Thursday, November 23, 2006

வெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது?

விக்கிப்பசங்களுக்கு போட்டியா நாமும் ஏதாவது பண்ணுவோம்னு யோசிச்சு, How it Works website'க்கு எல்லாம் போயி ஒன்னும் புரியாம இருக்கும் போதுதான் இப்படி ஒரு பதிவு போட பளங்குன்னு மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சது(அது என்னா புதுசா ஒரு ஐடியா வந்தாமட்டும் பல்பு போட்டு காட்டுறது? இதுக்கு விக்கிப்பசங்க விளக்கம் தருவாங்களா?)

இப்போ கதைக்கு வருவோம்.

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.

ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.

தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.

வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.

உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி "ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா"ன்னு கேட்டுச்சாம்..

அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!

அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருதுன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே?

நன்றி - பதிவு போடவே சோம்பேறித்தனமா இருக்கும் போது இப்படி ஒரு மயிலு அனுப்பிய மனதின் ஓசைக்கு.

Friday, November 17, 2006

டேய் காதலா-1

என்னை நேசித்த காதலிக்காக
அவள் பார்வையிலேயே
ஒர்
கவிதை!





என்னைப் பார்த்து
கண்சிமிட்டியபடி தெரு விளக்கு
விரல் நீட்டி மிரட்டிச்சென்றாய்
கோளாறு விளக்கிலா? உன்னிலா?





உன் காதுக்கும் இதழுக்கும்
இடையே பாலமாய் அலைபேசி,
யாரோ ஒரு சக்களத்திதான்
மறுமுனையில் சிரித்து,
கொஞ்சி,
பேசிக்கொண்டிருக்கிறாள்
கோவம்தான் - ஆனால்
நீ கொஞ்சுவதை
நான் எப்போதுதான் பார்ப்பதாம்
நீ என்னைக்
கொஞ்சும் போதுதான்
என் கண்கள்
திறக்கவே மாட்டேன் என்று
அடம்பிடித்து
தொலைக்கிறதே.




பூவைத்து
என்னை அழகு பார்த்தபின்,
பூவோடு
என்னையும் சேர்த்து
கசக்கி போடுவதே
உனக்கு
வழக்கமாகிவிட்டது.
நீ என்ன குரங்கா? இல்லை
நான்தான் பூமாலையா?





உன் தீவிரவாதப்பார்வையால்
பார்த்தும் கொல்கிறாய்,
வேண்டாமென்றாலும்
அஹிம்சாவாதியைப்போல்
பார்க்காமலேயும் கொல்கிறாய்
இரண்டுமல்லாமல்
மூன்றாவதுக்கு
எங்கே போவேன்?



காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?




(தொடரும்)
டேய் காதலா- 2

Wednesday, November 15, 2006

ஆரியமா உவ்வே

நம்ம ஊரப்பொருத்த வரைக்கும் 3 வேளையும் நெல்லுச்சோறு திங்க ஆரம்பிச்சது 1960களில்தான். இதுல சாதி பார்க்கிறதுக்கு ஒன்னுமே இல்லீங்க, வேலை செஞ்சா சோறு அப்படின்னு இருந்த காலம்தான் அதிகம். நான் பொறந்த காலத்துல நெல்லுச்சோறுக்குப் பஞ்சமில்லைன்னாலும் கூழோ, கம்பஞ்சோறோ வாரம் ஒரு முறையாவது செஞ்சுருவாங்க. நெல்லுச்சோறு சக்கை, கூழோ கம்பஞ்சோறோ தின்னாதான் சத்து அப்படின்னு இன்னும் கூட சொல்லுவாரு எங்க அப்பச்சி. அப்பச்சியும், அம்மாயியும் வாரம் ஒரு முறையாவது களி சாப்பிட்டிருவாங்க.

அதனால நமக்கு ஆரியம், கம்பு எல்லாம் பழகிப்போச்சுங்க. ஆரியத்துல பண்ற களி, கூழு, கம்பஞ்சோறு ருசி எதுலயும் வரது இல்லே. இப்போ என்னமோ ஒரு தட்டுல 4 பன்னீர் பக்கோடா வெச்சுக்கிட்டு 3 மணி நேரம் கொறிச்சுக்கிட்டு இருக்கோம். அது எல்லாம் தோட்டத்துல முடியுமா? வேலைய பார்க்க வேணாம்?

போன மாசம் மருத்துவர்கிட்டே வாரிச கூட்டிகிட்டு போன போது, அவர் சொன்னாரு ஆரியத்துல பண்ணினது குடுங்க பையன் கொஞ்சம் சத்து பிடிப்போட இருப்பானு சொன்னார். சரின்னு, நம்ம வீட்டுல ஆரியத்தை அரைச்சு கொஞ்சம் பனை வெல்லம் போட்டு தண்ணி கலந்து குடுத்தா பையனுக்கு மூஞ்சி போற போக்கை பார்க்கனுமே.

ஈரோட்டு பேருந்து நிலையத்துல ரொம்ப அதிகமா நடக்கிற வியாபாரமே கம்பஞ்சோறுதான். தலைமுறை இடைவெளி வரலாம், சாப்பாட்டு முறை மாறலாம், ஆனா அது எல்லாம் வளர்ப்பு முறைன்னுதான் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன். 10 மாச குழந்தைக்கு தெரியுமா என்ன? அப்போ களி கம்பஞ்சோறு எல்லாம் இந்தத்தலை முறையோடு போயிருமா? பன்னீரு, ரொட்டியும்தான் திம்பாங்களா இந்தத் தலைமுறையில?

(பின் குறிப்பு: எங்க ஊர் வழக்கத்துல ஆரியம்=கேழ்வரகு=ராகி. Vaa.மணிகண்டன் இதையும் குறிச்சு வெச்சுக்கோங்க)

Sunday, November 12, 2006

தோத்துப் போன ஜி.ரா

யானைக்கும் அடி சருக்குமாம். அது மாதிரி நேத்து ஒரு யானைக்கு சருக்கிருச்சுங்க.

தேன்கூடு போன மாசம் போட்டியில ஜெயிச்சதுக்காக ஒரு சின்ன கூட்டத்துக்கு அழைத்து இருந்தார் 2ம் இடம் பெற்ற மயிலார். 3ம் இடம் பெற்ற ஓமப்பொடியும் வந்து இருந்தார். அப்பொழுது இது நம்ம ஆளு படம் பற்றி பேச ஆரம்பிக்க மயிலார்(ஜி.ரா) சொன்னாரு, அந்த படத்தை இயக்கியது பாக்கியராஜ்'ன்னு. நானும் ஆமாம் சாமி போட்டு வெச்சேன். ஏன்னா அந்த படத்துக்குதான் பாக்கியராஜ் முதல் முதலா இசை அமைச்சு பாடியும் வேற இருந்தார். அந்த நம்பிக்கையில அவர்தான் இயக்கி இருப்பாருன்னு மயிலார் ஆணித்தரமா அடிக்க, ஓமப்பொடி பந்தயம் வெக்கிற அளவுக்கு போய்ட்டார். சரின்னு படத்தை பார்த்து முடிவு பண்ணலாம் ஓட்டி பார்க்க ஆரம்பிச்சோம்.

டைட்டில்ல பார்த்தா இயக்குனர் மேற்ப்பார்வை அப்படின்னே போட்டு இருந்துச்சு. கடைசியா அந்தப் படத்தை இயக்குனது பாக்கியராஜ் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அவர் மேற்பார்வை மட்டுமே செஞ்சு இருக்கார். அதனால் இந்திரா நகர் அண்ணாச்சில ஒரு செம புடி புடிச்சோம்.


அப்போ அந்தப் படத்தை இயக்குனது யாருங்க? ஓமப் பொடி சொன்ன மாதிரி பாலகுமாரனா? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க சாமி.

Monday, November 6, 2006

ராவணனாகும் ரஜினி


ஆப்தமித்ரா, தமிழில் அது சந்திரமுகியா வந்து சக்கை போடுபோட்ட கதை எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அதுக்குக் காரணம் கதையா? ரஜினியா?.அது எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா தமிழ் சினிமாவுல தோல்விப்படங்களே வராம போயிருக்குமே.

இந்த வாரம் கோலிவுட்டுல, பாலிவுட்டுல பேசிக்கிற பெரிய சமாச்சாரமே 'ராமாயன்'தான். சுமார் 100 கோடி ரூபாயில ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்துல வளரப்போகிற இந்த படத்துல நம்ம ரஜினி ஏத்துக்கப்போற வேஷம் ராவணன். இதெல்லாம் புரளியாக்கூட இருக்கலாம்னு தோணுது. அப்படியே இருந்துரட்டுமே, தனக்குன்னு இமேஜ் வந்த பிறகு ரஜினி பிறன் மனை நோக்காமையை தன்னோட படங்களில் கடைபிடிச்சுகிட்டு வந்துகிட்டு இருக்காரு. அந்த இமேஜ் நல்லா இருக்கும் போது வேணாமே ரஜினிசார் இந்த ராவணன் வேஷம்.

Saturday, October 14, 2006

சென்னைவாசிகளின் கவனத்திற்கு!

சூப்பர் ஸ்டார்களை அருகே இருந்து பார்க்கும் வாய்ப்பு வேண்டுமா?

"தடாலடியார்" கெளதம் அவர்கள் நடத்திய போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. இப்பரிசினை சென்னைவாசிகள் யாரேனும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமாறு அழைக்கிறேன். முதலில் பின்னூட்டமிடம் சென்னைவாசிக்கே இந்தப்பரிசு.


இம்சை அரசன் 23-ம் புலிகேசி சரித்திர வெற்றியாக 100 நாட்கள் கடந்து பயணிப்பதன் நினைவாக ஒரு சந்தோஷ பகிர்வு விழா..
திரு. ரஜினிகாந்த்
திரு. விஜய்
திரு.பிரபு-திரு.சத்யராஜ்
திரு.விவேக்
ஆகியோர் தலைமையில்..
அக்டோபர் 14 - கலைவாணர் அரங்கில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவிருக்கும் விழாவில் நீங்களும்( பரிசுக்குரிய இரண்டு பேர் மட்டும்) கலந்து கொள்ளலாம் நண்பர்களே!

Friday, October 13, 2006

தடாலடி பரிசல் போட்டி


இந்தப்படத்துக்கு தகுந்த மாதிரி ஒரு வரிக்கவிதை சொல்லுங்க பார்க்கலாம்.

பரிசு? இங்கே இருக்கிற பரிசலையே பார்சல்ல அனுப்பி வைக்கப்படும்.

Wednesday, October 11, 2006

வேலை வேலை வேலை...

இருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்த படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
"உங்கள் வாழ்க்கையின் லட்சியமென்ன?" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.

ரகு சொன்னான் "மாப்பிள்ளே கவலைய விடுடா, Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம்".

ஆனால் ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.

போனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், ரகு.

பதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராம்.

வெளியே ஏமாற்றத்துடன் வந்த ரகு
"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே?"

"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராம்.

Monday, September 18, 2006

சில்லுனு ஒரு ஆட்டோகிராஃப்

கல்யாணம் முடிந்த கையோடு துணைவி சகிதம் விமானம் ஏறிய நான் 12 வருடம் கழித்து இன்றுதான் என் கிராமத்து மண் மிதிக்கிறேன்.

அழகிய என் கிராமம்


பழைய புத்தகங்களுக்கு நடுவே
சிப்பியிலிருக்கும் முத்தைப் போல
டைரியின் வடிவில்
பரண் மீது தூசியுடன்
இன்னும் இருந்தது
என் நினைவுகளும் அவள் காதலும்.


முதல் வேலையாக அவளைத்தேடி,
மளிகைக்கடை அண்ணாச்சிக்கு
வாக்கப்பட்டதாய் அம்மா சொன்னது
இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டது.

இளமை தொலைத்து,
உருவம் பெருத்து,
மளிகைக்கடையில் அவள்.

மனதுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்,
கண்களில் பழைய காதலுடன்,
பேச முடியாமல் அவளையே பார்த்தபடி
ஊமையாய் நின்று கொண்டிருந்தேன்.

"என்னங்க வேணும்?" அவள்.

"என்னைத்தெரியுதா வசந்தி?" ஊற்றெடுத்த காதலுடன் கேட்டேன்.

"தெரியலையே"

"நாந்தான் மணியாக்கவுண்டர் பையன் சண்முகம்" என்றேன் புன்னகை வழிய.

"அட ஆமா, சரியா அடையாளம் தெரியல. என்னங்க வேணும்?"
என்று கேட்டாள்

முகத்தில்
எந்த சலனமும் இல்லாமல்,
தொழிலை மனதில் வைத்த
அந்த மளிகைக்கடைக்காரி.

"ஒன்றும் வேண்டாம்" என்று நடையைக்கட்டினேன் வீட்டை நோக்கி.

விடியற்காலை,
தண்ணிக்காக மூட்டிய அடுப்பில்,
அந்த டைரியையும்,
அவள் நினைவுகளையும்

திணித்துவிட்டு
நிம்மதியாய் என் வாரிசை
அணைத்து முத்தமிட்டேன்!

Wednesday, September 6, 2006

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?


களை கட்டி இருந்தது என் அலுவலகம்.
இளம்விதவை ஒருவருக்கு புதுப்பதவியாம்,
கண்களில் இச்சையும், மனதினில் காமத்தையும்
ஒருங்கேற்றி வாசனையோடு ஆண்கள் கூட்டம்.

விட்டு விலகி வாசல் வந்தேன், கைபோனில்
நண்பனுடன் உரையாடுகையில் கடந்து போனது
சோகம் கண்ட ஒரு உருவம்,
தோன்றவில்லை திரும்பிப்பார்க்க.

அதிகாரி அறிமுகப்படுத்துகையில் கண்டேன் அவளை,
கருவளையம் கொண்ட ஒளி இழந்த கண்கள்,
பரிதாபமோ, பச்சாதாபமோ ஒன்றும் தோன்றவில்லை.
புன்னகையுடன் விலகினேன்,
புருவம் தூக்கி என் முதுகை முறைத்துவிட்டு போனாள்.

உள் நோக்கம் கொண்ட வக்கிரத்தால்
ஆண்களை வெறுத்திருந்தாள்.
கண்டும் காணாமல் அவளிடமிருந்து
ஒதுங்கியதால் என்னை ஸ்நேகித்திருந்தால்.


ஒரு நாள் பேசியது மடந்தை,
தாலி கட்டிய ஒரு மணியில்
கணவனை,
பெற்றோரை இழந்து துர்பாக்கியவதியானவள்.
சமுதாயம் ஒதுக்க,
ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையில்,
பாரதி கண்ட பெண்ணாய்,
எரித்துவிட்டு வந்திருந்தாள், தூற்றியவர்களை.





விடுதி ஒன்றில் வாசம்,
வயிற்று பிழைப்புக்காக அலுவலகம்,
இரவு தனிமையைத் தணிக்க,
வடியாக் கண்ணீர்!
தனியே மூலையில் கதறும் இதயம்,
அது மூன்றாமவருக்கு தெரியக்கூடாதென்ற கர்வம்!
இவைதான் அவள்!





முதன் முதலில் கண்ணீர் கண்டது என் இதயம்,
மாற்றத்திற்காக அந்த ஞாயிறு
வெளியே சென்றுவர ஒப்பந்தமாகியது.
கூடும் இடம் ஒரு ஐஸ்கிரீம் கடை என்றும் முடிவாகியது.
மாற்றம் அவளிடத்தா? என்னிடத்தா?
"வெத்துப்பேச்சு" என்றடக்கினேன் மனதை.


ஞாயிறு, நல்ல தூங்கிகிட்டு இருக்கேன். ஒரு மிஸ்ட் கால் என் மொபைல் போனில். என்னோட வாழ்க்கையில் வந்த முதல் மிஸ்ட்கால், அட யாருடா நமக்கு மிஸ்டு தரதுன்னு எடுத்துப்பார்த்தா அவளேதான்? ஏன்? அடப்பாவி 9:30 க்கு அவளோட வெளியே போறேன்னு சொல்லிட்டு 10 மணி வரைக்கு தூங்கிக்கிட்டு இருந்தா போன் பண்ண மாட்டாங்களா? அப்ப கூட இந்த பொண்ணுங்க மிஸ்ட் கால்தான் தருவாங்களா? சச்சின் படத்துல சந்தானம் சொன்னது அசை போட்டு முடிக்கிறதுக்குள்ள என் வண்டியை ஐஸ்கிரீம் கடை முன் நிறுத்தியிருந்தேன்.





பேருந்து கூட்ட நெரிசலில் அவள்,
கசங்கியது என் மனம்.




வார்த்தைகள் இடம் மாறியது,
கண்டேன் அவளுள் இருந்த வேறோருத்தியை,
அவள் சிரித்து அப்போதுதான் பார்த்தேன்.
அவள் விழுங்கிகொண்டே இருக்க,
கரைந்துவிட்டு இருந்தது
எனக்கான ஐஸ்கிரீமும், என் பர்ஸும்.
வெளியே வந்தபோது என்மனதும்.



கடற்கரை,
மனம் முழுக்க புழுக்கத்துடன் மக்கள்,
கடல் நீரில் கால் நனைத்து விளையாடியது மடந்தை,
பிறகு, கரைமணல் நனைய கண்ணீர் விட்டழுதது,
ஒரு குழந்தையாய், ஒரு விதவையாய் இரு முகம்.

பட்டாணி, சுண்டல், சோன்பப்டி,
துப்பாக்கி எதையும் விடவில்லை அவள்,
எனக்குள் ஐயம்,
வாழ்வில் கடைசிநாளா அவளுக்கு?

சாலையில் குழிகள்,
திறமையான என் ஓட்டுனம்,
"இவன் நல்லவன், பெண்களை மதிக்கிறவன்"
சொல்லியது அவள் மனம்.




விடுதி விட்டு திரும்பிவருகயில்,
பிரிவின் துயரம்,
என் வாகனத்திற்கு.



மனம் முழுக்க அவள் நினைவுடன்,
உறக்கமில்லா ஒர் இரவு,
சம்மதம் சொல்வாளா அந்த வெண்புறா?
கையில் தொலைபேசி அழைத்து கேட்டுவிடலாமா?
நம்பர் போட்டு பலமுறை வைத்தாயிற்று,
இப்படியே காலை வரை..

விடியல் வர, வண்டியுடன் அவள் விடுதி பறந்தேன்
முன்னமே போய்கொண்டிருந்தாள்,
அவள் முன் என் வண்டி நிற்க,
குழப்பதுடன் என் முகம்,
குறும்புடன் அவள் "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?" என்றாள்.
"வாழ்க்கைக்குமா?" என்றேன் மனதில் கொண்ட தைரியத்துடன்.

ஒரு நிமிட நிசப்தம்,
தவறுக்காக குறுகுறுத்தது என் மனது,
"சே, தப்பு பண்ணிட்டியேடா"
இது என் மனம்.

"இந்த நிலைமையில் எனக்கு தேவையா இது?"
இது அவள் மனம்.

அருகிலிருந்த மரத்தின் சருகு சரசரத்தது,
இருவரின் கண்களும் புவி நோக்கி,
வறண்ட தொண்டை,
தடதடத்த கைகளுடன் நான்.

புன்முறுவலுடன் பின்னமர்ந்தாள்,
மெதுவாக நகர ஆரம்பித்தது எங்கள்
"வாழ்க்கை வண்டி"

Monday, September 4, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

குரோதம், துரோகம், இச்சை,
துவேஷம், தாபம் - எல்லாம் கடந்துவர;
இங்குமங்கும் அலைபாய்ந்தபடி
மனதினுள் கருமேகங்கள்.


நேற்று,
பொதுவழித்தடம் ஒன்றில்
காலடிப்பட்டு குற்றுயிருராய்
நான் கண்ட செடி.

இன்று,
புதிதாய்
துளிர்விட்டு நுனியில்
பனித்துளி ஏந்தி
என்னைப்பார்த்து புன்னகைத்தது.


நிமிர்ந்து பார்த்தேன்
தெளிவாய் வானம்,
என் மனமும்.

# தமிழ்ச்சங்கம் போட்டிக்காக இல்லை.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)