தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி
தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள். தமிழோவியம் தீபாவளி மலரில் வெளியானது. இங்கே ஆவணப்படுத்தலுக்காக.
1. 'தமிழ்மணம்' செயலாக்கும் திட்டம் எவ்வாறு உதித்தது? எந்த இணையத்தளத்தையாவது முன்மாதிரியாக வைத்துக் கொண்டீர்களா? செயலாக்க எவ்வளவு நேரம் பிடித்தது? தங்கள் அனுபவங்களைப் பகிரமுடியுமா?
உண்மையில் இப்போது நீங்கள் பார்க்கும் வடிவம் என் மனதில் உருவாகி ஆறுமாதத்துக்கு மேல் ஆகிறது. ஒரு சில நண்பர்களிடம் என் கற்பனையை கதைச்சுருக்கமாய் எழுதியும் காட்டியிருந்தேன். ஆனால் அந்தக் கதையை நானே படமாக எடுப்பேன் என்று அப்போது தெரியாது. அப்படி மனதில் தோன்றியதில் ஒரு சிறு பகுதியை மட்டும் செய்யலாம் என்று ஜூலை மாதத்தில், ஒரு ஓரமாய் ஆரம்பித்தேன். அதுவும், தமிழ்வலைப்பதிவுகளின் பட்டியல் ஒன்று இருக்கிறதல்லவா, அதை எளிதாய் நிர்வகிக்கவும், அதிலிருந்து அவரவர் தங்கள் விருப்பமான திரட்டியில் (ப்ளாக்லைன்ஸ், ஷார்ப்ரீடர் போன்றவை) சேர்த்துக்கொள்ள ஒரு OPML தொகுப்பு வருமாறும் செய்ய மட்டுமே நான் ஆசைப்பட்டேன். இதுவே ஒரு கல்லூரிமாணவர் 'ப்ராஜக்ட் ஒர்க்' என்று இறுதியாண்டில் செய்வாரே, அதே கோணத்தில்தான் செய்ய ஆரம்பித்தேன்.நியூக்ளியஸ் வலைப்பதிவு மென்கலனை தமிழாக்கம் செய்ய முயன்றதில், தரவுத்தளத்துடன் இணைந்த இயங்கு-வலைப்பக்கங்கள் அவற்றின் ஆற்றல் ஆகியவற்றை கொஞ்சம் உணர்ந்து இந்த வகை மென்கலனிலும் என் அறிவை வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் கைக்கொடுக்கும் என்றும் எண்ணினேன்.பெரிதாக ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தை முன்மாதிரியாக சொல்லமுடியாது. இங்கே, அமெரிக்காவில் இருக்கும் இணைய வசதி, கிடைக்கும் நேரம் ஆகியவற்றால் இணையத்தில் மணிக்கணக்காக உலாவுவது என் முக்கியப் பொழுதுபோக்கு. அதிலிருந்து இணையத்தளங்களின் சாத்தியங்கள், வடிவங்கள் பற்றி நிறைய அவதானித்திருக்கிறேன். அவை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் இந்தத் தளத்தில் இருக்கும். கூகிளின் மானுடம், அமேசானின் வீச்சும் அடர்வும், இன்னும் பல தளங்களின் சில சிறப்பியல்புகள் மனத்தைக் கவர்ந்தவை. அவற்றைப் பார்த்து கட்டிய பொம்மைவீடுதான் இந்த முயற்சி.முதன்முதலில் நான் தளத்தை வெளியிட்டபோது எனக்கு 6 வாரங்கள் பிடித்தன. அதில் சுமார் 100 மணிநேர உழைப்பு (கற்றுக்குட்டி கற்றுக்கொள்ள ஆகும் காலம், தொழில்முறையில் எழுதுபவருக்கு பாதிநேரத்தில் முடிந்திருக்குமோ என்னவோ) இருக்கும். அப்போது நான் வலைப்பதிவில் எழுதுவதையும் நிறுத்திவைத்துவிட்டேன். இன்னும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே புதிய வசதிகளை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கிறேன். 2. தினம் ஒரு புது வலைப்பதிவு வரும் இந்த காலகட்டத்தில், தமிழ்மணம் பல்வேறு பதிவுகளையும் உடனடியாக வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. ஆனால், நாளடைவில் பல்லாயிரக்கணக்காய், தமிழ்ப்பதிவுகள் பல்கிப் பெருகிய காலத்தில் (அடுத்த வருடம்? , தமிழ்மணம் நீர்த்துப் போகும் அபாயம் இருக்கிறதா? அப்படி ஒரு நாள் வரும் பட்சத்தில், தமிழ்மணத்தில் காணக் கிடைக்கும், புதிய பதிவுப் பட்டியல்களும், யாஹ¥ குழுமங்களில் இருக்கும் மடல் பட்டியல்களும், எவ்வாறு மாறுபடும்?'நீர்த்துப்போக' என்பதன் முழு அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. ஆனாலும் தமிழ்மணம் போன்று புதிய தளங்கள் அதைவிட மேம்பட்ட ஆற்றல்களுடன் உருவாக வாய்ப்பிருக்கிறது என்பது என் நம்பிக்கை. எண்ணிக்கை அதிகரிக்கும்போது இன்று இருப்பதைப் போலல்லாமல் கருத்தொற்றுமை, கருப்பொருள், அரசியல், போன்ற காரணங்களால் பல குழுக்களாகவும் வலைப்பதிவுகள் குழுமவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது தமிழ்மணம் மட்டுமில்லை, எந்த ஒரு ஒற்றைத்தளமும் வலைப்பதிவுகள் முழுமைக்கும் ஒரே வாசலாக இருக்கமுடியாது, இருந்தாலும் அது பரவலான சுதந்திரமான வளர்ச்சிக்கு வழிவகுக்காது போகவும் வாய்ப்பிருக்கிறது.யாஹ¥ குழுமங்களில் இருக்கும் மடல்பட்டியல்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் இருக்கும் வேறுபாடுகள் கண்கூடானவை. சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. இரண்டும் இருவேறு மட்டத்தில் இயங்குகின்றன. வலைப்பதிவுகள் வராதபோது பலவும் குழுமங்களில் எழுதப்பட்டன. எதுவெல்லாம் குழுமங்களில் எழுதப்படுவதைவிட வலைப்பதிவுகளில் எழுதப்பட்டால் சிறப்பாக இருக்குமோ அவையெல்லாம் ஏற்கனவே வலைப்பதிவுகளாக எழுதப்பட ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில் இன்னும் காலம் செல்லச் செல்ல இன்னும் தெளிவு பிறக்கும். அப்போது இந்தக் கேள்வியே தேவையில்லாமல் போய்விடலாம் என்பது என் அனுமானம்.ஆனால் அதற்காக குழுமங்கள் அழிந்துவிடும் என்று தோன்றவில்லை. சில தொடர் இழைகள் குழுமங்களில் நீளும் அளவுக்கு வலைப்பதிவுகளில் இருக்காமல் போகலாம். குழுமங்கள் ஓரளவுக்கு அறிமுகமான வட்டத்துக்குள் இயங்குவதால் அவற்றில் ஒரு பிணைப்பு, பந்தம் இருக்கும். அதற்காகவும் குழுமங்கள் பேணப்படும். அவற்றில் மடல்களின் எண்ணிக்கை குறையலாம். ஆனால் அவை இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றில் சில இன்னும் யுனிகோடைத்தாங்கி html பக்கங்களைக் கையாளும் மன்றவகைகளாக (Forums) பரிணமிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. 3. தமிழ்மணம் முழுக்க முழுக்க தங்களுடைய ஆர்வத்தினாலும், தமிழ்ப்பதிவர்களை ஊக்குவிப்பதற்காகவும் உருவானது. அந்த ஈடுபாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் திட்டங்கள் என்ன?சொல்லிவிட்டு செய்யாமல் இருப்பதைவிட, சொல்லாமல் விட்டுவிட்டு செய்துவிடுவதே நல்லது இல்லையா? எனவே வசதியும், நேரமும் கைகொடுக்கும் வரை தொடர்ந்து அனைவருக்கும் பயனாகும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டே வரும் என்பதைத்தவிர இப்போது வேறு எதையும் சொல்லமுடியவில்லை. 4. கூகிள், லீனக்ஸ் போன்றவை பெரும்பாலும் இலவசமாக இருந்தாலும், அவற்றைச் சுற்றி பொருளாதாரம் அமைந்திருக்கிறது. தமிழ்மணம் அவ்வாறு பணம் ஈட்டும் திட்டம் உள்ளதா?இப்போதைக்கு பணம் ஈட்டும் திட்டம் எதுவும் இல்லை. இதில் அந்த அளவுக்கு வருமானம் வர வாய்ப்பிருகிறதா என்ன, தனிமடலில் சொல்லுங்கள், உங்களை பாகஸ்தராக்கிவிடலாம் தளத்தை நடத்தத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கே பற்றாக்குறை வரும்போது அதை ஈடுகட்டத் தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். தனி ஒருவரின் பொருளையும் நேரத்தையும் இதில் கணக்கில்லாமல் கொட்டமுடியாது அல்லவா (அவர் புரவலரல்லாமல், வெறும் ஆர்வலராக இருக்கும்பட்சத்தில்) 5. முழுக்க முழுக்க தன்னார்வலர்களின் மூலமே இணையத்தில் தமிழ் வளர்க்க முடியுமா? லாபநோக்கில் நிறுவனங்கள் எந்தப் பகுதிகளில் ஈடுபட ஆரம்பிக்கும்? எவ்வாறு?என் அனுபவத்துக்கு இதெல்லாம் பெரிய பெரிய விஷயங்கள். இடம் மாறிக் கேட்கப்பட்டுவிட்டன. 6. தங்களுக்கு ஆதர்ச நாயகர்கள் இருக்கிறார்களா? தங்களின் தற்போதைய ரோல் மாடல் யார்?அடிப்படையில் நான் ஒரு பொறியாளன். அப்படி சொல்லிக்கொள்வதில் வேறு எப்படி சொல்லிக்கொள்வதையும்விட நிறைவுகாண்பவன். எனவே என் ஆதர்ச நாயகர்கள் பொறியாளர்களே. புகழ்பெற்ற ஹென்றி போர்டில் இருந்து, தாமஸ் ஆல்வ எடிசனிலிருந்து இந்த உலகம் மேம்பட தினமும் உழைக்கும் பெயர் தெரியாத பொறியாளர்கள்வரை எல்லாருமே என் ஆதர்ச நாயகர்கள்தான். குறிப்பாக சொன்னால் கோவையில் நான் முன்பு பணிபுரிந்த நிறுவனத்தலைவர் திரு. ராமசாமி அவர்களைச் சொல்லலாம். அவரிடம் கூடவே இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தமிழ்மணம் தள வடிவமைப்பு, செயலாக்கம் ஆகியவற்றிலும்கூட வெளிப்பட்டிருக்கின்றன. அவர் மென்கலன் நிறுவனம் நடத்தவில்லை, ஆனால் எந்த பொருள் அல்லது சேவைக்கும் பொதுவான சில குணாதிசயங்கள், எந்த செயல்திட்டத்துக்கும் பொதுவான சில அம்சங்கள் உள்ளன. அவற்றை முடிந்த வரையில் உணர்ந்து செயல்படுத்துவதே பொறியாளனின் முக்கிய பணி. 7. இணையத்தில் தமிழ் எப்படி இருக்கிறது? படிப்பதற்கு திருப்தியாக இருக்கிறதா? எந்தத் தளங்களை விரும்புகிறீர்கள்? எங்கு பின்தங்கி இருக்கிறது?என் தமிழ் இணைய அனுபவம் ஒருவருடத்துக்கும் சற்று கூடுதல், அவ்வளவே. எனவே இந்த மாதிரிக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி என் அறியாமையைப் பறை சாற்றிக்கொள்ள விரும்பவில்லை. 8. ஏன் ஒருங்குறிமுறை (யூனிகோட்) பெரிய விஷயம்? எவ்வாறு அது தமிழை முன்னெடுத்துச் செல்கிறது? டாப்/டாம் மற்றும் டிஸ்கியில் ஒன்றை தேர்ந்தெடுத்து பரவலாக்காமல், யூனிகோட் நுழைந்தது எப்படி?இதற்கும் பல ஜாம்பவான்கள் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறார்கள். யுனிக்கோடைப் பற்றி பாமரன் பாணியில் நான் எழுதிய கட்டுரைத்தொடரிலும் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் சிலவற்றை மறுஉறுதிப்படுத்த இங்கு சொல்கிறேன். டாப்/டாம் மற்றும் டிஸ்கியில் இல்லாத யுனிகோடின் முக்கியமான பயன்கள்:- கூகிளில் யுனிகோடு தமிழில் தேடினால் தமிழில் எழுதப்பட்டவை மட்டும் விடைகளாகக் கிடைக்கும். மற்றவற்றில் இதுசாத்தியமில்லை.
- விண்டோஸ் எக்ஸ்பி தொடக்கம், யுனிகோடு எழுத்துரு கணினியுடன் ஏற்கனவே நிறுவப்பட்டு வருவதால் உடனடியாக பரவலாக தமிழ்கையாளமுடிகிறது. மற்றவற்றில் ஒருவர் எழுத்துருவை இறக்கி நிறுவியாகவேண்டும். எல்லா இடங்களிலும் இது சாத்தியமில்லை.
- மற்ற மொழிகளோடு ஒத்து உறையும் தன்மை. ஒரு கோப்பு எத்தனை கணினிகள் வழியாகப் பயணித்தாலும் அதன் உள்ளடக்கம் மாறாது. மற்றவை தனக்கு உரிமையில்லாத இடத்தில் உறைவதால் இந்த வசதி அவற்றுக்கு இல்லை.
பலரும் ஆர்வமாக ஆரம்பித்து ஓரிரு பத்திகள் எழுதிய 'உடனே பின்னூட்டத்தில் சொல்லுங்கள் மேலே எழுதுவேன்' என்கிறார்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கும். என்னவோ பின்னூட்டமிடுவதே கடமையென சிலர் இவர்களுக்காக காத்திருப்பதுபோல! எழுத ஆர்வமிருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம். நன்றாக இருந்தால் கட்டாயம் வாசிப்பார்கள், இல்லாவிட்டால் யோசிப்பார்கள். அவசரப்படக்கூடாது.
17. சன் டிவி பேட்டிகளின் மூலம் ஒரு கெட்ட பழக்கவழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டுள்ளது. ஏழு வயதில் தேசிய விருது வாங்கிய குழந்தை நட்சத்திரத்திடம் பேட்டி முடியும் சமயத்தில், 'உங்கள் நேயர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்பார்கள். உங்களிடம் இதைக் கேட்பது பொருத்தம்; என்னுடைய கேள்வி கேட்கும் பற்றாக்குறையையும் தீர்க்கும். தமிழ் வலை வாசகர்களுக்கு என்ன குறிப்பிட நினைக்கிறீர்கள்?ஏழுவயதே ஆனாலும் தேசியவிருது வாங்கியவர்களைத்தானே கேட்கிறார்கள், என்னை ஏன் அவர்களோடு சேர்க்கிறீர்கள்? மன்னிக்கவும், வாசகர்களுக்கு செய்தி சொல்லும் அளவுக்கு என்னிடம் ஒன்றுமில்லை, வேண்டுமானால் தமிழோவியத்தோடு சேர்ந்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். நன்றி.
No comments:
Post a Comment