த்தட் த்தட் த்தட்..
வேகமாக கதவு தட்டப்பட்டது.
”இந்நேரத்துக்கு யாரா இருக்கும்? இப்பத்தானே வேலைக்குப் போனாரு, அதுக்குள்ளேவா வந்துட்டாரு?” என்றபடி கதவைத் திறந்த நவீனாவுக்கு ஆச்சர்யம். ஒருவர் நின்றிருந்தார், முன்னே பின்னே பார்த்திராத ஆசாமி. அஃப்சலை பார்க்க வந்திருப்பாரோ என நவீனா எண்ணியபோது...
“குட்மார்னிங் மேடம். எப்படி இருக்கீங்க? அக்பர் இருக்காரா?”
“ஆமா, அவருடைய அறையில தூங்கிட்டு இருக்காரு, எதுக்காக கேட்குறீங்க?”
”நாங்க ****லிருந்து வந்திருக்கோம். தொந்தரவுக்கு மன்னிக்கவும், வழி விடறீங்களா?” என அடையாள அட்டையைக் காண்பித்தபோது தெருவிலிருந்து நிறைய Cops, Bullet Proof Jacket அணிந்த படி திமு திமுவென வீட்டினுள் நுழைந்தார்கள்.
”எங்கே இருக்காரு?” என ஒருவர் கேட்க
“மேலே வலது பக்கம் மூன்றாவது அறை”
அனைவரும், கையில் துப்பாக்கி எடுத்துக்கொண்டார்கள், நவீனாவுக்கு ஏதோ விபரீதம் என்று அப்பொழுதுதான் புரிந்தது. அதே நேரத்தில் “அக்பர் நாங்க உங்களை கைது செய்ய வந்திருக்கோம். ஒத்துழையுங்கள். கதவைத் திறங்க”
....
சத்தமே இல்லாமல் ஒரு நிமிடம்.
”அக்பர்! மீண்டும் சொல்றோம், தேவையான அனைத்து ஆதாரங்களும் இப்ப எங்ககிட்ட இருக்கு. நீங்க ஒத்துழைங்க, ப்ளீஸ்”
.....
அடுத்த நிமிடம், அனைவரும்ம் துப்பாக்கியை தயாராக்க ஆரம்பித்தனர். unlock சத்தம் பட், பட் என வராந்தா முழுதும் எதிரொலித்தது”
டமார்.. கதவை உடைக்க ஆரம்பித்தனர்.. மூன்றாவது உதையில் கதவின் தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்தது.
அக்பர் கையில் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று எண்ணியவர்களுக்கு வியப்பு. அமைதியாக கட்டிலில் கலக்கத்தோடும், குழப்பத்தோடும் உட்காந்திருந்தார். இரவு உடையிலிருந்து ஏற்கனவே வேறு உடைக்கு மாறியிருந்தார். இந்தக் கோலத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.
கைது செய்ய ஏதுவாக அவரே முன்வர, அவரின் கைது படலம் எந்தவித அசம்பாவிதமுமில்லாமல் நடந்தேறியது.
வழக்கு பற்றிய விவரங்களுக்கு
ஒரு காலத்துல மேயர் குடியிருந்த, அரசுக்குச் சொந்தமான வீடு, அரண்மனை மாதிரி. இப்படித்தான் அந்த வீட்டைப் பத்தி நான் முதலில் கேள்விப்பட்டது. 6 படுக்கையறைகள், 1000 சதுர அடிக்கும் குறையாத Dinning Hall, அதே அளவில் Living Room, Kitchen. பிரமாண்டத்தை அங்கேதான் பார்த்தேன்.
நான் நியூஜெர்சிக்கு வந்தவுடன் நான் குடியிருக்க வீடு தேடியதில் குறைந்த வாடகைக்கு கிடைத்த வீடு அதுதான். இருங்க, தப்பா கணக்குப் போடாதீங்க. வீட்டுக்குச் சொந்தக்காரர்(அக்பர்) இந்த வீட்டைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடிய போது, நான் வீடு தேடியதும் ஒரே நேரத்தில் நடந்ததால் குறைந்த வாடகைக்கு ஒரு அறையில் தங்கிக்கொள்ள அனுமதியளித்தார். அத்தனை வசதிகளும் அந்த வீட்டில் உண்டு. Fully Furnished, Yes.
அவர் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. நாங்கள் 1st Floor(இந்தியவில் Ground Floor) தங்கிக்கொள்ளலாம். Fully Furnished Basement உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கூடைப்பந்து, தோட்டம் எல்லாம் அனுபவித்துக்கொள்ளலாம். அவர் எப்பவாவது வருவார், மாடியறையில் தங்கிக்கொள்வார். அவர் கேட்டுக்கொண்டது இந்த ஒன்றே ஒன்றைத்தான். நாங்களும் குடிவந்தோம், 13 கார்கள் நிறுத்த இடமிருந்து கார் இல்லாமல் இருந்தேன். காரணம், தேவைப்படவில்லை. தேவைப்பட்டால் தெய்வம் போல உதவ கே.ஆர். எஸ் இருந்தார்.
அரண்மனையில் குடியிருக்க ஆரம்பித்தவுடன், Basement மற்றும் மேலேயிருந்த படுக்கையறைகளை வாடகைக்கு விட ஆரம்பித்தார், அதுவும் நாங்கள் வந்து 6 மாதம் கழித்து. சமையலறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம். பொறுத்துக்கொண்டோம், காரணம்? எங்களுக்கும் அவ்வளவு பெரிய வீட்டில தனியா இருக்க சற்றே பயம் இருந்ததும்தான் காரணம்.
செப்-11-2008: நான் அலுவலகம் வந்து வேலைகள், சந்திப்புகள் முடிந்து 11:30 மணி வாக்கில் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு. "வாங்களேன், காப்ஸ் வந்திருக்காங்க. சோஷியல் கேட்டிருக்காங்க, உங்க கிட்ட பேசனுமாம்" என்று பதட்டமான குரலுடன் அம்மணி அழைத்தவுடன் அடித்துப் பிடித்து வீட்டுக்குச் சென்றேன்.
ஒரு பெரிய காவல்துறைப் பட்டாளமே அங்கே இருந்தது. தன்னை இந்தக் குழுவிற்கு முதன்மையானவர் என்று தன்னை தன் அடையாள அட்டையுடன் அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு அதிகாரி, வழக்கின் காரணங்களை கூறிவிட்டு எனக்கு இதில் எந்தளவுக்கு பங்களிப்பு இருக்கலாம், அதற்கான கேள்விகளைக் கேட்கப்போவதாக கூறிவிட்டு 5/6 கேள்விகள் கேட்டார். பதில்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், "உங்களுக்கான விசாரணை அவ்வளவுதான், இனி இந்த வீட்டில தங்குவது உங்களிஷ்டம் என்றும், அதனால் காவல்துறையினரால் எந்தப் பிரச்சினையும் வராதென்றும் உறுதிசெய்துவிட்டுச் சென்றார்.
அடுத்த நாள் அக்பரின் மகள் வந்தபோது, அழுகையினூடாக அவர் சொன்னது. ”எங்கப்பா எந்தத் தப்பும் பண்ணலை , அவர்னால உங்களுக்குத் தொல்லை ஏற்பட்டிருந்தா மன்னிக்கவும்” என்று முடிக்கும் போது மாலை மாலையாகக் கண்ணீர். பாவம், பள்ளிக்கூட பெண்ணுக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும். அம்மாவும் சிறையில், அப்பாவும் சிறையில். 5 பெண்கள், ஒரு சின்னப் பையன். இதுதான் அவர்களது குடும்பம்.
பிறகு 20 நாட்கள் அந்த வீட்டில் குடியிருந்தோம், இல்லை,, இல்லை அடுத்த நாளே வீடு தேட ஆரம்பித்தோம். காரணம், அக்பருக்கு அப்புறம் அந்த வீட்டுக்கு உரிமை எடுத்துக்கொண்ட வந்த ஒரு அம்மாவின் அடாவடித்தனமே எங்களை காலி செய்ய வைத்தது.
பி.கு: அக்பரும், அவரது மனைவியும் இரு மாதங்களில் விடுவிக்கப்பட்டனர். இன்றும் செப்-11 என்றால் அக்பருக்கு ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது