நமக்கு சந்தனம் வைக்கிற பழக்கம் ரொம்ப நாளா இருக்குங்க. வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே இது இருக்கு. காலேஜ்ல புள்ளைங்க கிண்டல் பண்ணினபோதும் சரி, "நிங்கள் மலையாளியோ"ன்னு ஒரு குட்டி கேட்ட போதும் சரி சந்தனம் வெக்கறத மட்டும் விடவே இல்லை. சில பேர் திருநீறு வைப்பாங்க, சில பேர் குங்குமம் வைப்பாங்க, சில பேர் இதெல்லாம் பட்டிக்காட்டுதனம்னு சொல்லவும் செய்வாங்க. அதெல்லாம் அவுங்க அவுங்க மனச பொறுத்தது. அம்மா தலை சீவி விடுற வரைக்கும், திருநீறுதான் வெச்சு விட்டாங்க, அப்புறமா தலை சீவுற பொறுப்பு நம்ம கைக்கு வர அம்மா சீவிவிட்ட மாதிரி இல்லாம எண்ணை வைக்காம வேற மாதிரி சீவ ஆரம்பிச்சப்போதான் சந்தனம் வெக்கற பழக்கம் வந்துச்சு.

வாரிசு வந்ததுக்கு அப்புறம், வீட்டுல வாரிசுக்கும் சந்தனம் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. பையன பார்க்க வந்த ஒரு பெரியம்மா சந்தனக்கட்டி கரைச்சு வைக்க வேணாம் சந்தனக் கட்டைய உரசி வைங்க அதான் நல்லதுன்னு சொல்லி, ஈரோட்டுல- சங்கீதாவுல் சந்தக்கட்டை கெடைக்குது வாங்கிகோங்கன்னு அம்மணி கிட்ட கொளுத்திப் போட அம்மணி அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரின்னு நானும் போன வாரம் ஒரு நாள் மொட்ட வெயில்ல கிளம்பிட்டோம். கொளுத்துற வெயிலுல மண்டை காய்ஞ்சு 3 ஜூஸ், 2 கறும்பு சாறு, சிந்தாமணியில ஒரு ஆப்பிள் ஜூஸ் குடிச்சதுதான் மிச்சம். சங்கீதா, கண்ணன் ஏன் நாட்டு மருந்து விக்கறவன்கிட்ட கூட விசாரிச்சு பார்த்ததுல ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுது.
அது "ஈரோட்டுல சந்தனக்கட்டை கடையில கிடைக்காது".