Tuesday, December 23, 2014

என் வீட்டிற்குள் துப்பாக்கி எப்படி வந்தது?

ழக்கம் போல அன்றும் 5:45க்கு அலைபேசி அலாரத்துடன்தான் ஆரம்பித்தது. நமக்கு வழக்கமாக ஆரம்பிக்கும் நாட்கள் எல்லாம், எல்லோருக்கும் வழக்கமாக ஆரம்பிப்பதில்லை என்பதுதான் உலக நியதி. இதமான குருவி கீச்சுகளுடன் எழுந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. குய்யோ முய்யோ என்ற அலாரம் போடும் சப்தத்துடந்தான் தினமும் விடுகிறது. வேகமான ஓட்டங்கள், ஆச்சுது, 20 நிமிடங்களில்  கிளம்பியாயிற்று  15 நிமிட   ங்கள் இருக்கிறது, சற்றே செய்திகள் பார்க்கலாம் என்று அலைபேசி பார்த்தால், கொட்டை எழுத்தில் மின்னிற்று “பாகிஸ்தான் பள்ளியில் துப்பாக்கி சூடு, 98 குழந்தைகள் பலி”, சற்றே கலங்கிப் போனேன் நான், அலைபேசியை தவிர்த்துவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்,  அனைத்து செய்தி  சானல்களிலும் இந்தச்சம்பவமே இடம் பிடித்திருந்தது. பலி எண்ணிக்கை மட்டும் உயர்ந்துகொண்டே சென்றது.

10 நிமிடங்கள் கடந்திருந்த போது, அந்தக் குழந்தை இடத்தில் என் மகனும், மகளும் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இறந்து போன அந்த செல்வங்களுக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள் இருப்பார்கள் இல்லையா? அவர்களும் காலையில் டாட்டா காட்டி முத்தம் குடுத்தே அனுப்பி வைத்திருப்பார்கள், மாலையில் குழந்தை வீடு திரும்புவார். அவருக்குப் பிடித்ததைச் செய்து கொடுக்கலாம் என்று எத்தனை தாய்மார்கள் கனவு கண்டிருப்பர்.

அமெரிக்க-கனேட்டிக்கட் நியூட்டனில் பள்ளியில் ஒரு துப்பாக்கி சூடு நடந்த போது இதே போன்ற ஒரு தவிப்பும் சோகமும் என்னைச் சூழ்ந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்தது. படுக்கையறைக்கு வந்திருந்தேன். இந்தக் கவலை ஏதுமில்லாமல் மகன் காலைக் குறுக்கி தூங்கிக்கொண்டிருந்தார். கவலை ஏதுமில்லாத நேரம் ஆழ்ந்துறங்கும் நேரம்தானே. மகளைப் பார்த்தேன், முகத்தில் பேரமைதி.

வீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீடு திரும்புவோம் என்ற உத்தரவு ஏதுமில்லாத அளவுக்கு தீவிரவாதத்தை வளர்த்ததில் என் பங்கு என்ன?  ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது? தினமும் காலையில் கிளம்பினால் மாலை உயிருடன் வீடு வந்து சேர்ந்துவிடுவதே மிகப்பெரிய சாதனையாக மாற்றியது யார்?

தினமும் மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடாத மாதிரி மென்மையாக முத்தமிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புவது வழக்கம். அன்று நானிட்ட முத்தத்தில் சற்றே அழுத்தம் இருந்தது.

தொடர்புடைய சுட்டிகள் :



Wednesday, December 17, 2014

லிங்கா - இது விமர்சனம் அல்ல

லிங்கா பார்த்தாச்சு. பயப்படாதீங்க, இந்தப் பதிவு இந்தப் படத்தைப் பத்தின விமர்சனம் மட்டுமல்ல.

லிங்கா வெற்றியா தோல்வியா என்பதைப்பற்றி நான் எழுத வரவேயில்லை. காரணம் முதல் வாரயிறுதியைத் தாண்டிவிட்டால் எல்லாருக்குமே அது தெரிந்திருக்கும். 


பலவீனம்: தர்மதுரையில், இதே துள்ளல் இருக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அனைத்தையும் தந்துவிட்டு சத்திரத்தில் தங்கியிருப்பார். அதே கதை மீண்டும், அங்கே படிப்பு, வசதி இத்யாதிகள், இங்கே அணை, ராஜா, அரண்மனை, கோயில். Very Predictable Scenes, அதுதான் பிரச்சினையே. அடுத்து வரும் காட்சிகளை அம்சமாக சொல்ல முடிகிறது. கோச்சடையானில் இருந்த திருப்பு முனைகளில் ஒன்றுகூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. பறப்பது எல்லாம் ஓவரோ ஓவரோ, சிரிப்பை அடக்க முடியவில்லை. ரஜினியிஸம் ஓரளவுக்கு சரி, ஆனா இவ்வளவு ரொம்பவே அதிகம் KSR

படத்தோட மிகப்பெரிய பலங்கள் 6

  1. ரஜினி 
  2. ரஜினி
  3. ரஜினி
  4. படமாக்கப்பட்ட விதம்/தயாரிப்பு நிர்வாகம்- சாபு சிரில்
  5. ராண்டி - ஒளிப்பதிவு
  6. ரஜினி

சாபு சிரில் என்கிறவரை கலை என்கிற வட்டத்தை விட்டு தயாரிப்பு நிர்வாகம் என்று மாற்றியதில்தான் இருக்கிறது படத்தின் பிரம்மாண்டத்திற்கான வெற்றி. அதுவும் பல இடங்கள்  GreenMat தொழில்நுட்பம்தான். ஆனால் அது தெரியாமல் செய்த விதத்தில் KSRன் திறமை தெரிகிறது. Double Tick. இந்த வருடத்தின் தேசிய விருது கண்டிப்பாகக் கிடைக்கும். Advance Wishes Sabu Cyril

அடுத்து ஒளிப்பதிவு. அபாரம் அபாரம், அந்த புகையிரத சண்டையாகட்டும், தாத்தா ரஜினியின் பகுதிகளாகட்டும், அனைத்து காட்சிகளிலும் இவரின் உழைப்பு தெரிகிறது.

ரஜினி: ரஜினி ரஜினி ரஜினி.. படத்தின் அத்துணை பலமும் இவர் மீதுதான். இளமை கொண்டாட்டம், துள்ளுகிறார்.

மற்றபடி லிங்கா எனக்குப் பிடித்திருந்தது.

இனி, என் சொந்தப் பிரச்சினை. லிங்கா படம் வெளியாகும் என்று தெரிந்தவுடனேயே எல்லோரையும் போல் நானும் இணையம் சென்றேன், விலை பார்த்தால் $25ஆம், சரி இது சிறப்பு காட்சிகளுக்கு என்றுதானே வாரயிறுதிக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்றால் $20ஆம். சரி, விலை குறையட்டும் என்று விட்டுவிட்டேன். இப்படி விட்ட நண்பர்கள் ஏராளம். ஆங்கில படத்திற்கு $12 என்று இருக்கையில் நீங்க வைக்கிற $25 மதிப்பு என்ன நியாயம்? இதுல  விமர்சனம் செய்யக்கூடாது, MEME செய்யக்கூடாதுன்னு சொல்ற யோக்கியதை உங்களுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா?

இனிமே $20 என்று வைத்தால் ரசிகர்கள் வேண்டுமானால் ஒரு காட்சிக்கு மட்டும் வருவார்கள், என்னைப் போன்ற சினிமா பார்க்கும் பொதுப்பார்வையாளனுக்கு விலைதான் முதலில் தெரியும். குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். (கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்றே வைத்துக்கொள்வோம், $25*2+$20*2 +பாப்கார்ன், குளிர்பானம் என்று வைத்தாலே $100 பக்கம் வருகிறது. இந்த லட்சணத்தில் 20 மைலாவது ஓட்டி வர வேண்டும், போக வர 1 மணி நேரம், படம் பார்க்க 3 மணி நேரம், கிளம்ப 1 மணி நேரம் என்று வைத்தாலும் 5 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். ஒரு குடும்பஸ்தன் இனி சினிமா பார்க்க இத்துணை சிரமங்கள் இருக்கின்றன. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் $20 வைத்து மொக்கைப் படம் தந்தால் கண்டிப்பாக அடுத்து வரும் படங்களுக்கு ஒருவரும் திரையரங்கம் வர மாட்டார்கள்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்/மலேசியா, இந்தியா, அரபு நாடுகள், இங்கிலாந்து என்று அனைவரும் பார்த்த பின்னால்தான் அமெரிக்காவில் வெளியாகிறது. இதில் விமர்சனங்களைப் பார்த்த பின்னரே இங்கேயிருந்து திரையரங்கம் செல்கிறோம். அதுவுமில்லாமல் அனைத்து விதமான போங்காட்டமாக பார்க்கும் வசதிகள் இருந்தும் திரையரங்கம் செல்லும் ரசிகர்களை உங்கள் விலையை வைத்து திசை திருப்பாதீர்கள்.

லிங்கா தனியாகத்தான் சென்று பார்த்தேன், அதுவும் ஒரு வார நாளில் , என்னையும் தவிர்த்து திரையரங்கத்தில் 4 பேர் இருந்தனர்.

Saturday, October 11, 2014

நாலாங்கிழமையும் ஒருக்காமலையும்

இன்று புரட்டாசி நாலாங்கிழமை


ஒருக்காமலை

ருக்கல் மாமலை, இதுதான் இந்த மலையோட உண்மையான பேராம்.

ன்னுடைய குழந்தைப்பருவம் முதல், பள்ளிக்கூடம் முடிக்கிற வரை, இந்த மலைக்கு எனக்கும் ஒரு பெரிய பந்தம் இருந்தது. என் அம்மா பிறந்த இடம் இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. வீட்டிலிருந்து ஒரு ஃபர்லாங் தூரம்தான் மலை. ஆடு மேய்க்க, இலை, தழை பறிக்க, சுனை நீர் எடுக்க, கோவில் என பலதுக்கும் இந்த மலை வாழ்வின் அங்கமாகவே இருந்தது வந்தது. மலையின் உச்சியில் இருப்பது ஒரு பெரிய கல், உண்மையாகச் சொல்லப் போனால், இரண்டு பாறைகள் இருக்கின்றன. ஏன் ஒரு ஒருக்கல்லை மட்டும் சொல்றாங்கன்னு தெரியல. பெரிய கல்லின், அடியில்,20 அடி தூரம் ஒரு சாளரம் போல இருக்கும். அதில் அந்தக் காலத்திலேயே கோவில் மாதிரி அமைச்சிருக்காங்க. இப்ப வேற மாதிரி கட்டிட்டாங்க, வியாபார மயமான பின்னாடி, அதாவது அரசின் கவனத்துக்கு வந்து, சாலை அமைத்து, பேருந்து வசதி செய்து, மின்சாரம், தண்ணீர் வசதி அமைத்தப் பின். என்னுடைய பள்ளிக்காலத்தில் எந்த வசதியுமில்லை, மலையேறித்தான் போயாகனும். கல்லின் இடுக்குகளில், அதாவது பாளி(லி) என்று சொல்லும் இடங்களில்தான் தண்ணீர் எடுக்க வேண்டும். மழை வந்து தேங்கிய நீர்தான் அது. பந்தமும், விளக்குகளும்தான் வெளிச்சத்திற்கு. பாலித்தண்ணீர் அப்படிங்கிறதினாலதான் அங்கே சமைக்கும் பொங்கலுக்கும், பருப்புக்கும், ரசத்திற்கும் அவ்வளவு ருசியிருக்கும். பல நாடுகளிலும் அந்த சுவை கிடக்கவில்லை.

புரட்டாசி விரதம், எல்லாருக்கும் தெரிவது பெருமாளுக்காக விரதம் இருப்பது. எங்க ஊர்ப்பக்கத்தில் இந்த வழக்கம் வேற, முதலாங்கிழமை முதல் நாலாங்கிழமை வரை அசைவம் கிடையாது. முதலாங்கிழமை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை. புரட்டாசி என்பது விவசாயத்திற்கு சிறப்பான மாதம் , இந்த மாதம்தான்  பெரும் மழை பெய்யும், அடை மழை என்பது சாதாரணமாக இருக்கும், பள்ளத்தில் எல்லாம் தண்ணீர் ஓடும், பள்ளம் என்பது வண்டித்தடம், மாட்டு வண்டி போய் வரும் தடம், இந்த பள்ளத்தில்தான் மலையிருந்து வரும் நீர் பெருக்கெடுத்து மழைக்காலங்களில் ஓடும், தண்ணீர் ஓடாத நாட்களில் வண்டி ஓட்ட பயன்படுத்திக்கொள்வார்கள்.

ப்பாவின் தொழிலோ வெளியூர்களில் இருக்கும், தோட்டத்திலிருந்து அதிக தூரத்தில் இருக்காது. இன்று காரில் சென்றால் 10-15 நிமிடங்களில் தோட்டத்தை அடைந்துவிடுவோம். சாலை வசதி இன்று இருக்கிறது. அன்றைய நிலைமையோ வேறு. சங்ககிரி வந்து S4 பிடித்து, கீழ்க்கடையில் இறங்கி, காட்டு வழிப்பயணம், மாரியாயி கோயில் கடந்து, இரண்டு மூன்று உறவினர்கள் வீடுகள் கடந்து, ஒன்றிரண்டு வார்த்தைகளாவது பேசிவிட்டு,
கோட்டாங்கல் கரடு வழியே தோட்டத்தை வந்து சேர வேண்டும். அந்த வழிப்பயணமே ஒரு அலாதி இன்பமாக இருக்கும், அதுவும் நடைப்பயணம் வேறு,  வழியெங்கும் தண்ணீராய் ஓடும். வழக்கமாக வரும் வழியில் தண்ணீராய் இருக்க, தண்ணீரைத் தாண்டி, தாண்டி வளைந்து, நெளிந்து வந்து சேருவோம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்தவுடனே, கிளம்பி சாயங்காலமே வந்து சேர்ந்துவிடுவதாகத்தான் இருக்கும். வந்தடவுடனே, கிணற்றில் குதிப்பதுதான் எனக்கு முதல் வேளையாய் இருக்கும். புரட்டாசி அடை மழை காரணமாக கிணற்றில் நீர் அதிகமாக இருக்கும். மேலேயிருந்து குதிப்பதுதான் என்னுடைய மிகப்பெரிய சவாலே. அதற்காகவே இந்த நாலாங்கிழமைக்காக காத்திருப்பேன்.

னிக்கிழமை காலையில் அம்மாயி, அம்மா, அத்தை எல்லாருமே பொங்கல் வைக்கத் தயாராகிவிடுவார்கள், காலை 6 மணிக்கெல்லாம் அப்பிச்சி, சொசைட்டியில் பாலை ஊற்றிவிட்டு வந்துவிடுவார். கிணற்றின் அருகே இருக்கும்  கொய்யா மரத்தின் ஓரத்தில்தான் பொங்கல், சமையல் வைப்பார்கள். அந்த இடத்தைச் சுத்தம் செய்வதை அம்மாயி பார்த்துக்கொள்வார்கள். எனக்கும் தாத்தாவிற்குமான வேலை கொலுமிச்சை  காய்களை பறிப்பதுதான், கொஞ்சம் கடிடமான வேலையும் கூட, காரணம், சரியாக கால் அடி நீளம் வரை இருக்கும் அதன் முட்கள். காய்களைப் பறித்து ஒரு மூட்டையில் கட்டிக் கொள்வார் அப்பிச்சி. நான் கிணற்றில் குதித்து கும்மாளமிட்டுக்கொண்டிருப்பேன். பிறகு அவரும் குளித்து முடித்துக் கிளம்பி, ஒருக்கா மலை ஏறத் தொடங்குவோம். ஆவாரம்பாளையத்திலிருந்து ஒரு
தடம் வரும்,அங்கேயிருந்து படி ஆரம்பிக்கும், அதுதான் ஒரு மலையடிவாரம். இன்னொரு அடிவாரம் தம்பி மாமா வீட்டிலிருந்து சற்று தள்ளியிருக்கும், அந்தப் படியில் ஏறினாலும் அடிவாரத்திலிருந்து வரும் வழியில் சேர்ந்துவிடும், படியென்பது 10-20 படிகள்தான், பிறகு எல்லாம் மண் பாதைதான். எங்களுக்கோ இந்த இருவழிகளுமே சற்று தூரம், அதனால் மலையினூடே ஏற ஆரம்பித்துவிடுவோம், வழியெல்லாம் இருக்காது,  குறுக்கில் சென்றால் சீக்கிரம் கோயில் சேர்ந்துவிடலாம்.

லையில்,  பாதிவழியில் சில கடைக்காரகள் கடை விரித்திருப்பார்கள். 3ம் கிழமையும், 4ங்கிழமை மட்டுமே வரும் வியாபாரிகள் அவர்கள், சங்ககிரி, கொங்கணாபுரத்திலிருந்து வரும் சிறு வியாபாரிகள் அவர்கள். கனமாக மழைக்காகிதம் (Plastic) சாக்குகளை விரித்து வியாபாரம் செய்வார்கள். கற்பூரம், சாமிக்குப்பூ, தேங்காய்,  பழம், ஊதுவர்த்தி, சில மிட்டாய்கள், முறுக்குகள், என்று ஒரு மூட்டையில் கட்டிவந்து பிறகு வியாபாரம் செய்பவர்கள். அவர்கள்தான் அப்பிச்சியின் குறியே இவர்கள்தான். இவர்களிடம் அப்பிச்சி கொண்டு சென்ற கொலுமிச்சை காய்களை விற்றுவிடுவார், எனக்குத் தெரிந்து அவர் அவ்வளவு பெரிய வியாபாரியெல்லாம் இல்லை. இருவரிடம் விலை கேட்பார், யார் அதிகம் கேட்கிறார்களோ அவரிடம் ரூபாய் ஒன்றோ இரண்டோ வைத்து விற்றுவிடுவார். கொலுமிச்சை புளிப்பு அதிகம் கொண்ட, எலுமிச்சைப் பழம் போல உருவத்தில்  பெரிய அளவில் இருக்கும், ஆனால் பச்சையாகத்தான் இருக்கும், பழுத்து நான் பார்த்ததேயில்லை. இதைத் தின்றால் தண்ணீர் தாகம் எடுக்காது, மலையில் நடப்பவர்களுக்கு இது உகந்தது, தண்ணீர் அதிகம் குடிக்கத் தேவையிருக்காது. மலையில் ஆங்காங்கே சுனை நீர் வேறு இருக்கும். ஆனாலும் இந்தக் காயை வாங்குபவர்கள் அதிகம், காரணம், அந்தப் புளிப்பும், அரிதாக வருடம் ஒரு முறை சாப்பிடுவதாலுமாக இருக்கலாம்.

      னக்கு ஞாபகம் இருந்த வரையில் நாங்கள் உச்சிகால பூஜைக்கெல்லாம் இருந்ததேயில்லை, போவோம், காயை விற்போம், பிறகு மலை இறங்கி வந்துவிடுவோம். வீட்டிற்கு வந்தால் சமையல் அநேகமாக முடிந்திருக்கும், அல்லது முடியும் தருவாயில் இருக்கும். அன்று எல்லாருமே ஒரு சிந்திதான், அதாவது காலையில் யாரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள், (ஒரு பொழுது). சமையல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். பச்சரியில் வைத்த பொங்கல், பச்சைப்பயிறு குழம்பு, புளி ரசம், 3 வகை காய்கள்(பெரியல்), அதிலும் கண்டிப்பாய் பூசணிக்காய் இருக்கும், புடலங்காய் இருக்கும், பீர்க்கங்காய் இருக்கும். இதைத் தவிர்த்து நான் பார்த்ததேயில்லை. வாழை இலை அறுத்து வருவது அப்பா/ மாமா வேலையாக இருக்கும். சாப்பிட ஆரம்பிக்கும் முன் “கோவிந்தா கோவிந்தோவ்வ்வ்வ்வ்” என்று உரக்கக் கத்துவோம், கண்டிப்பாய் அது அடுத்த தோட்டத்தில்/வீட்டில் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டும், அதாவது நாங்கள் விரதம் முடித்துவிட்டோம், நீங்கள் எப்படி என்பதாக இருக்கும் அந்த சத்தம்.

ன்றைய சாயங்காலம் போண்டாவோ, பஜ்ஜியோ, கச்சாயமோ, கண்டிப்பாக இருக்கும், சாயங்காலம் மதியம் வைத்த சமையல் மீதமிருக்கும், அதை உண்டு உறங்கிவிடுவோம், குடும்பமெல்லாம் ஒன்று சேர்ந்து பேசி மகிழ்ந்து தரையிலும், கயிற்றுக்கட்டிலும் உறங்கிவிடுவோம். அடுத்த நாள் காலை, அப்பிச்சி, நான், மாமா, அப்பாவென்று கோழிகளைப் பிடிப்பதுதான் முதல் வேலை. பிடித்து முடிப்பார்களோ இல்லையோ நான் கிணற்றில் குதித்திருப்பேன், 3 அல்லது நான்கு மணி நேரம் கண்ணீர் சிவக்கும் அளவுக்கு நீந்தி மகிழ்வேன். பசியுடன் நீந்தும் என்னை பெரும்பாலும் சாப்பாட்டிற்கு இழுந்துதான் வந்திருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் கோழி கொதித்திருக்கும், 10 அல்லது 10:30க்குள்ளாக சாப்பிட்டிருப்போம். வெற்றிலைப்பாக்குடன்,  நாட்கள் கட்டி காத்த விரதம் முடிவுக்கு வந்திருக்கும். மறுபடியும் அரட்டை, காய்கறிகளைப் பறித்து பைகளை நிரப்பி, சாயங்காலம் காப்பி குடித்தவுடன் கிளம்பிவிடுவோம்.

ன்று புரட்டாசியில் அடை மழை பெய்வதுமில்லை, ஊற்றெடுத்து பள்ளத்தில் தண்ணீர் ஓடுவதுமில்லை, கொலுமிச்சை மரங்களும் இல்லை, ஒருக்கா மலைக்கும் போவதில்லை, கிணற்றுக் குளியலும் இல்லை, கோவிந்தா கோவிந்தா என்று சத்தமும் இல்லை,  மணம் மணக்கும் அந்தக் கோழி குழம்பும் இல்லை, அப்பிச்சி, அம்மாயி, அம்மாவும் உயிரோடு இல்லை, ஆனால் அந்த ஈரம் படிந்த நினைவுகள் மட்டும் ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது.

Friday, September 5, 2014

புத்தம் புது காலை ஜெயிக்குது

இளையராஜா குடுத்த ஜானே தோனாதான்  (தமிழில் நூறாவது நாள் - விழியிலே, மணி விழியில்) சிறந்த Re-mix என்று சொல்வேன். அது re-Master வகையில் வந்தாலும் வரும். பால்கியின் படம்னாலே ராஜா கொஞ்சம் மெனக்கெடறது உண்டு, ஹிந்திங்கிறதனாலேயும் இருக்கலாம். இதுக்கும் பால்கி பழைய பாடலைத்தான் பெரும்பாலும் கேட்டு வாங்கிக்கிறாரு. இதை ஏன் இப்ப சொல்றேன்னா.. அலைகள் ஓய்வதில்லை படத்துல புத்தம் புது காலை பாட்டு ஒன்னு இருக்கு. வேலை பொழப்பு இல்லாம ஒரு நாள் இந்தப் படத்தை இணையத்துல புடிச்சி இந்தப் பாட்டை பார்த்துப்புடலாம்னு படத்தை பார்த்து ஓட்டி ஓட்டி பார்க்கிறேன், படத்துல அந்தப் பாட்டையே காணோம். ரொம்ப வருசமா தெரியாது அந்தப் பாட்டு படத்துல இல்லைன்னு. சுத்தம்.. இப்படி தளபதி படத்துல கூட "புத்தம் புது பூ பூத்ததோ" அப்படின்னு ஒரு பாட்டு கேசட்டுல வந்துச்சு, ஆனா படத்துல வரலை.  ராஜாவுக்கு "புது" அப்படிங்கிறது செட் ஆவலையோ என்னமோ. விடுங்க.. பழைய பஞ்சாங்கத்தையே எத்தனை நாள்தான் பொரட்டுறது.

மேகாங்கிற படத்துல "புத்தம் புது காலை" பாட்டு வருதுன்னு சொன்னவுடனே ஜானேதோனா மாதிரி புது இசை வரும்னு பார்த்தா, ராஜா சும்மானாச்சுக்கும் இருக்கட்டும்னு இடதுகையால அதே நோட்ஸ் தூக்கி போட்டிருப்பாரு போல. எனக்குத் தெரிஞ்சு ராஜா இந்தப் பாடல் பதிவுக்கே போயிருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். ஆர்கெஸ்ட்ராவுல போடுறாப்ல இருந்துச்சு, ஜானகியம்மா வாய்ஸுக்கு அனிதா வேற. எனக்கு ரெண்டுபேருமே பிடிக்குங்கிறதால நோ கமெண்ட்ஸ். பாடல் நுண்ணிய ஒலிப்பதிவு (சொல்லிக்க வேண்டியதுதான்) கேட்க புதுசா பழசாட்டமே இருந்துச்சு. இருந்தாலும் பாடல் புடிச்சது. ராஜா பாட்டுன்னாவே பழசா கேட்டாலும் புதுசாத்தான் இருக்கும். இது புதுசா இருக்கிற பழைய பாட்டு. ஒரு 50 முறை கேட்டாச்சு.

படம் வெளி வரதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாடல் வெளியீடு, இயக்குநர் ரொம்ப தெளிவா பேசினாப்ல, சட்னு தோணிச்சு "அட, இந்தப் பயபுள்ளைக்கிட்ட என்னமோ இருக்குடா". ராஜா வேற அன்னிக்கு வழக்கம் போல இல்லாம செம குஷி மூட்ல இருந்தாரு. சரி, படம் வெயிட்டு அப்படின்னு நினைச்சிட்டேன். பாடலை இன்னிக்கு காலையில பார்த்தேன், ஒரு 10 முறை தொடர்ச்சியா பார்த்திருப்பேன். அவ்ளோ அழகா படம் புடிச்சிருந்தாங்க. ஒரு பாடலைக் கேட்டு ரசிச்சா  பார்க்க படு திராபையா இருக்கும். (மெல்லினமே, சின்னத் தாமரை, இளமை என்னும் பூங்காற்று- இப்படி நிறைய கேட்டு ரசிச்சு படத்துல பார்த்தா ஏன்டா பார்த்தோம்னு இருக்கும்,. இது கேட்கவும் நல்லா இருந்துச்சு, பார்க்க செம செம செமயா இருந்துச்சு.

நினைச்சேன்டா இவன்ட என்னமோ இருக்கு, இயக்குநர் பேச்சிலேயே தெரியுது, ராஜாவும் ஒரு தெனாவெட்டா இருந்தாரு(எப்ப இல்லே?) . கண்டிப்பா சொல்றேன், படம் வெளி வந்தா இயக்குநர் பேசப்படுவார். ராஜாவுக்கு இது செம ட்ரன்டா அமையும், விசாரிச்சதுல இது ரொமான்டிக் த்ரில்லராம். சரியான டைமிங் வேற.  ஒரு பழைய பாட்டையே இப்படி எடுத்திருக்காருன்னா படம்? அதுவுமில்லாம கதாநாயகி அம்மணிக்கு இணையத்துல செம ஜொள் ஓடுது. பாட்டைப் பாருங்க. ராஜாவை துள்ளியமா ரசிக்கிறவனால மட்டும்தான் இப்படி ஒரு பாட்டை அழகாத் தர முடியும்.



கெலிக்கும்டா எழுதி வெச்சிருக்கேன்!!!


பிகு: போனவாரமே வர வேண்டிய பதிவு

Wednesday, June 4, 2014

பெறுமவற்றுள் யாமறிவது

விமானச்சீட்டு முடிவானவுடனேயே மனசுக்குள் ஒரு பயம், பரபரப்பு வந்து உட்கார்ந்து கொண்டது. இதற்கும் பல விமானங்கள், நேரமெல்லாம் பார்த்துதான் இந்த விமானப் பயணத்தை முடிவு செய்திருந்தேன். அப்பா அமெரிக்க வர சம்மதித்தவுடனே, எந்தெந்த மாதங்கள் சரி பட்டு வருமென்று கேட்டேன், அவருடைய விடுமுறை மாதங்களைச் சொன்னபோதே மனசுக்குள் ஒரு தவிப்பு. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் எங்களுக்கு குளிர் முக்கால், வெயில் கால் என்று வருடங்கள் உருண்டோடும், அதிலும் இந்த வருடமோ வழமைக்கு மேலாகவே குளிர் எங்களை வாட்டியது (குளிர் எப்படி வாட்டும் என்று கேட்கக்கூடாது). கண்டிப்பாக அவர் இருக்கும் காலம் குளிராகத்தான் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரிந்துவிட்டது. விடுங்கள், இந்தப் பதிவு குளிரைப் பற்றியதல்ல. மீண்டும் பயணத்திற்கே வருவோம்.



விமானங்கள் மாறும் நேரம் (Transit Time)  அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மொழிப் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,  பயணப்படியும் அதிகமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,  இப்படி பல இல்லாமல்களை பார்த்து பார்த்து கொள்ள வேண்டி இருந்தது. இந்த விமானம்தான், இந்தப் பயணம்தான் என்று முடிவான போதே வீட்டம்மணி அவர் செய்ய வேண்டிய, கூடாத விசயங்களை மாமனாருக்கு பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நிறைய சொல்லி பயமுறுத்திவிடவேண்டாம் என்பது எங்களின் அடிநாதமாக இருந்தது.

பிரச்சினை அமெரிக்காவில் இல்லை, இந்தியாவில்தான். அவரது பயணம் இப்படியாக இருந்தது பெங்களூருவிலிருந்து 9:20க்கு கிளம்பி 11 மணிக்கு மும்பை வந்தடையும். பிறகு 1:30 கிளம்பி அமெரிக்காவின் நுவார்க் வந்தடையும். இப்போது சிக்கலே 11 மணியிலிருந்து 1:30 க்குள்தான். காரணம். பெங்களூருவிலிருந்து மும்பை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேரும். பிறகு சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் அமெரிக்கா வந்து சேரும். இந்த இரண்டரை மணி நேரத்துக்குள் அப்பா உள்நாட்டு விமானத்திலிருந்து இறங்கி, சர்வதேச விமான நிலையம் சென்று Immigration முடித்து சரியான நேரத்திற்கு, அதாவது 12:30 மணிக்கு Boarding க்கு வந்துவிடுவாரா என்பதுதான். எதாவது உதவியென்றால் அழைக்க ISD வசதிகொண்ட SIM தேவைப்பட்டது. வாங்கச் சொல்லி வாங்கியாச்சு. தங்கை Customer Care தொடர்பு கொண்டு கேட்ட பொழுது Immigrationஐ பெங்களூருலேயே செய்துகொள்ளலாம் என்று சொன்னார்களாம். நானறிந்த வரையில் அது மும்பையாகத்தான் இருக்கும். முதல் குழப்பம். பெட்டிகளை பெங்களூரிலேயே போட்டுவிட்டால் அமெரிக்கா வந்து எடுத்துக்கொள்ளலாம், நல்ல வேளை அதையும் மும்பையில் எடுத்து மாற்றவேண்டிய அவசியமில்லாமல் போனது. அந்தக் குழப்பமில்லை.



ச்சு, பயண நாளும் வந்தது. பெட்டி சரியா இருக்கா? பூட்டியாச்சா? 23 கிலோவுக்கு மேல இருக்கா? அது இருக்கா? இது இருக்கா என்று பல கேள்வி பதில் பறந்தன. பெங்களூரில் சரியான நேரத்தில் ஏறியாயிற்று, பெட்டிகள் சரியான எடையில் இருந்தன. எதிர்பார்த்த படியே Immigration மும்பையில்தானென்று சொல்லிவிட்டார்கள். மும்பைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டது விமானம். விமானத்தை விட்டு வெளியே வந்து பேசியபொழுது மணி 11:25.

ன்னும் ஒரு மணிநேரம்தான் இருக்கு. "நீங்க சர்வதேச விமான நிலையம் போயிருங்க. அப்புறம் Immigration. முடிச்சிட்டு கூப்பிடுங்க. சீக்கிரம்" என்று சொன்னதோடு முடித்துவிட்டேன். ஆனால், இங்கே நகம் கடித்தபடியே இருந்தேன். சிறிது நேரம் அறையிலேயே குறுக்கும் நெடுக்கும் நடை. இப்படிக்கும் அப்படிக்கும் நடந்தா மட்டும் படபடப்பு குறையவா போகுது? குறையும்ங்கிற நம்பிக்கைதான். சரியாக, 1 மணிக்கு அழைப்பு வந்தது. விமானத்தில் ஏறத் தயாராக இருக்கிறேன் என்று அப்பா சொன்ன போதுதான் பெருமூச்சு வந்தது. அவர் படபடப்பாகத்தான் பேசினார். அலைச்சல் இருந்திருக்கும் போல, புரிந்தது, ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் "கிளம்புங்க, நீங்க இங்கே வந்து சேரும்போது நானிருப்பேன். நல்லா சாப்பிட்டு தூங்குங்க" என்று சொல்லிமுடித்தேன். பெருங்ககவலை நீங்கியது. விமானத்தில் ஏறிவிட்டால் 15 மணி நேரம், பிறகு இங்கேவொரு  Immigration இருக்கும். ஆனாலும் கவலை இல்லை.



ப்படி 2 மணி நேரத்துக்காக நான் பட்ட மன உளைச்சல் பெரிதாகத்தான் தெரிகிறது. இதற்கும், அலைபேசி, Flight Tracking Details என அனைத்து வசதிகளும் இப்பொழுது இருக்கிறது. எப்படியும் தொலைந்து போய்விட மாட்டார் என்று தெரிந்தும், பயம் மனதை அரித்துக்கொண்டேதான் இருந்தது.

ப்படித்தான், 15 வருடங்களுக்கு முன், அலைபேசியில்லாத காலத்தில் என்னைச் சென்னைக்கு, சேலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏற்றிவிட்டு,  புது இடம், புது ஊரான சென்னைக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்து பாதுகாப்பாக இருக்கிறேன் என்று அடுத்த நாள் காலை வரை என் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்து, அதைத் தெரிந்துகொள்ளும் வரையில் இதே அப்பாவிற்கு எவ்வளவு மன உளைச்சல்கள் இருந்திருக்கும்?

காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?

Monday, May 19, 2014

ராக்கம்மா - ராக்காயி யார்?

ராஜாவின் "அடி, ராக்கம்மா கையைத்தட்டு" பாட்டு கேட்டிருப்பீர்கள்,
மெல்லிசை மன்னரின் "அடி, என்னடி ராக்கம்மா பல்லாக்கு" பாட்டையும் கேட்டிருப்பீர்கள்.


ஆனால் ராக்கம்மா யாராக இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? இதோ ஒரு அகழ்வாராய்ச்சி
அது அரிசி பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாத காலம், அல்லது அரிசி என்பது செல்வந்தர்களுக்கானது என இருந்த காலம். ஆரியம்/ராகி, கம்பு,

ஒரு நாள் அவளின் கணவன் (இவன் நன்கு படித்தவன் , 5ம் வகுப்பு), நாளெல்லாம் வயலில் பாடுபட்ட களைத்துப் போய் பசியோடு சாயங்காலம் வீட்டுக்கு வருகிறான். வயிறு முழுக்க பசியுடன் இருப்பவனுக்கு குளியலெல்லாம் 2 நிமிடங்கள்தான். குளியல் முடித்து வந்து அமர்ந்தவுடன் சட்டி வழிய வழிய சுடச்சுட சோளச்சோறும், கடைந்த கீரையையும் போட்டுக்கொடுத்தாள் மனைவி.

பசி வேகமறியாது என்பதுபோல, அவசர அவரசமாக கைவழிய சோளச்சோறையும் கீரையையும் நையப் பிணைய ஆரம்பித்தான் கணவன்.

ஒரு பெரிய கவளமாக எடுத்து வாயில் போட்டவனுக்கு "படக்" கென்ற சப்தத்துடன் உடைந்தது கல். பசியின் முன் மனைவி மீதான கோபம் சிறிதாக இருக்க, மீண்டும் அடுத்த கவளத்தை வாயில் போட்டான் , மீண்டும் "படக்", இப்படியே ஒவ்வொரு வாய் சோற்றுக்கும் கல் வந்துகொண்டே இருந்ததால் அவளுக்கு ராக்கம்மா என்று பெயர் வைத்தான் கணவன்.



Rock என்றால் ஆங்கிலத்தில் கல் தானுங்களே!!

Monday Always Rocks!

Wednesday, February 26, 2014

பண்ணையம் Feb - 26- 2014

நான் டென்னிஸ் பார்க்க ஆரம்பித்த காலத்தில் போரிஸ் பெக்கர், ஸ்டீபன் எட்பர்க், இவான் லெண்டில், ஜான் மெக்கென்றோ - என ஆண்கள் நால்வர் மட்டும் அரைஇறுதிக்கு வந்துக்கொண்டிருப்பார்கள். அதில் நான் ஸ்டீவன் எட்பர்க்கின் ரசிகன். ஏனென்று தெரியவில்லை, ஆர்ப்பாட்டமில்லாத உருவம், ஆட்டமாக இருக்கலாம், வித்தியாசமாக வலது கையில் கடிகாரம் அணிந்து கொண்டதற்காக கூட இருக்கலாம்.

பெண்களில் ஸ்டெபி கிராஃபின் கிராஃப் ஏறிக்கொண்டிருந்த காலமது. முதன் முறை பார்த்தவுடனே பற்றிக்கொண்டது இவரைப்பார்த்துதான் (கேப்ரியலா சபாடினி).(அந்த வயசுலேவான்னெல்லாம் கேட்கப்படாது)
ஆகிரதையான உடல்வாகு, தெனாவெட்டான ஆட்டம் இப்படி என்னைக் கவர்ந்தவர். ஸ்டெபி கிராபின் சர்வீஸ்களை சிதறடிப்பார். அதில் ஒரு ஆண்மைத்தனம் இருக்கும். நான் பார்த்த பெரும்பான்மையான ஆட்டத்தில் எல்லாம் சபாடினி தோற்றுதான் போயிருப்பார். ஆனாலும் அவரை பிடிக்கவே செய்தது. கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டார். மரியா செரபோவா, விக்டோரியா அசரென்கா என்று கவர்ச்சி மங்கைகள் வந்திருந்தாலும் இன்னும் மனசுல குடியிருக்கிருவர் சபாடினி மட்டும்தான்.


எதையோ தேடப்போக விக்கியில் இன்று அவரின் தகவல்களைப் படிக்க நேர்ந்தது.



------------------------------------------------

படித்ததில் பிடித்தது:

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே, அடிக்கடி ஒரு கதை சொல்வார். ''மிகப் பெரிய பணக்காரப் பெண் ஒருத்தி, 'எனக்கு பகவத் கீதையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் சொல்லி என்னைப் புரியவைப்பவர்களுக்கு என் சொத்தில் பாதியைத் தருகிறேன்’ என்று அறிவித்தாராம். இதைப் பார்த்ததும் அவரது கணவர் பதறிப்போனாராம். 'சொத்தில் பாதி என்றால் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு பணத்தை யாராவது இழப்பார்களா?’ என்று அவர் கேட்டா ராம். 'எனக்குப் புரிந்துவிட்டது என்று சொன்னால் தானே பணம் போகும். எனக்குத்தான் புரியப் போவது இல்லையே? புரிந்துவிட்டது என்று சொல்லப்போவதும் இல்லையே?’ என்றாராம் அந்தப் பெண்.


பல இணைய விவாதங்கள் கூட இப்படியாகத்தான் இருக்கு, தேவையான விளக்கமெல்லாம் குடுத்தபிறகும் மறுபடியும் ஆரம்பித்திலேயிருந்தே வருவாங்க. அவுங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு, நாம பாட்டுக்கு டீ குடிக்கப் போயிடனும்..


------------------------------------------------

வேலையில்லாப்பட்டதாரி: (VIP)

அம்மா என்ற பாடல் கேட்டவுடனே கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது, சமீபத்தில் அம்மாவை இழந்த யாரும் இந்தப் பாடகலைக்கேட்டால் கண்ணீர் முட்டத்தான் செய்யும்.

விட்ருவோம், அழுவாச்சி காவியம் நமக்கு செட் ஆவாது.

ஒரு வாரமாக Loopல் ஓடிக்கொண்டிருக்கும் பாட்டு, வேலையில்லாப் பட்டதாரி பாடல். காரணம், செம துள்ளல். ஆரம்ப கால ரகுமானிடமிருக்கும், அந்த ரத்தத்தை சூடாக்குற, ரட்சகன் நாகார்ஜூனுக்கு புடைக்குமே அந்த மாதிரி நரம்பை முறுக்குகிற மாதிரியான இசை. ஆரம்ப இசையே பைப்பில் ஆரம்பித்திருக்கும், இது எம். எஸ்.வி காலத்திலிருந்தே ஆர்ப்பாட்டடத்துக்கான அடியாக அமைந்துவருவது, இலக்கணமான்னு தெரியல. (அதைப்பற்றி இன்னொரு பதிவுல பேசுவோம்)

இந்தப் பாட்டை , யாருமில்லாத தெருவுல ஒரு டீக் கடை பெஞ்சுக்கு முன்னாடி ஆடுவாங்களோ? இல்லை, பொல்லாதவன் "எங்கேயும் எப்போதும்" மாதிரி முழுக்க பல்பா போட்டு எடுப்பாங்களோ? அப்படி இப்படின்னு கற்பனை பண்ணிட்டே இருக்கேன். ஆனாலும் இந்தப் பாடலின் காட்சி வடிவத்திற்கு தனுஷ், மற்றும், இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டே ஆகனும். இந்த காணொளி அதை எல்லாம் தூள் தூள் பண்ணிடுச்சு. சரியான இடத்துல வெட்டி ஒட்டி, வெறியேத்துறாங்க. கம்னு இந்த வீடியோவையே படத்துல வெச்சிடுங்க, வேல்ராஜ். பட்டாசா இருக்கும்.

என்னதான் இருந்தாலும் ரஜினி ரஜினிதான்!!! அந்த எடிட்டருக்கு ஷொட்டுகள்!!




Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா - எனும் பிதாமகன்

1994/95 ஆக இருக்கும், என்னுடைய கல்லூரியில் சிந்தனை மன்றம் என்று ஒன்றுண்டு. அதாவது இலக்கியம், கலை சம்பந்தப்பட்ட ஒரு மன்றம். பெரிய கல்லூரி என்பதால் சிந்தனை மன்றத்துக்கு பெரிய ஆட்களை அழைப்பது வழக்கம். பெரிய கூட்டமென்று இருக்காது. 30-40 பேர் இருப்பார்கள். அனைவரும் இலக்கியம் /தமிழ் மீது பற்று கொண்டவர்கள்.


அந்த வருடத்திற்கு பாலு மகேந்திரா, எடிட்டர் லெனின், மற்றும் நாடகச் சக்ரவர்த்தி எஸ்.வி.சேகர் ஆகியோரை அழைத்திருந்தனர். நான் வரவேற்புரை ஆற்றினேன். மற்றும் சில பொறுப்புகளை ஏற்றிருந்தேன்.

ஒரு பயிற்சி வகுப்பு போல நடந்தது. லெனின் அவர்களது குறும்படம் காட்டப்பட்டது. பாலு மகேந்திராவின் பாட்டி - வடை சுட்ட கதை சொல்லப்பட்டது. எஸ்.வி சேகரின் அரசியல் சார்ந்த ஒரு பேச்சும் இடம்பெற்றது.

இதன் முடிவில் அனைவரும் சிறப்பு விருந்தினர் அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தனர். முடியும் தருவாயில் மைக் மேடையில் நின்றிருந்த என்னிடம் பாலு மகேந்திரா வந்தார், “நானும் இது மாதிரி பலருக்கும் கையெத்து போடனும் சார், அதுக்கு என்ன சார் பண்ணனும் என்று கேட்டேன். இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்த்திருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனாலும் அதே அமைதியான குரலில்  ”அதுக்கு நீ நிறைய கத்துக்கனும், படிக்கனும், காத்திருக்கனுமே” என்றார்

கற்றுக்கொள்வேன், காத்திருப்பேன்” என்றேன்.

ஆனால், காலம் கடந்துவிட்டது.  பாலு மகேந்திரா என்னும் திரைத்துறையின் பிதாமகன் காலமாகிவிட்டார். ஒரு லாயக்கியுமில்லாத/விசயமும் அறியாத என்னிடம் அவர் மேலும் நிறைய பேசிக்கொண்டிருந்தார். நான் முதலில் வெகு நேரம் உரையாடிய பிரபலம் அவர்தான். என்னை மதித்து பேச வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஆனாலும் பேசியிருந்தார். சினிமாவில் ஏதாவது சாதித்த பிறகே இந்த சம்பவத்தைச் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன்.  ஆனால் காலன் வென்றுவிட்டான்.


நான் இன்னும் காத்திருக்கிறேன். கற்றுக்கொண்டுவிட்டேனா என்று தெரியவில்லை.

உங்க ஆன்மா சாந்தியடைட்டும் சார். 

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)