1980களில் ராதாகிரி அண்ணன் ஊரில தட்டச்சு பயிலகம் நடத்திவந்தவர். “அண்ணே இதைவிட்டு வேற வேலைக்குப் போய்டலாமே?” என்றால் “டேய், எது அழிஞ்சாலும் இந்தத் தொழில் அழியாதுடா, காயிதமும் எழுத்தும் இருக்கிற வரைக்கும் தட்டச்சு வேணும்” என்பார், பிடிவாதக்காரர். பிறகு சில வருடங்களில் அவரது பயிலகத்திற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. 10 வருடங்கள் கழித்து திரும்ப ஊருக்குப்போனபோது, ராதாகிரி அண்ணன் Internet Browsing center/Xerox கடையாக மாற்றியிருந்தாரு. “என்ன அண்ணே ஆச்சு” என்றதற்கு, ”காலத்துக்கு ஏத்தாப்ல மாறினாத்தான் பொழைக்க முடியும்டா” என்றார்.
இன்றைய காலத்தில் நாம் புழங்கும், அவையெல்லாம் இல்லையென்றால் நம்மால் வாழ முடியாது என்று நாம் நினைக்கும் பல சாதனங்கள் அழிந்துவிடும். இதைச்சொன்னால் நாமும் ராதாகிரி அண்ணன் போல இல்லை என்று பிடிவாதம் பிடிப்போம்.
பிடிவாதம் பிடிக்காமல் யோசித்துப்பார்த்தால் பல விசயங்கள் நமது எண்ணத்திற்கு வரும், அதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன்.
தந்தி வழி தொடர்புகள்:
இப்போது இருக்கும் தந்திவழி Cable தொலைக்காட்சி, தொலைபேசி இரண்டுமே அழிந்து போகும். இவையிரண்டுமே தந்தியில்லா முறையில் புழங்க ஆரம்பிக்கும். Dialup Modem, electronic typewriting Machine என்ற சாதனங்கள் எல்லாம் நமது கண்
முன்னேமேயே, அதிக நாள் வாழாமல் போன சாதங்கள். அதுவும் இந்த 20 வருடங்களுக்குள்தான் கண்டோமே.. இல்லத்திரையரங்க சாதனங்கள் எல்லாம் கம்பியில்லா சாதனங்களாக மாற ஆரம்பித்தாயிற்று என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
தொலைக்காட்சி:
தொலைக்காட்சி என்ற சாதனம் இருக்கும், தொலைக்காட்சி என்று நாம் இப்பொழுது கண்டு வரும் வழிமுறை மாறிப்போகும், நினைத்த நேரத்தில் முன்னகர்த்தியோ, பின்னகர்த்தியோ நிகழ்ச்சிகளை கண்டு களித்துக்கொள்ளலாம். செய்திகள், விளையாட்டு போன்ற சில நிகழ்வுகள்
மட்டுமே நேரலையாக இருக்க வாய்ப்பிருக்கும்.
ஓட்டுநர்:
இப்போது நாம் ஊர்த்திகளை ஓட்டிவருகிறோம், விபத்துகள் ஏற்படுத்தி வருகிறோம். சில கவனக்குறைவுகளால் எத்துணை உயிரிழப்புகள்? வருங்காலத்தில் இவயெல்லாம் இருக்காது, தானியங்கி மகிழுந்துகள், ஊர்த்திகள், கனரக வாகனங்கள், புகைவண்டி வரும். இன்றைய பயன்பாட்டில்
இருக்கும் GPSஐ ஊர்த்திலேயே ஒரு கருவியாக்கி வைத்திருப்பார்கள். அதுவுமில்லாமல் Speedlimit என்பதையும் நினைவகத்தில் வைத்து ஊர்த்திகள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால சாலைவிபத்துகள் பெருமளவு குறைந்துவிடும். என்ன? நாம் அவசரமாக செல்லவேண்டும் ஏன்று
நம் அவசரத்திற்கு வண்டிகளை வேகமாக ஓட்டிப்போவது நடக்காது, அதன் வேகத்தில்தான் போகும், நமக்கு பொறுமையும் அவசியம். அதே நேரத்தில் சரியான நேரத்தில் கிளம்பும் பழக்கம் வந்துவிடும்.
கைக்கடிகாரம்:
இது இன்னும் 20 வருடத்துக்குள் கைக்கடிகாரம் காணாமல் போய்விடும் என் கணிப்பு. இந்தத் தலைமுறை பதின்ம வயதினரே கைக்கடிகாரங்களை விரும்புவதில்லை. ”நேரம் பார்க்க கணினி, அலைபேசி என்றிருக்கையில் அது எதற்கு தேவையில்லாமல்?” என்ற சொல்லாடல் இப்பொழுதே கேட்க ஆரம்பித்துவிட்டோமே. கைக்கடிகாரம் ஸ்மார்ட் வாட்ச் என்று மாறி இன்று மணி பார்க்க மட்டுமில்லாமல் உடல் நலத்திற்காக மாறிப்போயிருச்சு..
கணினி:
மடிக்கணினி, மேசைக்கணினி என்பதெல்லாம் பயன்பாட்டில் இல்லாமல் போய்விடும். கைக்கணினி (Smartphones) மட்டுமே பயன்பாட்டிலிருக்கும். கைக்கணினிகளுக்கு, திரைகள் வேண்டுமானால் ஒரு இணைப்பாக இருக்கலாம், ஆனால் மூலமாக கைக்கணினிகள் மட்டுமே
இருக்கும். கொளுவுக்கணிமை(Virtual Computing) நமது வீடு வரைக்கும் வந்துவிட்டிருக்கும். வீட்டிலிருக்கும் கணினிகளும் செயல்படுவது வேறிடமாக இருக்கும், அதாவது மேகக்கணிமை(Cloud) பெருமளவுக்கு பயன்பாட்டிலிருக்கும். எந்தவிதமான தரவுகளும்(data)
நம்மிடமில்லாமல் வேறிடத்தில் பத்திரமாக இருக்கும்.
அலுவலகங்கள்:
அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்ப்பது என்பது அரிதாகிவிடும். அவசரப்படாதீர்கள், பணி செய்வதென்பது இருக்கும், அதற்காக அலுவலகத்திற்குத்தான் சென்று வரவேண்டுமென்பதில்லை. மேசைகளில் முடியும், மக்களைச் சந்திப்பது என்பதெல்லாம் எங்கிருந்தும் செய்யக்கூடிய
வேலைகளை. Video Conferencing, teleconferencing என்பதுதான் இன்று நாம் சொல்லும் Meetingன் அடுத்த கட்டமாக இருக்கும். அவையெல்லாம் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாமே இதனால் அலுவலக இடம் மீதம், அலுவலக செலவுகளும் மீதம். வீட்டிலிருந்து
வேலை செய்வதென்பது பிரதானமாகிவிடும். இணையமில்லா வாழ்க்கை அரை வாழ்க்கை என்ற புதுமொழி கூட வரும்.
உணவு:
ஆமாம், உணவு என்பதும் கூட இல்லாமல் போகலாம். நம் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் குளிகைகளாகி வரும். சுவைகளைக்கூட நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தையும் கட்டுப்படுத்த ஏதாவது குளிகைகள் வரலாம். நம்முள்ளேயே மரபணு மாற்றங்கள் வரலாம். நேரமின்மை வயிற்று உபாதைகள் காரணமாக வரும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்தக் குளிகைகள் ஒரு அறுமருந்தாக இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துகளும் சரி விகிதத்தில் அனைத்து குழந்தைகளுக்கு குளிகைகள் மூலம் அளிக்கப்படும். ஏன் தண்ணீருக்குக்கூட மாற்றாக குளிகைகளே வரலாம். முடியாது என்பவர்கள் விண்வெளியில் பணியிலிருக்கும் சிலரின் வாழ்க்கை முறையை உதாரணமாகக் கொள்ளலாம்.