இங்கே வந்த புதிதில் அமெரிக்கர்கள் படிப்பதைக் கண்டு வியந்து
பார்த்திருக்கிறேன். புகைவண்டி, பேருந்து, பூங்கா, கடற்கரை என்று எங்கேப்
பார்த்தாலும் படித்துக்கொண்டிருப்பார்கள். சிலர் நடந்துகொண்டே கூட
படிப்பார்கள். இவைகளையெல்லாம் ஆச்சர்யமாக பார்த்திருந்தேன். இந்த நாவலை
நான் புகைவண்டிப் பயணத்தில் ஆரம்பித்து, பிறகு நடந்தவாரே படித்து, வேலை
முடித்து மீண்டும் நடந்தும் பயணத்திலுமாய் தொடர்ந்து படித்து முடித்தேன்.
அவ்வளவு சுவாரஸ்யமான நாவல் இது.
சூழலியல்
பிரச்சினை(Situation Based) மையமாகக்கொண்டு வந்த நாவல்கள் குறைவு,
கரும்புனல் இதை மையமாக வந்த முக்கியமானதொரு நாவல் என்கிற முன்னுரையுடனே
படிக்க ஆரம்பித்தேன். The Volcano படம் முடித்து திரையரங்கத்தை விட்டு
வெளியே வந்தபிறகு தலையில் சாம்பல் இருக்கிறதா என தட்டிப்
பார்த்துக்கொண்டேன். காரணம், அந்தப் படம் என் மீது அந்தளவுக்கு வியாபித்து
இருந்தது. வெளியே வந்தும் எனக்கு சாம்பல் வாசம் அடிப்பதாகவே இருந்தது
எனக்கு.
அப்படியொரு பாதிப்பு இந்த நாவலிலும்
ஏற்பட்டது, நாவல் படித்து பல மணி நேரங்கள் ஆகியும் புழுதியை நான்
சுவாசிப்பதாகவே உணர்ந்தேன். அதுதான் நாவலின் வெற்றி. இந்த நாவலுக்கான
வெற்றியே, ஒவ்வொரு சிறு இடத்திற்கும் ஆசிரியர் அளிக்கும் சிறு சிறு
விளக்கங்களும், அந்த இடத்தை வர்ணிப்பதுமே. சரியான அளவில் நறுக்குத்
தெறித்தார் போல் கதாநாயகன் போகும் இடங்களையெல்லாம் நம்மையும் பயணிக்கச்
செய்கிறார். கதாநாயகன் இருக்கும் அறை அதற்கு ஓர் உதாரணம், அங்கேயிருக்கும்
கழுவாத அலுமினிய டீக் குண்டாவும், குண்டாவில் ஒட்டியிருக்கும் மீந்துபோன
டீயுமே நம் மனக்கண்ணில் வந்து ஓடும். பீஹாரின் சிறு கிராமங்களும், சிறு
நகரங்களும் இப்படித்தான் இருக்கும் என நம் மனதில் ஓடவிடுகிறார் ஆசிரியர்.
சந்துரு கொல்கத்தா செல்வதாக இருக்கும் காட்சியில் என் மனதில் உண்மையாகவே
அந்த நகரத்தின் சப்தம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
முதலில் நெருடலாய்
எனக்குத் தோன்றிய விசயங்கள் இரண்டு. புதிதாய் மக்கள் போகும் கிராமம் நான்
மலை மீது இருப்பதாய் நினைத்துக்கொண்டிருந்தேன். 2. சட்டென முடியும்
இறுதிப்பகுதி, வாசகனை இப்படி சடாரென அடித்தால்தான் நிலைகுலைவான் என்று
ஆசிரியர் நினைத்திருப்பார் போலும்
இன்னும் கதாநாயகன் குடியிருந்த அறை, அந்தப் புழுதி, கிராமம், குவாரி, எல்லாம் ஒரு வாரமாகியும் மனத்துக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆசிரியருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
இன்னும் கதாநாயகன் குடியிருந்த அறை, அந்தப் புழுதி, கிராமம், குவாரி, எல்லாம் ஒரு வாரமாகியும் மனத்துக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆசிரியருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
கதையில் மூன்று நிலை மனிதர்கள்.
- பெருநிறுவன அதிகாரிகள் (Corporate Officers) ஓர் அலுவலகத்திலிருக்கும் உயரதிகாரிகளும் அவரது செயல்பாடுகளும் எண்ணங்களும் எவ்வாறு இருக்கும் எனத் தெளிவாக புரிய இந்தப் புத்தகம் படித்தால் போதும். என்னதான் பெரிய பதவிகளில் இருந்தாலும் அவர்களுக்குள் மேலோங்கி வரும் பண ஆசை, ஜாதி வெறி, நேரம் பார்த்து கழுத்தறுக்கும் திறன், தன் எண்ணங்கள் நிறைவேற தன் கீழ் வேலை செய்யும் பணியாளர்களை பகடைகளாக மாற்றி வெற்றி பெரும் சாணக்கியத்தனம், வேலை ஆக வேண்டுமென்றால் எப்படி எங்கே காய் நகர்த்துவது, அதற்காக எதையும் பலி கொடுப்பது..
- (ஏழை) ஊர் மக்கள், அவர்களது போராட்டம், அவர்களுக்குள் இருக்கும் பிரிவினைகள், தீவிரவாதம், பிடிவாதம், அவர்களின் ஆசை, மீள முடியாது என்று தெரிந்திருந்தும், அதிலும் தம் ஆசைகளை நிர்பந்திப்பது, படித்த மக்களின் பின்னிருந்தாலும் உணர்வுகளுக்கும் சூழல்களாலும் தவறு செய்வது. ஒரு ஆட்டு மந்தைக்கூட்டமாய் என்னவென அறியாது ஓடும் மக்கள். அவர்களுக்கு தலைமை தாங்குபவர்கள்.
- கதாநாயகனின் மனவோட்டமும், நேர்மையும், வீரமென்று சொல்லிக்கொள்ளும் கோழைத்தனமும், மேல் அதிகாரிகளால் வஞ்சிக்கப்படுதலும், நல்லது செய்ய நினைத்த மக்களால் பழி வாங்கப்படுதலும், எந்த காலத்திலும் நல்ல பெயர் வாங்க முடியாது என்கிற நடுத்தர வர்க்கத்துக்கேயான ஒரு பாத்திரம்
வாசகர்கள் தவர விடாமல் படிக்கக் கூடிய நாவல் இது.
நூல்: கரும்புனல்
ஆசிரியர்: ராம்சுரேஷ்
வெளியீடு:-
வம்சி பதிப்பகம்
19, டி. எம். சரோன்
திருவண்ணாமலை – 606601
விலை:- ரூபாய் 170/-
வெளியீடு:-
வம்சி பதிப்பகம்
19, டி. எம். சரோன்
திருவண்ணாமலை – 606601
விலை:- ரூபாய் 170/-
இந்தமுறை புத்ததிருவிழாவுல வம்சி ஸ்டால்லையே வாங்கிடுரேன்...
ReplyDeleteஅருமையான அனுபவம் கிடைக்கும்
Delete