Showing posts with label experience. Show all posts
Showing posts with label experience. Show all posts

Tuesday, May 12, 2020

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூனியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான். அதற்கு மொழியில்லை. இளையராஜாவின் How to Name it ல் வரும் வயலின் இசை கமழ்ந்து வரும் பொழுது இதயம் கனக்கும், கனமென்றால் அப்படியொரு கனம் இருக்கும். இதயம் அறுந்து விழுந்துவிடுமோ என்கிற ஐயம் மனதில் எழுமளவுக்கு இதயம் கனக்கும். கண்களில் கண்ணீர் வர மறுக்கும். கண்ணீர் வர மனதில்  ஓரளவுக்கு
சோகமிருந்தால் போதும், கண்ணீர் வர மறுக்கும் சோகத்தின் எல்லையை இன்மை காட்டும். இன்மையின் உணர்வுக்கு அளவு கோல் வைத்து அளக்கும் அளவிற்கு யாருக்கு துணிவும் இல்லை, ஏனெனில் அந்த சோகத்தை ஏற்கும் மனநிலையை யாரும் வேண்டுவதில்லை. இன்மை, அதுவாக நம்முள் முள் வைத்து தைத்துவிட்டுப் போகும், இல்லை, தைத்துக்கொண்டே இருக்கும்.


நடு இரவில் எழும் பொழுதே மனதின் வலி உணரலோடு எழுந்தால் பிறகு அந்த வலி நாள் முழுக்க இருக்கும், கண்கள் மூடியிருக்கும், உறங்க கண்கள் இரண்டும் கெஞ்சும். கண்கள் கெஞ்சி பார்க்கும், பிறகு இதயம் கொண்ட வலியை கண்களும் ஏற்கப் பழகிக்கொள்ளும். விழலுக்கு இறைத்த நீரைப்போல  கிஞ்சித்தும் உபயோகமில்லாத கண்களின் கெஞ்சலை சற்றும் பொருட்படுத்தாது இதயம் தன்னிஷ்டப்படி வலியை உணர்ந்துகொண்டே இருக்கும். அந்த வலி இரவு வரை தொடரும், சில நாட்கள் இரவு கடக்கும், மீண்டும் கண்கள் கெஞ்சும், ஆனால் இதயம் மிரட்டி கண்களை அடக்கிவிடும்.

வாழ்க்கையில் நாம் கடக்கும் இரவுகளின் தூரத்தை யாரும் அளந்து விட்டிருப்பதில்லை, தூங்கிக் கடக்கிறோம், அதனால் அதன் நீளம், வண்ணம் அறியாமலே இருப்போம். ஓர் இரவு முழுக்க இதயம் அதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இமை மூடிய கண்கள் தூங்காமல் இருக்கையில், இரவின் நீளம் தெரியும், இரவு ஏன் அமைதியில்லாமல் இருக்கிறது என எண்ணத் தோன்றும், இரவின் வண்ணம் தெரியும், அதன் இரைச்சல் தெரியும், இரவின் ஓலமும் நமக்குக் கேட்கும்.


மீண்டும் மீண்டும் ஒரே நினைவினில் வாழ்ந்து பழக்கப்பட்ட வாழ்வில், திடீரென அதனை மாற்ற எத்தனிக்கும் தருணங்களில், தலை அறுபட்ட ஆட்டின் கதறல் போன்று ஓர் ஓலம் எழும், அந்த ஓலம், அதீத இரைச்சல் கொண்டது, நம்மைச் சுற்றிலும் பேரமைதி இருக்கும், ஆனால் மனத்திற்கு புயலடித்துக்கொண்டிருக்கும்.  அறிவு இதனையெல்லாம் புரிந்துகொண்டிருக்கும், ஆனால் உணர்ந்து கொண்டிருக்காது.




யார் சொன்னது இன்மை அமைதியானது என்று? அதன் பேரிரைச்சலில், உடலின் அனைத்து உறுப்புகளும் அந்த இரைச்சலை உற்று நோக்கும். இன்மைக்கான காரணத்தை மனம் அறியும், மனம் மட்டுமே அறியும், என்னைச் சுற்றி வரும் குதூகலத்தில் மனம் லயிப்பதில்லை, அனைவரும் சிரிக்கும்பொழுது நானும் சிரித்து வைப்பேன், அதனைப் பார்த்த மனம் சிரிக்கும், அது எக்காளச் சிரிப்பென்று உதடும் அறியும். மீண்டும் மீண்டும் வரும் இரவு வரும், மீண்டும் மீண்டும் வலி வரும், மீண்டும் மீண்டும் கண்கள் கெஞ்சும், இறுதியில் இதயத்தின் வலியே வெல்லும்.. அது இன்மை தரும் வலி..

Friday, September 11, 2015

அடக்க முடியாத திமிர்

அந்த பெண்ணிற்கு சுமாராக 42-45 வயதிற்குள் இருக்கலாம்.. அந்தக் கால பெண்கள்,  40 வயதுகளில் மகளிர் சபாக்களுக்குப் போவார்கள். வீட்டுக்காரரும் வேலைக்குப் போய்விட, பசங்களும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போய்விட நேரத்தை தள்ள முடியாமல் கிளப்பு கடைக்குள் தஞ்சம் புகுவார்கள். அதுவரைக்கு வராத பெண்ணியம் வரும், கை வைக்காத ஜாக்கெட்டும், பொருத்தமே இல்லாத உதட்டுச்சாயமும், நுனிநாக்கு ஆங்கிலமும் வரும். இதுவெல்லாம் 80களின் சினிமாவில் நடப்பதாக எண்ணிக்கொள்ளவும்.

சரி, நடந்த விசயத்திற்கு வருகிறேன். புது  வேலையிடம், அறிமுகங்கள் ஆகும் நேரம் இது. என் தலை ஒரு ஆள் சொல்லி சந்திக்கச் சொல்லியிருந்தார். அது நம்மூர் வடக்கத்து அம்மணி என்று பேரைப் பார்த்தவுடனே தெரிந்தது. சில பல ஈமெயில்களுக்குப் பிறகு அம்மணி என்ன சந்திக்க வருவதாகச் சொன்னார். சொன்ன மாதிரியே அம்மணி நேராக என் இடத்திற்கே வந்தார், என் பெயரைச் சொல்லி நாந்தானா என உறுதி செய்துகொண்டார். பிறகு ஆரம்பித்தார், சரியா 10-12 நிமிடங்களுக்கு இடைவிடாத பேச்சு அதுவும் பூராவும் ஹிந்தியில், வேலை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.  இடை இடையே ஆங்காங்கே சிரிப்புகள் வேற. கண்ணை உருட்டி உருட்டி வேறு பேசிக்கொண்டே இருந்தார். எதுக்கும்மா இந்த ஜோதிகாத்தனம் என்று கூட கேட்க நினைத்தேன். நினைத்ததோடு சரி.. பேசி முடித்து ஒரு பெரிய மூச்சை வாங்கிவிட்டு சரியா என்று ஆங்கிலத்தில் கேட்டார். நானோ, சொல்வதற்கு 2 இருக்கிறது என்றேன்.

அவை 1. யார் பேசினாலும் அவரை இடை மறித்துப் பேசும் பழக்கம் எனக்கில்லை, அவர் பேசி முடிக்கும் வரை காத்திருப்பேன்.
2. எனக்கு ஹிந்தி தெரியாது என்று சொன்னேன்.

எங்கேயோ பல்பு உடைந்த சப்தம் கேட்டது, மனதிற்கு ஒரு இனம் புரியாத வன்மம்.

பாவம் நேத்து போன அம்மணிதான், நான் போட்ட ஈ-மெயிலுக்கு கூட இன்னும் பதில் போடவே இல்லை.

Thursday, August 20, 2015

வெள்ளை நிறத்தழகி

பிடித்தமான பெண்கள் : (மனைவி தவிர்த்து)

இதை தமிழில் சொல்வது என்றால் "சைட் அடித்தல்" . பார்த்தவுடன் பிடிக்கும் காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது, 30 களில் காலம் ஓட்டும் எனக்கெல்லாம் ரசிப்புத் தன்மை போய்விட்டதோ என்று எனக்கே சில காலம் தோன்றியது உண்டு. பதின்ம காலங்களில் எல்லாப் பெண்களையும் எப்போது பார்த்தாலும் பிடித்தது. 20 களில் சில வரைமுறைகள் வந்தது, இப்படி இருக்க வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என்று demand வைத்தது மனது. சைட் அடிப்பதற்கா என்று கேட்கலாம். மனது அப்படிதான் செய்யும். அதுவும் 30களில் எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை, உலக அழகி படம் பார்த்தாலே கண்டுக்காமல் போவதுதான் நடக்கிறது. 30களிலே இப்படியென்றால் 40 களும், 50களும் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. பெண்கள் மீதான ரசிப்புத்தன்மை அற்று போய்கொண்டே இருக்கிறது. இது எனக்கே எனக்கான குணம், பலர் இந்த கருத்தில் மாறுபடலாம்.





இவ்வாறாக குணம் கொண்ட நான், நாள் தோறும் 500 முதல் 700 பெண்களை வரை கடந்தாலும் ஒருத்தரையும் நின்று ரசிக்க நேரமிருப்பதில்லை, மனசும் இருப்பதில்லை. ஆனால் இன்று நடந்ததோ வேறான கதை. சுரங்கப்பாதை புகைவண்டியில் ஏறியவுடனே சட்டென பிரகாசமாகியது என் மனது. மீண்டும் பதின்ம காலத்திற்கே சென்றது போல ஒரு கணம் தோன்றியது. பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் என்னை ரசிக்க வைக்கும் அழகு அவளிடம் இருந்தது. அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைக்கையில் சட்டென என்னைப் பார்த்துவிட்டாள் அழகி, வழக்கம் போல் ஒரு சிறு புன்னகையை பரிமாறிக்கொண்டோம். அமெரிக்க பழக்கம் இது. இதுவே நம்மூராக இருந்தால் வேறு கதையாகி இருக்கும். ஆனாலும் ரசிக்க நேரம் தந்தால், அந்தப் பயணம் சற்றேறக்குறைய 7 நிமிடங்கள் மட்டுமே.

அவள் தன்னுடைய ஒப்பனை பெட்டி அதாங்க, Handbag எடுத்தார், நிறைய பூச்சுகள் செய்து கொண்டார். ஓர் அழகே அழகைப் பார்த்து அழக்கேற்றிக்கொண்டதை இன்று கண்டேன். அவளுக்கு நல்ல உடல், சரியாக உடை அணிந்திருந்தார். அந்த உடைக்கு அவளுக்கு அழகாக பொருந்தியிருந்தது. பார்த்து பார்த்து ஒப்பனை செய்து கொண்டாள். தும்பைப் பூ போன்ற வெள்ளை உடை, அவ்வளவு பாந்தமாக இருந்தாள், ஓர் அழுக்கும் இல்லை. நான் இறங்கும் நிலையம் வந்தவுடனே அவளும் எழுந்திருத்தாள், நான் இறங்கும் இடத்தில்தான் அவளும் இறங்குகிறாள் போலும். என் முன்னே படியேறினாள், அவளின் வெள்ளை உடம்பிற்கு வெள்ளை உடை அப்படியே ஒத்திருந்தது. முன்னழகைப் போலவே  பின்னழகும் அழகு, வெள்ளைக்காரிக்கு வெள்ளை உடை இவ்வளவு அழகாக இருக்குமா என மீண்டும் வியந்தேன். பின்னே சும்மாவா? கல்யாணத்திற்கு வெள்ளை உடை அணியும் ரகசியம் இன்று அறிந்தேன். பல படிக்கட்டுகள் ஏறி நிலையம் வெளியே வர வேண்டும். கடைசி படிக்கட்டு ஏறும் நேரத்தில் படிக்கட்டின் ஓரத்தில் அவள் எச்சிலை துப்பி விட்டு சென்றாள். 10 அடி தள்ளி குப்பைத்தொட்டி தெரிந்தது.


இதுவரைக்கும் அழகாக தெரிந்த அவள் அருவருப்பாக மாறிப்போனாள். நிலையம் வெளிவந்து அவளைக் கடந்து வேகமாக நடக்க ஆரம்பித்தேன், அவளின் நினைவுகள் எல்லாம் அந்த எச்சிலில் தெறித்துப் போயிற்று.

Monday, July 13, 2015

NRIக்கும் வீட்டுத் தரகருக்கும் நடந்த லடாய்

நண்பருக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது, அதாவது முதலீட்டுக்காக (Investment Purpose) ஒரு அடுக்ககத்தை (Apartment) சென்னையில் வாங்க வேண்டும் என்று விரும்பினார் . நண்பர் அமெரிக்காவில் வசிப்பவர், Y2K சமயத்தில் அமெரிக்கா வந்தவர் அப்படியே செட்டிலாகிவிட்டார். இங்கே, அவர் வீடு வாங்கி வசதியாகவே வாழ்ந்து வருகிறார். இந்தியா செல்லும்பொழுதெல்லாம் அங்கே ஏறும் விலைவாசியைக்கண்டு அவருக்கும் ஆசை வந்துவிட்டது. ஒரு வீடு வாங்கிப் போடலாம், 10-15 வருடங்களில் எப்படியும் நல்ல விலைக்கு விற்று ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு வீடு வாங்கி, ரிட்டையர்மென்ட் காலத்தில் அங்கே வாழ்ந்து கொள்ளலாம என்று திட்டம் தீட்டியிருக்கிறார்.

"அவர் ரிட்டையர்மென்ட் காலத்தில் சென்னையின் புறநகர் என்பது கன்னியாகுமரியாகக்கூட இருக்கலாம். " 

 இதற்காக என்னிடம் மற்றும் சில நண்பர்களிடமும், உறவினர்களிடமும், எப்படி வாங்கலாம், எப்படி அணுகுவது என்று ஒரு பெரிய பட்டியலே தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.





ஒரு நன்னாளில், அமெரிக்காவில் இருந்தபடியே விரலசைக்க ஆரம்பித்தார். உறவினர்களிடம் விசாரித்தார், அதாவது உறவினர்கள் இருக்கும் அபார்ட்மென்டிலேயே ஒரு வீடு தேடினார். எதற்காக என்றால் அவர்கள் பக்கத்தில் இருந்தால் வீட்டைப் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று. சில பல இணைய விளம்பரங்களைத் தேடினார். கடைசியாக சில நம்பத்தகுந்த தரகர்களை (broker) தேடிப்பிடித்தார். அந்தத் தரகர்களின் பட்டியலில் ஒருவரை டிக் அடித்தார். காரணம் அவர் நண்பர் கொடுத்த நற்சான்றிதழ். ஒரு நன்னாளில் அந்தத் தரகை அழைத்தார், இரண்டாவது ரிங்கிலேயே எடுத்த தரகர் "ஹலோ சார், சொல்லுங்க" என்று ஆரம்பித்தார். நண்பர், தான் எப்படி அவரை அழைத்தார் எனச் சொல்ல "சரி சார், இன்னொருக்கா கூப்பிடுங்க" என்று சொல்லி அந்த அழைப்பைத் துண்டித்தார். பிறகு நண்பர் அழைத்த அழைப்பிற்கெல்லாம் தரகர் எடுக்கவே இல்லை. கடுப்பாகிட்டார் நண்பர் "என்னடா, நான் காசைக் குடுக்கிறேன், வீட்டைக் காட்டுறதுக்கு அவனுக்கு என்ன கஷ்டம்?, NRIன்னா எவனுமே இந்தியாவுல மதிக்க மாட்டேங்குறான் " என்று திட்டித் தீர்த்தார்.


பிறகு தரகருக்கு நண்பர் பலமுறை அழைத்தும் தரகர் எடுக்கவேயில்லை. எப்படியோ ஒரு நாள் தரகர் ஃபோனை எடுக்க "ஏன் சார், அமெரிக்காவுல இருந்து கூப்பிடறேன், செலவு ஆகுறது ஒரு பக்கம் இருக்கட்டும், உங்க பகல் நேரத்துலன்னா நான் ராத்திரிதான் கூப்பிடனும், அப்படி கூப்பிட்டாலும் எடுக்க மாட்டீங்கிறீங்களே? காசு கறக்க இது ஒரு வழியா" என்று கடுப்பாகவே கேட்டுவிட்டார் நண்பர்.


அதற்கு கூலாக தரகர் "சார், நீங்க எல்லாம் அமெரிக்காவுல இருக்கீங்களோ ஒழிய சென்னை நிலவரம் தெரியறதில்ல. இன்டர்நெட்டுல கண்டதையும் படிச்சுட்டுப் பேசுவீங்க.  நீங்க அடையாறிலியோ, அண்ணா நகரிலோ வீடு கேட்பீங்க. வெளிநாட்டுல வேலை பார்க்கிறீங்கன்னுதான் பேரு, ஆனா  உங்ககிட்ட அவ்ளோ காசும் இருக்காது.  நூறு வீடு கேட்பீங்க, ஆயிரத்தெடுக்கு குறை சொல்லுவீங்க, அப்புறம் ஒன்னையும் புடிக்காதும்பீங்க.  அது பத்தாம, வீட்டுப் படம், ஒரு ரூம் விடாம, டேப் மொதக்கொண்டு டாகுமென்ட் வரை எல்லாத்தையும் ஈமெயில் பண்ணச் சொல்லுவீங்க. ரெட்டை வேலை சார் எங்களுக்கு. இந்த லட்சணத்துல வாஸ்து சரியில்லை, காத்து வராதுன்னு அங்கே இருந்தே சயிண்டிஸ்ட்டாம் கண்டுபுடிச்சி சொல்லுவீங்க. வீடு புடிச்சி குடுத்தாலும் ப்ரோக்கர் காசுக்கு உங்ககிட்ட தொங்கனும், உங்ககிட்ட காசு வாங்க நாங்க ஃபோனா போட்டு காசு அழுவனும். அந்த நேரத்துலதான் நீங்க காந்தி மாதிரி நியாயம் நேர்மை எல்லாம் பேசுவீங்க. ஏன் சார் ஃபோன் பண்ணி தாலி அறுக்கிறீங்க?" டொக்க்க்க்க்க்க்

அத்தோடு அந்தத்  தரகரை அழைப்பதை நிறுத்திவிட்டார நண்பர்.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)