வேறு விசயம். இதில் குறிப்பிடத்தக்க இன்னோர் விஷயம், குழுவில் இருக்கும் பாதிபேருக்கு இந்தியாவில வாக்குரிமை இல்லை, அதாவது அமெரிக்க வாசிகளாக மாறி பல ஆண்டுகள் ஆனவர்கள். மீதி பாதிப் பேர் வாக்களிக்க எக்காரணம் கொண்டும் போக மாட்டார்கள். இவர்கள்தான் தமிழகத்தின் அடுத்த ஆட்சியைப் பற்றி விவாதிப்பவர்கள்.

காலையில் அந்தக் குழுமம் போனவுடன் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதையும் நடிகர் கமல் அவர்கள் சொல்லி வைத்துவிட்டார் "போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா"

Thursday, June 27, 2013

பர்ஃபி செய்வது எப்படி?

இது அரசியல் பதிவு அல்ல:




முதலில் பெரிதாய் 40 தேங்காய்களை வாங்கித் தந்துவிட வேண்டும். கூட்டாளியே அதைத் துருவி தந்துவிடுவார்கள் என்பதுதான் பேசப்படாத ஒப்பந்தம். தராவிட்டால் கூட்டாளியின் வீட்டுக்கே விமானம் ஏறிப் போய் துருவித்தர நிர்பந்திக்க வேண்டும். கூட்டாளி துருவித்தர ஒப்புக்கொண்ட பிறகு நாம் இங்கே பர்ஃபி செய்ய ஆயத்தமாக வேண்டும். கூட்டாளி தேங்காய் வாங்கியதில் பிரச்சினை என்று நம் மேலேயே பிராது கொடுக்க, சர்க்கரை வாங்க அனுப்பிச்ச ஆளை திரும்ப வரச்சொல்லிவிட வேண்டும். பிராதை, அதோ இதோ என்று இழுவையில் இருக்கும் போது, உங்க பர்ஃபியே வேண்டாம், குடுத்த தேங்காய்களைத் திரும்ப குடுங்க என்று கேட்டு திரும்ப வாங்கி வந்துவிட வேண்டும். கூட்டாளியே ரெண்டு பேரை டெம்போ வைத்து நம் வீட்டு வந்து பர்ஃபி செய்யச் சொல்லி கேட்பார்கள்.அப்பொழுதும் மசியாமல் பர்ஃபி செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட வேண்டும். அதற்காக கூட்டாளியிடத்தில் துருவ சென்ற நமது ஆட்களையும் திரும்ப வரச்சொல்லி விடவேண்டும்.

திடீரென்று மகளுக்கு பர்ஃபி சாப்பிட ஆசை வந்தவுடன், மறுபடியும் தேங்காயை வாங்கி கூட்டாளியிடமே திரும்ப தந்துவிட வேண்டும்.

அப்புறம்?

அப்புறமா, முதல் வரியிலிருந்து ஆரம்பிக்கவும்..

==00==
பர்ஃபியை மைய்யமாக வைத்து சமீபத்தில் வந்த நகைச்சுவை காணொளி இங்கே 1:02லிருந்து பார்த்துக்கொள்ளவும்


பி.கு: இந்தப் பதிவு எந்த வித அரசியல் சம்பவங்களையும் குறிப்பது அல்ல. நீங்களாகவே ஒப்பிட்டுக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

Tuesday, March 19, 2013

திமுக விலகல் - ஒரு அலசல்

காங்.  கூட்டணியிலிருந்து திமுக விலகியது.


அதிமுகவுக்கு, இது பெரும் சங்கடத்தை கொண்டு வந்து தந்திருக்கிறது. ஏற்கனவே மாணவர்கள் போராட்டம், இதில் இவர்களும் இன்னொரு பக்கம் செய்லபட, வரும் பாராளமன்ற கூட்டணியில் குழப்பத்தை தாராளமாகச் திமுக செய்யும் என்பது இன்னொரு கவலை. இது நாள் வரையில் அமைதி காத்து வந்த முதல்வரே  "இது ஒரு நாடகம்" என்று அறிக்கை விடுமளவுக்கு  மாற்றியிருக்கிறது. அதிமுகவுக்கு கையறுநிலையை கொண்டு வந்ததில் கலைஞர் மீண்டும் அரசியல் சாணக்கியன் என்று நிரூபித்திருக்கிறார்.

காங். இது பெரும் பின்னடைவே, தமிழகம் மட்டுமல்லாமல், தேசியளவிலும். ஆட்சியிலிருந்தாலும், திமுகவின் விலகல் ஒரு தர்ம சங்கடத்தை அளித்துவிட்டது.

தமிழகளவில், மக்களுக்குத் தெரியும் இந்த விலகல் எந்த விதமான பயனும் இல்லையென. சதுரங்க ஆட்டத்தில் வெட்டு நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு அப்பால், சம்பந்தமேயில்லாமல் ஒரு மூவ் நடக்குமே அதுபோலத்தான் என்பது தமிழக மக்களின் பார்வை. காரணம் மாணவர்களின் முன்னெடுப்பு, டெசோவை அசாதாரணமாக கீழே தள்ளியது.

சோ, சுப்ரமணிய சாமி போன்றவர்களுக்கு வேலைக்கான நேரம் வந்துவிட்டது. டீ பார்ட்டி, அரசியல் கலந்தாலாசோனைகள், செவ்விகள் என இனி தேர்தல் வரைக்கும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பல லாபியிஸ்ட்டுகள் தமிழகம் நோக்கி வர விமானத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்திருப்பார்கள்.

இந்தியளவில், திமுகவிற்கு இது பெரிய வெற்றி, CNN ஆரம்பித்து விட்டது,. இன்னும் 2 நாட்களுக்கு TRP Rating இறங்காமல் திமுகவின் விலகலை வைத்து நிகழ்ச்சிகள், செவ்விகள் என ஒப்பேற்றிக்கொள்வார்கள்.


யாருக்கு எப்படியோ திமுக தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. இறுதிக்கட்ட ஈழப்போரின் போது கையறுநிலையிலிருந்தவர்கள் திமுக தொண்டர்கள்தான். இனிமேல் கொஞ்சம் சுவாசித்துக்கொள்வார்கள்.

Monday, March 18, 2013

ஈழப் போரில் திரு.கருணாநிதியின் பங்கு -எனது சாட்சியம் ம.செந்தமிழன்

முன்னுரை: இணையத்துல வந்த ஒரு சேதிதாங்க இது. நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

ஈழப் போரை இலங்கையும்,இந்தியாவும் இணைந்து நடத்தியதை அறிவோம். தமிழகமும் நடத்தியதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அன்றைய முதல்வர் திரு.கருணாநிதி, சிங்களப் படையின் தமிழகப் பிரிவு பிரிகேடியராகத்தான் நடந்து கொண்டார்.

எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
மாவீரன் முத்துக்குமார் இறுதி நிகழ்வில் கூடிய கூட்டம் வரலாற்றில் குறிக்கத்தக்கது. ஆயினும், அச்செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவராமல் தடுக்கப்பட்டது.

மாணவர் போராட்டங்கள் நாடெங்கும் நடந்தன. அவற்றின் தாக்கம் பொதுமக்களைத் தாக்கிவிடாமல், திரு.கருணாநிதி பல்வேறு நாடகங்களை நடத்தினார்.
திரு.கருணாநிதியின் முதுகுவலி, முல்லைத்தீவில் கொல்லப்பட்ட மக்களின் கதறலைக் காட்டிலும் வேதனைமிக்கதாக பெரிதுபடுத்தப்பட்டது. ’கொத்துக் குண்டுகள் வீசப்படுகின்றன’ என நாம் கதறியபோதெல்லாம், அவர் ‘சகோதர யுத்தம் நடத்தியவர்கள்தானே விடுதலைப் புலிகள்’ என்று அறிக்கை மேல் அறிக்கையாக வாசித்தார்.

அந்த நாட்களில் அவரால் ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் கூட முழுமையாக வெளிவரவில்லை.
அந்த ஒடுக்குமுறைகளுக்கு நான் ஒரு சாட்சி.

திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில், படுகொலைகளுக்கு எதிரான ஊர்வலம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. நானும் கலந்து கொண்டேன். ஊர்வலத்தின் இறுதியில், இன துரோகம் செய்யும் காங்கிரஸ் தலைவர்களின் உருவம் பொறித்த பதாகைகளை நானும் சில இளைஞர்களும் சாலையில் வைத்துக் கொளுத்தினோம். அப்போது, காவல்துறை மீதிருந்த அச்சத்தினால் சலனப்பட்ட தம்பி ஒருவர் தவறுதலாக, என் கால்களில் பெட்ரோலை ஊற்றிவிட்டார். பதாகையில் எரிந்த தீ என் கால்களில் எரிந்தது. இடது கால் கடுமையாக தீயில் வெந்த நிலையில் அங்கேயிருந்த கடையில் படுத்திருந்தேன்.

தஞ்சையிலிருந்து வந்த அதிரடிப் படையினர், சாலையில் நின்ற பொதுமக்களை எல்லாம் அடித்து நொறுக்கி வேனில் ஏற்றினர். ’தீ வைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ எனக் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர். எங்கள் இடத்திற்கு மிக அருகில் அவர்கள் வரும்போது, நானும் க.மாதவன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சில நண்பர்களும் அவ்விடத்தின் பின்னே இருந்த கழிவுநீர்க் குட்டையில் ஒளிந்துகொண்டோம்.

அதன் பின்னர், எங்களால் வீடு திரும்பவே இயலவில்லை. எல்லா வீடுகளிலும் சோதனைகள், கைதுகள். மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இயலாமல், வெந்து தசை கிழிந்த காலுடன் இரவெல்லாம் அலைந்து திரிய வேண்டி இருந்தது.

என் மனைவி அப்போது கருவுற்றிருந்தார். என் வீட்டில் தங்கினால், என்னால் அவரது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் தொல்லை வரும் என்பதால், வேறொரு கிராமத்தில் தலைமறைவாகத் தங்கிக் கொண்டிருந்தேன்.

செங்கிப்பட்டியைச் சேர்ந்த திரு.குழ.பால்ராசு, அவர் மகன் திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி ஆகியோரைத் தேடி ஏறத்தாழ இருபது கிராமங்களில் காவல்துறை சுற்றித் திரிந்தது. நள்ளிரவு வேளைகளில்,ஆண்கள் இல்லா வீட்டின் கதவைத் தட்டி, பெண்களிடம் ‘சோதனை’ என்ற பேரில் முறையற்று நடந்து கொள்வது காவல்துறையின் அன்றாட நடவடிக்கை ஆகிவிட்டது.

திரு.குழ.பால்ராசு, அப்பகுதியின் த.தே.பொ.க தலைவர். அவர் காடுகளுக்குள் பதுங்கி இருந்தார். திரு.ஸ்டாலின், 18 வயது இளைஞர் அவர், காடு காடாகத் திரிந்து, உணவின்றி வாடிக் கொண்டிருந்தார்.

இவ்விருவரும் கிடைக்கவில்லை என்பதால், திரு.பால்ராசுவின் இளையமகன் அப்புவைக் காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். அப்பு அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்! ‘உன் அப்பாவும் அண்ணனும் சரண்டர் ஆனாத்தான் உன்னை விடுவோம்’ என்று அவனிடம் மிரட்டல் விடுத்தது காவல்துறை.

ஏறத்தாழ ஒருவார காலம். செங்கிப்பட்டி சுற்று கிராமங்களில், மக்கள் வேலைக்குச் செல்ல முடியவில்லை, உறங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை. எந்நேரமும் காவல்துறை மற்றும் ஆள் காட்டிகளின் கண்காணிப்பிலேயே உழன்றனர் மக்கள்.
நான் வெகுதொலைவில் ஒரு கிராமத்தில், தங்கிவிட்டேன். ஏறத்தாழ 60விழுக்காடு தீக்காயம். முறையான மருத்துவம் பார்க்க இயலாததாலும், ஒளிந்துகொள்வதற்காக கழிவு நீர்க் குட்டையில் பதுங்கியதாலும் காலிலிருந்து துர்நாற்றம் வீசத் துவங்கியது.

ஊடகங்களில் இந்த நெருக்கடி நிலையைப் பதிவு செய்தால், ஓரளவு தளர்வாக இருக்கும் என்றெண்ணி, எனது ஊடக நண்பர்களுக்குப் பேசிக் கொண்டே இருப்பேன். எல்லோரும் பதற்றமடைந்தார்கள், வருந்தினார்கள். ஆனால், எவராலும் இச்சம்பவங்கள் குறித்த ஒரு துண்டுச் செய்தியைக் கூட கொண்டுவர முடியவில்லை.

அப்படி ஒரு நெருக்கடியை திரு.கருணாநிதி அரசு ஊடகங்கள் மீது தொடுத்திருந்தது நண்பர்களே!
வழக்கில் தொடர்புடைய போராட்டக்காரர்களைச் சரிவரக் கைது செய்யவில்லை என்பதற்காக, ஒரு காவல்துறை ஆய்வாளர் மீது துறைவாரி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.

அதாவது, அவரது இவ்வளவு கெடுபிடிகளும் போதாது, மேலும் ஒடுக்குமுறையை ஏவ வேண்டும் என்று பொருள்!

அதன் பின்னரும், அவர்கள் முகாமையாகத் தேடிய எவரையும் அவர்களால் கைது செய்யவே இயலவில்லை. இறுதியாகப் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது காவல்துறை. திரு.ஸ்டாலின், திரு.ரெ.கருணாநிதி, திரு.மாதவன் உள்ளிட்ட சிலர் ஒப்படைக்கப்பட்டனர். தேடுதல் வேட்டையைக் காவல்துறை நிறுத்திக் கொண்டது.

நான், தஞ்சைக்குத் திரும்பினேன். சீழ் பிடிக்கும் நிலையில் இருந்த கால், மெல்ல மெல்ல குணமானது. ஏறத்தாழ இரு மாதங்களுக்குப் பின், மீண்டும் நடக்கத் துவங்கினேன்.

அதன் பின்னர், காங்கிரஸ் – தி.மு.கவிற்கு எதிரான ஆவணப்படம் ஒன்றை இயக்கினேன். இளந்தமிழர் இயக்கம் சார்பில் அப்படத்தைப் பரவலாகக் கொண்டு செல்ல முற்பட்டபோது, மீண்டும் தேடுதல் வேட்டை, சோதனை, கெடுபிடிகள்.

என் வீட்டில் ஏறத்தாழ 40 காவல்துறையினர் சோதனை செய்தனர். தெரு முழுக்க காவல்துறைப் படை நின்றது. இவ்வாறு அவர்கள் செய்வது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே. இந்தச் சோதனை நடந்தபோது, நான் வேறொரு இடத்தில் ஏறத்தாழ 5000 குறுவட்டுகளுடன் இருந்தேன். என்னுடன், மு.நியாஸ் அகமது இருந்தார்.

சோதனையிட்ட காவலர்கள் என் அம்மாவிடம் விசாரணை செய்தனர்.
வீடு முழுதும் சல்லடைபோட்டு விட்டு, எதுவும் கிடைக்காமல் திரும்பினர். அன்று இரவே, நாங்கள் மீண்டும் ஓடத் துவங்கினோம். இம்முறை நண்பர்கள் க.அருணபாரதியும், வெ.இளங்கோவனும் இணைந்து கொண்டனர்.

அந்த நேரத்தில், சென்னை ரிச்சி தெருவில் கூட ஒரே நேரத்தில் 10 குறுவட்டுகள் வாங்க முடியாது. எங்கள் தேவையோ ஏறத்தாழ 50,000 குறுவட்டுகள். வெளியே சொல்லவே இயலாத உத்திகளை எல்லாம் கையாண்டு, பக்கத்து மாநிலத்துக்குச் சென்று, குறுவட்டுகள் வாங்கி, ஊர் ஊராக அலைந்து தங்கி, அந்த ஆவணப்படத்தை ஆயிரக் கணக்கில் படிகள் எடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பினோம்.

ஈரோட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். நான் தேநீர்க் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறேன். விடுதி வரவேற்பறையில் காவல்துறையினர் விசாரணை செய்துகொண்டிருக்கின்றனர். ஸ்லீவ்லெஸ் பனியன், பெர்முடா கால்சட்டையோடு தப்ப வேண்டியிருந்தது. அருணபாரதியோ, அறையின் உள்ளே இருக்கிறார். அவரது மடிக் கணினியில், போர்க் காட்சிகள் அடங்கிய ஒளிப்படங்கள் இருந்தன.
அலைபேசியில் அவருக்குத் தகவல் கூறி, சில நொடிகளில் தப்பினோம்.

இப்படியாக நாங்கள் ஓடிக் கொண்டே இருந்தோம். நாங்கள் மட்டுமல்ல, எம் போன்ற ஆயிரக் கணக்கானோர் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருந்தோம்.

இவை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஏனெனில், அப்போது ஊடகங்களில் திரு.கருணாநிதி நடத்திய ‘ஒருவேளை உண்ணாவிரதம், அவரது முதுகு சிகிச்சை, அவரது போர் நிறுத்தக் கடிதங்கள், போர் நிறுத்தப்பட்டது என்ற வெற்றிச் செய்தி, மழைவிட்டும் தூவானம் விடாததுபோல இன்றைக்கு சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற உவமை நயமிக்க அறிவிப்பு’ போன்ற செய்திகள் மட்டுமே பதிவாகிக் கொண்டிருந்தன.

நானும் அருணபாரதியும், வெ.இளங்கோவனும், நியாஸ் அகமதுவும் இன்னும் சில தோழர்களும் சில சாட்சிகள் மட்டுமே. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் வெகு சாதாரணமானவை என்னுமளவுக்கு, நாட்டில் ஒடுக்குமுறை நிலவியது. எண்ணற்றோர் பிழைப்பிழந்து, குடும்பம் இழந்து, நிம்மதி தொலைத்துப் போராடிக் கொண்டிருந்தனர். 19 பேர் தீக்குளித்தே இறந்தார்கள் எனும்போது, அப்போதைய மனநிலையை உணர முடிகிறதல்லவா!

எத்தனை வழக்குகள், எத்தனைக் கைதுகள், எவ்வளவு அடி,உதைகள்! கணக்கிலடங்காதவை அவையெல்லாம் நண்பர்களே.

இந்தச் சூழல்களில், எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் பலர். அவர்களில், நண்பர்கள் பா.ஏகலைவன், வெற்றிவேல் சந்திரசேகர், இளையராஜா, எனது உதவியாளர் ரஞ்சித், ஓசூர் வினோத் மற்றும் விமல் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

அந்த நேரத்தில், பேருந்தை மறித்தவர்கள் கூட, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

’சிங்களப்படைக்கு ஆயுதம் ஏற்றிய ராணுவ வண்டிகள் சேலம் வழியாக கோவை வருகின்றன’ என்று குறுஞ்செய்தி அனுப்பியது மாபெரும் குற்றமாக அறிவிக்கப்பட்டது நண்பர்களே! அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நாங்கள் கோவைச் சிறையில் சந்தித்தோம்.

ஈழப் போர்க் காட்சிகள் அடங்கிய ஆவணப்படக் குறுவட்டுகள் வைத்திருந்தால் கைது, அப்படங்களைக் கேபிளில் ஒளிபரப்பினால் கைது, ராஜபக்சே கொடும்பாவி கொளுத்தினால் கைது, தங்கபாலு கொடும்பாவி கொளுத்தினால் கைது, ஊர்வலம் போனால் கைது, ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது, தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே கைது, ஈழப் போர் குறித்த துண்டறிக்கைகளை அச்சிட்டுக் கொடுத்த அச்சக உரிமையாளர்களுக்கு மிரட்டல், ஃபிளக்ஸ் பதாகைகள் அச்சிடுவோருக்குக் காவல்துறையின் எச்சரிக்கைகள், கண்காணிப்புகள் இன்னும் என்னென்னவோ நடந்தன!

ஆகவேதான், சொல்கிறேன், போர் தமிழகத்திலும் நடந்தது!

திரு.கருணாநிதியின் இந்த அணுகுமுறைகளைப் பற்றிய நூல் ஒன்றை வெற்றிவேல் சந்திரசேகர் எழுதியுள்ளார். மிகச் சிறந்த ஆவணம் அது. ’ஈழப் படுகொலையில் கருணாநிதி’ என்பது அந்த நூல்.

ஹிட்லர் தனது ஊடக அணுகுமுறைகள் மற்றும் போர் உத்திகள் குறித்து கூறியவற்றில் சில:
’பெரிய பொய்யர்கள், பெரிய மந்திரவாதிகளுக்கு ஒப்பானவர்களே’
’தாங்கள் ஆட்சி செய்யும் மக்கள் சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பது அரசுகளின் அதிர்ஷ்டம்தான்’
’உண்மை ஒரு விஷயமே இல்லை; வெற்றிதான் முக்கியம்’
’பொய்யைப் பெரிதாகச் சொல்லுங்கள், அதை எளிமைப்படுத்துங்கள், அதேபொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள், நிச்சயமாக மக்கள் அதை நம்பிவிடுவார்கள்’

இவை எல்லாவற்றையும், திரு.கருணாநிதி கடைப் பிடித்தார்; தேர்தலில் வெற்றியும் பெற்றார். இப்பொழுதும் இதே உத்திகளுடன்தான் அவரது தமிழீழ ‘அரசியல்’ நடக்கிறது.

இவ்வாறெல்லாம் அவரை விமர்சிப்பதால், நான் வேறு ஏதேனும் கட்சியின் ’அரசியலை’ ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். இதுவரை, என் விரல்களில் கறை படிந்ததே இல்லை; இனியும் படியப்போவதில்லை.

வரலாற்றில் அக்கறை கொண்டவன் என்பதால், இந்த நேரத்தில் இந்தப் பதிவு ஆவணமாக வேண்டும் என்ற கடமைக்காக இதை எழுதுகிறேன். இது எனது சாட்சியம். அவ்வளவே!

எங்களது இந்த அனுபவங்களிலிருந்து எதையேனும் உணர்ந்துகொண்டு, ஈழ விடுதலைக்கு உங்களால் பங்களிக்க முடியும் என்றால், மனநிறைவடைவோம்.

Source: http://www.twitlonger.com/show/lbdnc4

முடிவுரை: ஒரு படம் மட்டும்தாங்க..

Thursday, January 31, 2013

எங்கே சென்றீர் எமை விடுத்து?


இந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாக்கிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. ஜின்னா இஸ்மாயில் சாஹிபிடம் "சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது" என்றார். கடும் கோபம் கொண்ட சாஹிப் "நண்பர் என அழைத்தீர்கள் என்றுதான் இங்கு வந்தேன். உங்களிடம் யாசகம் கேட்க அல்ல. என்று நாங்கள் வேண்டாம் என்று எங்களைப் பிரிந்து வந்தீர்களோ அன்றே நீங்கள் எங்களுக்கு அன்னியர். எங்கள் தேசத்தில் இந்தியர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைத் தீர்த்துக்கொள்ள இந்தியர்களான எங்களுக்குத் தெரியும். உம் உதவி எமக்குத் தேவையில்லை. விருந்துக்கு என்று அழைத்து என்னை அவமதித்து விட்டீர்கள், எனவே இந்த விருந்தில் இருந்து வெளியேறுகிறேன்" என உடனடியாக கைகழுவி வெளிநடப்பு செய்கிறார் கண்ணியத் தென்றல்.

நேருவை நம்ப வைத்து பின்னர் கழுத்தறுத்து இந்தியாவிற்கு எதிராக சீனா போர் துவங்கிய நேரம். ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை. இந்திய இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேவை என்று அழைப்பு விடுக்கின்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன். அழைப்பைக் கண்ட அடுத்த நொடி தனது இளம் மகனை அழைத்துப்போய் பரங்கிமலை ராணுவ கேம்பில் ராணுவத்திற்கு சேர்த்துவிட்டுத் திரும்புகிறார் பெருந்தகை காயிதேமில்லத்.

பாராளுமன்றத்தில் இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும் மசோதாவின் மீதான விவாதம். தன் தாய்மொழியான தமிழின் தோற்றம், வளர்ச்சி, இலக்கண இலக்கியச் சிறப்புகள் ஆகியவற்றைத் தன் அழகுமொழியில் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்து "இந்திய துணை கண்டத்தின் ஆட்சிமொழியாக இருக்கும் தகுதியும்,உரிமையும் தன் தாய்மொழி தமிழுக்கே உண்டு" என்று முழங்கி இந்தியை தேசிய மொழியாக்கும் தீர்மானத்தைத் தோற்கடிக்கிறார் தலைவர் இஸ்மாயில் சாஹிப்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கண்ணியத் தென்றல் வெளியிட்ட அறிக்கை கருத்து குறித்து அண்ணாவிடம் பத்திரிக்கையாளர்கள் அண்ணாவின் கருத்தைக் கேட்கின்றனர். " அவரது அறிக்கையை நான் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் என்னிடம் இஸ்ரேல் முக்கியமா? இஸ்மாயில் முக்கியமா? என்று கேட்டால் நான் இஸ்மாயில்தான் முக்கியம் என்பேன்! எனவே அவர் எது சொல்லி இருந்தாலும் அதுதான் என் கருத்து" என்று பதிலுரைக்கிறார் அவரது ஆத்ம நண்பர் அறிஞர் அண்ணா.

--00--

பெருந்தகையே! பிறப்பால் இந்தியனாக, இனத்தால் திராவிடனாக, தாய்மொழியால் தமிழனாக, மதத்தால் முஸ்லீமாக.... இவற்றில் எது ஒன்றுக்கும் குறைவைக்காத பெருவாழ்வு வாழ்ந்தவர் நீங்கள்! நீங்கள் மறைந்து 41 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தனக்குத் தலைவனில்லாது தவிக்கிறது, தத்தளிக்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். தலைவன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தன்னைத் தலைவன் என்று சொல்லிக்கொண்டு தவறான வழிகாட்டும் தற்குறிகளால் தடுமாறி நிற்கிறது நீங்கள் நேசித்த தமிழ் இஸ்லாமியச் சமூகம். இனியும் உங்களைப் போல் ஒரு தலைவன் கிடைப்பான் என்ற நம்பிக்கை எமக்கு அறவே இல்லை. இறைவனிடம் கேட்டு நீங்களே எழுந்து வாருங்கள்!!

-------------------------------------------------------------------------------------
ஆக்கம்: புதுகை அப்துல்லா 

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)