Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

Tuesday, May 12, 2020

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூனியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான். அதற்கு மொழியில்லை. இளையராஜாவின் How to Name it ல் வரும் வயலின் இசை கமழ்ந்து வரும் பொழுது இதயம் கனக்கும், கனமென்றால் அப்படியொரு கனம் இருக்கும். இதயம் அறுந்து விழுந்துவிடுமோ என்கிற ஐயம் மனதில் எழுமளவுக்கு இதயம் கனக்கும். கண்களில் கண்ணீர் வர மறுக்கும். கண்ணீர் வர மனதில்  ஓரளவுக்கு
சோகமிருந்தால் போதும், கண்ணீர் வர மறுக்கும் சோகத்தின் எல்லையை இன்மை காட்டும். இன்மையின் உணர்வுக்கு அளவு கோல் வைத்து அளக்கும் அளவிற்கு யாருக்கு துணிவும் இல்லை, ஏனெனில் அந்த சோகத்தை ஏற்கும் மனநிலையை யாரும் வேண்டுவதில்லை. இன்மை, அதுவாக நம்முள் முள் வைத்து தைத்துவிட்டுப் போகும், இல்லை, தைத்துக்கொண்டே இருக்கும்.


டு இரவில் எழும் பொழுதே மனதின் வலி உணரலோடு எழுந்தால் பிறகு அந்த வலி நாள் முழுக்க இருக்கும், கண்கள் மூடியிருக்கும், உறங்க கண்கள் இரண்டும் கெஞ்சும். கண்கள் கெஞ்சி பார்க்கும், பிறகு இதயம் கொண்ட வலியை கண்களும் ஏற்கப் பழகிக்கொள்ளும். விழலுக்கு இறைத்த நீரைப்போல  கிஞ்சித்தும் உபயோகமில்லாத கண்களின் கெஞ்சலை சற்றும் பொருட்படுத்தாது இதயம் தன்னிஷ்டப்படி வலியை உணர்ந்துகொண்டே இருக்கும். அந்த வலி இரவு வரை தொடரும், சில நாட்கள் இரவு கடக்கும், மீண்டும் கண்கள் கெஞ்சும், ஆனால் இதயம் மிரட்டி கண்களை அடக்கிவிடும்.

வாழ்க்கையில் நாம் கடக்கும் இரவுகளின் தூரத்தை யாரும் அளந்து விட்டிருப்பதில்லை, தூங்கிக் கடக்கிறோம், அதனால் அதன் நீளம், வண்ணம் அறியாமலே இருப்போம். ஓர் இரவு முழுக்க இதயம் அதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இமை மூடிய கண்கள் தூங்காமல் இருக்கையில், இரவின் நீளம் தெரியும், இரவு ஏன் அமைதியில்லாமல் இருக்கிறது என எண்ணத் தோன்றும், இரவின் வண்ணம் தெரியும், அதன் இரைச்சல் தெரியும், இரவின் ஓலமும் நமக்குக் கேட்கும்.


மீண்டும் மீண்டும் ஒரே நினைவினில் வாழ்ந்து பழக்கப்பட்ட வாழ்வில், திடீரென அதனை மாற்ற எத்தனிக்கும் தருணங்களில், தலை அறுபட்ட ஆட்டின் கதறல் போன்று ஓர் ஓலம் எழும், அந்த ஓலம், அதீத இரைச்சல் கொண்டது, நம்மைச் சுற்றிலும் பேரமைதி இருக்கும், ஆனால் மனத்திற்கு புயலடித்துக்கொண்டிருக்கும்.  அறிவு இதனையெல்லாம் புரிந்துகொண்டிருக்கும், ஆனால் உணர்ந்து கொண்டிருக்காது.




யார் சொன்னது இன்மை அமைதியானது என்று? அதன் பேரிரைச்சலில், உடலின் அனைத்து உறுப்புகளும் அந்த இரைச்சலை உற்று நோக்கும். இன்மைக்கான காரணத்தை மனம் அறியும், மனம் மட்டுமே அறியும், என்னைச் சுற்றி வரும் குதூகலத்தில் மனம் லயிப்பதில்லை, அனைவரும் சிரிக்கும்பொழுது நானும் சிரித்து வைப்பேன், அதனைப் பார்த்த மனம் சிரிக்கும், அது எக்காளச் சிரிப்பென்று உதடும் அறியும். மீண்டும் மீண்டும் வரும் இரவு வரும், மீண்டும் மீண்டும் வலி வரும், மீண்டும் மீண்டும் கண்கள் கெஞ்சும், இறுதியில் இதயத்தின் வலியே வெல்லும்.. அது இன்மை தரும் வலி..

Thursday, August 20, 2015

வெள்ளை நிறத்தழகி

பிடித்தமான பெண்கள் : (மனைவி தவிர்த்து)

தை தமிழில் சொல்வது என்றால் "சைட் அடித்தல்" . பார்த்தவுடன் பிடிக்கும் காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது, 30 களில் காலம் ஓட்டும் எனக்கெல்லாம் ரசிப்புத் தன்மை போய்விட்டதோ என்று எனக்கே சில காலம் தோன்றியது உண்டு. பதின்ம காலங்களில் எல்லாப் பெண்களையும் எப்போது பார்த்தாலும் பிடித்தது. 20 களில் சில வரைமுறைகள் வந்தது, இப்படி இருக்க வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று demand வைத்தது மனது. சைட் அடிப்பதற்கா என்று கேட்கலாம். மனது அப்படிதான் செய்யும். அதுவும் 30களில் எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை, உலக அழகி படம் பார்த்தாலே கண்டுக்காமல் போவதுதான் நடக்கிறது. 30களிலே இப்படியென்றால் 40 களும், 50களும் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. பெண்கள் மீதான ரசிப்புத்தன்மை அற்று போய்கொண்டே இருக்கிறது. இது எனக்கே எனக்கான குணம், பலர் இந்த கருத்தில் மாறுபடலாம்.





வ்வாறாக குணம் கொண்ட நான், நாள் தோறும் 500 முதல் 700 பெண்களை வரை கடந்தாலும் ஒருத்தரையும் நின்று ரசிக்க நேரமிருப்பதில்லை, மனசும் இருப்பதில்லை. ஆனால் இன்று நடந்ததோ வேறான கதை. சுரங்கப்பாதை புகைவண்டியில் ஏறியவுடனே சட்டென பிரகாசமாகியது என் மனது. மீண்டும் பதின்ம காலத்திற்கே சென்றது போல ஒரு கணம் தோன்றியது. பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் என்னை ரசிக்க வைக்கும் அழகு அவளிடம் இருந்தது. அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைக்கையில் சட்டென என்னைப் பார்த்துவிட்டாள் அழகி, வழக்கம் போல் ஒரு சிறு புன்னகையை பரிமாறிக்கொண்டோம். அமெரிக்க பழக்கம் இது. இதுவே நம்மூராக இருந்தால் வேறு கதையாகி இருக்கும். ஆனாலும் ரசிக்க நேரம் தந்தால், அந்தப் பயணம் சற்றேறக்குறைய 7 நிமிடங்கள் மட்டுமே.

வள் தன்னுடைய ஒப்பனை பெட்டி அதாங்க, Handbag எடுத்தார், நிறைய பூச்சுகள் செய்து கொண்டார். ஓர் அழகே அழகைப் பார்த்து அழக்கேற்றிக்கொண்டதை இன்று கண்டேன். அவளுக்கு நல்ல உடல், சரியாக உடை அணிந்திருந்தார். அந்த உடைக்கு அவளுக்கு அழகாக பொருந்தியிருந்தது. பார்த்து பார்த்து ஒப்பனை செய்து கொண்டாள். தும்பைப் பூ போன்ற வெள்ளை உடை, அவ்வளவு பாந்தமாக இருந்தாள், ஓர் அழுக்கும் இல்லை. நான் இறங்கும் நிலையம் வந்தவுடனே அவளும் எழுந்திருத்தாள், நான் இறங்கும் இடத்தில்தான் அவளும் இறங்குகிறாள் போலும். என் முன்னே படியேறினாள், அவளின் வெள்ளை உடம்பிற்கு வெள்ளை உடை அப்படியே ஒத்திருந்தது. முன்னழகைப் போலவே  பின்னழகும் அழகு, வெள்ளைக்காரிக்கு வெள்ளை உடை இவ்வளவு அழகாக இருக்குமா என மீண்டும் வியந்தேன். பின்னே சும்மாவா? கல்யாணத்திற்கு வெள்ளை உடை அணியும் ரகசியம் இன்று அறிந்தேன். பல படிக்கட்டுகள் ஏறி நிலையம் வெளியே வர வேண்டும். கடைசி படிக்கட்டு ஏறும் நேரத்தில் படிக்கட்டின் ஓரத்தில் அவள் எச்சிலை துப்பி விட்டு சென்றாள். 10 அடி தள்ளி குப்பைத்தொட்டி தெரிந்தது.


துவரைக்கும் அழகாக தெரிந்த அவள் அருவருப்பாக மாறிப்போனாள். நிலையம் வெளிவந்து அவளைக் கடந்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன், அவளின் நினைவுகள் எல்லாம் அந்த எச்சிலில் தெறித்துப் போயிற்று.

Saturday, July 18, 2015

நளபாக பிரியாணி

தையும் வித்தியாசமா செஞ்சே பழகிட்டோமா? அதையே சமையலில் செய்யலாம் அப்படின்னு நினைச்சாலும் நமக்கு ருசி அப்படியே வேணும். கொத்து பரோட்டான்னா நம்மூர் தெருவோர பரோட்டா கடை ருசி வேணும், அதுவும் சால்னா அதிகம் விட்டு, வெங்காயம் தூக்கலா வேணும். நியூ ஜெர்சி எடிசன் மற்றும் சுற்று வட்டாரத்தில் சரியான ஹைதராபாத் பிரியாணி கிடைக்கலைன்னு புலம்பிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பல பேர் ”ஏன் வீட்ல செஞ்சிக்க கூடாதா?” அப்படின்னு உசுப்பேத்த நானும் தயாராகிட்டேன்.

மையல் குறிப்பெல்லாம் அங்கே இங்கே தேடி கிடைச்சது, அப்புறம் வெட்டுறது, நறுக்குவது, தாளிப்பது வேக வைப்பது எல்லாம் சரியா நடந்துச்சு. அளவு பார்த்து பார்த்து எல்லாம் சரியா செஞ்சேன். நமக்கு ருசி அப்படியே வேணும் பாருங்க. குக்கர்ல விசில் விட்டு பக்குவமான நேரத்துல சொன்னபடியே இறக்கிட்டேன்.

நமக்கு ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கிறதும் புடிக்கும். இந்த மூடி வைச்சதுக்கு அப்புறம் மூடி திறக்கிறதுக்கு இடையில் பிரியாணிக்கு தொட்டுக்க அதிகமா வெங்காயம் நறுக்கிப் போட்டு தயிர் பச்சடி செஞ்சாச்சு. ஆங், சொல்ல மறந்துட்டேன் பாருங்க,. ஒரே கல்லுல இரண்டு மாங்கா ஞாபகம் வெச்சிக்குங்க.

குக்கர் திறந்து பார்க்கிறேன், அபாரமான வாசம், ருசி பார்க்கிறேன்..ஹ்ம்ம்ம்ம் அபாரம்ம்ம். அப்படியே என்னைக் கிள்ளிப் பார்த்துட்டேன். நளபாகன் நான் அப்படின்னு மனசுக்குள்ள பெருமிதம்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டா இந்தப் பதிவு முடியாது. பிரியாணி கொஞ்சமா பொங்கல் மாதிரி கொழ கொழன்னு இருந்துச்சு. என்ன பண்ணியும் இனி இதை காப்பாத்த முடியாதுன்னு முடிவு செஞ்சி, தட்டுல போட்டு கரைச்சி குடிச்சிட்டேன். ருசி அபாரம். ஒரே கல்லுல இரண்டு மாங்கா பாருங்க, பொங்கல் + பிரியாணி இரண்டையும் ஒரே சமையலில் முடிச்சாச்சு. கண்டிப்பா இது பிரியாணி மாதிரி ருசி இருந்தாலும் பிரியாணி பதத்துல இல்லவே இல்லை, பொங்கல் பதத்துல இருந்ததால பொங்கிரியாணி அப்படின்னு பேர் வெச்சிட்டேன்.

பின் குறிப்பு:


  1. வாசகர்கள் காறி துப்புவதைத் தவிர்க்க நான் செய்த பிரியாணி படங்களைப் பகிரவில்லை.
  2. இங்கே இருக்கும் படங்கள், இணையத்திலிருது எடுத்து வறுத்தவை


Sunday, June 14, 2015

குஜ்ஜூ அம்மணி பேசியது என்ன?

வேலைக்குப் போக நியூயார்க் நகரத்திற்கு 2 மணி நேரம் பயணப்பட்ட வேண்டும். ரயிலில் ஒரு மணிநேரம் போகவேண்டியிருக்கும், மீதம் நடந்தும் நியூயார்க் நகர உள்ளூர் ரயிலும் பயணப்பட வேண்டும். அதில்தான் எவ்வளவு சுவாரஸ்யங்கள் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு, செம மொக்கையாக இருக்கும். அதுவும் அமெரிக்க ரயில் பயணங்களில் நீங்களே உங்களை பொழுது போக்கிக்கொள்ள பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஒரு மணி நேரப் பயணத்தை தூங்கிக் கழிக்கலாம் என்று பல முறை நினைத்திருக்கிறேன். ஆனாலும் ஏதோவொன்று தினமும் விழித்திருக்கச் செய்துவிடும். 

இன்று காலை ரயிலில் ஏறியதுமே கண்டேன், கூட்டம் குறைவு, வெள்ளிக்கிழமை ஆதலால் வீட்டிலிருந்தே வேலை செய்வது மக்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. சப்தமில்லாமல் இருந்தது நானிருந்த பெட்டி, இருவர் இருக்கைகளில் ஒருவரும், மூவர் இருக்கைகளில் இருவரும் அல்லது ஒருவராக அமர்ந்து ஆக மொத்தம் பெட்டி “நிரம்பி” வழிந்தது. பலர் அரைகுறை தூக்கத்திலிருந்தார்கள், சிலர் வழக்கம் போல அலைபேசிகளில் பாட்டு கேட்டவாறே திரையை தேய்த்துக்கொண்டிருந்தார்கள். தினசரியைப் பிரித்து பக்கத்துல உக்காந்திருக்கிறவங்க மூஞ்சியில உரசுற வழக்கம் இப்போவெல்லாம் குறைஞ்சிருச்சு. அலைபேசிகளுக்கு நன்றி.

சப்தமில்லாமல் இருந்த பெட்டியில், திடீரென ஒரு அலைபேசி மட்டும் உச்சஸ்தாயியில் அலறியது, ஏதோ பக்திப் பாட்டு போல, குஜராத்தியாய் இருக்கலாம். மூவர் அமரும் இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தார், வயது ஐம்பதுகளில் இருக்கும். நான் பல முறை கண்டிருக்கிறேன். குஜ்ஜூக்களில் பலர் காலை, மாலை என இரு வேளைகளிலும், கையில் பக்தி ஸ்லோகங்கள் கொண்ட காகிதங்களுடன் ஏறுவார்கள், பிறகு மனதுக்குள் படிக்க ஆரம்பிப்பார்கள். நாம் அவர்களைப் பார்த்து நாகரிகம் கருதி சிரித்து, வணக்கம் சொன்னால் லேசாக புன்னகைத்துவிட்டு மீண்டும் ஸ்லோகங்களுக்குள் போய்விடுவார்கள்.

வீறிட்டு பக்திப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தது அவருடைய அலைபேசி. பலர் திடுக்கிட்டு விழித்து திரும்பிப் பார்த்தார்கள், குஜ்ஜூ அம்மணியோ சாவதனமாக, கீழேயிருந்த கைப்பையை எடுத்து, நடு இருக்கையில் பையை வைத்து ஜிப்பை மெதுவாக இழுக்க ஆரம்பித்தார். இப்போது பாட்டு இரண்டாம் முறை ஒலிக்க ஆரம்பித்தது. அமைதியாக பக்கத்தில் அமர்ந்திருந்தவர் மனசுக்குள் கடுப்பாக திரும்பி அந்த குஜ்ஜூ அம்மணியைப் பார்த்தார். கு.அம்மணியோ யாரையும் கண்டுக்காமல் கைப்பையிலிருந்த உள் ஜிப்பை திறக்க ஆரம்பித்தார், நான்காம் முறை பாட ஆரம்பித்தது.. இப்போது அதிக சப்தமாக இருந்தது, பெட்டியிலிருந்த அனைவருமே தூக்கம் கலைத்திருந்தார்கள். அதுக்குள்ளிருந்த அலைபேசியை மெதுவாக எடுத்து..... எடுத்து .. எடுத்து .. 

அருகிலிருந்த அப்பிரயாணிக்கோ தாங்க முடியாத கோபம். அம்மணி, மெதுவாக திரையைப் பார்த்தார், எண் சரியாகத் தெரியவில்லை போலும்,  ஐந்தாம் முறையாக ஒலிக்க ஆரம்பித்தது பாடல்..கண்ணாடியைத் தேடி கைப்பையைப் பிரித்தார். அப்பாடா!!!! பக்திப் பாட்டு நின்றிருந்தது. கு.அம்மணி மெதுவாக கண்ணாடியை எடுத்த போது  அலைபேசி சப்தம் போடுவதை நிறுத்தியிருந்தது. ஃபோன் பண்ணினவங்களே கடுப்பாகி கட் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.  அம்மணி அமைதியாக அலைபேசியில் வந்திருந்த எண்ணைப் பார்த்தார், பார்த்தவர் திடீரெனப் பதறினார், ஏதோ குஜராத்தியில் முனகினார்.



இப்பொழுது அலைபேசி அலற ஆரம்பித்தது. அநேகமாக எல்லோரும் அந்தப் பெட்டியிலிருந்த அனைவருமே விழித்தாயிற்று,  ஆடி மாசத்துக்கு வைக்கும் மாரியம்மன் சவுண்ட் சிஸ்டம் கணக்காக  அலறியது அலைபேசி. பதறியபடி எடுத்த அம்மணி மெதுவாக பேச ஆரம்பித்தார், பேசினார். பேசினார்..கொஞ்சமே சப்தம் அதிகம் போட்டு பேசிவிட்டார் போல, ஒரு வெள்ளைக்கார அம்மணி எழுந்திருச்சி "பேசறதுன்னா உனக்கு மட்டும் பேசு, எங்களுக்கும் சேர்த்துப் பேசாதே” என்று சொல்ல, கு.அம்மணி சைகையாலே சரி சரி என்று சொல்லி பேசிக்கொண்டேயிருந்தார். சில நேரத்தில பக பகவென்று சிரித்தார்.  பொட்டி மனிதர்கள் இப்பொழுது பழகிப் போயிருந்தார்கள், அம்மணி சிரித்தால் பொட்டியே சேர்ந்து சிரித்து ஆரவாரம் செய்தது. சொச்சோ என்றால், 10 பேராவது சொச்சோ என்றார்கள். மொழிதான் தெரியவில்லையோ தவிர அனைத்து மக்களும் அவர் உணர்வை பிரதிபலித்தார்கள். இறங்க வேண்டிய இடம் வந்ததும், சிலர் சிரித்தபடியே இறங்கிப் போனார்கள், சிலர் முனுமுனுத்தபடி...

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் தூக்கம் போயிருது என்பதுதான் அந்த கு. அம்மணியின் பக்கத்து இருக்கையில் உக்காந்திருந்த ஆளுக்குக் கவலை.. 

பின் குறிப்பு: இப்போ முதல் பத்தி படிங்க 

Monday, April 13, 2015

சில்லுகளாய் அவள் சில்மிஷத்துடன் நான்

நீ அழகாய்ப் பிறந்தவள், வசதியானவள், வசீகரமானவள்
பளிச்சிடும் புன்னகையுடன் பிரம்மாண்டமாய் உருவெடுத்தவள்
முதலில் உன்னை நான் படங்களில் கண்டேன், சிலாகித்தேன்
ஒரே முறை உன்னை நேரில் கண்டேன்: உற்று நோக்கினேன்
உனக்கது தெரிய வாய்ப்பில்லை, நம்மூரில் இப்படி ஒரு அழகியென
மனதுள் ஒரு பேரானந்தத்துடன் உன்னைக் கடந்து போனேன்.

பிறகு உன்னைப் பற்றி வந்த செய்தியெல்லாம் சோகமானவை
உன் மீது வைத்திருந்த அபிப்பிராயத்தயெல்லாம் மாற்றியமைத்தவை
அழகியென ஆர்ப்பரித்த உள்ளங்களெல்லாம் 
காரணமறியாமல் உன்னை ஏச ஆரம்பித்த காலம்
நீ மட்டும் உன்னை மாற்றி கொள்ளவேயில்லை
மீண்டும் மீண்டும் உன் புத்தியைக் காட்டிக்கொண்டே இருந்தாய்.



 யிற்று இன்னும் இரண்டு நாட்கள்தாம்,
உன்னைக் காண எனக்கும் அமைந்திருக்கிறது ஒரு வாய்ப்பு
மனதில் திடம் வை, உன்னை அணைக்க  நான் ஆசைப்படவில்லை
கண்கள் நோக்குவோம், அழகில் கரைவோம்,
எல்லை தாண்ட நினையாமல் பயணம் தொடர்வோம்,
தொட்டுவிடாமல் இருவருமே கடந்துவிடுவோம்
அது உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.


மனதில் உறுதி பூண், உடலில் திடம் கொள்,
கட்டவிழும் ஆசையை உள்மனதில் வைத்து பூட்டு,
வந்து போவோரிடம் சொல்
“இவன் நல்லவன் இவனிடம் நான் என்னை இழக்க மாட்டேன்,
சில்லுகளாய் உடைய மாட்டேன்" என்று சொல்,
திரும்ப திரும்ப சொல்,
அழுத்திச் சொல்,
உன்மீது நம்பிக்கை வரும்வரை சொல்,




நான் வந்து திரும்பும் வரை உன்னைக் காத்துக்கொள்,
அதன் பிறகும் தீர்க்கமாய் இரு,
உன்னை ஏசும் ஊர் உலகத்துக்கு நீ உடையாதவள் என்று உரக்கச் சொல்
என்னைக் காணாமல் என்றும் உடைந்து விட மாட்டேன் என்று சத்தியம் செய்
என் இனிய அழகிய
சென்னை விமான நிலைய கூரையே!!!

Tuesday, December 23, 2014

என் வீட்டிற்குள் துப்பாக்கி எப்படி வந்தது?

ழக்கம் போல அன்றும் 5:45க்கு அலைபேசி அலாரத்துடன்தான் ஆரம்பித்தது. நமக்கு வழக்கமாக ஆரம்பிக்கும் நாட்கள் எல்லாம், எல்லோருக்கும் வழக்கமாக ஆரம்பிப்பதில்லை என்பதுதான் உலக நியதி. இதமான குருவி கீச்சுகளுடன் எழுந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. குய்யோ முய்யோ என்ற அலாரம் போடும் சப்தத்துடந்தான் தினமும் விடுகிறது. வேகமான ஓட்டங்கள், ஆச்சுது, 20 நிமிடங்களில்  கிளம்பியாயிற்று  15 நிமிட   ங்கள் இருக்கிறது, சற்றே செய்திகள் பார்க்கலாம் என்று அலைபேசி பார்த்தால், கொட்டை எழுத்தில் மின்னிற்று “பாகிஸ்தான் பள்ளியில் துப்பாக்கி சூடு, 98 குழந்தைகள் பலி”, சற்றே கலங்கிப் போனேன் நான், அலைபேசியை தவிர்த்துவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்,  அனைத்து செய்தி  சானல்களிலும் இந்தச்சம்பவமே இடம் பிடித்திருந்தது. பலி எண்ணிக்கை மட்டும் உயர்ந்துகொண்டே சென்றது.

10 நிமிடங்கள் கடந்திருந்த போது, அந்தக் குழந்தை இடத்தில் என் மகனும், மகளும் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இறந்து போன அந்த செல்வங்களுக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள் இருப்பார்கள் இல்லையா? அவர்களும் காலையில் டாட்டா காட்டி முத்தம் குடுத்தே அனுப்பி வைத்திருப்பார்கள், மாலையில் குழந்தை வீடு திரும்புவார். அவருக்குப் பிடித்ததைச் செய்து கொடுக்கலாம் என்று எத்தனை தாய்மார்கள் கனவு கண்டிருப்பர்.

அமெரிக்க-கனேட்டிக்கட் நியூட்டனில் பள்ளியில் ஒரு துப்பாக்கி சூடு நடந்த போது இதே போன்ற ஒரு தவிப்பும் சோகமும் என்னைச் சூழ்ந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்தது. படுக்கையறைக்கு வந்திருந்தேன். இந்தக் கவலை ஏதுமில்லாமல் மகன் காலைக் குறுக்கி தூங்கிக்கொண்டிருந்தார். கவலை ஏதுமில்லாத நேரம் ஆழ்ந்துறங்கும் நேரம்தானே. மகளைப் பார்த்தேன், முகத்தில் பேரமைதி.

வீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீடு திரும்புவோம் என்ற உத்தரவு ஏதுமில்லாத அளவுக்கு தீவிரவாதத்தை வளர்த்ததில் என் பங்கு என்ன?  ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது? தினமும் காலையில் கிளம்பினால் மாலை உயிருடன் வீடு வந்து சேர்ந்துவிடுவதே மிகப்பெரிய சாதனையாக மாற்றியது யார்?

தினமும் மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடாத மாதிரி மென்மையாக முத்தமிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புவது வழக்கம். அன்று நானிட்ட முத்தத்தில் சற்றே அழுத்தம் இருந்தது.

தொடர்புடைய சுட்டிகள் :



Wednesday, June 4, 2014

பெறுமவற்றுள் யாமறிவது

விமானச்சீட்டு முடிவானவுடனேயே மனசுக்குள் ஒரு பயம், பரபரப்பு வந்து உட்கார்ந்து கொண்டது. இதற்கும் பல விமானங்கள், நேரமெல்லாம் பார்த்துதான் இந்த விமானப் பயணத்தை முடிவு செய்திருந்தேன். அப்பா அமெரிக்க வர சம்மதித்தவுடனே, எந்தெந்த மாதங்கள் சரி பட்டு வருமென்று கேட்டேன், அவருடைய விடுமுறை மாதங்களைச் சொன்னபோதே மனசுக்குள் ஒரு தவிப்பு. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் எங்களுக்கு குளிர் முக்கால், வெயில் கால் என்று வருடங்கள் உருண்டோடும், அதிலும் இந்த வருடமோ வழமைக்கு மேலாகவே குளிர் எங்களை வாட்டியது (குளிர் எப்படி வாட்டும் என்று கேட்கக்கூடாது). கண்டிப்பாக அவர் இருக்கும் காலம் குளிராகத்தான் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரிந்துவிட்டது. விடுங்கள், இந்தப் பதிவு குளிரைப் பற்றியதல்ல. மீண்டும் பயணத்திற்கே வருவோம்.



விமானங்கள் மாறும் நேரம் (Transit Time)  அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மொழிப் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,  பயணப்படியும் அதிகமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,  இப்படி பல இல்லாமல்களை பார்த்து பார்த்து கொள்ள வேண்டி இருந்தது. இந்த விமானம்தான், இந்தப் பயணம்தான் என்று முடிவான போதே வீட்டம்மணி அவர் செய்ய வேண்டிய, கூடாத விசயங்களை மாமனாருக்கு பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நிறைய சொல்லி பயமுறுத்திவிடவேண்டாம் என்பது எங்களின் அடிநாதமாக இருந்தது.

பிரச்சினை அமெரிக்காவில் இல்லை, இந்தியாவில்தான். அவரது பயணம் இப்படியாக இருந்தது பெங்களூருவிலிருந்து 9:20க்கு கிளம்பி 11 மணிக்கு மும்பை வந்தடையும். பிறகு 1:30 கிளம்பி அமெரிக்காவின் நுவார்க் வந்தடையும். இப்போது சிக்கலே 11 மணியிலிருந்து 1:30 க்குள்தான். காரணம். பெங்களூருவிலிருந்து மும்பை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேரும். பிறகு சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் அமெரிக்கா வந்து சேரும். இந்த இரண்டரை மணி நேரத்துக்குள் அப்பா உள்நாட்டு விமானத்திலிருந்து இறங்கி, சர்வதேச விமான நிலையம் சென்று Immigration முடித்து சரியான நேரத்திற்கு, அதாவது 12:30 மணிக்கு Boarding க்கு வந்துவிடுவாரா என்பதுதான். எதாவது உதவியென்றால் அழைக்க ISD வசதிகொண்ட SIM தேவைப்பட்டது. வாங்கச் சொல்லி வாங்கியாச்சு. தங்கை Customer Care தொடர்பு கொண்டு கேட்ட பொழுது Immigrationஐ பெங்களூருலேயே செய்துகொள்ளலாம் என்று சொன்னார்களாம். நானறிந்த வரையில் அது மும்பையாகத்தான் இருக்கும். முதல் குழப்பம். பெட்டிகளை பெங்களூரிலேயே போட்டுவிட்டால் அமெரிக்கா வந்து எடுத்துக்கொள்ளலாம், நல்ல வேளை அதையும் மும்பையில் எடுத்து மாற்றவேண்டிய அவசியமில்லாமல் போனது. அந்தக் குழப்பமில்லை.



ச்சு, பயண நாளும் வந்தது. பெட்டி சரியா இருக்கா? பூட்டியாச்சா? 23 கிலோவுக்கு மேல இருக்கா? அது இருக்கா? இது இருக்கா என்று பல கேள்வி பதில் பறந்தன. பெங்களூரில் சரியான நேரத்தில் ஏறியாயிற்று, பெட்டிகள் சரியான எடையில் இருந்தன. எதிர்பார்த்த படியே Immigration மும்பையில்தானென்று சொல்லிவிட்டார்கள். மும்பைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டது விமானம். விமானத்தை விட்டு வெளியே வந்து பேசியபொழுது மணி 11:25.

ன்னும் ஒரு மணிநேரம்தான் இருக்கு. "நீங்க சர்வதேச விமான நிலையம் போயிருங்க. அப்புறம் Immigration. முடிச்சிட்டு கூப்பிடுங்க. சீக்கிரம்" என்று சொன்னதோடு முடித்துவிட்டேன். ஆனால், இங்கே நகம் கடித்தபடியே இருந்தேன். சிறிது நேரம் அறையிலேயே குறுக்கும் நெடுக்கும் நடை. இப்படிக்கும் அப்படிக்கும் நடந்தா மட்டும் படபடப்பு குறையவா போகுது? குறையும்ங்கிற நம்பிக்கைதான். சரியாக, 1 மணிக்கு அழைப்பு வந்தது. விமானத்தில் ஏறத் தயாராக இருக்கிறேன் என்று அப்பா சொன்ன போதுதான் பெருமூச்சு வந்தது. அவர் படபடப்பாகத்தான் பேசினார். அலைச்சல் இருந்திருக்கும் போல, புரிந்தது, ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் "கிளம்புங்க, நீங்க இங்கே வந்து சேரும்போது நானிருப்பேன். நல்லா சாப்பிட்டு தூங்குங்க" என்று சொல்லிமுடித்தேன். பெருங்ககவலை நீங்கியது. விமானத்தில் ஏறிவிட்டால் 15 மணி நேரம், பிறகு இங்கேவொரு  Immigration இருக்கும். ஆனாலும் கவலை இல்லை.



ப்படி 2 மணி நேரத்துக்காக நான் பட்ட மன உளைச்சல் பெரிதாகத்தான் தெரிகிறது. இதற்கும், அலைபேசி, Flight Tracking Details என அனைத்து வசதிகளும் இப்பொழுது இருக்கிறது. எப்படியும் தொலைந்து போய்விட மாட்டார் என்று தெரிந்தும், பயம் மனதை அரித்துக்கொண்டேதான் இருந்தது.

ப்படித்தான், 15 வருடங்களுக்கு முன், அலைபேசியில்லாத காலத்தில் என்னைச் சென்னைக்கு, சேலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏற்றிவிட்டு,  புது இடம், புது ஊரான சென்னைக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்து பாதுகாப்பாக இருக்கிறேன் என்று அடுத்த நாள் காலை வரை என் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்து, அதைத் தெரிந்துகொள்ளும் வரையில் இதே அப்பாவிற்கு எவ்வளவு மன உளைச்சல்கள் இருந்திருக்கும்?

காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?

Sunday, July 14, 2013

மாலை நேரத்து வெம்மை

   கூட்டத்தில் நடுநாயகமாக இருக்கும்பொழுது தனித்து இருப்பது போன்று ஒரு  மனநிலை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருகிறேன், சிரிக்கிறேன், மீண்டும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனது எங்கோ இருக்கிறது. வெம்மை தணிக்க மழை பணிக்கிறது, சிறுதூறல் விழ, இடியுடன் மின்னலும் தூரமாய். நம்மைத்தாக்காத வரையில் அது எல்லாம் ஒரு சம்பவமே.

    நாளைய தினத்தின் கவலையை நினைத்து இன்றைய சந்தோசத்தை இழந்துகொண்டிருக்கும் தருணமென்று மனதிடம் சொல்லிக்கொண்டிருந்தது அறிவு. அமெரிக்க மாலை நேரத்திற்கு சற்றும் ஒவ்வாமல் அனத்திக் கொண்டிருந்தது, காலை நேரத்து சென்னை பண்பலையொன்று. விழலுக்கு இறைத்த நீரைப்போல  கிஞ்சித்தும் உபயோகமில்லாத விளம்பரங்கள். பிறகு தங்கம் விலை வருங்காலத்தில் ஏறுமென்றும், வாங்கி குவித்துக்கொள்ளவுமென்றும் ஒரு நிபுணர் சொல்லிக்கொண்டிருந்தார். உலோகங்களின் இழுவைக்கு இயந்து போகும் மனிதர்களை என்னவெனச் சொல்ல?

 

   திடீரென்று ஒரு பாடல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வார்த்தையையும், துண்டு இசையையும் மனமொத்த ஒரு ஜீவனுடன் ரசித்தது நினைவுக்கு வருகிறது. அந்த ஜீவன் என்ன செய்துகொண்டிருக்குமென்று அந்த ஜீவனின் வீட்டிற்குள் புகுந்து வேவு பார்க்கிறது மனது. கற்பனை சொல்லும் அவரின் நிலையை ஏற்றுக்கொள்கிறது மனது. அது சந்தோஷமான நிகழ்வையே சொல்கிறது. மீண்டும் அந்த ஜீவனை சந்திக்கும் ஆவல் எழுகிறது. மழை வலுக்க ஆரம்பிக்கிறது. நினைவுகளை மீட்டெடுக்கும் பாடல் இன்னொருவருக்கு வேறொரு நினைவை தந்திருக்கும், சம்பந்தமேயில்லாமல் கூட இருக்கலாம். நினைவுகள் என்றும் ஒன்று போல இருப்பதில்லை, அது தேவையுமில்லை. நினைவுகளொன்றும் ரெட்டை கோடு போட்ட காகிதத்தில் எழுதப்படுவதில்லை, அதற்கு சட்டமுமில்லை, எல்லைக்கோடுமில்லை.


   மீண்டும் விளம்பரம், ஏதோ ஒரு தேநீர் குடித்தால் குதூகலமாகிவிடலாமாம். சோகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தால் மனம் அப்படியொன்றும் குதூகலமாகிவிடுவதில்லை. தேநீருக்கெல்லாம் மனம் மாறுமென்றால், தேநீர் கடை அண்ணாச்சி எப்பொழுதுமே சந்தோசமாக இருக்க வேண்டும். கடை சாத்தும் அண்ணாச்சி வீட்டிற்கு போகும் வழியில் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கிப் போகையில்தான் குதூகலாமாவதைக் கண்டிருக்கிறேன். அவருக்கு பிரியாணிதான் ஊக்கம் போலும்.

   ன்றொன்றுக்கும் சம்பந்தமேயில்லாத நினைவுகள், வாழ்க்கை நம்மை நகர்த்திக்கொண்டுதான் இருக்கிறது.   நகர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். திடீரென்று சுற்றியிருந்த அனைவரும் சிரிக்கிறார்கள், நானும் சிரித்து வைக்கிறேன். அந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தமென்று எனக்கும் புரியவில்லை, அந்தச் சிரிப்பிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

Tuesday, September 11, 2012

19/365 செப்டம்பர் 11ல் இன்னொரு சம்பவம்

த்தட் த்தட் த்தட்..

வேகமாக கதவு தட்டப்பட்டது.

”இந்நேரத்துக்கு யாரா இருக்கும்? இப்பத்தானே வேலைக்குப் போனாரு, அதுக்குள்ளேவா வந்துட்டாரு?” என்றபடி கதவைத் திறந்த நவீனாவுக்கு ஆச்சர்யம். ஒருவர் நின்றிருந்தார், முன்னே பின்னே பார்த்திராத ஆசாமி. அஃப்சலை பார்க்க வந்திருப்பாரோ என நவீனா எண்ணியபோது...

 “குட்மார்னிங் மேடம். எப்படி இருக்கீங்க? அக்பர் இருக்காரா?”

“ஆமா, அவருடைய அறையில தூங்கிட்டு இருக்காரு, எதுக்காக கேட்குறீங்க?”

”நாங்க ****லிருந்து வந்திருக்கோம். தொந்தரவுக்கு மன்னிக்கவும், வழி விடறீங்களா?” என அடையாள அட்டையைக் காண்பித்தபோது தெருவிலிருந்து  நிறைய Cops, Bullet Proof Jacket அணிந்த படி திமு திமுவென வீட்டினுள் நுழைந்தார்கள்.

”எங்கே இருக்காரு?” என ஒருவர் கேட்க

“மேலே வலது பக்கம் மூன்றாவது அறை”

அனைவரும், கையில் துப்பாக்கி எடுத்துக்கொண்டார்கள், நவீனாவுக்கு ஏதோ விபரீதம் என்று அப்பொழுதுதான் புரிந்தது. அதே நேரத்தில் “அக்பர் நாங்க உங்களை கைது செய்ய வந்திருக்கோம். ஒத்துழையுங்கள். கதவைத் திறங்க”

....

சத்தமே இல்லாமல் ஒரு நிமிடம்.

”அக்பர்! மீண்டும் சொல்றோம், தேவையான அனைத்து ஆதாரங்களும் இப்ப எங்ககிட்ட இருக்கு. நீங்க ஒத்துழைங்க, ப்ளீஸ்”

.....

அடுத்த நிமிடம், அனைவரும்ம் துப்பாக்கியை தயாராக்க ஆரம்பித்தனர். unlock சத்தம் பட், பட் என வராந்தா முழுதும் எதிரொலித்தது”

டமார்.. கதவை உடைக்க ஆரம்பித்தனர்.. மூன்றாவது உதையில் கதவின் தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்தது.  
அக்பர் கையில் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று எண்ணியவர்களுக்கு வியப்பு. அமைதியாக கட்டிலில் கலக்கத்தோடும், குழப்பத்தோடும் உட்காந்திருந்தார்.  இரவு உடையிலிருந்து ஏற்கனவே வேறு உடைக்கு மாறியிருந்தார். இந்தக் கோலத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

கைது செய்ய ஏதுவாக அவரே முன்வர, அவரின் கைது படலம் எந்தவித அசம்பாவிதமுமில்லாமல் நடந்தேறியது.




வழக்கு பற்றிய விவரங்களுக்கு  


ரு காலத்துல மேயர் குடியிருந்த, அரசுக்குச் சொந்தமான வீடு, அரண்மனை மாதிரி. இப்படித்தான் அந்த வீட்டைப் பத்தி நான் முதலில் கேள்விப்பட்டது. 6 படுக்கையறைகள், 1000 சதுர அடிக்கும் குறையாத Dinning Hall, அதே  அளவில் Living Room, Kitchen. பிரமாண்டத்தை அங்கேதான் பார்த்தேன். 

நான் நியூஜெர்சிக்கு வந்தவுடன் நான் குடியிருக்க வீடு தேடியதில் குறைந்த வாடகைக்கு கிடைத்த வீடு அதுதான். இருங்க, தப்பா கணக்குப் போடாதீங்க. வீட்டுக்குச் சொந்தக்காரர்(அக்பர்) இந்த வீட்டைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடிய போது, நான் வீடு தேடியதும் ஒரே நேரத்தில் நடந்ததால் குறைந்த வாடகைக்கு ஒரு அறையில் தங்கிக்கொள்ள அனுமதியளித்தார். அத்தனை வசதிகளும் அந்த வீட்டில் உண்டு. Fully Furnished, Yes.

வர் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. நாங்கள் 1st Floor(இந்தியவில் Ground Floor) தங்கிக்கொள்ளலாம். Fully Furnished Basement உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கூடைப்பந்து, தோட்டம் எல்லாம் அனுபவித்துக்கொள்ளலாம். அவர் எப்பவாவது வருவார், மாடியறையில் தங்கிக்கொள்வார். அவர் கேட்டுக்கொண்டது இந்த ஒன்றே ஒன்றைத்தான். நாங்களும் குடிவந்தோம், 13 கார்கள் நிறுத்த இடமிருந்து கார் இல்லாமல் இருந்தேன். காரணம், தேவைப்படவில்லை. தேவைப்பட்டால் தெய்வம் போல உதவ கே.ஆர். எஸ் இருந்தார்.

அரண்மனையில் குடியிருக்க ஆரம்பித்தவுடன், Basement மற்றும் மேலேயிருந்த படுக்கையறைகளை வாடகைக்கு விட ஆரம்பித்தார், அதுவும் நாங்கள் வந்து 6 மாதம் கழித்து. சமையலறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம். பொறுத்துக்கொண்டோம், காரணம்? எங்களுக்கும் அவ்வளவு பெரிய வீட்டில தனியா இருக்க சற்றே பயம் இருந்ததும்தான் காரணம்.


செப்-11-2008: நான் அலுவலகம் வந்து வேலைகள், சந்திப்புகள் முடிந்து 11:30 மணி வாக்கில் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு. "வாங்களேன், காப்ஸ் வந்திருக்காங்க. சோஷியல் கேட்டிருக்காங்க, உங்க கிட்ட பேசனுமாம்" என்று பதட்டமான குரலுடன் அம்மணி அழைத்தவுடன் அடித்துப் பிடித்து வீட்டுக்குச் சென்றேன்.


ஒரு பெரிய காவல்துறைப் பட்டாளமே அங்கே இருந்தது. தன்னை இந்தக் குழுவிற்கு முதன்மையானவர் என்று தன்னை தன் அடையாள அட்டையுடன் அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு அதிகாரி, வழக்கின் காரணங்களை கூறிவிட்டு எனக்கு இதில் எந்தளவுக்கு பங்களிப்பு இருக்கலாம், அதற்கான கேள்விகளைக் கேட்கப்போவதாக கூறிவிட்டு  5/6 கேள்விகள் கேட்டார். பதில்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர், "உங்களுக்கான விசாரணை அவ்வளவுதான், இனி இந்த வீட்டில தங்குவது உங்களிஷ்டம் என்றும், அதனால் காவல்துறையினரால் எந்தப் பிரச்சினையும் வராதென்றும் உறுதிசெய்துவிட்டுச் சென்றார்.

அடுத்த நாள் அக்பரின் மகள் வந்தபோது, அழுகையினூடாக அவர் சொன்னது. ”எங்கப்பா எந்தத் தப்பும் பண்ணலை , அவர்னால உங்களுக்குத் தொல்லை ஏற்பட்டிருந்தா மன்னிக்கவும்” என்று முடிக்கும் போது மாலை மாலையாகக் கண்ணீர். பாவம், பள்ளிக்கூட பெண்ணுக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும். அம்மாவும் சிறையில், அப்பாவும் சிறையில். 5 பெண்கள், ஒரு சின்னப் பையன். இதுதான் அவர்களது குடும்பம்.

பிறகு 20 நாட்கள் அந்த வீட்டில் குடியிருந்தோம், இல்லை,, இல்லை அடுத்த நாளே வீடு தேட ஆரம்பித்தோம். காரணம், அக்பருக்கு அப்புறம் அந்த வீட்டுக்கு உரிமை எடுத்துக்கொண்ட வந்த ஒரு அம்மாவின் அடாவடித்தனமே எங்களை காலி செய்ய வைத்தது.

பி.கு: அக்பரும், அவரது மனைவியும் இரு மாதங்களில் விடுவிக்கப்பட்டனர். இன்றும் செப்-11 என்றால் அக்பருக்கு ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது

Wednesday, October 26, 2011

திவாளியாம். என்ன ம** தீவாளி


மனதளவில், இன்னும் இந்தியனாய் வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு  இந்தியனுக்கும் சமர்ப்பணம்





Dedicating to All Non Resident Indians(Still Considering them as Indians)

போன வருசமும் இதே போல புலம்பியது

Thursday, August 25, 2011

எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் - தமிழ்மணம் என்ற திரட்டி

இந்தப் பேட்டி மறைந்த அண்ணன் சிந்தாநதி பதிவிலிருந்து மீள் செய்யப்படுகிறது. Blogspirit எந்தக் காலத்திலேயும் மூடப்பட்டும் என்ற நிலையுள்ளதால் அவருடைய இந்த வரலாற்று சிறப்புமிக்க பேட்டியை மீள் பதிவாக்குகிறேன்.
நன்றி: காசி

கே: தமிழ்மணம் என்ற திரட்டி உருவாக்கப்பட்டபின் பதிவர்களிடையே அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

மகத்தான வரவேற்பு இருந்தது. பலரும் நல்ல வார்த்தைகள் சொல்லி ஊக்குவித்தார்கள். மாலன் திசைகள் இதழில் தலையங்கமே எழுதிப் பாராட்டினார். பலரும் என் பதிவுகளின் மறுமொழியூடாகவும், தனிமடல் வழியாகவும் பாராட்டி வரவேற்றிருந்தார்கள். ஒரேயடியாக 'வாழ்நாள் சாதனை' என்றெல்லாம் தூக்கிக் கொண்டாடியவர்களும் உண்டு்:-) இது பற்றிய அந்தச் சமயத்தில் எழுதப்பட்ட இடுகைகளை நேரடியாக வாசிப்பதே இதற்குச் சரியான பதிலாக இருக்கும். (கீழே பார்க்கவும்)


கே: எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும். தமிழ்மண அனுபவத்தில் அப்படியான அனுபவங்கள் பற்றி?

முதலில் 'எந்த ஒரு செயலுக்கும் எதிர்ப்பு எதிர்வினை என்பவை இருக்கும்' என்பது சரியா?. 'ஏன், எதிர்ப்பு ஒன்று இருந்தே ஆகவேண்டுமா? இது என்ன வக்கிர சிந்தனை?' என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இன்றைய அனுபவம் நீங்கள் சொல்வது சரியென உணர்த்துகிறது. எதிர்ப்பு இருந்தது, வெளிப்படையாக அல்ல, நீறுபூத்த நெருப்பாக! ஏற்கனவே இணைய இதழ்/குழுமங்கள் வாயிலாக இணைய ஊடகத்தையும் வழமையான தமிழ் ஊடகச் சூழலைப்போல மாற்ற முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்த வெகு சிலருக்கு மட்டுமே தமிழ்மணத்தின் வரவு எட்டிக்காயாய்க் கசந்தது. மற்றபடி எல்லாரும் மனதாரப் பாராட்டி வரவேற்றார்கள்.


இந்த எதிர்ப்புணர்வு உள்ளுக்குள்ளேயே வளர்த்தெடுக்கப்பட்டுத் தமிழ்மணம் பயனுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலான அரசியல் சமூக நிகழ்வுகளில் (உ-ம். சங்கராச்சாரியாரின் கைது) வழமையான 'நாகரிக ஊடக உலக'த்தைப் போல அல்லாமல் எவ்வித ஒளிவு மறைவும் பாசாங்கும் இன்றி விமர்சனங்களும் விவாதங்களும் நடப்பது அவர்களுக்குப் பெரும் எரிச்சலைக் கிளப்பியது. இதற்கெல்லாம் மேடை போட்டுக் கொடுத்தது என்ற வகையில் அந்த எதிர்ப்பெல்லாம் தமிழ்மணத்தின் மேல் பாய்ந்தது. (தங்கள் ஆட்களால்) கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்களையே பார்த்து வந்த இவர்கள் ஏதோ தமிழ்மணமே அப்படியான எழுத்துக்களை வேண்டி விரும்பி வெளியிடுவது போன்று நினைத்துக் கொண்டதும் வேடிக்கை. 'இது தானியங்கி, எல்லாக் கருத்துகளையும் வடிகட்டாமல் காட்டுகிறது' என்பது போன்ற அறிவார்த்தமான உண்மைகளை உணருவதற்கு, அவர்கள் மேலாண்மைக்கு ஏற்பட்ட பங்கமும், அவர்களின் புனித பிம்பங்கள் சாதாரணர்களாகிப்போனதில் ஏற்பட்ட ஏமாற்றமும் தடையாய் இருந்தன.

தமிழ்மணத்தின் இருப்பையும் பணியையும் மறுப்பது, சிறுமைப்படுத்துவது என்று தொடங்கி, போலி விவகாரம் போன்ற சர்ச்சைகளில் தமிழ்மணத்தின் பக்கச்சார்பற்ற சாத்தியத்துக்குட்பட்ட நிலையைப் புரிந்துகொள்ளாமல் சாடுதல் என்று நீண்டது. இதன் முத்தாய்ப்பாகத்தான் 2005 அக்டோபரில் நடைபெற்ற விரும்பத்தகாத பல நிகழ்வுகள். இவற்றின் ஊடே 'தமிழ்மணத்தை மூடிவிட்டுப் போயேன்' என்ற வசைகளும் பலமுறை வைக்கப்பட்டன. தமிழ் வலைப்பதிவுகளைச் சிறுமைப்படுத்துவதையும் குழுமங்களில் வாசிக்கக் கண்டிருக்கிறேன். மாற்று ஊடகமாகத் தமிழ்மணம் ('தமிழ் வலைப்பதிவுகள்' அன்று பெரும்பாலும் 'தமிழ்மண'மாகத்தான் இருந்தது எதிர்ப்பாளர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை) வளர்வது எவருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களால்தான் இந்த 'மூடிவிட்டுப் போயேன்' சொல்லமுடியும் என்பது புரிந்ததால், இந்த ஒரு காரணத்துக்காகவே இதை என்றும் மூடிவிடக்கூடாது என்று உறுதி பூண்டேன்.

என் பின்னணியையும் இந்த எதிர்ப்பாளர்கள் பின்னணியையும் பார்த்தால், நான் இணையத்துக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகள், பத்தாண்டுகள் முன்பிருந்து இவர்கள் தமிழ் இணைய சூழலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள். நான் தமிழ்மணம் வெளியிடும்போது தமிழிணையத்தில் இயங்கத்தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. ஆக, 'எங்கிருந்தோ வந்தான், இதைச் சாதித்தேவிட்டான்' என்ற பொறாமையும் இவர்களில் சிலருக்கு இருந்திருக்கலாம் என்று இன்று தோன்றுகிறது. இவர்களோடே அனுபவத்தால் பாடம் கற்ற நீண்டநாள் தமிழிணைய வாசிகள் பலரும் அவ்வப்போது அறிவுறுத்தியதற்கும் ஆதரவளித்ததற்கும் நான் நன்றி சொல்கிறேன்.

கே: நீங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கி, வளர்த்து விட்ட தமிழ்மணம் இப்போது உங்கள் கையில் இல்லை. இந்த முடிவு எதனால் எடுக்கப் பட்டது?

முதல்கட்ட எதிர்ப்புகளைச் சமாளித்து அவற்றுக்குச் சரியான பதிலாக தமிழ்மணம் இரண்டாம் பதிப்பு (கிட்டத்தட்ட இன்று காணும் வடிவம், ஆனால் பல புது அம்சங்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன, அதற்கு உழைக்கும் நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்) வெளியிட்டு, அதுவும் பெரும் வரவேற்பினைப் பெற்றது. என் தொழில்/வாழ்க்கை சம்பந்தப்பட்ட தேவைகள் தொடர்ந்து இதில் ஈடுபடுவதற்கு சவாலாக இருந்தபோதும் விடாப்பிடியாகத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தேன்.முதல் பதிப்பிலிருந்தே உதவிய நண்பர்கள் செல்வராஜ்/மதி கந்தசாமியோடு, இளவஞ்சி/பிரகாஷும் நிர்வாகத்தில் உதவினார்கள்.

ஆனாலும், முறையற்ற தாக்குதல்கள், கனவான்களின் அவதூறுகள், தமிழ்மணம் 'இந்திய இறையாண்மைக்கு எதிரான திராவிட/தமிழ்-தேசியக் குரல்களுக்கு ஆதரவு கொடுக்கிறது' என்ற இட்டுக் கட்டப்பட்ட கருதுகோள் காரணமாக தூற்றல்கள், அவற்றுக்குப் பெருங்கனவான்களின்/ கனவாட்டிகளின் மறைமுக ஆதரவு, 'எது நடந்தாலும் எனக்கென்ன?' என்று மெரினா மணலில் முகத்தைப் புதைத்துக்கொண்ட பதிவர் பெருமக்கள் என்று எக்கச்சக்கமான எதிர்மறை நிகழ்வுகள் என்னை 'போதும், போய் உன் வாழ்க்கையையும் தொழிலையும் பார்' என்று துரத்தின. இவையே தமிழ்மணத்தை நான் தொடர்ந்து நடத்தாததற்குக் காரணம். இந்தக்காரணிகள் பெரும்பாலும் இன்னும் மாறாத பொழுதும், இன்று தங்கள் பொருளையும், உழைப்பையும் செலவிட்டுத் தமிழ்மணத்தைத் தொடர்ந்து நடத்தும் டி.எம்.ஐ. நண்பர்களைப் பார்க்கும்போது ஒரு பக்கம் வருத்தமாயும் மறுபக்கம் பெருமையாயும் உள்ளது.

கே: தமிழ்மணம் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு எற்பட்ட பயன்கள் என்று எவற்றைச் சொல்லுவீர்கள்?

தமிழ்மணம் தவிர்த்தும் வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குப் பலரும் தனியாகவும் கூட்டுழைப்பிலும் பலதைச் செய்திருக்கிறோம். தமிழில் எழுதலாம் வாருங்கள் வலையில் பரப்பலாம் பாருங்க என்ற என் கட்டுரைத்தொடர் படித்து வலைப்பதிக்க வந்தவர்கள் பலர். ஆனாலும் தமிழ்மணம் மூலம் தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சிக்குக் கொடுத்த உத்வேகம் இன்னும் பலமானது. சில வரிகளில் சொல்வதானால்:

வலைப்பதிவர்களுக்குக் குறைந்த பட்ச கவனம் கிடைக்கச் செய்திருப்பதால் பலரும் வலைப்பதியத் தூண்டுகோலாய் இருக்கிறது.
வலை உலாவர்களிடையே வலைப்பதிவுகள் குறித்து அறிய வைக்கிறது.
வைய விரிவு வலையில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
பொதுப்புத்தியோடு ஒட்ட ஒழுகாத பதிவுகளுக்கும் வாசக வட்டம் கிடைக்கச் செய்கிறது.
மீடியா மாபியாவுக்குக் கட்டுப்படாத ஒரு மேடையைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது.
தமிழ் யுனிகோடு பரவலாக்கத்தை விரைவுபடுத்துகிறது.

'இந்தி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறைப்படுவதே 'இந்திய மொழி' வலைப்பதிவுகள் பற்றி அக்கறை கொள்வது (Hindi=Indic, பார்க்க: Bhasha Blogs: Indic Blogs in the Indian Blogosphere) என்றாகி விட்ட சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் முதன்மையான ஒரு நிலையை அடையத் தமிழ்மணம் சிறப்பான பங்காற்றியுள்ளது. பார்க்க: http://www.myjavaserver.com/~hindi/

(கீழே கடைசிப் பத்திகள் சென்று பார்த்தால் இந்தப் படம் தெரியும்)

முதன்முதலாக ஒரு தமிழ்த் தளத்தை வியாபார ரீதியாக விற்பனை செய்ய முடிந்தவர் நீங்கள் தான் என்று கூறப்படுவது பற்றி?

இருக்கலாம், எனக்குத் தெரியாது. இப்படி ஒரு செய்தி நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. இதில் விற்பனையில் என்னுழைப்புக்காக, சிந்தனைக்காக என்று நான் பெற்றுக்கொண்டது நயாபைசாவும் இல்லை. தமிழ்மணம் இரண்டாம் பதிப்புக்கு என் நேரத்தை செலவிட முடியாது என்று புரிந்தபோது, ஆர்வக்கோளாறு காரணமாக சில நிரலாளர்களைச் சம்பளத்துக்கு வைத்து, இடம், கணினி, இணையத்தொடர்பு என்று ஏற்படுத்தி அவர்களுக்காகச் செலவு செய்த பணம்தான் நான் பெற்றுக்கொண்ட விற்றுமுதல்! தமிழ்மணத்துக்காக நான் செலவிட்ட நூற்றுக்கணக்கான மணி நேரங்களை என் தொழிலுக்காகவோ, குடும்பத்துக்காகவோ, குறைந்த பட்சம் ஒரு சாதாரண வலைப்பதிவனாகவோ செலவிட்டிருந்தேனானால்கூட:) நான் அடைந்திருக்கக்கூடிய பலனை(?) எண்ணிப் பார்த்தால் ...


சமீபத்தில் பதிவுகளை வாசிக்கவும் மீண்டும் வலைப்பதியவும் ஆரம்பித்துள்ளீர்கள். புதிய பதிவர்களில் நம்பிக்கையளிப்பவர்களாக தோன்றும் சில பதிவர்கள்?

வாசிக்க ஆரம்பித்திருந்தாலும் இன்னும் புதிய பதிவர்கள் அதிகம் பேரை வாசிக்கவில்லை. இந்த நிலையில் சுட்டுவது, அடையாளம் காட்டுவது எல்லாம் சரியாக இருக்காது எனவே பட்டியலிட இயலவில்லை. ஆனால், புதிய பதிவர்களுக்கு, 'உங்களை, உங்கள் நண்பர்கள் வட்டத்தை அறியாத ஒருவர் முதல் முறையாக உங்கள் இடுகை ஒன்றைப் படித்து உங்கள் வலைபதிவுக்கு மீண்டும் வருவதா வேண்டாமா என்று முடிவு செய்யப்போகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்படியானால் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் இடுகை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற ஒரு சோதனையை மட்டும் செய்து பிறகு எதுவானாலும் எழுதுங்கள்' என்ற வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன்.:)

தமிழ்மணத்தின் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கிறதா?

முழுதும் இருக்கிறதென்றும் சொல்லமுடியவில்லை, இல்லையென்றும் சொல்ல முடியவில்லை. பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படுள்ளன. ஏற்கனவே இருப்பவற்றில் சில வழுக்கள் களையப்படவேண்டி இருக்கின்றன. புதிதாய் வலைப்பதிக்க வருபவர் செய்யவேண்டிய செயல்களை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். சொல்வது எளிதாய் இருந்தாலும், தன் நேரத்தை செலவிட்டு மூளையைப் பயன்படுத்தி இதில் ஈடுபட இங்கே கிடைக்கும் உத்வேகம் இன்னும் போதாது. எனக்காவது பேர்(?) கிடைத்தது. இன்று தமிழ்மணத்துக்காக பங்களிக்கும் நண்பர்களுக்கு அதுவும் இல்லை. கைக்காசையும் போட்டு, உழைப்பையும் போட்டு, வசவுகளையும் வாங்கிக்கொண்டு, அவர்கள் இத்தனை செய்வதே பெரிது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

---------------------------------------------------------------------------------

இந்தப் பதிவுக்கான காரணம், பலவுண்டு, அடுத்த கட்டம் அடுத்த கட்டம் என்று சொல்லி முற்றிலுமாக நாம் அழித்தது இப்போ இருக்கும் கட்டத்தைத்தான். இன்னொரு பதிவுல அதைப் பத்தி பேசலாம்.

2004ம் ஆண்டு Aug-24ல் முதல் பதிவு எழுதினேன். இன்றோடு 7 ஆண்டுகள் ஆகிறது.. தமிழ்மணம் இல்லாவிட்டால் இந்த நிலை எட்டியிருக்க இயலாது. அதனால்தான் தமிழ்மணத்தையும் அண்ணன் காசியையும் சிறப்பிக்க ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். காசி பேட்டி என்றால் வர மாட்டார். அதான் மறுபதிவு.

எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். உங்களின் மேலான அன்புக்கு எனது நன்றிகள்!

Wednesday, November 17, 2010

WinNTம் எமகண்டமும்

இப்ப பாருங்க, யாருமே வேலை நடக்கிற இடத்துல நடக்குற சம்பவங்களை பதிவா எழுதறது இல்லே(இப்படி சொல்றதுக்காகவேதான் இந்தப் பதிவு ஹிஹி), சினிமா எப்படி எடுத்தாங்கன்னு சொன்னா தீவாளி அன்னிக்கு பட்டாசு கூட வெடிக்காம பார்குறோம், நான் இப்படி துணி தெச்சேன், நான் இப்படி வண்டி ஓட்டுனேன், இப்படி code எழுதினேன்னு சொன்னா கேட்போம்? அது ஒரு செமை மொக்கையா இருக்கும்ல. ஏன் அப்படி?

அப்புறம், இந்தப் பதிவு தொழில்நுட்பம் சார்ந்தது, server, shutdown, restart, patch, legacy application அப்படின்னு என்னான்னு தெரிஞ்சா மட்டும் படிங்க, இல்லாட்டி சோத்தங்கை பக்கம் மேல் மூலையில் X இருக்கும் பாருங்க, அதை அழுத்திட்டு வேற வேலை பாருங்க.

போன மாசம் ஒரு வெள்ளைக்கார பிக்காலி பம்பிகிட்டே வந்து “நீ Windows NTல வேலை செஞ்சிருக்கேன்னு சொன்னியே? அதெல்லாம் ஞாபகம் இருக்கா?
எனக்கு சுத்தமா மறந்து போயிருச்சு, நம்ம டீம்லயும் யாரும் சரியா ஞாபகம் இல்லேங்கிறாங்க. நீதான் மறக்காம இருக்க சுக்கு காபி எல்லாம் குடிக்கிறியே, ஒரு சர்வர் இருக்கு வந்து பார்க்கிறியா”னு கேட்டான். அடப்பாவி, சுக்கு காபிக்கும் ஞாபகத்துக்கும் எப்படி முடிச்சு போடுதுபாரு இந்த பாடு. இந்தமாதிரி கேள்வி கேட்டே இவுனுங்க பொழப்ப ஓட்டுறானுங்க. முடியாதுன்னு சொன்னா கடேசில ஒரு நாள் ஆப்பு வெப்பாங்க, முடியும்னு சொன்னா ரெடிமேட் ஆப்பு. சரி, எவ்வளோ பார்த்துட்டோம், இதை பார்க்கமாட்டோமான்னு “சரி பீட்டரு, வந்து பார்க்கிறேன், விசயத்தை மெயில்ல போட்டு”ன்னேன்.

Toவுல ஒரு அம்பது பேரு இருப்பாங்க, CCல எங்கூரு மட்டுமில்லாம உலகத்துல இருக்கிற எல்லாம் மேனேஜருக்கும் சேர்த்து, கொட்டாம்பட்டி வார்டு மெம்பர் வரைக்கும் சேர்த்து ஒரு 500 பேருக்கும் மேலேயே இருக்கும், பாவி புள்ளை ஒரு மடல் போட்டான். அப்பவே சுதாரிச்சிருக்கோனும். நமக்குத்தான் வெவரம் பத்தைலேயே. விவரம் என்னான்னா Windows NT 4.0 Server ஒன்னு இருக்கு, அதுக்கு ஒட்டுப்போடனும்(Patching). எனக்கு சிரிப்பா வந்துச்சு, Microsoft, Windows NT க்கு Support நிறுத்தியே பல வருசம், ஆச்சு, அதுவுமில்லாம Windows NT எல்லாத்தையும் upgrade பண்ணி பல வருசம் இருக்கும். இனிமே என்ன patch இருக்கும்னு பார்த்தா நிறைய இருந்துச்சு, அதுவும் தானா பண்ணிக்காது, நாமாத்தான் ஒன்னொன்னையும் புடுங்கனும். மடலோ இப்படிக்கா அப்படிக்கான்னு பறக்குது, ஒருத்தன் வேணாங்கிறான், இன்னொருத்தன் வேணுங்கிறான், பாதிபேரு நடுநிலமை வகிக்கிறா மாதிரியும் ச்சும்மா பறக்குது.





அட, அப்படி என்ன அந்த வழங்கியில இருக்குன்னு கேட்டா, மாசத்துக்கு ஒரு தடவை ஓடுற application ஒன்னு இருக்கு. மாசக்கடைசியானா ஓடோடு ஓடுன்னு ஓடி ஒரு pdf தரும். எல்லாருக்கு அந்த pdfஐ தலை மடல் போடுவாரு. ஒருத்தனும் சீண்டாமாட்டான். நானெல்லாம அந்த மெயில் பார்த்தவுடனே DELETE பண்ணிருவேன். அந்தப் pdfக்கு ஒரு சர்வரு, அதுக்கு வேலை பார்க்கிறது ஆளு. தூ, இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தலைக்கிட்ட கேட்ட முடியுமா? சரின்னு ஒரு நல்ல ராகு காலத்துல மேனேஜரை டீ குடிக்கிற இடத்துல நிறுத்தி, ”ஆசானே இந்த சர்வரை தொடறதும் விஜய்கிட்ட மோதுறதும், கரண்டு கம்பிய கையால தொடர்ரதும் ஒன்னுத்தான்”னேன். அதுக்கு அவரு டீய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் அப்படின்னு உறிஞ்சிகிட்டே, அதுக்குத்தான் நீ இருக்கியே அப்புறம் என்னன்னு போயிட்டாரு. ஏண்டா உலகத்துல நான் ஒருத்தான் கைப்புள்ளையா? நான் என்னடா உங்களுக்கு பாவம் பண்ணினேன்? இந்த சின்னப் புள்ளைய ஏண்டா இப்படி இம்சை பண்றீங்க.

ஒரு சுபயோக சுபதினம் குறிச்சாங்க, எதுக்கு? ஆப்பை எனக்குச் சொருகத்தான். இன்னிக்கு காலையில வேலைக்கு வந்தவுடனே தலை கூப்பிட்டு ”வாங்க எல்லாரும் கும்மியடிக்கலாம்”ன்னு கூட்டிட்டு போனாரு. ச்சும்மா ஒரு 45 நிமிசம், காலங்காத்தால தூங்க வெக்கிறது எப்படின்னு சொன்னாருன்னு நினைக்கிறேன்... இல்லாட்டா கைய மேல கீழ ஆட்டி வேற பேசினாரா, அநேகமா டீ எப்படி ஆத்துறதுன்னு சொல்லிக்காட்டுறாருன்னு நினைக்கிறேன். ஆனா அதுல ஒன்னு மட்டும் புரிஞ்சது,
அந்த அப்ளிக்கேசனை எழுதனுது ஒரு 3ர்ட் பார்ட்டி, அவன் இப்போ இல்லே, அதனால நம்மாள அத மாத்த வக்கில்லை, காசு செலவு பண்றதுக்கு வசதியில்லை. அதனால இந்த கருமாந்திரத்தையே கட்டிக்கிட்டு அழுவனும். ”

இதை 30 விநாடியில படிச்சிட்டீங்கதானே, இதைத் தான் அவரு 45 நிமிசம் ஆத்துனாரு. பாருங்க,.... சர்வர் upgrade நேரத்தை ஒரு எமகண்டத்துல 9லிருந்து 12 மணியிலையா வெக்கனும்? எமன் எப்படி வர்றான் பாருங்க. இதுல என்ன காமடின்னா இந்த சர்வரை 12 வருசமா யாரும் பேட்சும் பண்ணலை, restartம் பண்ணலை. Windows NT புதுசா வயசுக்கு வந்தப் பொண்ணு மாதிரி, தொட்டா கோச்சுக்கும் (bsod). முப்பாத்தம்மனையும், பாடிகாட் முனீஸ்வரைனையும் கும்பிட்டுகிட்டு வேலைய ஆரம்பிக்க போனா, பொது மாத்து போடுறா மாதிரியே என்ன சுத்தி ஒரு 15 பேரு கூடி வந்து நின்னுகிட்டாங்க. கண்டிப்பா ஏதாவது பிரச்சினைன்னா என்னால எழுதிருச்சி போவ முடியாது, ஏன் என்னோட இருக்கையில இருந்துகூட எழுதிருக்க முடியாது. அவ்ளோ நெருக்கம். இதுல டோக்கன் சிஸ்டத்துல என் கியூப்புக்கு வெளியே கூட்டம் வேற. ஸ்பெஷல் பஸ்ஸும், செருப்புக்கடையும் போடாதது ஒன்னுதான் பாக்கி. காலங்காத்தால 12b பேருந்து மாதிரி அடைச்சிகிட்டு நிக்கிறானுங்க. உச்சா வேற வர்றா மாதிரியே இருக்கு.

ஏற்கனவே கொஞ்சம் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு வெச்சிதனால ஒரு batch file தட்டினேன். குடுகுடுன்னு மானிட்டர்ல ஓடுது, இதை எதிர்பார்க்காத என் தலை, இன்னொரு தலைகிட்ட “பார்த்தியா, எப்படி வேலை செய்யறான் பாரு. என் அணியில எல்லாருமே இப்படித்தான் வேலைய சீக்கிறமா முடிக்கிறதுன்னு முன்னாடியே ப்ப்ப்ளான் பண்ணி பண்ணுவோம்” அப்படின்னு அலப்பறை வேற. எல்லாம் முடிஞ்சது, restart பண்ண வேண்டிய நேரம். வேர்த்து விறுவிறுக்க எல்லாரையும் திரும்பி பார்க்கிறேன், கையில அருவா வெச்சிகிட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு. கண்ணமூடிகிட்டு RESTARTஐ தட்டினேன். BIOS வந்துச்சு, பூட்டப் மெனு வந்துச்சு, அப்புறம் Windows NT Screen வந்துச்சு, வந்துச்சு, அப்புறம் அதுலேயே நின்னுக்கிச்சு. பேருந்தா இருந்தா, எல்லாரும் தள்ளுங்கன்னு சொல்லலாம்.. இதுக்கு? அப்பத்தான் ஒரு முந்திரிகொட்டை, மறுபடியும் restart பண்ணலாம்னு சொல்ல, நான் வேணாம்னுட்டேன். சுத்தி இருந்தவனுங்க எல்லாம் தன்னோட அலைபேசியில் கூகிலடிச்சு இதைப் பண்ணலாம், அதைப்பண்ண்லாம், இருக்கிற எல்லா forumல இருக்கிறதை எல்லாம் படிக்கிறானுங்க. 20 நிமிசம் ஆச்சு. ஒருத்தன், சர்வர் ஊத்திகிச்சு. கிளம்புங்க காத்து வரட்டும்ங்கிறான்.

யக்கா இந்தக் கதையக் கேளேன், ராசாக்கா பொண்ணு ஓடிப் போயிருச்சாம்ல.”
ஆமாண்டி அப்பவே தெரியும், அவ அலுக்குனது என்னா.. குலுக்குனது என்னா

அப்படின்னு ஊருல எப்படி பொரணி பேசுவாங்களோ அது மாதிரியே பேசறானுங்க. பாதிப்பேரு கிளம்பிட்டாங்க, பாவம் அவுங்க மட்டும் எவ்ளோ நேரம் சும்மாவே நிப்பாங்க. நான் என் தலையப் பார்த்தேன், மொறச்சா மாதிரியே இருந்துச்சு “நான் என்னய்யா பண்ணுவேன்?” அவரோட கையைப் பார்த்தேன், பாசக்கயிறு சுருட்டி வெச்சா மாதிரியே இருந்துச்சு. தீடீர்னு ஒரே கைதட்டல், என்னடான்னு திரும்பி மானிட்டா பார்த்தா login screen வந்துருச்சு. எல்லாரும் எனக்கு கை குடுக்கிறாங்க, தலை தட்டிகுடுத்துட்டு போனாரு.


அடுத்த மாசமும் pdf மடலுக்கு வரும், அதுல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கனும். உச்சா போவனும், வழிய விடுங்கப்பா.

Monday, November 30, 2009

மகசூல் - 30-11-09

ஒரு சின்ன வேளை விசயமா 3 நாளைக்கு மட்டும் இந்தியா வந்திருந்தேங்க. பெங்களூருல இருந்து எங்க ஊருக்கு 4 மணிநேரத்துல போயிட்டோம். சாலை எல்லாம் அருமை. அமெரிக்காவுல இருக்கிற மாதிரி இருக்குங்க இந்த புது சாலை, ஒன்னும் வித்தியாசமே தெரியலீங்க. என்ன? மரம் எல்லாம் இல்லாம ரோடெல்லாம் மொட்டையா இருக்கு. அதுவுமில்லாம, மரமே சிக்காம எங்கப் பார்த்தாலும் ஊடுங்க. மழை பெய்யலைன்னா, எங்கப் பெய்யும்? வரேன்னு சொல்லிப்புட்டு வரமுடியல, அதனால ஈரோடு பதிவர்கள் எல்லாம் மன்னிச்சுங்கப்பா..

விண்ணைத் தாண்டி வருவாயா, படம் நியூயார்க்/நியூ ஜெர்சின்னு வளைச்சு வளைச்சு எடுத்தாங்க. படம் புடிக்க வந்தவங்க எங்க ஊட்ல இருந்து 1 மைல் தொலைவுலதான் தங்கி இருந்தாங்க. நான் யாரையும் பார்க்கப் போவலை. அந்த சனத்துல ஒருத்தர் மட்டும் எங்கூட 4 நாள் ஊர் சுத்தினாரு.

இந்தப் படத்துக்குப் பேரு வெச்சது ஒளிப்பதிவாளராம். பாட்டெல்லாம் கேட்டேன், ரொம்ப நாள் கழிச்சு ரகுமான் கலக்கி இருக்காரு, கெளதம் மேனன் ஆச்சே. படத்தோட பாட்டு டிசம்பர் 18ம் தேதி, லண்டன்ல வெளியாவுதாம். என்ன காரணமா லண்டன்ல வெளியிடறாங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.

சொந்தப் பேர்ல பதிவு/டிவிட்டர் எழுதறது எவ்வளவு தப்புன்னு இப்போதாங்க தெரியுது. ஒருத்தர வேலைய விட்டுத் தூக்க HR மக்கள் முடிவு பண்றாங்கன்னு வெச்சுக்குங்க, மொதல்ல performance சரியில்லீம்பாங்க, இப்போ? அவரு எங்கே எவ்ளோ ட்விட்டராரு, பதிவு போடறாருன்னு அவரு சொந்தப் பேரைப் போட்டு தேடிப்பார்த்துட்டு “ராசா, நீ வேலை பார்க்கிற லட்சணம் இதுதான், கெளம்பு’ன்னு சொல்றாங்களாம். நாமதான் பதிவு எழுதறது வேலையாவே வெச்சிருக்கோமே, அதுவும் பெரிய கெளரவம் சிவாஜி மாதிரி சொந்தப் பேர்ல வேற எழுதி வெச்சுறோம். மாட்டிக்கிறது சுலமாச்சே. இப்படியுமா HR மக்கள் வேலை பார்ப்பாங்க? இவுங்க எல்லாம் ரூம்ல ஏசி போட்டுத்தான் யோசிக்கிறாங்க..இனிமே சொந்தப் பேர்ல எழுதாதீங்கப்பூ.

வேட்டைக்காரன் - விளம்பரம் எல்லாம் பார்த்தேங்க. ரொம்ப சப்பையான விளம்பரங்கள். ரொம்பத் தெளிவா சன் டிவி செய்யுறாங்க. விஜய், பார்த்து சூதானமா இருந்துக்கோங்க. கவுக்க பெரிய கும்பலே இருக்கு. கோடிய குடுத்து இடம் புடிக்கத் தெரிஞ்சவங்களுக்கு, கோடிய குடுத்து உங்க இடத்தை காலி பண்ணிறப் போறாங்க. எதுக்கும் ஒரு மஞ்சத் துண்ட போர்த்தி பிரச்சினைய முடிச்சுக்குங்க.

Thursday, July 2, 2009

காசியும், ஞானும், பின்னே சந்தவையும்

சந்தவை: இப்படித்தான் எங்க ஊர்ல சொல்லுவோம். கண்ணாலமாவி மொதோ மொறையா மாப்புள்ளை வூட்டுக்கு வரம்போது சந்தவ செஞ்சு போடுறது, மாமியார் வழக்கம். அது என்னாத்துக்குன்னு எல்லாம் தெரியாது. அது என்னா சந்தவன்னு கேக்குறவங்களுக்கு உங்க பாசையில சொன்னா "இடியாப்பம்" இல்லாட்டி சந்தகை கன்னடத்துல சவிகே, அல்லாத்துக்கும் புரியராப்ல சொன்னாக்கா நூடுல்ஸ்.

சந்தவ சுடுறது பெரிய விசயம். ஏன்னா, இதச் சுட ரெண்டு பேரு வேணும். இட்லிக்கு சுடறாப்லதான் மாவு இருக்கும். என்னா, உளுந்து போட மாட்டாங்க. வெறும் அரிசிய ஊறவெச்சு, உப்பு போட்டு வெச்சுக்குவாங்க, புளிக்க வெக்கவெல்லாம் வேணாம். அப்படியே ஆட்டுக்கல்லுல இருந்து எடுத்து நேராவே இட்லி தட்டுல ஊத்திரலாம். ஆனா இட்லி மாதிரி பொசு பொசுன்னு உப்பாது இது. கல்லாட்டம் இருக்கும்.

இதுவரைக்கும் நமக்கு ஒன்னும் வேலை இருக்காது. சந்தவ மரம்(சந்தவ புளியரது), இது பெரிய வேலை பண்ணும். சந்தவ சுடறதுக்கு மொதோ நாளே எண்ணை போட்டி வெச்சுரனும். இல்லாட்டி திருவரவங்களுக்கு பாடு கஷ்டமாயிரும். சுட்ட இட்லி மாதிரி இருக்குறத எட்டுத்து உள்ளே போட்டு திருவனும். சந்தவ வருதோ இல்லீயோ, திருவரவங்களுக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். சந்தவ எடுத்ததுக்கு அப்புறம் கீழ கொஞ்சூண்டு ஒட்டி இருக்குறதுதான் திருவறவங்களுக்கு. சந்தவ, மூனு வெதமா திம்போம். ஒன்னு- சந்தவய போட்டு, அதுக்கு மேல பழம், சர்க்கரை போட்டுக்கனும். ரண்டு மூணு வாழப்பழத்தை போட்டு பெனஞ்சு, நெய்ய அதுக்குமேல ஊத்தி சாப்புடறது. ரண்டு- சந்தவைக்கு தேங்காப் பால் ஊத்துறது. மூணு- சந்தவய வருத்து திங்கறது.

காசி அண்ணாச்சியோட சேவை மேஜிக்ல கஷ்டப்படாம் சந்தவ வருது(Updated: This site may harm your computer-அப்படின்னு கூகிள் சொல்லுது). இத்தனை கஷ்டம் இல்லே. மாவு ஊத்தினா சந்தவை வருது. NS கிருஷ்ணன் சொன்னாபல் “சுச்சிய தட்டுனா, தட்டுல இட்லி” இந்தியாவுல மூணு வாங்கினேன். அதுல ஒன்னு இப்போ அமெரிக்காவுலதான் இருக்கு. காசி அண்ணாச்சிக்கிட்ட மொதல்ல கேட்டதே "இத வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போவ முடியுமா"ன்னுதான். வாங்கி வேஸ்ட்டாப்போச்சுன்னா? அண்ணாச்சி முயற்சி பண்ணச் சொன்னாரு. கொண்டுவரது கொஞ்சம் சுலுவாத்தான் இருந்துச்சு. இப்போ சந்தவை சுலுவா செய்ய முடியுது. என்ன மாவு மட்டும் கொஞ்சம் சரிப்பதமா இருக்கனும் இல்லாட்டி நல்லா வர மாட்டேங்குது. ஒரு தடவை பண்ணிப்பார்த்துட்டா அப்புறம் தெரிஞ்சிரும். ஒரு சிடி வேற இருக்கு, எப்படி செய்யறதுன்னும் சொல்லித்தர்றாங்க.நெறைய recipe தந்திருக்காங்க, ஆனா அதுல ஒன்னகூட நாஞ்செஞ்சி பார்க்கல. நமக்குத் தெரிஞ்ச மூணு அயிட்டத்தையுமே சாப்பிட்டா போதுமுன்னு வுட்டுட்டேன். அதாகப்பட்டது, சந்தவ சாப்பிட்டா லிவருக்கு நல்லதாம், எதிர்வூட்டு செட்டியாரு சொன்னாரு.

Friday, June 19, 2009

உச்சா- கலப்படம் இல்லாமல்

உச்சா, மூச்சா- இது எல்லாம்தான் பதிவுல எழுதுறதுக்கு சுலபமான வார்த்தைங்க. வேற எல்லாம் எழுதினா ஆபாசம், கிளர்ச்சி, அதிகாரா கோஷமின்னுருவாங்க.

உச்சா: கல்லூரியில 3 மணிநேரம் பரிட்சை இருக்கும். அதுவும் கோயமுத்தூருல டிசம்பர் மாச குளுருக்கு 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு பரிட்சை எழுதறது எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா? பரிட்சைக்கு நடுவாலயும் எந்திருச்சு போவ முடியாது? பிட் எடுத்துட்டு வந்துருவோமாம்? இப்போ மட்டும் இல்லாமையா இருக்கோம்?. பரிட்சை முடிச்சுட்டு வெளியே வரும்போது "பரிட்சை எப்படிடா மாப்ளே?"ன்னு கேட்கிற பசங்களுக்கு பதில் கூட சொல்லாம ஒரே ஒட்டமா ஓடிப்போயி 'போவோம்'.

"மாப்ளே! இப்படி 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு, அப்புறம் போற சொகம், **க** அடிக்கிறத விட சுகம்டா" அப்படின்னு சொன்னது இன்னமும் ஞாபகத்துக்கு இருக்குங்க.

ஒரு தடவை ஒருத்தரு மூணு மணி நேரம் அடக்கிக்கிட்டு இருந்து 'போயி'ட்டு இருந்தாரு. இன்னொருத்தன் வந்தான், வந்தவன் சும்மா இல்லாம "மாப்ளே மாப்ளே, இங்கே பாருடா"ன்னு பொறத்திக்காண்ட தட்டி தட்டி ஒரே தொந்தரவு வேற. பார்த்தாரு 'அடிச்சுட்டு இருந்தவரு' நிறுத்தவும் முடியல, இவன் தொல்லையும் தாங்க முடியல. ஒரு கையால **அ புடிச்சுகிட்டு, இன்னொரு கையால மூச்சாவ புடிச்சு, பொறத்திக்காண்ட நோண்டுனவன் மூஞ்சியில சலீர்னு அடிச்சாரு. அப்புறம் அவன் ரொம்பநாள் அவன்கிட்ட பேசவே இல்லே.

ஒருத்தருக்கு வந்தாமட்டும் கூட இருக்கிற எல்லாருக்கும் வந்துருதே ஏன்?

சின்ன வயசில எலிமெண்டரி பள்ளிகூடத்துல விதவிதமா வாய்க்கா எல்லாம் போட்டு வுடுவாங்க. விவரம் தெரியாத வயசு.

போன வருசம் உச்சா போவையில இன்னொருத்தன் கூடவே வந்தான். அமெரிக்காவுலதான் தெரியுங்களே, உச்சா போறதுக்கும் ஆய் போறதுக்கு ஒரே ரூம்புதான், சின்னதா சின்னதா தடுப்பு மட்டும் உள்ளே இருக்கும். சோத்தாங்கை பக்கம் இருக்குறாப்ல. வந்தவன் சும்மா இல்லாம மேனஜரை மேல இருந்த கோவத்தை 'போயி'கிட்டே என்கிட்ட சொல்லிட்டு வந்தான். கெட்ட வார்த்தை எல்லாம் போட்டு திட்டு திட்டுன்னு திட்டிட்கிட்டே இருந்தான். ஒரு அஞ்சு நிமுசம் வுடாம திட்டிப்புட்டான். அப்புறம் நிறுத்திப்புட்டான். சாயங்காலம் ஒரு மீட்டிங் வெச்சாரு. நாசுக்கா சொன்னாரு மானேஜரு "ஒன்னுக்கு போனோம்னா.. போறதுக்கு மட்டும் போங்க.. கண்டமேனிக்கு பேசவேணாம்.. உள்ளுக்குள்ள உக்காந்து போயிட்டு.. இருப்பாங்க. அவுங்களுக்கும் கேட்கும்"னாரு. அப்போதான் அவனுக்கு வெளங்குச்சு, அவன் திட்டிகிட்டு இருக்கும் போது, அவரு உள்ளாரு ஒரு தடுப்புக்குள்ள உக்காந்தகிட்டு, போயிட்டு இருந்திருக்காரு. சாக்கிரதை மக்களே அப்புரைசல் நேரத்துல ஆப்பு வெச்சிரப் போறாங்க.

Tuesday, December 23, 2008

இஞ்சினியர் மாமா

ஏழாவது படிக்கும் போது, எதிர்காலத்துல பொறியியல் படிக்கிறதுதான் என்னோட டார்கெட். அந்தச் சமயத்துல எங்க ஊர்ல பொறியியல் படிச்சவங்க 3 இல்லைன்னா 4 பேர்தான் இருப்பாங்க. மீதி எல்லாம் Diploma இல்லாட்டி Bsc/Msc தாங்க. பொறியியல் படிச்சவங்கள்ல மூத்தவரு எங்க இஞ்சினியர் மாமா. அரசு வேலை, கார், புல்லட்ன்னு இருக்கிறவரைப் பார்த்தா எல்லாருக்கும் அப்படி இருக்கனும்னுதான் தோணும். அப்படியே எனக்கு தோணிப்போச்சு.

அவுங்க வீட்டுல நாங்க ரெண்டு வருசம் வாடகைக்கு குடியிருந்தோம். அதாவது 9,10 படிக்கிற நேரத்துல. அந்த காலகட்டம் எல்லாருக்குமே வாழ்க்கையின் படிக்கட்டு. அந்தச் சமயத்துல அவுங்க வீட்டில இருந்ததுதான் என்னோட மொத படிக்கட்டா ஆனது. மாமாவும் அத்தையும் படின்னு சொல்றது ஒன்னும் புதிசா இல்லை. ஏன்னா எல்லாரும் சொல்றதுதானே. ஆனா, அந்த ரெண்டு வருசத்துல அவுங்க சொல்லிக்குடுத்தது வாழ்க்கையின் பாடத்தைப் பத்தி. மரியாதை, குடும்ப சூழல்க்கு தகுந்தபடி வாழ்றது, வாழ்க்கைய எப்படி அமைச்சிக்கிறது இதெல்லாம்தான். எங்க வீட்டுல இதை எல்லாம் சொல்லி இருந்தா கண்டுக்காம விட்டிருப்பேன். ஆனா அவுங்க ரெண்டு பேரும் சொன்ன விதம், பசுமரத்தாணியாட்டம் நின்னுருச்சு.

வாழ்கையின் சக்கரத்துல எல்லாரும் சிதறித்தான் போனோம். மாமா வீட்டுக்கும் எங்களுக்குமான தொடர்புக்கான தொலைவு அதிகமாச்சு. ஆனாலும் மாமா பையன் கூட கடைசி வரைக்கும் அதே பாசம் இருந்துச்சு, மூத்தவர்னாலும் ஒரே செட்டாகிட்டோம். மாமாவுக்கு செல்வாக்கு ரொம்ப அதிகம், பணமும் கைநிறைய, அதனால மாமா பையன் தொழில்ல இறங்கினது ஒன்னும் பெருசாத் தெரியல.

போன மாசம் ஒரு நாள் அம்மாகிட்ட ஒரு போன், "இஞ்சினியர் மாமா இறந்துட்டாருடா, மாரடைப்பாம்". அதுக்குமேல எனக்கு பேச ஒன்னுமேஇல்லை. சிலரோட இழப்புக்கு யார் தோள் மேலயாவது சாய்ஞ்சு அழுனும் தோணும், சிலரோடதுக்கு கதறி அழனும்னு தோணும். ஆனா, மாமாவோட இழப்புக்கு எனக்கும் எதுவுமே பேசத்தோணலை. ஒரு நாள் முழுக்க பிரமை பிடிச்ச மாதிரியே அலுவலகத்துல இருந்தேன். எந்த வேலையும் பார்க்கலை. ஏன், அத்தை வீட்டுக்கு பேசனும்னு கூடத் தோணலை. ஒரு வாரம் இப்படியே விரக்தியாவே கடந்தது.

ஐயோ, அத்தையின் அந்த கம்பீரம் தொலைச்ச முகத்தையும், தகப்பனை இழந்த மாமா பையனின் சோக முகத்தையும் எப்படி பார்ப்பேன்? அவுங்க வீட்டுக்கு போனா "மாப்ளே"ன்னு சொல்ற சிம்மாசனக் குரல், இதெல்லாம் இனிமே கிடைக்குமா?.. என்ன செய்ய முடியும்? மாமவோட கால புடிச்சி அழ வேண்டிய நேரத்துல எங்கோ ஒரு தேசத்துல இருந்துகிட்டு இப்படி வேதனைப் படுறது எவ்வளவு பெரிய சோகம், சாபம்? இந்த மாதிரி சமயங்கள்லதான் அயல்நாட்டு வாழ்க்கை மேல ஒரு வெறுப்பு வருது.

மாமாவின் ஞாபகங்கள் நிறைய நினைச்சுப் பார்க்கிறேன், அவர் சொன்ன விசயங்கள், வாழ்க்கையில அந்த காலத்துல படிச்சு முன்னேறுன வைராக்கியம், சாதாரண நிலைமையில இருந்து இன்னிக்கு ஊருல ஒரு பெரிய நிலைமைக்கு வர காரணமா இருந்த அவரோட உழைப்பு, எதையுமே சாதாரணமா நினைக்கிற குணம் இதெல்லாம் யாருக்கு வரும். எங்களை எல்லாம் விட்டு போக வேண்டிய வயசா இது? இந்தப் பதிவு போடும் போது மட்டுமே ரெண்டு முறை அழுதிருக்கேன். சில பிரிவுகளை மனசு ஏத்துக்காது, மறக்காது. அது மாதிரிதான் மாமாவின் பிரிவும். உங்க ஆத்மா சாந்தியடைட்டும் மாமா!

Tuesday, October 28, 2008

நிறம் மாறும் தீபாவ'லி'

நமக்கு தீபாவளி 27ந்தேதின்னா சிலருக்கு 28ம் தேதியாம், சிலருக்கு 29ம்தேதி. குஜராத்திகளோட வருசப் பிறப்பு 29 தேதியாம் அத்தோட தீவாவளியையும் சேர்த்து கொண்டாடுக்குவாங்களாம். நரகாசுரனை கூட மனுசன் நேரம், காலம் பார்த்துதான் சாவார் போல இருக்குங்க.


தீவாவளி கொண்டாட்டம் எல்லாம் நம்ம ஊர் மாதிரி இல்லேன்னு நினைக்கும் போது.. தூ என்ன Onsite வாழ்க்கை இதுன்னு தோணுது. எவ்ளோ நாள்தான் முகமூடிய மாட்டுகிட்டு அலையப்போறேம்னு இருக்கு

Friday, October 17, 2008

* Junior விவசாயி

அலறியது என்னுடைய தொலைபேசி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"

மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு

துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"

"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.

செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.

மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு

சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்

அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.

நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு

செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"

சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!

மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று பல மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"

Monday, October 13, 2008

* வெடித்துச் சிதறிய ரோஜாக்கள்

"தூக்கம் வர மாட்டேங்குதும்மா. ஒரு நல்ல கதை சொல்லேன்"னு கேட்ட சூர்யாவை மடியில் உக்கார வெச்சு

"என்ன மாதிரி கதை வேணும் சொல்லு? பஞ்ச பாண்டவர்கள் கதை சொல்லவா?"

”அது போன முறை ஹீரோ நட்சத்திரமான போதே சொல்லியாச்சு. வேறக் கதைச் சொல்லுமா”

“அப்படியா சரி, இதுவும் கோயமுத்தூர்ல நடந்த கதைதான், இது 5 பேர் இல்லே 4 பேர்தான். சொல்லவா?”

“ம்ம் சரி”

1997- டிசம்பர் மாசம் பஞ்ச பாண்டவர்கள்ல நம்ம ஹீரோவைத்தவிர எல்லாரும் அவுங்க அவுங்க ஊருக்கே பொழைப்ப பார்த்துட்டு போயிட நம்ம
ஹீரோ மட்டும் தனியா என்ன பண்றதுன்னு தெரியாம மூட்ட முடிச்ச கட்டிகிட்டு ஊருக்குப் போயிட்டாரு. தெனம் இருந்த கம்யூட்டர் க்ளாஸை சனி,
ஞாயிறுன்னு மாத்திகிட்டாரு.

ஏற்கனவே இவரு கூட படிச்ச சந்தோஷ் சனி/ஞாயிறு batchல இருக்க இன்னும் வசதியாய்ப்போயிருச்சு. அந்த batchல சந்தோஷ், செந்தில், சங்கர் அப்புறம் நம்ம ஹீரோ ஒரு செம செட்டா மாறிட்டாங்க. அதுல சங்கர் பெரிய இடத்துப் பையன் சென்னையில இருந்த வந்தவர், சத்தியில அவுங்க சித்தப்பா வீட்டுல இருந்து வந்து போறாரு, செந்திலும் சக்திதாங்கிறதால ரெண்டு பேரும் ஒன்னா வந்து போவாங்க. சந்தோஷ் WPTக்கு பக்கத்துலயே வீடு. நம்ம ஹீரோ மட்டும் ரெண்டு நாளைக்கு பஸ்ஸுல வந்துட்டுப் போவாரு. அதாவது போகவர 230 கிமீ. 6 மணிநேரம் ஆக போகவர. இந்த செட்லயே நம்ம ஹீரோதான் சுமாரான படிப்பு. சங்கர், செந்தில், சந்தோஷ் எல்லாம் CNEல 7 Paper பரீட்சை எல்லாம் எழுதி முடிச்சுட்டாங்க. நம்ம ஹீரோ ஒரு Paper மட்டும் எழுதிட்டு போதும்னு நிறுத்திட்டாரு. அவுங்களோட சேர்ந்தவுடனே படிக்கனும் ஆசை வந்திருச்சு. (காலம் போன கடைசியிலே).

இவுங்க எல்லாருமே படிச்ச இடம் RRT(ராஜ ராஜேஸ்வரி டவர்ஸ்) 4 வது மாடில இருக்கிற HardCore அப்படிங்கிற Computer Center. இது காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கு. இவுங்களுக்குள்ள பொதுவா இருக்கிறது
ஒன்னே ஒன்னுதான். அதுதான் சைட் அடிக்கிறது. அதுவும் மானாவாரியா சைட் அடிப்பாங்க. அதுலயும் RRT வாசல்ல நின்னுகிட்டாப் போதும், வர போற ஒருத்தரையும் விடறது இல்லே. செமையா கமெண்டு வேற, ஆனா அது எல்லாம் இவுங்களுக்குள்ளேயே இருக்கும். எந்தப் பொண்ணுக்கும் கேக்காது. இதுல நம்ம ஹீரோவுக்கு சைட் அடிக்கவும் தெரியாது. அப்படியொரு வஸ்து.

சங்கரும், நம்ம ஹீரோவும் செம தம் பார்ட்டிங்க. யார் மொதல்ல வந்தாலும் சரி, மத்தவங்களுக்காக காத்திருந்து ஒன்னா நாலு பேரும் சேர்ந்துதான் 4வது மாடியில கிளாஸுக்கு போவாங்க. அப்படி ஒரு செட்.

இப்போ விஷயத்துக்கு வரலாம். இவுங்கள்ல ஒருத்தருக்கு, அங்கேயே படிக்கிற ஒரு பொண்ணு மேல லவ்வு வந்துருச்சு. அவுருக்கு 3 மாசத்துக்கு ஒருமுறை தெய்வீகக்காதல் வந்துரும். வாரக்கடைசியான போதும் காதலர் அந்தக் காதலிய பார்க்க ஏதுவா
வந்து ஸ்டைலா நிப்பாரு. காதலியும் வருவாங்க, பார்ப்பாங்க, போவாங்க. இப்படியே போயிருச்சு. காதலருக்காக மத்த மூணு பேரும் மண்டை காய ஆரம்பிச்சாங்க. ”எவ்ளோ நாளைக்குத்தான் சைட்டே அடிப்பே மாப்ளே, அந்தப் பொண்ணும் உன்ன பாக்குதுல. அப்புறம் என்னடா? லவ்வச் சொல்லிற வேண்டியதுதானே”ன்னு மத்த மூணு பேரும் ஏத்திவிட்டதுல காதலரும் Feb-14 அன்னிக்கு காதலைச் சொல்றதுன்னு ஏக மனதா முடிவு பண்ணிட்டாரு.

1998 ,Feb-14, காதலர் சூப்பரா dress பண்ணிட்டு வந்தாரு. பின்னே இருக்காதா? காதலைச் சொல்றது காதலர் தினத்திலே ஆச்சே. மத்த மூணு பேரும் சிரிச்சிகிட்டாங்க ”அப்பாடா தொல்லை ஒழிஞ்சது”. லவ்வு
ஒக்கேன்னாலும், இல்லேன்னாலும் மணி நேரத்துக்கு ஒக்காந்து மண்டை காயத்தேவையில்லையே.

அன்னிக்குன்னு பார்த்து Unix ஆரம்பிச்சாரு வாத்தியார். தெளிவா சொல்லிபுட்டாரு “விண்டோஸ் அழிஞ்சாலும், வயக்காடு அழிஞ்சாலும் Unix சோறு போடும். அதனால ஒழுங்கா கவனிங்க” அப்ப்டின்னு சொல்ல, காதலை காலையிலேயே fresha சொல்றதா இருந்தது, தம் டைம்முக்கு மாறுச்சு.

தம் நேரம்(அதாங்க break) 11:30. மத்த மூணு பேரும் வெளியே வந்து டீ குடிக்க போலாமான்னு கேட்க காதலர் மனசுக்குள்ள Friendஆ figureஆ பட்டிமன்றம். வழக்கம் போல figureஏ ஜெயிக்க மத்த மூணு பேரும் வழக்கம் போல படிக்கட்டுல போய் கன்னத்துல கை வெச்சிகிட்டு உக்காந்துகிட்டாங்க. ஆனா காதலியோ, பொட்டியில எதையோ தொலைச்சுட்ட மாதிரி தட்டிகிட்டே இருந்தாங்க. உச்சா கூட போவாம 4 பேரும் காத்திருக்க வாத்தியாரு நேரமாச்சுன்னு கூப்பிட்டாரு. காதலச்சொல்றது இப்போ மதிய சாப்பாட்டு நேரத்துக்கு shiftஆகிருச்சு.

காலையில தியரியா ஓட நாலு பேருக்கும் ஒன்னுமே மண்டையில ஏறல. சாப்பாட்டு நேரம் எப்போ வரும்னு காத்திருக்கும்போதே காதலி சாப்பாட்டுக்கு போறதை கண்ணாடி வழியா பார்த்துட்டாரு காதலர். உடனே “நிப்பாட்டுங்க சார், ஒரே தியரியா இருக்கு. சாப்ட்டு வந்து கவனிக்கிறோம்’னு சொல்லிட்டு, வாத்தி பதில் சொல்றதுக்கு முன்னாடியே வகுப்ப விட்டு வெளியே போய்ட்டாரு. மீதி மூணு பேரும் பின்னாடியே ஓட, காதலர் காதலிய தொரத்த இப்படியே அன்னபூர்ணா வரைக்கும் march fast. மூணு பேரும் செம கட்டு கட்டுறாங்க காதலருக்கோ சாப்பாடு எங்கே எறங்குது. கண்ணால பார்குறாரு, கண்ணால பேசுறாரு, அந்தப் பக்கமிருந்து ஒரு ரியாக்சனும் வரலே. காதலி கூட நெறைய அல்லக்கைங்க இருக்க காதலருக்கு கூச்சமா போயிருச்சு. 100அடி ரோட்டு முக்குக்கு வந்தா ஒரே ரோஜா கூட்டம். இருக்காதா feb 14, அவனவன் தம்மு காசெல்லாம் போட்டு செவப்பு ரோஜாவா வாங்கிட்டு போவ, காதலருக்கு மனசுல லைட்டா சஞ்சலம். “நாமும் ஸ்டைலா காதலிக்கு முன்னாடி முட்டிப் போட்டு ரோஜா நீட்டி I Love You சொன்னா எப்படி இருக்கும்”னு காதலா காதலாவுல கமலுக்கு கொம்பு மொளைக்குறாப்ல மொளைக்க 2 ரோஜாவுக்கு தெண்டமா காசு அழுதாங்க.

இப்போ காதலைச்சொல்றது 4 மணி தம் நேரத்துக்கு மாறுச்சு. 4-4:30 கேப்ல சொல்லிடறது, இல்லைன்னா லவ்வே சொல்லப் போறது இல்லைன்னு காதலர் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாரு. 2 மணிக்கு மறுபடியும் தியரி. இப்போ காதலருக்கு கண்ணு சொக்குது. ஆனாலும் காதல் கனவுதான். 3:30 காதலி அவுங்க வகுப்ப கடந்து போவும் போது, காதலர டேப்பரா பார்த்துட்டுப் போவ காதலர் அப்படியே பறக்க ஆரம்பிச்சிட்டாரு. 3:45 சனி ஆரம்பிச்ச நேரம்னே சொல்லலாம்.

வாத்தி “தியரி போதும், வாங்க practicalஆ பார்த்துரலாம்”னு சொல்ல. காதலருக்கு செம கடுப்பு. 3:47 நாலு பேரும் labக்குள்ளே போனாங்க. வாத்தி serverஅ ON பண்ணிட்டு வந்து Computerஅ ON பண்ண டுப்புன்னு பெரிய சத்தம். எல்லா கம்ப்யூட்டரும் reset ஆகி மறுபடியும் BIOS ஓட ஆரம்பிச்சது. வாத்தி ”பக்கத்துல எங்கேயோ transformer வெடிச்சிருக்கு. அதான்” சொல்லி முடிக்கலை எங்க கட்டடமே இடிஞ்சி போற மாதிரி சத்தம். நாங்க இருந்த இடம் ஒரு குலுங்கு குலுங்கி நின்னுச்சு. பவிசா லேப், Councellor அறையில எல்லாம் போட்டு வெச்சிருந்த கண்ணாடி எல்லாம் கீழே உழுந்து செதறிருச்சு. தரை முழுசும் கண்ணாடிச் சில்லுங்க. இதுல Labக்கு செருப்பு போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கிறதால நாலு பேரும் வெறுங்கால இருக்காங்க. எல்லாரும் கண்ணாடிச் சில்லுன்னு கூட பார்க்காம அடிச்சு புடிச்சு கீழே ஓட ஆரம்பிச்சாங்க. புஸ்தகப் பை, சாப்பாட்டு பை, செருப்பு, ஷூ எதுவும் யாருக்கும் தெரியல, உசுர கையில புடிச்சுகிட்டு ஓடுறாங்க. எங்கப் பார்த்தாலும் பதட்டமான மக்கள். பீதி, பயம், உசுரு மட்டுமே அப்போ பிரதானம். டுப்புன்னு வேற எங்கேயோ சத்தம். அவ்ளோதான், யாரும் யாரையும் பார்க்கல. friendஆவது figureஆவது புடிச்ச ஓட்டத்தை கீழே வந்துதான் நிப்பாடினாங்க.

கட்டடம் முழுசும் பொகையா வருது. டயரு எரியிற மாதிரி நாத்தம். அய்யோ அம்மான்னு எல்லா இடத்துலேயும் கூச்சல், உசுருக்கு பயந்துட்டு வெறுங்காலுல ஓடும் போது கண்ணாடிப்பட்டு RRT முழுக்க போட்டு வெச்சிருந்த வெள்ளை டைல்ஸ்ல எல்லாம் ரத்தம். கீழே இருந்த மூணு பேரும் ஹீரோவத் தேட நம்ம ஹீரோ பொறுமையா அந்த இருட்டுலையும் செருப்பக் கண்டுபுடிச்சு எடுத்துப் போட்டுகிட்டு பொஸ்தகப்பைய எடுத்துகிட்டு பொறுமையா நடந்து வராரு. நாலு பேரும் மனசுலேயேயும் உசுரு பொழைச்ச சந்தோசம், அதுல காதலையும், காதலியியையும், வாங்கி வெச்ச ரோஜாவையும் மறந்துட்டாங்க. அப்பதான் ஹீரோ சொன்னார் “மாப்பிள்ளைங்களா, எல்லாரும் ஊர் போய்ச்சேருவோம், அப்புறம் மீதிய பேசிக்கலாம்”ன்னு சொல்லிட்டு கெளம்பி போனாங்க.

அன்னிக்குதான் அத்வானி மீட்டிங்கின்னும், 12 குண்டு வெடிச்சதுன்னும் 33 செத்துப்போய்ட்டாங்கன்னும், 4 பேருக்குமே வீட்டுக்கு போன பிற்பாடுதான் தெரிஞ்சது.

”அப்புறம் என்ன ஆச்சுமா? ஹீரோ அப்புறமாவது படிச்சாரா? வேலை கெடச்சுதா?”

“அப்புறமாத்தான் படிச்சாரு, 8 வருசம் கழிச்சு டிகிரி முடிச்சாரு. MCSE முடிச்சாரு. நல்லா வேலை கிடைச்சு, இப்போ நம்ம உசுர வாங்குறாரு”

“யாருமா அது?”சூர்யா.

“அதோ என்னத்தை திட்டினாலும் வசூல்ராஜால பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிப்பாரே அவர்தான். அங்க உக்காந்துகிட்டு நட்சத்திர பதிவுக்கு பின்னூட்டம் வருதான்னு பார்க்குது பாரு அந்த ஜென்மம்தான்”

“உசுர கூட மதிக்காம செருப்புதான் முக்கியம்னு நினைச்ச இளா அப்பாதானா அது?”

Update: நான் ஓரளவுக்கு நல்ல நெலைமையில இருக்குறதுக்கு இந்த மூணு பேரும் ஒரு காரணம். அவுங்களுக்காக இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்

Tuesday, September 30, 2008

வசீகராவும், கேம்ரியும்

....இருக்கவே இருக்கு பத்து ஏக்கர் நிலம்,டிராக்டர் உழுது பொழைச்சுக்குவேன்.

உங்கப்பா கஷ்டப்பட்டு படிக்க வெச்சது ஊர்ல விவசாயம் பார்க்கத்தானா?

So, என்னை கஷ்டப்பட்டு படிக்க வெச்சதுக்காக அமெரிக்கா போய் பணம் அனுப்பிச்சா, கணக்கு சரியாய்போயிருமா? இது என்ன பிஸினெஸ்ஸா? சொல்லுங்க. சரி அங்க போய் பணம் சம்பாரிச்சு ஒரு கார் வாங்கறேன்னு வைங்க. அந்த சந்தோசத்தை எங்கப்பாகிட்ட ஷேர் பண்ணிக்க முடியும்? என்ன கார் பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுத்து அனுப்பத்தான் முடியும். ஆனா இதுவே எங்க ஊர்ல வேலை பார்த்தேன்னு வைங்களேன், அம்சமா ஒரு பஜாஜ் ஸ்கூட்டரை வாங்கி, மஜாவா மணிய வெச்சு சுத்த முடியும். அதுல ஒரு சந்தோசம் இருக்கு.....

மேல இருக்கிற வசனம் வசீகரா படத்துல வர்றதுங்க. சில நேரங்கள்ல இந்த மாதிரி வசனங்கள், வாழ்க்கை பூரா மனசுல நின்னுக்கும். இனிமேதான் அப்பாவுக்கு படம் எடுத்து அனுப்பனும். என்னத்தைச் சொல்ல..

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)