(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)அலறியது என்னுடைய தொலைபேசி
அழைத்தது எனது அருமை
துணைவி-என்னவென வினவ
வலி ஆரம்பித்ததாக முனகியது
அவளது குரல்-வாழ்க செல் போன்
என வாழ்த்தி ஆயத்தமானேன்
மாமனார் ஊரிலிருக்கும் மருத்துவமனைக்கு
6 மணி நேர வண்டிப் பயணம்
மனம் போகும் வேகத்தில் செல்லவில்லை
நான் சென்ற வண்டி, கண்களில் நீரோட
மனம் சொல்லியது "இன்னும் அறிவியல் வளரவில்லை"
மனதில் லேசான பயம், இடையிடையே
துணைவியின் நலம் விசாரித்ததில்
நலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.
இருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;
தடுமாற்றத்துடன் மருத்துவமனையின்
வாசற்படி மிதித்தேன்: என்னை
எதிர்பார்த்தபடி பெற்றோர், நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்-யாரும்
தெரியவில்லை கண்ணுக்கு
துணைவி இருந்த அறைக்கு
அழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்
வேண்டினேன் "அவளுக்கு ஆறுதல் சொல்ல
என் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா"
"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்
ஆகிவிடும்" செவிலி கூறியது மட்டும்
செவியில் விழுந்தது - அறையில் அவள்
தணித்து படுத்திருக்க அவள் கண்களில்
வலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க
அறிவு அடித்தது மண்டையில்
"ஆறுதல் மட்டுமே சொல்லு"
வாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல
எல்லாம் கிடைத்தது போல
மனம் தேறினாள்
வலி இருந்தும்.
செவிலியின் பணி தொடர வெளியே
தள்ளப்பட்டேன், மனம் உள்ளேயும்
உடல் வெளியேயும் என 5 நிமிடம்;
மீண்டும் 15 நிமிட ஆறுதல்
5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.
மருத்துவர் வர புரிந்தது எனக்கு;
இன்னும் சில நிமிடமே
துணைவியோ பல்லைக்கடித்து
வலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,
மனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்
வெளியே வந்தேன் - மணி 9:30 இரவு
சுற்று பார்த்தேன், மருத்துவமனை
நிறைந்து எங்கெங்கும் உறவினர்கள்
ஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த
பிரசவ அறை பூட்டப்பட,
வாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,
நிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;
பிரசவ அறையிலிருந்து
சிறு ஒலியாவது கேட்குமா என
ஏங்கியது மனம்
அக்கணமே கேட்டது
துணைவியின் அலறல்
என் ஆணவம், கெளரவம் தொலைத்து
உற்றார் உறவினர் நினைப்பேயில்லாமல்
கண்ணீர் பெருக்கெடுத்தது
ஆறுதல் கூற அருகில் யாருமில்லை
இருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை
பத்து நிமிடம் விட்டு விட்டு
அலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்
கழன்று விழுவது போல
கணத்தது என் இதயம்.
நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி
சுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்
பிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா?
வலி குறைந்த திருப்தியா?
எதுவும் தோணவில்லை
கை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்
முகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு
செவிலியின் கையில் புது மொட்டு
அப்பா ஜாடையா? அம்மா ஜாடைய?
பட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்
கூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்
முகம் காண ஏக்கம்
இடையே என் வாரிசையும்;
பாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி
காட்டினார் "ஆனந்தம், பேரானந்தம்"
சில கணம்
என்னிடம் இல்லை என் மனம்
தனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்
என்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;
பாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்
அதுதானே என்னால் முடியும்
என் வாரிசை பத்து மாதம் சுமந்து
பத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு
ஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்!
மார்கழி திங்கள் கடைசி தினம்
ஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்
ஸ்தானத்திற்கு உயர்ந்தேன்
ஆயிற்று பல மாதம் கடந்தும்
மறக்க முடியவில்லை அக்கணத்தினை -
மறக்கவே முடியாது என்றும்
பொறுப்புகள் பல கூடினாலும் மனதில்
ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே
எங்கோ ஒலித்தது ஒரு பாடல்
"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்"