Showing posts with label Movie Review. Show all posts
Showing posts with label Movie Review. Show all posts

Wednesday, December 17, 2014

லிங்கா - இது விமர்சனம் அல்ல

லிங்கா பார்த்தாச்சு. பயப்படாதீங்க, இந்தப் பதிவு இந்தப் படத்தைப் பத்தின விமர்சனம் மட்டுமல்ல.

லிங்கா வெற்றியா தோல்வியா என்பதைப்பற்றி நான் எழுத வரவேயில்லை. காரணம் முதல் வாரயிறுதியைத் தாண்டிவிட்டால் எல்லாருக்குமே அது தெரிந்திருக்கும். 


பலவீனம்: தர்மதுரையில், இதே துள்ளல் இருக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அனைத்தையும் தந்துவிட்டு சத்திரத்தில் தங்கியிருப்பார். அதே கதை மீண்டும், அங்கே படிப்பு, வசதி இத்யாதிகள், இங்கே அணை, ராஜா, அரண்மனை, கோயில். Very Predictable Scenes, அதுதான் பிரச்சினையே. அடுத்து வரும் காட்சிகளை அம்சமாக சொல்ல முடிகிறது. கோச்சடையானில் இருந்த திருப்பு முனைகளில் ஒன்றுகூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. பறப்பது எல்லாம் ஓவரோ ஓவரோ, சிரிப்பை அடக்க முடியவில்லை. ரஜினியிஸம் ஓரளவுக்கு சரி, ஆனா இவ்வளவு ரொம்பவே அதிகம் KSR

படத்தோட மிகப்பெரிய பலங்கள் 6

  1. ரஜினி 
  2. ரஜினி
  3. ரஜினி
  4. படமாக்கப்பட்ட விதம்/தயாரிப்பு நிர்வாகம்- சாபு சிரில்
  5. ராண்டி - ஒளிப்பதிவு
  6. ரஜினி

சாபு சிரில் என்கிறவரை கலை என்கிற வட்டத்தை விட்டு தயாரிப்பு நிர்வாகம் என்று மாற்றியதில்தான் இருக்கிறது படத்தின் பிரம்மாண்டத்திற்கான வெற்றி. அதுவும் பல இடங்கள்  GreenMat தொழில்நுட்பம்தான். ஆனால் அது தெரியாமல் செய்த விதத்தில் KSRன் திறமை தெரிகிறது. Double Tick. இந்த வருடத்தின் தேசிய விருது கண்டிப்பாகக் கிடைக்கும். Advance Wishes Sabu Cyril

அடுத்து ஒளிப்பதிவு. அபாரம் அபாரம், அந்த புகையிரத சண்டையாகட்டும், தாத்தா ரஜினியின் பகுதிகளாகட்டும், அனைத்து காட்சிகளிலும் இவரின் உழைப்பு தெரிகிறது.

ரஜினி: ரஜினி ரஜினி ரஜினி.. படத்தின் அத்துணை பலமும் இவர் மீதுதான். இளமை கொண்டாட்டம், துள்ளுகிறார்.

மற்றபடி லிங்கா எனக்குப் பிடித்திருந்தது.

இனி, என் சொந்தப் பிரச்சினை. லிங்கா படம் வெளியாகும் என்று தெரிந்தவுடனேயே எல்லோரையும் போல் நானும் இணையம் சென்றேன், விலை பார்த்தால் $25ஆம், சரி இது சிறப்பு காட்சிகளுக்கு என்றுதானே வாரயிறுதிக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்றால் $20ஆம். சரி, விலை குறையட்டும் என்று விட்டுவிட்டேன். இப்படி விட்ட நண்பர்கள் ஏராளம். ஆங்கில படத்திற்கு $12 என்று இருக்கையில் நீங்க வைக்கிற $25 மதிப்பு என்ன நியாயம்? இதுல  விமர்சனம் செய்யக்கூடாது, MEME செய்யக்கூடாதுன்னு சொல்ற யோக்கியதை உங்களுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா?

இனிமே $20 என்று வைத்தால் ரசிகர்கள் வேண்டுமானால் ஒரு காட்சிக்கு மட்டும் வருவார்கள், என்னைப் போன்ற சினிமா பார்க்கும் பொதுப்பார்வையாளனுக்கு விலைதான் முதலில் தெரியும். குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். (கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்றே வைத்துக்கொள்வோம், $25*2+$20*2 +பாப்கார்ன், குளிர்பானம் என்று வைத்தாலே $100 பக்கம் வருகிறது. இந்த லட்சணத்தில் 20 மைலாவது ஓட்டி வர வேண்டும், போக வர 1 மணி நேரம், படம் பார்க்க 3 மணி நேரம், கிளம்ப 1 மணி நேரம் என்று வைத்தாலும் 5 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். ஒரு குடும்பஸ்தன் இனி சினிமா பார்க்க இத்துணை சிரமங்கள் இருக்கின்றன. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் $20 வைத்து மொக்கைப் படம் தந்தால் கண்டிப்பாக அடுத்து வரும் படங்களுக்கு ஒருவரும் திரையரங்கம் வர மாட்டார்கள்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்/மலேசியா, இந்தியா, அரபு நாடுகள், இங்கிலாந்து என்று அனைவரும் பார்த்த பின்னால்தான் அமெரிக்காவில் வெளியாகிறது. இதில் விமர்சனங்களைப் பார்த்த பின்னரே இங்கேயிருந்து திரையரங்கம் செல்கிறோம். அதுவுமில்லாமல் அனைத்து விதமான போங்காட்டமாக பார்க்கும் வசதிகள் இருந்தும் திரையரங்கம் செல்லும் ரசிகர்களை உங்கள் விலையை வைத்து திசை திருப்பாதீர்கள்.

லிங்கா தனியாகத்தான் சென்று பார்த்தேன், அதுவும் ஒரு வார நாளில் , என்னையும் தவிர்த்து திரையரங்கத்தில் 4 பேர் இருந்தனர்.

Friday, February 1, 2013

விஸ்வரூபம்: கத்தரிக்க வேண்டிய காட்சிகள் - பொது புத்தியாளன் பார்வையில்

கத்தரிக்க வேண்டிய காட்சிகளை கடைசியில சொல்லியிருக்கேன், இப்போ படத்தைப் பத்தி பார்ப்போம்.  விருப்பமில்லாதவர்கள் சிகப்பு வரிக்கு நேரடியாகப் போயிடலாம்



படம் பற்றி என் எண்ணம் : 
 படம் ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடக்கிறது. தமிழ்நாட்டைப் பற்றி பேசுவது 3 வார்த்தைகள் மட்டும்தான். அதிலும் குறை எல்லாம் இல்லை. காபூல் எக்ஸ்ப்ரஸ் படத்திலும், The Siege படத்திலும் காட்டப்பட்டதை விட இந்தப் படத்தில் காட்டப்பட்டது குறைச்சலே. இதில் கமல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது.

கமல் கதாநாயகனாக உருமாறும், உருவெடுக்கும் காட்சியில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோருக்கு வைத்து வந்த Opening Sceneவிட அபாரம். அதுவும் இரண்டாம் முறை காட்டப்படும் போது  Simple Fantastic. சண்டைக்காட்சி அமைத்தவருக்கு என் பாராட்டுகள். ராகுல் போஸ், கமலுக்கு இணையான ஒரு கதாபாத்திரம், உண்மையைச் சொல்லப் போனால், சில இடங்களில் கமலை விட அதிகமாக Score செய்து விடுகிறார். படத்தில் கதாநாயகனும் இஸ்லாமியர், வில்லனும் இஸ்லாமியர்.

பூஜா குமாரும், ஆன்ட்ரியாவும் படம் நெடுக வருகிறார்கள். விசாரணைக் காட்சியில் ஆண்ட்ரியாவின் தெனாவெட்டான நடிப்பு Simply Superb. பூஜா குமாரின் கதாபாத்திரம் இப்படியுமில்லாமல் அப்படியுமில்லாமல், ம்ம்ம், கதையில வந்துட்டே இருக்காங்க.

கமலின் ஆரம்ப காட்சிகளுக்கான நடிப்பு அபாரம், அது எப்படிங்க, அவ்வை சண்முகியே பெருசா நினைச்சா இதுல இன்னொரு பரிமாணம். அவரைப் பத்தி புகழ என்ன இருக்கு, அவருக்கு நடிக்க வரும், வருது.

பிரச்சினையென இஸ்லாமியத் தலைவர் பேசிய பேச்சுக்கும் படத்துக்கும் சம்பந்தமேயில்லை. ட்விட்டரில் எழுதியதை இங்கே பகிர்கிறேன்

"பகடைக் காய்களுக்கு கடைசிவரை தாங்கள்தான் பகடைக் காய்கள் என்றே உணர்வதில்லை" 

அவர்களுக்கு ஒன்று, இது உங்களுக்கான களமில்லை, தயவுசெய்து உங்கள் மதத்தினரை களங்கப்படுத்தாதீர்கள், அவர்களுக்கு நீங்கள் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்று மறந்துவிடாதீர்கள். நீங்க சொல்லும் சொல்லை வைத்துதான் உங்களையும் உங்கள் மதத்தவரை மற்ற மதத்தினர் பார்க்கிறார்கள், அதுவும் இந்த சினிமாவை வைத்து, நீங்கள் பேசிய பேச்சுக்கு, என்னுடைய வருத்தங்களும் கண்டனங்களும்.

படம், Hollywood தரமென்றால் ஆமாம் என்று சொல்வேன். ஆனால் கமல் Hollywood தரத்தில் முந்த வேண்டுமென்றால், கமல் எடுத்துவைத்திருக்கும் முதல் படி மட்டும்தான் என்றுதான் சொல்வேன். அதற்கு பொருளாதார Constraint இருக்கும் என்று நம்பினாலும், முதல் படி எடுத்து வைத்துவிட்டார் என்றே சொல்வேன்.

இப்போ என் பார்வையில் தவிர்த்திருக்கவேண்டிய காட்சிகள்:

1. பாப்பாத்தி, இந்தா இந்த கோழியை ருசி பார் - இந்தக் காட்சி கண்டிப்பாக ஒவ்வொரு பிராமணனையும் பாதித்திருக்கும். நானறிந்தவரையில் பிராமணர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கவில்லை.  இந்த இடத்தில் நான் சொல்லிக்கொள்வது - நான் பிராமணன் இல்லை. பொதுப் புத்தியாளன்

2. ஆங்கிலேயப் பத்திரிக்கையாளரை கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சியில் பின்னணி இசை(I see the YouTube video shows as it). இதே போல பல இடங்களில் இது மாதிரியான இசை வருகிறது. இது ஒரு சம்பவத்தைப் பொதுப்படுத்துதல், இதை எதிர்க்கிறார்கள் என்றால் தவறேயில்லை. என் கண்டனங்கள் சேர்த்துக்குங்க.

3. தாலிபான் குழந்தைகள் விளையாடுமிடத்தில் கூட விரலை துப்பாக்கியாக்கி விளையாடுவதாக காட்டியிருப்பது எனக்கு சரியாகப் படலைங்க, உண்மையாகவே இருந்தாலும் (பத்தி 2க்கான பதிலே இதிலும்,  பிற்பாதியில் அதை மீட்டெடுக்கும் காட்சிகள் வந்தாலும் கூட)

படத்தில் காட்டப்பட்ட மீதிக் காட்சிகள் எல்லாம் பல படங்களில் காட்டிய, செய்திகளில் பார்த்த, பழைய மாவையே திரும்ப அரைத்த காட்சிகள்தான்.

தமாஷ்தான் என்று கமலும், ராகுலும் பேசிக்கொள்ளும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. எல்லாத்தையும் தமாசா எடுத்துக்க முடியல.

எனது முடிவு: இதுவொரு மசாலாப் படம், குழந்தைகளுக்கானது அல்ல, ஒரு முறைக்கு இரு முறை கூட பார்க்கலாம். ஆனால் கமல் இந்த மாதிரி சர்ச்சைகளை விட்டு வெளிவரவேண்டும். நாட்டில் பல விசயங்கள் திரையில் வராமல் இருக்கின்றன, அதையும் மனதில் வெச்சிக்குங்க, இல்லை, இது அமெரிக்காவை திரும்ப பார்க்க வைக்கும் படமென்றால் இந்த மாதிரியும் படமெடுக்கலாம், ஆனால் இந்த ஒரு முறைதான் இருக்கிறதா என்றால், மன்னிக்கவும்  கமல் சார், எடுக்கவேண்டியது நிறைய இருக்கு, வெளியே வாங்க.

Wednesday, December 26, 2012

நீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்

எனக்குப் பிடித்த இரு ஆதர்ச நாயகர்கள் ஒன்றிணைந்த படம் என்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறெதுவும் இந்தப் படம் பார்க்கும் வரை வரவில்லை. காரணம், பாடல்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்


படத்தோட ஆரம்பமே “புடிக்கலை”.. அதாங்க ’புடிக்கலை மாமு’ பாட்டு. கேட்பதை விட பாட்டை பார்க்க பிடித்தது. சமந்தாவின் அறிமுகத்தில் சந்தானத்தின் Counterஅபாரம். முதல் 20 நிமிடம் சந்தானத்தின் Counter மற்றும்  'அவளைப்  பார்த்தேன், அழகாயிருந்தா’ வகையறாக்களும் GVM டிபிக்கல் டச்.

படத்தில் பாராட்டப் படவேண்டியவர் சமந்தா.. அண்ணனிடம் மாட்டிவிட்டது நீதான் என்று சொல்லுபோது சமந்தாவின் நடிப்பு, அழகு.. போதும்டா குடுத்த காசு தீர்ந்து போச்சு, அந்த இடத்தில் மொட்டையின் பின்னணி  குரல்..(ராஜாவின் பின்னணியை பாராட்டி பாராட்டி சலிச்சுப் போச்சு)

சில பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, வெளியே சொல்ல முடியாத விசயங்களை திரையில் காணும் போது நம்மை அங்கே பொருத்திப்பார்க்கவே தோணும். அப்படியாப்பட்ட காட்சிகள்தான் இந்தப் பள்ளிப்பருவ காட்சிகள். ராஜாவின் ஒற்றை வாத்தியம், Has driving through the whole segment. பள்ளிக்காலங்களில் நாமும் ஒரு கதாநாயகனாத்தான் இருந்திருக்கிறோம் என உணர்த்தும் சில காட்சிகள். அதுதான் படத்திற்கான பலமும்.



காதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..

”போகாதன்னு சொல்லு வருண்”, ”எனக்காக சந்தோசமா இருக்கிறா மாதிரி நடிக்கலாம்ல?”. இதெல்லாம்தானே பெண்கள் மனசை கண்ணாடி மாறி காட்டுது, எல்லோருக்குமான ஒரு வாக்கியம்.

இருவரும் தொலைபேசி, அலைபேசியில் பேசிக்கொள்ளும் லைட்டிங்ஸ் அருமை(எந்த கேமராமேன் யாருன்னு தெரியல)

VTV remix - சந்தானத்துக்கு சரியா ஒத்துவருது. அதே சமயம் அவுங்களுக்கு ராஜா போட்ட அந்தப் பாட்டை எப்படியும் யாராவது ஒருத்தர் ரீ மிக்ஸ் பண்ணிடுவாங்க, 2 வருசம் கழிச்சு முழுப்பாட்டையும் கேட்டுக்குவோம் விடுங்க.



ராஜாங்கம்: இருவரும் சந்திக்க வருகையில் பின்னணி இசை எதுவுமில்லாமல் மெளனமாக்கிவிட்டு பிறகு கோரஸ்ஸை ஒலிக்கவிட்டது, சமந்தாவின் முதல் வெட்கம், சத்தமேயில்லாம நம்மை அந்த வசனங்களூடே நம்மை அழைத்துச் சென்றது என்றது என எங்கெங்கு காணினும் ராஜாங்கம்.


பள்ளிக்கூட பகுதியில் ஜீவாவின் குரல் பல மாற்றங்கள். எதுல பிரச்சினைன்னு தெரியல. ஆனா ஒரு Consistencyஏ இல்லை. சமந்தாவின் குரலும் பல இடங்களில் பிசிறடிக்குது, அதுவும் அழும் தருணங்களில். ரவிச்சந்தருக்கும் பின்னணி குரல் சரியா பொருந்தி வரலை.

நானியின் ஒரு காட்சி, சந்தானம் சொல்லும், ’டேட் தான் பிரச்சினை, நானில்லாம இனிமே நிறைய சீன் வரும்’, ’ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் பாடுறேன்’ என்று சொல்லிப்பாடுவது, Trailerஐ இடையில் இணைத்தது  எனப் பல insider சமாச்சாரங்கள். எல்லோருக்கும் புரியுமா என்றுதான் தெரியவில்லை. கெளதம்(இயக்குனர்) பாடிய நீதானே என் பொன் வசந்தம் பாடலை ஏன் CDயில் சேர்க்கவில்லை என்பது சிதம்பரம் ரகசியம் :). 

படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது.  மீண்டும் ஒரு முறை அந்த இனிமையான காலங்களுக்கே பயணிப்பது போன்றதோர் உணர்வு.

I love You Gautham Sir!

Thursday, January 12, 2012

Nanban Review

ஷங்கர் - விஜய் கூட்டணின்னு சொல்றதுதான் பொருந்தும். ஆனா விஜய் ரசிகர்களோ விஜய்-ஷங்கர் கூட்டணின்னு சொன்னாத்தான் ஒத்துக்குவாங்க.

3 Idiots- இந்தி சினிமா உலகையே புரட்டியெடுத்தப்படம். சேத்தன் பகத்தின் 5PointSomeOne என்ற நாவலைத் தழுவி எடுத்தார்கள். படம் தாறுமாறாய் ஓடியது.அதை அப்படியே தமிழில் பிரதி எடுத்திருக்கிறார்கள். ஷங்கருமா Remake செய்யறாரு என்று பட பூஜையன்றே நான் நினைத்தேன்.

3- Idiots கதை தெரியாதவங்க இங்கே படிச்சிக்குங்க. தமிழ்ல எந்த மாற்றமும் இல்லாம வந்திருக்கு.


கதை- உனக்கு எது பிடிக்குதோ அதைப் படி, அப்பா சொல்றாங்க ஆட்டுக்குட்டி சொல்றாங்கன்னும், வேலை நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் வற்புறுத்தலுக்காகவும் படிக்காதே, எல்லாம் நன்மைக்கே. இப்படி எல்லா ஒரே அறிவுரை சொல்ற படம். ஆனா கண்டிப்பா நம்ம கண்ணுக்கு முன்னாடி சொடக்கு போட்டோ, தொடை தட்டியோ சொல்றது இல்லீங்க.

கல்லூரி முடித்து பத்துவருடம் கழித்து, அமெரிக்காவில் வசதியாக வாழும் சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை அழைத்துக்கொண்டு விஜயை பார்க்க ஊட்டிக்குப் போகிறார். கல்லூரி காலத்தில் சத்யன் - விஜய் இடையே நடக்கும் சவால், இப்படித்தான் ஆரம்பிக்கிறது கதை, பிறகு Flashbackல் கல்லூரிக்காலம்.

நம்முடைய பாடத்திட்டம் தலை சுத்தி சாப்பிடுவதைப் போன்றது, அதை எளிமையாக சொல்லித்தர வேண்டும், மனப்பாடம் செய்யும் இந்தப் பாடத்திட்டத்தினை மாற்ற வேண்டும் என்று நினைப்பவன், பெரிய கோடீஸ்வரனின் மகன், அப்பாவின் மாத வருமானம் 25 கோடி ரூபாய், இயந்திரங்களின் மீது தீராக்காதல் கொண்டவன்- இது பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்).  மிகவும் ஏழ்மையான குடும்பம், ஒரு கை, கால் விளங்காத அப்பா, எப்போதும் காசு கணக்குப் பார்க்கும் அம்மா, கல்யாணமாகாத அக்கா, ஏக சாமி பக்தி, என ஒரு செளகார்ஜானகியின் குடும்பத்திலிருந்து வரும் - செந்தில் சேவற்கொடியான்(ஜீவா). பிறந்தமுதல் நிமிடமே தன் மகன் ஒரு இஞ்சிஜியர் ஆகவேண்டும் என ஆசைப்பட்ட பெற்றோர்களுக்கு பிறந்த, ஒரு Wild Life Photographer ஆக வேண்டும் என்று ஆசை கொண்ட- வெங்கட ராமகிருஷ்ணன்(ஸ்ரீகாந்த்), கலிப்போர்னியாவில் பிறந்து, உருப்போட்டே படிச்சு முதல் இடம் வாங்கும், பெரிய வேலை மட்டுமே லட்சியம் என இந்தியாவிற்கு படிக்க வரும் ஸ்ரீவத்சன்(சத்யன்), கண்டிப்பும் கறாரும்,கல்லூரியை முதலிடத்திலேயே தக்க வைத்துக்கொள்ள போராடும் -விருமாண்டி சந்தனம்- வைரஸ்(சத்யராஜ்), மருத்துவம் படிக்கும் அவருடைய மகள் ரியா(இலியானா), அவருடைய அக்கா(அனுயா-சிவா மனசுல சக்தி கதாநாயகி), ஜோடி நம்பர் புகழ் ரின்செண்ட்(மில்லி மீட்டர்), சொல்ல மறந்துட்டா கோச்சுக்குவாங்க  இராமசாமி, O4P புகஷ் வெங்கட் சுந்தர்.(குறும்பட Super Star ஆச்சே)

கல்லூரி விடுதியின் முதல் நாளிலேயே வன்பகடியில் (ragging) செய்யும் மூத்தவர்களுக்கு சூடு வைத்து பிரபலமாகிறார் விஜய் , அவர்களுடைய இரு அறைத்தோழர்கள்தான் ஜுவாவும், ஸ்ரீ காந்தும் நண்பர்களாகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே சத்யராஜுக்கும் இந்த மூவருக்கும் ஆகாமல் போகிறது. எளிமையாக பல இயந்திரங்களை உருவாக்குகிறார் விஜய், ஆனால் அதையெல்லாம் நிராகரித்துவிடுகிறார் சத்யராஜ் . இவர்கள் மூவரையும் பிரிக்க பலவாறு முயற்சி செய்கிறார் சத்யராஜ். முடியாமல் போகிறது, ஒரு நாள் இரவு குடித்துவிட்டு சத்யராஜ் வீட்டில் இந்த மூவரும் கலாட்டா செய்ய, ஆரம்பிக்கிறது கதை. ஜீவாவுக்கு Campus interviewல் வேலைகிடத்துவிட்டால் மீசை எடுத்துக்கொள்கிறேன் என சவால் விடுகிறார் சத்யராஜ். அதற்காக விஜயும், ஸ்ரீகாந்தும் கேள்வித்தாளை இலியானா உதவிகொண்டு திருட, சத்யராஜுக்குத் தெரிந்து அவர்களை கல்லூரி விடுதியிலிருந்து வெளியே அனுப்ப நினைக்கிறார். இந்த நேரத்தில் சத்யராஜின் மூத்த மகளுக்கு பிரசவ வலி வந்துவிடுகிறது. மருத்துவமனை கொண்டு செல்லாத இயலாத நிலையில் விஜய் கண்டுபிடித்த சாதனத்தின் உதவியோடும், Webcamல் இலியானாவின் அறிவுரைப்படியும் நண்பர்கள் அனைவருமே பிரசவம் பார்க்க சத்யராஜ் விஜயை தலை சிறந்த மாணவனாக ஒப்புக்கொள்கிறார்.


Flash back முடிந்தவுடந்தான் தெரிகிறது விஜய்யின் பெயரே பஞ்சவன் பாரிவேந்தன் இல்லையென்றும், SJ Suryaவின் பினாமியாகவே அவர் படித்திருக்கிறார் எனவும் தெரியவருகிறது, பிறகு இலியானாவும் விஜயும் எப்படி ஒன்று சேர்கிறார்கள், சத்யன் விஜய்யின் தோற்றாரா வெற்றி பெற்றாரா, விஜய் எப்படி புகழ் பெற்றவராக இருக்கிறார் எனபது இறுதிக்காட்சி.


இசை: ஹாரிஸ் ஜெயராஜ், ஏழாம் அறிவுல விட்டதை இங்கேப் புடிச்சுட்டாரு. Template பாடல்களை மாத்தினதும் இல்லாம படத்துக்கு சரியாப்பொருந்தி இசை அமைச்சிருக்காரு. இசை வந்துச்சா போச்சான்னு தெரியாதளவுக்கு பாந்தமாய் அமைச்சிருக்காரு. பாராட்டப்படவேண்டிய சில சமாச்சாராங்கள் நிறைய சின்னச் சின்னதாய் செஞ்சிருக்காரு.

மனோஜ் பரமஹம்சா: ஒளிப்பதிவு, ஈரம், VTVக்கு அப்புறமா ஷங்கர். தமிழ்சினிமாவுக்கு நல்லதொரு வரவு. எதை எப்படிக் கொடுத்தா சரியா காட்சியில உக்காரனும்னு தெளிவா செஞ்சிருக்காரு. குறிப்பிட்டு சொல்லனும்னா அஸ்கு லஸ்கா பாட்டைச் சொல்லலாம். ஷங்கர் சரியான ஆளைத்தான் தேர்வு செய்திருக்காரு.

வசனம்: மதன் கார்க்கி, "அரை மணியில ஃபீட்சா வந்துருது, ஆம்புலன்ஸ் வரமாட்டேங்குது", இப்படி ஒரு இந்திப்படத்தை ஒரு சரியான தமிழ்ப்படமா மாத்தினது இவரோட வசனங்கள்தான். சத்யனின் மேடைப்பேச்சுதான் இந்தியில் கலக்குச்சு, தமிழில் அதுக்குமேலே கலக்கல்.
திரையரங்கமே பத்து நிமிசமா அதிர அதிர சிரிச்சதுன்னா பார்த்துக்குங்களேன்ன். "காலொடிஞ்ச பின்னாடிதான் சார் எப்படி என் கால்ல நிக்கிறதுன்னே தெரிஞ்சது" இப்படி பல வசனங்கள் நச். படத்தை இன்னொரு படி மேலே கொண்டுபோக இவரோட வசனங்கள் உதவியிருக்கு.

இலியானா: கொஞ்சமா வராங்க. ஆடுறாங்க. பாடுறாங்க, சீன் காட்டுறாங்க, இடுப்பைக்காட்டுறாங்க, சரக்கடிக்கிறாங்க.

ஜீவா, கண்டிப்பாய், படம் முழுக்க நம்ம வியாபித்திருக்கிறவர் ஜீவாதான். சோகம், நகைச்சுவைன்னு சும்மா பின்னி பெடலெடுத்திருக்காரு, ஆச்சர்யப்படுத்தராரு. இந்தியில் ஷர்மான் ஜோஷி செய்ததைவிட சிறப்பா செஞ்சிருக்காரு. என்னைப் பொருத்தவரையில், ஜீவாதான் இந்தப் படத்துல One of the Best. அப்ப இன்னொருத்தர், அதுதாங்க சத்யன். கலக்கியிருக்காரு. இந்தப்படம் அவரோட சினிமா வாழ்க்கையின் மறுபிறப்புன்னே சொல்லலாம்- nice selection. ஸ்ரீகாந்த், குடுத்த கதாப்பாத்திரத்தை சரியா பண்ணியிருக்காரு, நக்கல் நையாண்டியாகட்டும், அப்பாகூட மன்றாடும்போதாகாட்டும், பட்டாசு கிளப்புறாரு.

ஷங்கர்: இந்தியிலிருந்து அப்படியே பிரதியெடுக்க ஷங்கர் வேணுமா அப்படின்னு கேட்கிறவங்களுக்கு, இதை ஷங்கரைத் தவிர வேற யார் எடுத்திருந்தாலும் சொதப்பியிருப்பாங்க. B & C க்காக இலியானா பாட்டு சேர்த்திருப்பது,வசங்களை மாற்றி அமைத்தது, தன்னுடைய பாடல்களையே Spoofஆக மாற்றி அஸ்க் லஸ்கா பாட்டில் கிண்டலடித்துக்கொள்வது, ரயிலுக்கு வண்ணமடிப்பது என ஷங்கர் டச் எல்லா இடத்திலேயும் உண்டு. தமிழில் குடுத்த படங்கள் எல்லாமே Block Buster (இந்தப் படம் உட்பட)என்பதைத் தவிர ஷங்கரிடம் சிறப்பாய் ஒன்றுமில்லை.

குறை: இலியானாப்பாட்டு. எதுக்குன்னே தெரியல, படமே ரொம்ப நீளம் இதுல இந்தப்பாட்டு வேற.  கடுப்பா இருந்துச்சு. பின்னாடி வந்த காட்சிகளின் வசனம்தான் நம்மை மீட்டெடுக்குது.


விஜய்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, அனுயா இப்படி எல்லார்கிட்டேயும் ச்சும்மா சுத்தி சுத்தி அடிவாங்குறாரு. அடி மட்டுமா, மிதி மிதின்னு மிதிச்சாலும் வாங்கிக்கிறாரு. விஜய் மீண்டும் மென்மையாய், இளமையாய் இருப்பது இந்தப் படம்தான். கண்டிப்பாய் அமீர்கானுடன் ஒப்பிடுவது தப்புன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனாலும் குடுத்த கதாப்பாத்திரத்தை கச்சிதமாய் முடிச்சிக்கொடுத்துட்டாரு விஜய். இப்படி நடிச்சித் தொலைக்க வேண்டியதுதானே, கருமாந்திரம் எல்லாம் என்னாத்துக்குங்க விஜய் சார்? ஆனாலும் பாத்திரத்தை நிறைவாய் செய்துவிடுகிறார் விஜய். "பலே சார், நீங்களும் நடிப்பீங்கன்னு நிரூபிச்சிட்டீங்க, இனிமே பிக்காலிப்பசங்ககூட எல்லாம் சேராதீங்க." இப்படி அடக்கி வாசித்தது ஆச்சர்யமே ஆனாலும் அதுதான் படத்தோட வெற்றிக்கும் காரணம். விஜய் ரசிகர்களயும் தாண்டி கண்டிப்பாய் பலருக்கும் இந்தப்படம் புடிக்கும். சுருங்கச் சொன்னா, விஜய்க்கு 1996ல் விக்ரமின் பூவே உனக்காக கிடைச்சது, 2011 ஷங்கரின் நண்பன் கிடைச்சிருக்கு.

மொத்தத்துல அருமையான படம், கண்டிப்பாய் எல்லோரும் பார்க்கவேண்டிய படம்.
(My Rating: 4/5)
.
.
.

Wednesday, August 31, 2011

மங்காத்தா திரை விமர்சனம் - mankatha Movie review

”சார்! படத்துல 5 பேரு, அதுல நாலு பேரு கெட்டவங்க, ஒருத்தர் மட்டும் ரொம்ப கெட்டவரு” இப்படித்தான் Oneline சொல்லி அஜித்திடம் ஒப்புதல் வாங்கினாராம் வெங்கட்பிரபு. ஆனா படமே வேற மாதிரிங்க.

பாஸ்டன்ல, முதல் நாளுக்கு ஒரே காட்சி, அதுவும் ராத்திரி 9:45க்கு, செவ்வாய்கிழமை, இன்னிக்கு எவன் வருவான், அதுவும் ஒரு வேலை நாளுல, அஜித் படத்துக்கு” அப்படின்னு நினைச்சுகிட்டு அரங்கத்துக்குப்போனா ஆச்சர்யம். என்னா கூட்டம் (இங்கேயெல்லாம் 60 பேரே பெரிய கூட்டம்தான்).

அஜித்திக்கு இத்தனை ரசிகர்களான்னு சந்தேகம்தான். வெங்கட்பிரபுவுக்காகவும் வந்திருக்கலாம். “சரக்கடிச்சா இளையராஜா பாட்டு கேட்கத்தோணுதுடா”, சரக்கடிச்சுட்டு அடுத்த நாள் காலையில் “இனிமே சரக்கே அடிக்கக்கூடாதுடா” இப்படி வர்ற வசனங்கள்தான் பலமே. கதையே இல்லாம காட்சி வெக்கிறது இவரோட சாமர்த்தியம். அதேதான் இந்தப் படத்திலேயும். எப்பவுமே ஒரு அணி வெச்சிருப்பாரு, காமெடிக்குனு பிரேம், வைபவ், அரவிந்த்(இப்படி சப்பை பசங்கன்னு இவரே சொல்லிக்கிடுவாரு, நாமளும் சிரிச்சிக்குவோம்).

கெட்டவங்களா, அஜித், வைபவ், மஹத், JP, அர்விந்த் ஆகாஷ், பிரேம், லட்சுமிராய், அஷ்வின். ஆமாங்க படத்தில் எல்லாருமே கெட்டவங்க. படத்தோட கதை, எதையாவது ஒளிச்சி வெச்சி தேடனும்.. அப்ப IPL சூதாட்டம்னு சேர்த்துக்கலாம்- இப்படித்தான் அமைஞ்சிருக்கும் கதை

நாயக சினிமா உலகத்தில் 50 வது படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அஜித்தின் தைரியத்தையும் பாராட்டியே ஆவனும்.
”ஆமாங்க, எனக்கு நாப்பது வயசுதான்,வில்லந்தான். குடிச்சு குடிச்சு தொப்பை வந்துருச்சு, முடியெல்லாம் நரைச்சுப் போயிருச்சு, அதுக்காக பணமும் பொண்ணும் வேண்டாமா?” இதுதான் அஜித்தின் கதாபாத்திரம். இந்தா பார்த்துக்க இதுதான் என் தொப்பைன்னு சட்டையில்லாம நிக்கிறது, ரொம்பவே தைரியம்தான். அதுவும் Interval Block க்குன் முன்னாடி செஸ் போர்ட் வெச்சிருக்கு ஒரு திட்டம் போடுறது காட்சி அப்ளாஸ், வெங்கட் அஜித் மேல நம்பிக்கைக்கு அந்த ஒரு காட்சியே போதும். அதுவும் ரத்தமெல்லாம் பச்சை நிறமாய்..:)

நான் ஆக்சன் கிங்தான், நான் பிரேம்ஜி- காமெடியந்தான், நான் JP, வில்லன் - கதாநாயகியோட அப்பாதான், இப்படி நிறைய தான்கள்.

கதைக்கான களம் கிரிக்கெட்.. ஆமாம் மீண்டும் கிரிக்கெட். இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது போல இது Ocean11/12/13 எல்லாம் இல்லை(வேற எதனாச்சும் இருக்கலாம்) IPLல்கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுகிறது,(எப்படி விட்டார்கள் தணிக்கையில்?)அதற்கான பணத்தை ஒரு அணி கொள்ளையடிக்கிறது, அந்த அணியிடமிருந்தும் கொள்ளையடிக்கிறார்கள் இன்னொரு ’அணி’. அவனைப் போடு, இவனையும் போடு, எல்லாத்தையும் போடுறா, இதுக்கு நடுவுல காவல்துறையும் பணத்தையும் கொள்ளையர்களை தேடுகிறார்கள், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பல திருப்பங்களோடு ஆடுவதுதான் மங்காத்தா.

கதாப்பாத்திரங்களை விம்பார் போட்டு விளக்கவே தேவைப்படுது முதல் பாதி. இரண்டாம் பாதியோ, ஒவ்வொரு காட்சியிலும் திருப்பம். ஒவ்வொருத்தரும் தன் பாணியில் சொல்லி ”முடிக்கை”யில்
முடிந்து போகிறது படம். ஙொக்கா மக்கா, இரண்டாம் பாதியில இயக்குனர்தான் தெரியறாரு.  Example: இரண்டு குழுக்கள் அடிச்சுக்கும். வில்லன் கூட்டமும்,  இன்னொரு வில்லன் கூட்டமும்(அதான் நல்லவங்களே இல்லையே) அஜித் குழுவுல 3 பேரு. அவுங்களுக்கு உள்ளேயும் அடிச்சிக்குவாங்க, எதிர்த்த கும்பலையும் அடிப்பாங்க. எவன் எவனை அடிக்கிறான்னே தெரியாது. ஆனா தெளிவா புரியும்(Yuvan's Cliche RR- returns)- Director's Touch- Stunt Touch. Chasingல அஜித் கலக்கியிருக்காரு(இதெலென்னா ஆச்சர்யம்)

”எவந்தாண்டா நல்லவன்?” அப்படின்னு ரசிகர்கள் உச்சதாபியில் கத்தும் போது ”எவனுமே இல்லைடா” என்று சொல்லிருக்கிறார் இயக்குனர்.

முதல் பாதி அஜித்தின் அதகளம், வைபவ்வை நம்பி வைத்திருக்கிறார்கள் இரண்டாம் பாதியில் முதல் பாதி. ஒரு டூயட்டும் உண்டு. வாழ்கைடா வைபவ். அதுவும் அஞ்சலியொட டூயட்டுல. டேய் வாழ்வுதாண்டா. அஞ்சலி இந்தப் படத்தில் too Sexy. வைபவ், பீமா விக்ரம் மாதிரியே rough and tough. அப்புறம் அழுவாச்சி, அப்ரூவர். இப்படி நிறைய மாற்றம். நீ ஜெயிச்சிட்டடா வைபவ்.


மஹத், நடிக்க ரொம்ப சிரமப்பட்டிருக்கார்(வரலை). ஆனால் ஆட்டம் பாட்டத்தில் balance செஞ்சிக்கிறாரு உண்மையைச் சொல்லப் போனால், பாடல்களில் மஹத்தும், வைபவும்தான் தெரிகிறார்கள். குத்தாட்டத்துக்கு எது அஜித்னு முடிவு பண்ணியே ஆளை இறக்கிருக்காரு வெங்கட், ஊமைக் குசும்பன்யா நீயு) மஹத்திற்கு ஏன் இத்தனை ரசிகைகள்? திரையரங்கில் அவருக்கென தனி ஜொள் ஆறே ஓடுது. கேட்ட இசுமார்டா இருக்கானாம். நடிக்க வரலையேன்னு கேட்ட பொண்ணுங்க சொல்லுது அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்களாம். அரவிந்த் ஆகாசுக்கு பெரிய கதாபாத்திரம், குடுத்த காசுக்கு சரியா கூவியிருக்காருபா. அஷ்வின், பரவாயில்லை ராசா, முன்னேறிடுவே, தனியா தேடுப்பா.

ஜெயப்பிரகாஷ், வழக்கம் போலதான் (ரகுவரன் இல்லையென்ற குறை தீர்ந்தது). திரிசா, வருகிறார், ஆடுகிறார், கொஞ்சுகிறா, அழுகிறார். அவ்வளவுதான். ஆண்டிரியாவுக்கோ அதிலும் பாதிதான்.



லட்சுமிராய் ஆரம்பம் முதல் கடைசி வரை, ரொம்ப கொஞ்சம் துணியோட வந்து போறாங்க. ரெண்டு பாட்டுல செம ஆட்டம் (அம்மணி, தோணி ஏன் உங்கிட்ட Boldஆனாருன்னு இப்பத்தான் தெரியுது). சொல்லிக்கொள்ளும்படியான வேடம்தான்.  வழக்கம்போல பிரேம்ஜி நகைச்சுவைக்கு உத்தரவாதம். பல படங்களில் பார்த்து பார்த்து சலிச்சுப் போன கதாபாத்திரம்.வசனங்கள்(அடுத்தவங்களுதுதான்) பேசியே தப்பிச்சிக்கிறாரு.(பெரியப்பா பாட்டும், அடுத்தவங்க வசனமும்தான் பிரேம்ஜி.. போன படத்துல “கண்கள் இரண்டால்” இந்தப் படத்துல “நேத்து ராத்திரி அம்மா”)

குறைகள்: மொக்கையா ஒரு காவல்துறை அதிகாரி இறந்து போவது, அதுக்கு விளக்கம், அதைவிட மொக்கை. பம்பாயில் எல்லாருமே தமிழ் பேசுறது, ஒரே தெருவில் இருந்தாலும் காவல்துறை மெனக்கெட்டுத் தேடுவது, அஜித் என்பதால், காவல்துறை அதிகாரி என்றாலும் மொத்தமாக எல்லாரும் நம்புவது(நாமளும்தான்), பிரேம்ஜியின் Clicheகள்(போதும்யா சலிக்குது). மொக்கை சீனுக்கும், ரத்தத்துக்கும் திரை போட்டு ஏன் மறைக்கிறது.

இசை : யுவன் 30% (Cliche in some scenes from Goa, Saroja). யுவனில்லைன்னா நாறியிருக்கும். அத்தனை chasing, அத்தனை வசனம். fillup பண்ண வேணாமா?

ஒளிப்பதிவு: சக்தி சரவணன் 30% அதுவும் கடைசியா அர்ஜூனை காட்டும் போது ஒரு லோ ஆங்கில் வருமே. ஷ்ஹ். பின்னிட்டீங்க சார். ஏகப்பட்ட கட் ஷாட்ஸ், இல்லாட்டா ரிச்னெஸ் வராதுல்லை.

ரஜினி பாணியில் அஜித். ஆமாங்க, இப்படி இயக்குனரிடம் சரண்டர் ஆவறது நமக்குத்தான் நல்லது. விஜய் சார் கொஞ்சம் யோசிங்க.

அர்ஜூன், கிடைத்த இடத்தில் எல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார். அதுவும் இறுதிக்காட்சியில். Welcome Back Action King. அர்ஜுன் அஜித்தை “தல” என அழைப்பதும், அஜித் அர்ஜூனை ”வாய்யா ஆக்சன் கிங்கு” என்று கிண்டலாவே கூப்பிட்டுக்கிறதும் ரசிக்க வைக்கிறது. விஜய் படம் கூட வருதுங்க. சந்தானம், ரஜினி, கமல், சாம் ஆண்டர்சன் என எல்லாவிடத்திலேயும் சொல்லியடித்திருக்கிறார்கள். கைத்தட்டல் அள்ளுகிறது. அஜித் திட்டமிடும் போது வீடு முழுக்க அஜித்களும், ”நீ நான்” பாடலில் வரும் Computer Graphicsம் அட போட வைக்கிறது.

அஜித்திற்கு தேவைப்பட்டது ஒரு ஹிட், 50 வது படமும் நல்ல படமா இருக்க வேண்டும். ரெண்டுக்கும் ஒரே டிக் மங்காத்தா.

என்னோட மதிப்பெண் 7.5/10

Pics: Thanks to India Glitz(Online media Partner)

Thursday, May 5, 2011

Under the Same Moon - Spanish விமர்சனம்

மீண்டும் ஒரு சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை தாண்டும் படம். Maria Full of Graceக்குப் பிறகு நான் பார்க்கும் எசுபானிய படம். எசுபானியம்ன்னா என்னாவா? ஸ்பானிஷ்ங்க.
Rosario சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையைத் தாண்டி LAயில் சின்ன சின்ன வேலைகளைச் செஞ்சு, மெக்ஸிகோவுல இருக்கும் தன்னோட மகனுக்கு பணம் அனுப்புறா. மகனோ அம்மாவை 4 வருசமா பார்க்காத பையன். அதுவும் பையனுக்கு 9 வயசுதான் ஆவுது, உடம்பு சரியில்லாத பாட்டியோடதான் வாழ்க்கை.  அம்மா பாசத்துக்காக ஏங்க மாட்டானா? அப்பாவும் கிடையாது. அவனும் மெக்ஸிகோவுல சின்ன சின்ன வேலை செஞ்சு கொஞ்சம் காசு வெச்சிட்டு இருக்கிற பொறுப்பான, புத்திசாலித்தனமான, தைரியமான பையன். பாட்டியால வெறுக்கப்படுற சித்தப்பா,சித்தி வழியா அவனோட அப்பாவும் அமெரிக்காவுல Tucson அப்படிங்கிற ஊருல இருக்கிறத தெரிஞ்சிக்கிறான். இதுவரைக்கும் பார்த்தே இல்லாத அப்பா மேல அவனுக்கு பாசம் வரவே இல்லை. எல்லாமே அம்மாவைப் பார்க்கனும், அதுவும் சீக்கிரம் பார்க்கனும்னுதான் அவனுக்கு ஆசை.

அம்மாவும் மகனும் பொது தொலைபேசி வழியா ஒவ்வொரு வாரமும் பேசிக்கிறதுதான் கதையோட மைய ஓட்டமேன்னு சொன்னாலும், ஒரே  ஒரு காட்சிதான் வரும். அதுதான் ஒட்டு மொத்த படத்தோட ஒன் லைன், முடிவும்.  

தூக்கத்துலேயே பாட்டி இறந்து போனதும், அம்மாகிட்ட போய் சேர்ந்துடலாம்னு முடிவு செய்றான் கார்லிதோஸ்(சிறுவன்).  அதுவும் அவுங்க அம்மா அடுத்த முறை தொலைபேசியில பேசும் ஞாயிறுக்குள்ள அவுங்க அம்மாகிட்ட இவன் சேர்ந்தாகனும்ங்கிறதுதான் திட்டமே. இவன் வேலை செஞ்ச இடத்துல அமெரிக்கர்கள் ரெண்டு பேரு ஏதாவது குழந்தை/சிறுவனை எல்லைத்தாண்டி அனுப்பத் தயார்னு சொல்லி இருப்பாங்க. அவுங்க உதவியோட கார்ல எல்லையைத் தாண்டும் போது No parking டிக்கெட்டுக்காக மாட்டிக்குவாங்க. காருக்குள்ள ஒளிஞ்சிட்டு இருப்பான் கார்லிதோஸ், காரோட எடுத்துட்டு போயிருவாங்க காவல்துறை. கூட போவங்க ரெண்டு பேரும் இல்லாம..  அங்கே இருந்து தப்பிச்சு(இந்தக் காட்சி அப்ப எல்லாம் செம டென்சனப்பா) அவன், வேற இடத்துல இவனை மாதிரியே சட்ட விரோதமா தங்கியிருக்கிற மக்களோட LA போக முயற்சி பண்றான். நடுவுல என்ரிக் அப்படிங்கிறவரோட சேர்ந்து பயணப்பட ஆரம்பிச்ச பின்னாடிதான் படமே புது பரிமாணத்துக்கு போவும். அதுவும் என்ரிக்குக்கு கார்லிதோஸோட பயணப்படறதே புடிக்காது.  .



ஒரு சமயம் அவுங்க அப்பா இருக்கிறதா சொன்ன Tucsonக்கே வந்தவுடனே என்ரிக்கிட்டே தன்னோட அப்பா அங்கே இருக்கிறதா சொல்லும் போது, என்ரிக்தான் அப்பாவோ நினைக்க வெக்கும் திரைக்கதை. ஆனா அவுங்க அப்பாவையும் கண்டுபுடிச்ச பின்னாடிதான் கார்லிதோஸ்க்கு சோதனையே ஆரம்பிக்கும். ஆமாம், கார்லிதோஸோட அப்பா அவுங்க அம்மாகிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வராமலே போயிருவாரு. என்றிக்கும் அவனோட LA வந்து தேடோ தேடுன்னு தேடுவாங்க. கார்லிதோஸ் தன்னோட அம்மோ எழுதுன கடுதாசில வந்த முகவரி தேடிப்போன பின்னாடிதான் தெரியும், சட்ட விரோதமா தங்கியிருக்கிற மக்கள் எல்லாமே வேற ஏதோ ஒரு முகவரி தந்து கடுதாசி போடுவாங்கன்னு.


அதே சமயம் ரொசாரியோ, அவுங்க வேலை பார்க்கிற இடத்துல ஒருத்தரோட காதலும் இல்லாம, ஏதோ ஒரு வேகத்துல ஒருத்தரோட பழக ஆரம்பிக்கிறா. கல்யாணம்கூட முடிவாகிடுது, ஆனா ஏதோ ஒன்னு தடுக்க, மெக்ஸிகோவுல இருந்து அவளுக்குத் தொலைபேசி வருது, அப்பத்தான் அவளுக்கு தன்னோட அம்மா இறந்ததும், பையன் எல்லைத்தாண்டி தன்னைப்பார்க்க வர்றதும் தெரியும்.
முகவரி தப்பா இருந்தாலும் அம்மாகிட்ட பேசும் போது, அந்த பொதுத் தொலைபேசி பக்கத்துல எப்படி இருக்கும் கேட்டதை வெச்சி அதே இடத்தை ரெண்டு பேரும் தேட ஆரம்பிக்கிறாங்க. கஷ்டம்னு என்ரிக்குக்கு தெரிஞ்சாலும் கார்லிதோஸுக்காக பொறுத்துகிட்டு தேடறாங்க.  ஒரு சமயம் காவல்துறையில் மாட்டிக்க வேண்டியதாயிருது. என்ரிக் காவலர்களைத் தாக்கி, தான் மாட்டிகிட்டாலும் பையன் தப்பிச்சு போகனும்னு செய்ற இடம் மனசுல அந்தப் பாத்திரம் பச்சக்கு ஒட்டிக்க வெக்கும். காவலர்கள்கிட்ட தப்பிச்ச பையன் ஓடிப்போயி நின்ன இடம், அம்மா எப்பவுமே தொலைப் பேசியில பேசுற இடம், அதே நேரம் பையன் எப்படியும் இந்த இடத்தை கண்டுபுடிச்சு வந்திருவான்னு அம்மாவும் காத்திருக்க... இவன் சாலை இந்தப் பக்கம் , பையன் அந்தப் பக்கம்னு நின்னு.. சுபம்.

அம்மா மகன் பாசத்தை கதையின் கருவா வெச்சி, எல்லைத் தாண்டுறது, பையனோட புத்திசாலித்தனம், வேலை செய்யனும்னு இருக்கிற ஆவல்,வேலை செய்யும் போது ரசிச்சு செய்றதுன்னு நிறைய விசயங்கள் பலிச்சுன்னு சொல்லியிருக்காங்க. படத்துல பல லாஜிக்கான ஓட்டைகள் இருக்கு, உதாரணம், கார்ல இருந்து பையன் தப்பிச்சு வர்ற இடம். அதேமாதிரி அலைபேசி எண் இருந்தும் எடுத்துட்டு வராத பையன்.  படத்துக்கு ரெண்டு பலம், ஒன்னு இசை, இன்னொன்னு எந்த இடத்திலும் நெருடல் இல்லாத, கண்ணைக் கூசச் செய்யாத ஒளிப்பதிவு.  படம் 2007ம் ஆண்டு வெளி வந்தது.

கார்லிதோஸா நடிச்ச பையனோட நடிப்பு அட்டகாசம், ஒவ்வொரு frameலயும் அவனோட உழைப்பு தெரியுது. எப்படித்தான் இயக்குனர் இந்தப் பையன்கிட்ட வேலை வாங்கினாரோ தெரியல. கொஞ்ச நேரமே நடிப்புக்கு வாய்ப்பு இருந்தாலும் என்ரிகாக நடிச்ச Eugenio நடிப்பு, இறுதியில தன்னைக் காட்டி கொடுத்து பையன் காப்பாத்துற இடத்துலயும்.. நச். அதே மாதிரி பையனும், என்ரிக்கும் சேர்ந்து தேடும் போது ரொசாரியோ வேற பக்கம் திரும்பி உக்காந்திருப்பாங்க, அந்தக் காட்சியில் நாமே பையன்கிட்ட கூப்பிட்டு சொல்லத் தோணும். இப்படியாப்பட்ட சின்ன சின்ன விசயங்கள்ல இந்தப் படம் ஜெயிச்சிருது. அதுசரி, திரைக்கதைதானே படத்துக்கு பலம்.
Cast
  • Adrian Alonso as Carlos "Carlitos" Reyes
  • Kate Del Castillo as Rosario
  • Eugenio Derbez as Enrique
  • America Ferrera as Martha
  • Jesse Garcia as David
  • Maya Zapata as Alicia
  • Gabriel Porras as Paco
  • Sonya Smith as Mrs. Snyder 
  • Directed by Patricia Riggen
  • Produced by Ligiah Villalobos/Gerardo Barrera
  • Written by Ligiah Villalobos
  • Music by Carlo Sillioto/Los Tigres del Norte
  • Cinematography Checco Varese
  • Editing by Aleshka Ferrero
  • Running time 106 minutes
  • Gross revenue $23,311,391
கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.

Friday, October 1, 2010

Endhiran Review- FDFS

எந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையக்கரு. கண்டிப்பாக இது வழக்கமான ரஜினி படமில்லை, ஆறிமுகப் பாடல் இல்லை, தீப்பொறிக்கும் வசனங்கள் இல்லை, நாயகன் அடிக்க 20 பேர் பறந்து போய் விழவில்லை, அம்மா, தங்கை பாசப் போராட்டமில்லை, கவர்ச்சியில்லை, கிளப் டான்ஸ் இல்லை, இல்லை இல்லை. எதுவுமே இல்லாம இது எல்லாம் தமிழ் சினிமாவான்னு துப்பாதீங்க, ஆனா இதெல்லாமல் வந்தததுதான் இந்தத் தமிழ்ப் படம். ஆச்சர்யமில்லையா?

விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு ரோபோ (AndroHumanoid Robot) தயாரிக்கிறார். அதே சமயம் அவருடைய குரு Danny Denzongpaவும் இதைனைப் போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு(சிட்டி) அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கையில், ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்துவிடுகிறார்.மீண்டும் முயன்று வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். ஆனால் உணர்வு பெற்ற எந்திரனோ ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி தவறான மென்பொருளை உள்ளீடு செய்ய, அது டேனியையும் அழித்து மேலும் ரஜினி போன்ற சிட்டி ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், பிருமாண்ட இறுதிக்காட்சிகள என்பதுதான் மீதிக் கதையே.

ஷங்கர் தன் வாழ்நாள் சாதனைப் படமாக சொன்னது எந்திரனைத்தான். அதற்காக அவர் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை. இயக்குனரின் கற்பனையை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். மூன்றே கதாப்பாத்திரங்கள், 2 1/2 மணிநேரத்துக்கும் மேலான படம், ஆனாலும் விறுவிறுப்பில் பஞ்சமில்லை. அதுவும் இறுதிக்காட்சிகள், கண்டிப்பாக ஹாலிவுட்டிற்கு நிகரேதான். முதல் பாதி காதல், அறிவியல் என்று செல்கையில் இரண்டாம் பாதி அதிரடிக்காட்சிகள், ஒரு கட்டிடம் முழுக்க ரஜினி, ஆம் அத்துனையும் ரஜினிகள். பிரமிக்க வைக்கும் காட்சிகள் அவை, அதிலும் வில்லனாக ரஜினியே வர திரையரங்கள் விசில்கள் பறக்கின்றன.


இரும்பிலே ஒரு இதயம் காட்சியினூடாகவே செல்கிறது, பூம் பூம் ரோபாடா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்,அதிலும் மைக்கேல் ஜாக்சன் போன்றே ரஜினி ஆடும் காட்சிகள் வாவ். கிளிமஞ்சாரோ பாடலில்தான் இயல்பாக நாம் பார்த்த ரஜினியை பார்க்க முடிகிறது, மீதியெல்லாம் இயக்குனரின் நடிகராகவே வந்து போகிறார். காதல் அணுக்கள் பாடலில் வரும் இடம், புதிது, ஐந்து மணிநேரம் பயணம் செய்தே அந்த இடத்தை அடைந்தார்களாம். அழகு அழகு அழகு. அரிமா அரிமா மைக்கேல்/ஜேனட் ஜாக்சன் இருவரும் இணைந்த Screamஐ ஞாபகத்தில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை: ஐஸ்வர்வாவை படம் பிடித்திருக்கும் அழகும், அவரின் நடனப் பாங்கும், ரஜினியும் ஒத்துழைத்திருக்கிறார், ஆனாலும் ஐஸ்வர்யாவின் அழகு ரஜினியின் ஆட்டத்தை குறைவாகவே காட்டுகிறது. fashion Show பூனை நடை, நடனங்களில் நளினம், அவர் பிறந்தநாள் காட்சிகள் எல்லாம் இருவர் ஐஸ்வர்யா போலவே இருக்கிறார்.


படத்திற்கு ஒரு தூண் ஒளிப்பதிவென்றால், ஆஸ்கார் நாயகன் மற்றுமொரு மிகப் பெரிய தூண். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். வசனம்: சுஜாதா, ஷங்கர், கார்க்கி.

இதுவரை ஷங்கரின் எண்ணத்தை பேச வைத்தவர் சுஜாதா. இந்தப் படத்தில் சுஜாதாவின் இழப்பு தெரியாத வகையில் ஈடு செய்திருக்கிறார்கள். அதிவும் அத்துனை அறிவியல் வார்த்தைகளையும் தமிழாக்கி, புரியும்படி செய்திருப்பதற்கும் அறிவியலை நடைமொழிக்கு மொழி பெயர்த்திருப்பதற்கும் ஒரு பெரிய சல்யூட். நக்கலா- இல்லை நிக்கல், காதலிச்சா நட்டு எல்லாம் கழண்டுருமாம், என்றபடியே நட்டை கழட்டும் இடம், சீன் போடாத சீதாபிராட்டி, Dot; இப்படி சின்னச் சின்ன வசனஙகளுக்காக திரையரங்கத்தில் விசில் பறக்கிறது.

படத்தின் குறைகளாக சிலவற்றைச் சொல்லலாம், கொசு பிடிக்கும் காட்சி, வில்லன் தயாரித்த ரோபோவை வெளிநாட்டு மக்களுக்கு விற்க முனைவது, விஞ்ஞானி என்றால், காதல் மறந்த, சோப்ளாங்கியாகவே காட்டுவது, சந்தானம், கருணாஸ் கதாபாத்திரங்கள். இப்படி வெகு சில மட்டுமே.

படத்தின் நாயகன் ரஜினி, வில்லனும் ரஜினியே. ரஜினியை வில்லனாக பார்க்க ஆசைப் பட்ட மக்களுக்கு இந்தப் படம் செம தீனி. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், மூன்று முகம் வரிசையில் ரஜினிக்கு நடிப்பில் எல்லைத் தொட்ட படம். எந்திரன் ரஜினிக்கு ஒப்பனை செய்ததை விஞ்ஞானி ரஜினிக்கும் செய்திருக்கலாம்.அழுதால்தான் நடிப்பு என்று நம்பியிருக்கும் நம் மக்களுக்கு ரஜினியின் உழைப்பு தெரியுமா என்பதுதான் சந்தேகமே.நான் இப்படி நடித்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கழுத்தருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் எப்படி நடித்தாலும் சூப்பர் ஸ்டார்தான் என்று நிரூபித்து சாட்டையால் விளாசியிருக்கிறார் ரஜினி.

படத்திற்கான செலவு அதிகம், மீண்டும் இப்படி ஒரு முயற்சி தமிழில் வர இன்னும் சிலகாலம் ஆகலாம். குறைந்த பட்சம் இந்த மாதிரியான முயற்சிகள் இந்தியாவை தாண்டிச் செல்லும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.குடும்பத்தோடு தாராளமாக பார்க்கலாம், இது அனைவருக்குமான படம். எப்படியோ சன் பிக்ஸர்ஸ் தயாரித்த முதல் படமே மாபெரும் வெற்றி.ரஜினிக்காகவே ஷங்கர் எடுத்தப் படம் சிவாஜி, இந்தப் படம் ஷங்கருக்காக ரஜினி நடித்துக் கொடுத்திருக்கிறார், அதுவும் ஒரு இயக்குனரின் நடிகராகவே. முதல்வன் பார்த்த போது ‘சே ரஜினி இந்தப் படத்தில நடிக்காம விட்டுட்டாரே’ன்னு கவலைப்பட்டேன். ஆனால் இதுல எல்லாத்தையும் சேர்த்து புடிச்சுட்டாரு. Shankar, Rajni, Randy, ARR, Sujatha/Karki- Made a history in Indian Film Industry.

இறுதியாக, கமல் ஷாருக்கான் தவற விட்ட படங்களின் பட்டியலில் எந்திரன் முதல் இடத்தைப் பிடிப்பான்.

எந்திரன், ரஜினியின் ஷங்கரன்.
தமிழோவியத்துக்காக எழுதியதில் இருந்து கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது

Friday, September 18, 2009

Unnai Pol Oruvan Review

ஒரு பெரிய படம் குடுத்தா அடுத்ததா ஒரு நகைச்சுவைப்படம் தருவது கமலின் வாடிக்கை. இந்த முறை வித்தியாசம். தசாவதாரத்திற்குப் பின் மீண்டும் ஒரு பெரிய படம். ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதைய தன் பக்கத்துக்கு இழுத்து வந்திருக்கிறார் கமல். படத்தில் மொத்தமே 5 கதாப்பாத்திரங்கள். காவல்துறை என்கவுண்டர் காலத்தில் வந்திருக்கும் ஒரு தீவிரவாத என்கவுண்டர்.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் முறியடிக்கப்படவேண்டும் என்பதைச் சொல்லும் படம். தீர்ப்புகளும் நொடிப்பொழுதில் கிடைக்க வேண்டுமென நினைக்கும் ஒரு சாதாரண பிரஜை ஆசையின் பிரதி.

கதை, Speed 1 கதைதான். காலை 9 மணி ஆரம்பித்து மாலை 6.10 முடியும் படம். நாட்டில் நடந்த பெரிய வன்முறைத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட 4 தீவிரவாதிகளுக்காக, நகரத்தில் பல குண்டு வைத்து மிரட்டி நால்வரையும் மீட்கும் கதைதான். உச்சமே அந்த நாலவரின் கதி என்னவாகிறது என்பது. ஒரு வரி கதை. கமல், 5 நாட்களில் நடித்து முடித்ததாக சொல்லப்படுகிறது, இருக்கலாம். கமல், மோகன்லால், இரு அசத்தும் காவல்துறையினர், லஷ்மி, ஒரு நிருபர் பல கணினிகள்/கைபேசிகள்.படமே ஒரு தெரு, ஒரு அறை, ஒரு மொட்டை மாடி என முடிந்துவிடுகிறது.

கமலுக்கு ஏற்ற வேடம், நம்மவரில் பார்ததது போலவே. சண்டை இல்லை, குத்து வசனம், பாடல்கள் இல்லை. ஒரு மொட்டை மாடியில் நின்று கொண்டு காபி குடித்துக்கொண்டு கைபேசியில் பேசும் வேடம். சின்ன கதாபாத்திரம். மோகன்லாலுக்கு கைபேசியில் பேசுவது மட்டுமே வேடம். மோகலால குடுத்த வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறார். உங்களுக்கு இராணுவ பதவி தப்பே இல்லை. இறுதிவரை அசத்துவது இரண்டு காவல்துறை அதிகாரிகள். கமலுக்கு மட்டும் எங்கே இருந்து இப்படி கிடைக்கிறார்களோ? தமிழுக்கு இரண்டு கதாநாயகர்கள் தயார்.

படத்தில் லஷ்மிக்கு அடுத்தப்படியாக ஒரு நிருபர், படத்தில் ஒருவர் மட்டுமே புகைப்பிடிக்கிறார். அதுவும் இந்தப் பெண் நிருபரே. Basis Instict ல் பார்த்த அதே ‘தம்’ சீன். சந்தான பாரதிக்கு அதே மை.ம.காம.ராஜன்’ல இருந்தே வேடம். ”மைக்கேலு, போலிஸுல சரண்டர் ஆகிரலாம்பா” .. அதே டெம்போ. ஒன்னும் வித்தியாசம் இல்லை.

மற்ற படங்களின் டைட்டில் போட்டு முடிக்கும் வேகத்தில் முடிந்துவிடுகிறது முதல் பாதி. என்ன வேகம்? என்ன வேகம். வெகுநாட்களுக்குப்பிறகு தமிழில் இப்படி ஒரு திரைக்கதை. அசத்தல் வேகம். ஆரிஃப் கானாக வரும் காவலரின் ஒரு விசாரணை, அடிக்காமல், வசனம் அதிகம் பேசாமல், தன் கம்பீரத்தைக் காட்டியே உண்மை வாங்கும் பாங்கு அருமையோ அருமை. வசனகர்த்தாவுக்கு இந்த இடத்தில் ஷொட்டு. வசனகர்த்தா பொட்டி தட்டுறவர், இரா.முருகன். தேவையான இடத்திற்கு தேவையான வசனம்.”எனக்கும் இடது, வலது இரு கையில் எழுதும் பழக்கம் உண்டு. இடதும் பிடிக்கும், வலதும் பிடிக்கும். இது எழுதுவதில் மட்டும்தான்” ”a stupid common man from republic" இப்படி பல இடங்களில் மிளிர்கிறார் இராமுருகன். பளிச். இயக்குனரும் பொட்டிதட்டுறவர் போல. அதென்னமோ மென்பொருள்ல இருக்கிறவங்கன்னா கண்ணாடி போட்டுத்தான் ஆவனுமா?

ஒரு தலைமை செயலர் எப்படி இருப்பார் என்பதற்கு லஷ்மி கதாப்பாத்திரம் ஒரு சான்று, முதல்வராக கலைஞர் குரல்(போல்). த. செயலர்னா இப்படித்தான் பொறுப்பு இருந்தும் எடுத்துக்கொள்ள முடியாத நிலைமை. எடுத்துக்காட்டிய விதம் அருமை. படித்த ஜாலராக்கள்.

இசை, ஆரம்பம் மும்பை படத்தில் ARR செய்த வேலை, கடைசிவரை இசை இருக்கிறதா என்பதே தெரியாத அளவுக்கு நேர்த்தியான இசை. தந்தைக்கு தப்பாமல் பிறந்திருக்கு பெண். படத்தின் இன்னொரு பலம் ஒளிப்பதிவு, அசத்தல், அருமை, பலே, பேஷ். அட்டகாசம்.. இன்னபிற.. எடிட்டிங்- என்ன சொல்ல.. படத்தில் சொல்லாமல் சொல்லும் விசயங்கள பல, பாமரனுக்குப் புரியுமா எனபதுதான் கேள்வியே. உதாரணம் கமல் வைத்திருக்கும் துப்பாக்கி, எந்தவிதமான வசனமும் இல்லாமல்,தான் சாகத்தயார் என்பதைச் சொல்லுவது, கடைசியில் அதே துப்பாக்கி்யை உறையில் வைப்பதும்- இப்படி பல விசயங்கள் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் விறுவிறுப்பு இறுதி வரை குறையவில்லை. அதாவது இறுதியில் குறைந்திருக்கிறது. தெரிந்த அதே கோத்ரா, best backery, குஜராத் உள்விவகாரம், இப்படி தெரிந்த விசயங்களை நியாயப்படுத்துவது, கமலை காப்பாற்றும் “எங்கேயோ போயிட்டிங்க” சிவாஜியும், Ethical Hackreஆக வரும் ஆனந்த் (சதிலீலாவதியில் கமலுக்கு மகனாக நடித்த சிறுவன், இப்போ வாலிபர் )கதாபாத்திரம்அடிக்கும் பல்டியும் படத்தின் சறுக்கல். ஒரு சோப்ளாங்கி இளைஞன் பெரிய Hackerஆக காட்டுவது தமிழுக்கு வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம். The Core, Fast And furious படங்களில் பார்தததுதானே. கதாபாத்திரத்தில் இந்த வேடம் மட்டுமே நெருடல். அவ்வளவுப் பெரிய கட்டிடத்திற்கு ஒரு காவலர் கூட இல்லாதததும், இரண்டு பேர் த. செயலர் முன்னாடியே அடிக்கும் பல்டி, இப்படி சில நெருடல்கள் இருந்தாலும், மற்ற காட்சிகளுக்காக மன்னிக்கலாம்.கடைசிவரை கமலின் பெயரையும்,மதத்தையும் சொல்லாமல் சொல்லியிருப்பதும் புதுமை.


ஒரு நல்ல படத்திற்கு தேவை நல்ல திரைக்கதை, அதற்கான பாத்திரங்கள். இரண்டுமே இந்தப்படத்தில் சரிவர அமைந்திருக்கிறது. நல்ல கதாப்பாத்திரங்களும், அதற்கான நடிகர்களின் தேர்வும், அசத்தலோ அசத்தல். எங்கு பார்த்தாலும் அழகு. எல்லை தாண்டாத நடிப்பு, நேர்த்தியான வடிவமைப்பு, ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை, நறுக்வசனம், இரைச்சலில்லாத இசை இறுதி வரை ஆயிரம் குதிரை வேகத்தில் செல்லும் காட்சிகள் கொண்ட'A" Class படம் உன்னைப்போல் ஒருவன்.

Monday, November 3, 2008

நம்மவர்(1995)

ரொம்ப நாளைக்கப்புறம் விரும்பிப் பார்த்த படம் 'நம்மவர்'. ஒவ்வொரு வசனமும், காட்சியும், பாடல்களும் அர்த்தமுள்ளதாகவே இருந்துச்சுங்க. படம் வெளியானப்ப(1995) பார்க்கும்போது, புடிக்காத இந்தப் படம் இப்போ புடிக்குது. பெரும்பாலான கமல் படங்கள் எல்லாமே இப்படித்தான் போல. காலத்துக்கு ஏத்த மாதிரி படம் எடுக்க கமல் கத்துக்கனும். அதுக்காக பேரரசு ரேஞ்சுக்கு போறதெல்லாம் வேஸ்ட். படத்தின் இசையமைப்பாளர் மகேஸ், இன்னும் உயிரோடு இருந்திருந்தா ரகுமானுக்கு நல்ல சவாலா இருந்திருப்பாரு. கமலின் பல சோதனை முயற்சிகள் இந்தப் படத்துல உண்டுங்க.


  • கரண் அறிமுகம்

  • மகேஸ்சின் அற்புதமான இசை

  • இயக்குனர் சேதுமாதவன்(2வது படமா இருந்தாலும்)

  • நடன இயக்குனர் பிருந்தா. இவுங்களை எப்படி இந்தப் பாத்திரத்துக்கு ஒத்துக்க வெச்சாங்கன்னு தான் தெரியல, ஆனாலும் அற்புதமான தேர்வு.

  • நாகேசின் அற்புதமான நடிப்பு. ரொம்ப நாளைக்கப்புறம் நகைச்சுவை நடிகரை அபூர்வ சகோதரர்கள் படத்துல ஒரு வில்லனாக் கொண்டு வந்தவர் கமல். பின்னாடி மகளிர் மட்டும்ல ஒரு பிணமா நடிக்க வச்சாரு. இப்படி நாகேசின் பல முகத்தைக் கொண்டு வந்த பெருமை கமலையேச் சாரும். National Award Winner for best Support Actor.

  • படத்துல கவுதமி, கமல்.. காதல் காட்சிகள், சூடேத்துற விதம், ம்ம் கமலின் அக்மார்க். நல்லாத்தான் இருக்கு அம்மணியும்... ஹ்ம்ம்ம்ம்.நல்ல ஜோடி(வாழ்க்கையிலும் கூட)
  • செலவு ரொம்ப கம்மி
  • 'சொர்க்கம் என்பது நமக்கு', பாடல் உன்னால் முடியும் தம்பியின் அடுத்த பகுதியின்னாலும் காலத்துக்கேத்தது. இந்தப் பாட்டுக்கு ஏதோ விருது கூட கெடைச்சிதாமே. தெரிஞ்சா என்னான்னு சொல்லுங்க, Plz

படத்துல காட்சிகள், வசனம், அமைப்புகள், இசை, எல்லாம் அற்புதமா இருந்தாலும் இரத்த புத்துநோய் ஒரு சொதப்பல் முதுகெலும்பு. படத்த மட்டுமில்லாம நம்மளையும் நோகடிக்கிற ஒரே விசயம் இதுதாங்க. DVDல பார்க்க படம் அருமையா இருக்கு.

Wednesday, October 22, 2008

ஏகன் - விமர்சனம்

இராணுவத்துல இருக்கிற ஒரு அதிகாரி ஏகன். அவருக்கு அவருடைய மேலதிகாரி ராகவன் மேல மரியாதை கலந்த மதிப்புமட்டுமில்லாம் பாசமும் அதிகம். அவருடைய மேலதிகாரிொரு தகவல் வருது, அதுல அவருடைய மகன் மற்றும் மனைவியை தீவிரவாதிங்க கொலை செய்ய திட்டமிட்டுருக்காங்கன்னு தெரியவருது. அதனால அவருடைய சீடன் ஏகனை மகன் மற்றும் மனைவியை காக்க அனுப்புறார்.




அவருடைய மகன் லக்கி அந்தக் கல்லூரியின் HotGuy. எல்லாப் பொண்ணுங்களும் அவருக்கு பின்னாடியே சுத்த இவர் மட்டும் பூஜாவோட காதலுல சுத்துறாரு. ஏகன் ஒரு கல்லூரி மாணவரா சேர்ந்து அந்தக்கல்லூரிக்கு போயி லக்கிய அவருக்கு தெரியாமையே பின் தொடர்ந்து காக்குறாரு. ஒரு சமயத்துல ஏகனுக்கு அந்தக்கல்லூரியின் வேதியியல் விரிவுரையாளரோட chemistry வொர்கவுட் ஆகிருது. இந்த சமயத்துல ஏகனும், லக்கியோட வீட்டுல தங்கி அவங்க அம்மாவுக்கு ஒரு மகனாவே பாசத்துக்கு கட்டுப்பட்டுடறாரு.




இந்தச் சமயத்துல லக்கிக்கு, ஏகன் பின் தொடர்ந்து வர்றது தெரிஞ்சு போகவே ஏகன் மேல லக்கிக்கு வெறுப்பு வந்துருது. நடுவே நடுவே லக்கிமேல தீவிரவாதிங்க தாக்க முயற்சி பண்ண ஏகன் காப்பாத்துறாரு. ஒரு கட்டத்துல ஒட்டுமொத்த கல்லூரியையும் தீவிரவாதிங்க சுத்தி வளைச்சு, லக்கியோட உயிரைப் பணயாமாக் கேட்க ஏகன் எப்படி லக்கியையும் காப்பாத்தி, அவரோட பாசத்தையும் சம்பாதிச்சு, கடமையை ஆத்துறாருங்கிறது Climax.
பின்குறிப்பு: இது Main Hoon na கதை. ஏகன்=இராம்ன்னு மாத்துனதோட நம்ம வேலை முடிஞ்சிருச்சு. இந்தியில கொடுமையா இருந்துச்சு. தமிழ்ல எப்படி எடுத்திருப்பாங்கன்னு தெரியலை.

Saturday, August 26, 2006

வேட்டையாடு விளையாடு-My Take

தமிழில்,ஆங்கில படத்துக்கு இணையாய் ஒரு பிரமாண்டம். கதாநாயகன் பறப்பதில்லை, கார், பைக் எல்லாம் உருண்டோடுவதில்லை. அக்கா, தம்பி செண்டிமென்ட் இல்லை. நிறைகள் நிறைய இருக்க குறைகள் சொற்பமே.

பல மாத காலமாய் மனதில் உருண்டோடிய நான் எதிர்ப்பார்த்த "பார்த்த முதல் நாளே" பாடல் உருவாக்கிய விதம் அருமையிலும் அருமை(முதல் இரண்டு வரிகளுக்கு blue mat picturisation" தவிர்த்து இருக்கலாமே). பாடல்கள் அனைத்துமே பிரமாண்டமாய் இன்னும் கண்களில் . இன்னொரு நிறை, நாம் பார்த்து பார்த்து சலித்துப் போன இடங்கள் எதுவுமே இல்லை. அனைத்துமே கண்களுக்கு புதிதாய், சுகந்தமாய், வசந்தமாய் (3 இடங்கள் மட்டுமே நமக்கு தெரிந்த இடங்கள்). இதில் கெளதம் வெற்றி பெற்று இருக்கிறார். கேமரா கையாடல் ரவி வர்மா ஒரு பெரிய பாராட்டு உண்டு. Frame by Frame செதுக்கி இருக்கிறார். படத்திற்கு இன்னொரு பலம் ஹாரிஸ். எப்பா Sax, keyboard இரண்டையும் இந்தப்படத்தில் கையாண்ட விதம் Simply Superb. Hats off to these Guys. இரண்டு பெரிய பலம் இவர்கள். இராஜீவனின் கலை, கண்டிப்பாய் பாராட்டலாம்.

அடுத்தது கமல் மற்றும் ஜோ. கமலுக்கு விமர்சனம் தேவையில்லை. ஒரு இடத்தில் கமலின் நடிப்பே அதற்கு ஒரு சான்று. 2 நிமிட பழி வாங்கலுக்குப் பிறகு அவர் காட்டும் அந்த முகபாவனை He deserves for awards.Top Angle view என்பதால் அந்த பாவனை அடிப்படுகிறதே. ஜோ, வழக்கமான கெக்கேபிக்கித்தனமான நடிப்பு இல்லை. ஆரம்பம் முதலே ஒரு சோகக்கீற்றை முகத்தில் படற விட்டிருக்கிறார், பரவாயில்லை, அம்மணி நடிப்பில் ரொம்ப முன்னேறிட்டாங்க. சூர்யாவுக்கு இணையாய் ஜோவும் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி வேகம் அதிகம். தமிழில் அனைவருக்கும் சாந்தமாய் பெயர். ஹோமோ பிடிக்காத வில்லனை அதைச் சொல்லியே வெறி ஏற்றும் கமலின் தந்திரம் ஒரு நச். வில்லனை சுமோவில் துரத்தும் காட்சி கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்துகிறது.

கடைசி ஸீனை மட்டும் சொல்லி விடுகிறேன், 95% மக்களுக்கு புரியாத, என்னுடைய மண்டைக்கு மட்டும் எப்படியோ எட்டிய விதயம் இது. ஒருவரை வாய் கட்டி மண்ணுக்குள் புதைத்தால், சில மணிவரை பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை திரையரங்கில் சொல்லி புரிய வைத்த பெருமை நமக்கும் இருக்கு.

"பார்த்த நாள் முதல்" பாடல் ஒரு அழகிய காதல் கவிதை, நியுயார்க் காட்சிகள் புதுக்கவிதை. வெண்ணிலவே பாடலுக்கு ஆங்கிலேயர்கள் வாயசைத்த விதம், ஹ்ம்ம் தமிழிக்கு புதுது.அட நம்ம கெளதம் வேற ஆட்டம் போட்டு இருக்கிறார். "நெருப்பே" பாடலில் ஆங்கில நெடிக்கு தகுந்தவாரு ஆங்கில மக்களின் கவர்ச்சி ஆட்டம்.(B & C மனதில் வைத்தா சார்)தனியொரு ஆளாய் கதாநாயகன், வில்லன் ஒரு பெரிய கும்பல் என்ற வழக்கத்தை மாற்றிய படம். இந்த படத்தில் கதாநாயகனுக்கு ஒரு படைப்பட்டாளம் இருக்க, வில்லன் இருவர் என புதிதாய் ஒரு முயற்சி.

படம் பார்த்தபிறகு என்னையும் இன்னொரு வலைப்பதிவாளரையும் கலாய்த்து பல பதிவுகள் வரலாம். நகைப்புடன் பின்னூட்டம் இட நான் தயார்.

முதல் காட்சியிலேயே கமலின் சண்டைக்காட்சி, யூ டூ கமல்ன்னு கேட்க ஆரம்பிப்பதற்குள் கதைக்கு சென்றவிதமும், கமலின் அறிமுகமும் ஆர்ப்பாட்டமில்லாத ஆஹா. ஆனால் அந்த தலைப்பு பாடல் கமலை ஹீரோவாக்கி காட்டி இருக்கிறது.

ஹீரோயிசம் இல்லாத கெளதம், ரவி வர்மா, ஹாரிஸ், இராஜீவன், திகில் படம் இது.
திரையரங்கில் மட்டுமே பார்க்கவும்.

மக்கள் கருத்து (நன்றி-IndiaGlitz) - இந்த கருத்துல என்ன சொல்றாங்கன்னு நல்லா கவனிச்சுக்குங்க. என்னோட அடுத்தப் பதிவு இந்த கருத்துக் கணிப்புல இருந்துதான்

Wednesday, June 7, 2006

பில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்

கைப்புவ, வீரபாகுன்னு உருவாக்கினவர், கவுண்டருக்கு ஒரு ரீ-என்ட்ரி தந்தவர், நகைச்சுவைக்கு பஞ்சமில்லாம படம் எடுத்தவர் சுந்தர்.சி. நம்ம கொங்கு நாட்ட சேர்ந்தவர் அப்படிங்கிற ஒரு பாசம் வேற. அவர் படம்னா லாஜிக் பார்க்காம மனச விட்டு சிரிச்சுட்டு போயிட்டே இருக்கனும். சரி அவரு நடிச்ச படம், மீண்டும் வடிவேலுவோட கூட்டணி அப்படிங்கிறதால லட்சுமி தியேட்டர் பக்கம் கூட்டாளிங்களோட போனோம். கதை இதுதான்
"கத்தி எடுத்தவன் கத்தியால சாவான், ரவுடி திருந்தினாலும் இந்த சமுதாயம் அவன திருந்தவிடாதுங்கிறது"தான் கதையே. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குங்களா?

அப்ப வடிவேலுக்கு என்ன வேலை? அவரும் ரவுடிதான். இங்கே சங்கத்துல என்னாத்த எழுதுறோமோ அததான் படத்திலேயும் பண்ணியிருக்கார். "ஏய், என்ன வெச்சு ஒண்ணும் காமெடி, கீமெடி பண்ணலையே, பில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்" அப்படீங்கிற மாதிரி கொஞ்சமா காமெடி பண்ணியிருக்கார். ஐயா வடிவேலு, உங்ககிட்ட இருந்து நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். இப்படியே போனா விவேக் காமெடி மாதிரி போர் அடிக்க ஆரம்பிச்சுரும். "தொழிலதான் விட்டு இருக்கிறேன் தில்'ல இல்லை"ன்னு பஞ்ச் டயலாக் கூட இருக்குங்க.

படம் முடிஞ்சு வெளியே வரும்போது ஒண்ணு ஞாபகம் வந்துச்சு. விஜய் திருப்பாச்சில ஒரு வசனம் சொல்லுவார் "இது தலைநகரமாவா இருக்கு தறுதலை நகரமா இல்லை இருக்கு". சுந்தர்.சி, "ஏதோ நினைக்கிறேன்" பாட்டு தவிர வேற எதிர்பார்த்து போனா விஜய் சொன்னது மாதிரிதான் இருக்கு.

Tuesday, February 28, 2006

கள்வனின் காதலி

நாம எப்பவுமே விகடன் விமரசனம், சன் டிவி டாப் 10 பார்த்துதான் படம் பார்க்கப் போவேங்க.(சொந்த புத்தியெல்லாம் சினிமாக்கு ஒத்துவராது).

விகடனில் போன வாரம் வெளியான இந்தப் படத்திப்பற்றி விமர்சனம் படிசேங்க, அதுல இப்படி எழுதியிருந்தாங்க "சின்ன பெரிய பட்ஜெட்களில் தரமான திரைப்படஙளை உருவாக்கி, தமிழ் திரையுலகத்தின் மரியாதையை மேலும் உயர்ங்களுக்கு கொண்டுசெல்ல, நல்ல பல படைப்பாளிள் முனைப்போடு பாடுப்பட்டு வரும் இந்த நேரத்தில்..."கள்வனின் காதலி" அவகாரமான திருஷ்டிப்பொட்டு." விகடன்ல மார்க் கூட போடலைன்னா பார்த்துக்கோங்களேன்.



ஆனா சன் டிவி டாப் 10ல இதுக்கு முதலிடம் இடம் கொடுத்து இருந்தாங்க. என்னாங்க அநியாயம் இது. எததாங்க நம்புறது இப்போ.

Thursday, December 29, 2005

சண்டக்கோழி-விமர்சனம்


படத்துக்கு, வேகம்னு பேர் வெச்சு இருக்கலாம், அவ்வளவு வேகம். படம் ஆரம்பிச்சதுக்கும், இடைவேளைக்கும் என்னமோ ஒரு நிமிஷம்தான்கிற மாதிரி முதல் பாதி சரியான வேகம்.

படத்தின் கதை நாம எப்போங்கோ சொல்லிருக்கோம் இத சொடுக்கி பார்த்துக்கோங்க.

படத்துல குறைன்னு சொன்னா அது CLIMAX௯தான். நட்சத்திர அந்தஸ்த்து இல்லைன்கிற குறை CLIMAXல தெரியுது. படம் முடிஞ்சப்புறம் "சே! CLIMAX௯ல விஜய்யோ, ஜெயம் ரவியோ நடிச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்குமே" அப்படிங்கிற குறை இருக்கத்தான் செய்யுது. சண்டை காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டு இருக்காங்க, அதுக்கான பலனும் தெரியுது.

விஷாலும் சரி, மீரா ஜாஸ்மினும் சரி, ராஜ்கிரணும் சரி நடிப்புல பின்னி பெடல் எடுத்திருகாங்க. யுவன் இசை ரசிக்கிற மாதிரி இருக்கு, "இரவு" பாடல் படம் முடிஞ்சாலும் முணுமுணுக்க வைக்குது. 'ஜி' படத்துக்கப்புறம் இந்த படம் அப்படிங்கிறதுனால கடுமையாவே உழைச்சிருக்கார் லிங்குசாமி. மறுபடியும் ஜெயிச்சு காட்டியிருக்கார்.

குடும்பத்தோட பார்க்கலாம், நல்ல படம்ங்க

Monday, August 29, 2005

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 
ராதாமோகனின் 2வது படம் என்கிறதனால் கொஞ்சம் எதிர்பார்ப்போடுதான் படம் பார்க்க போனேன். எடுத்தவுடனே மண்டையில் ஒரு Flash, தெய்வமகன் மாதிரி இருக்கேன்னு நெனச்சேன். அப்புறம்தான் படம் அப்படியில்லை அப்படின்னாரு Director. 



    சின்ன கதை. அக அழகா? புற அழகா? ஒரு பட்டிமன்றம். அக அழகில் உற்றார், உறவினர்களின் அன்பைப் பெற்ற ஒருவன், புற அழகை பெற முயற்சிக்கும் போது ஏற்படும் குழப்பங்களே படம். சின்ன வயசுல ரவிகிருஷ்ணாவிருக்கு முகத்துல ஒரு தழும்பு(வடு) விழுந்துடுது. கொஞ்சம் பெருசான அப்புறம் (இளமையில) feel ஆகுறார். அதை மறைக்க Plastic Surgery பண்ண முயல, பணம் தேவைப்பட, Part time வேலை பார்க்க, நண்பர்கள், அம்மா, அக்கா வோடு பிரச்சனை, அப்படின்னு போகுது கதை. .....படத்தின் சிறப்பே வித்யசாகரின் இசை. வித்தியாசமான கதை & திரைகதை, துணிச்சலான முயற்சி. ஆனால் Art Film இல்லை. பொன்னியின் செல்வன் - சிறுகதை

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)