Monday, November 21, 2011

ஞாநியின் சொந்த ஊர் எதுவென்று தெரியுமா?

இந்த வார கல்கியில் ஞாநி எழுதிய இந்த கட்டுரை, நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை.... சில பதிவுகளை படித்தவுடன் நம் உணர்வுகளைப் பிரதிபலிப்பது போலவே இருக்கும். அப்படியாப்பட்ட பதிவுதான் இது. நான், பொதுவாக பதிவுகளை பிரதியெடுத்து வெளியிடுவது இல்லை எனினும், இந்தப் பதிவுக்காக அந்த விதியை சிறிதே தளர்த்திக் கொள்கிறேன். காரணம் நான் எழுதிய ஆணிவேர் என்ற கதையும் இதனை ஒட்டியே இருக்கிறது.  ஞாநி அவர்களை மாதிரியே நானும் பின்புலத்தில் என் சொந்த கிராமத்தில் பெயருடன் நானும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் போனமுறை ஊர் சென்ற போது, சாலை விரிவாக்கத்தில் அந்த மஞ்சள் நிற ஊர்ப் பலகையும் காணாமல் போய்விட்டது :(

இன்னும் சில நூறு பேரை இது சென்றடைய வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம். நன்றி: கல்கி, ஓ-பக்கங்கள்,இட்லிவடை,ஞாநி


சென்ற வருடம் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஒவ்வொரு விமான நிலையத்திலும் என் பாஸ்போர்ட் பெயரில் இருக்கும் பூர்விக ஊர் பெயரை அதிகாரிகள் கஷ்டப்பட்டுப் படிக்கும்போதெல்லாம், அந்த ஊரை இதுவரை நான் பார்த்ததே இல்லையே என்ற வருத்தம் மேலெழுந்துகொண்டே இருந்தது. எங்கள் குடும்பத்தில் என் அப்பாவைத் தவிர வேறு யாரும் அந்த ஊரைப் பார்த்ததில்லை.

ண்மையில் புரிசை கிராமத்தில் நடந்த புரிசை கண்ணப்ப தம்பிரானின் நூற்றாண்டுக் கலைவிழாவில் எங்கள் பரீக்‌ஷா குழுவின் நாடகம் நடத்த அங்கே செல்லவேண்டியிருந்தபோது, பயண வசதிகளை முடிவு செய்வதற்காக கூகுள் மேப்களை அலசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் புரிசையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் என் பூர்விக ஊர் நல்லூர் இருப்பதைக் கவனித்தேன். இரவு நாடகத்தை முடித்துவிட்டு, அதிகாலையில் நல்லூர் போகலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் நாடகம் முடியும்போது நள்ளிரவு ஒரு மணி. அந்த நேரத்திலும் சுமார் 100 பேர் நாடகம் பார்த்தார்கள். நாங்கள் சுமார் இரண்டு மணிக்கு புரிசை கிராமத்திலேயே ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கப் போனோம்.

ல்லூர் ஆற்காடு அருகே இருக்கும் கலவை என்ற சிறு நகரை ஒட்டிய கிராமம். நல்லூரை அடைந்ததும் எங்கே யாரிடம் என்ன சொல்லி எதை விசாரிப்பது என்று எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அந்த ஊரில் எங்கள் குடும்பத்துக்கு நிலம், வீடு எதுவும் இல்லை. உறவினர்கள் யாரும் இல்லை. என்னிடம் இருந்த இரண்டு தகவல்களில் ஒன்றால் எந்தப் பயனும் இல்லை.

என் தாத்தா முனுசாமி அந்த ஊரின் முன்சீப்பாக இருந்தவர். அடுத்து என் அப்பாவும் அந்தப் பரம்பரை முன்சீப் வேலையை ஓரிரு வருடம் பார்த்துவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டார். அப்பா ஊரை விட்டு வந்த வருடம் 1927! இன்னொரு தகவல் அப்பாவின் பங்காளி சகோதர உறவினரான நல்லூர் சோமசுந்தரம் என்பவர், விடுதலைப் போராட்ட வீரர் என்பதாகும்.

முதலில் ஒரு வீட்டு வாசலில் கண்ணில் பட்டவரிடம் கேட்டேன். அவர் எல்லாத் தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார். அவர் பெயர் முனுசாமி! பஞ்சாயத்து அலுவலக ஊழியர். சோமசுந்தரத்தின் வீடு இன்னும் இருப்பதாகவும் அவரது குடும்ப வாரிசுகள், உறவினர்கள் பலர் ஊருடன் தொடர்பில் இருப்பதாகவும் சொன்னார். ஊரில் இருக்கும் பழைய சிவன் கோயிலை அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருப்பதாகவும் சொல்லி என்னை அந்த சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று காட்டினார். சோமசுந்தரத்தின் வீட்டையும் சுற்றிக் காட்டினார்.

கோயிலும் வீடும் என் ஆர்வத்துக்குரியன அல்ல. அந்த அக்ரஹாரத் தெருவின் முடிவில் மிகப் பெரிய மரம் ஒன்று. அதன் வயது சுமார் 200 வருடங்கள் என்றார்கள். அதுதான் சுவாரஸ்யமான கற்பனைகளைத் தூண்டியது. இருபது வயது வரை இங்கே இருந்த என் அப்பா, அந்த மரத்தின் கீழ் விளையாடியிருப்பாரா, நண்பர்களுடன் அரட்டை அடித்திருப்பாரா என்றெல்லாம் யோசித்தேன்.

இப்போது ஊரின் மக்கள்தொகை சுமார் இரண்டாயிரம். சரிபாதி காலனியில் தனியே வசிக்கும் தலித்துகள். அப்பா காலத்தில் இதில் சரிபாதிதான் மொத்த மக்கள்தொகையாக இருந்திருக்கலாம்.

ஊருக்குள் நுழைந்து பஞ்சாயத்து ஊழியரைச் சந்தித்தது முதல், ஊரை விட்டுத் திரும்பி கலவை, ஆற்காடு வழியே சென்னை வந்தபின்னரும் கூட, எனக்கு நிறைய செல்பேசி அழைப்புகள் வந்தபடி இருந்தன. எல்லாரும் நல்லூரிலிருந்து தொலைதூர மாநிலங்கள், வெளியூர்கள் சென்று குடியேறியவர்கள். பெரும்பாலோர் சிவன் கோயிலைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பல நூறு வருடங்கள் முந்தைய பழைய கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய பெருமையும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்தது.

எனக்கு ஆர்வமில்லாத விஷயம் அது. என்னை இன்னமும் உறுத்தும் கேள்வி ஏன், தங்கள் சொந்த ஊரை விட்டு, தொழில் நிமித்தம் வெளியூர் சென்று வாழ்வோர் பலரும் (எல்லோரும் அல்ல), ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்போது, முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். படிப்பு தான் அவர்களை உலகம் சுற்ற வைத்தது. அந்தப் படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை?

கலவை பகுதியில் ஆண்களை விடப் பெண்களே மக்கள் தொகையில் அதிகம். ஆனால் பெண்களின் எழுத்தறிவு 59 சதவிகிதம்தான். நல்லூர் கிராமத்தில் ஒரு நூலகத்தைப் பார்த்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஒவ்வொரு வேளையும் ஒரு உறவினர் வீட்டில் போய் சாப்பிட்டுப் படிக்க வேண்டிய வறுமையில் இருந்த என் அப்பாவையும் அடுத்து எங்களையும் வறுமையிலிருந்து விடுவித்தது படிப்புதான்.

சொந்த ஊர் என்பது சிலருக்கு நெகிழ்வான உணர்வுகளை எழுப்புகிறது. எனக்கும் செங்கற்பட்டு அப்படிப்பட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனக்கு அதுதான் சொந்த ஊர். ஆனால் ஒவ்வொரு முறை செங்கற்பட்டுக்குப் போகும்போதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவது பழைய நினைவுகள்தான். இப்போதைய ஊரைப் பார்க்கும்போது அதிர்ச்சியும் கோபமும் வருத்தமும்தான் வருகின்றன. ஊரே கடை வீதியாக மாறிவிட்டது. சாலைகள் எல்லாம் யுத்தம் நடந்த பூமி போல இருக்கின்றன.

நண்பர்களோடு மகிழ்ச்சியாகச் சென்று உலாவிய ரேடியோ மலை மர்ம தேசமாகி விட்டது. வேறு எந்த ஊரிலும் எனக்குத் தெரிந்து ஊருக்கு நடுவே சிறு குன்று கிடையாது. அதன் மீது ஒரு பூங்கா, நகராட்சியின் வானொலி எல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. அதனால்தான் ரேடியோ மலை என்று பெயர். அண்மை யில் சென்றபோது குன்றேறிப் பார்த்தேன். அங்கே இருந்த அச்சுறுத்தும் தோற்றத்தில் சிலர் முறைத்த முறைப்பில் திரும்பிவிட வேண்டியதாயிற்று.

நான் தவறாமல் மாலை நேரங்களில் நண்பர்களுடன் சடுகுடு விளையாடிய வேதாசலம் நகர் அழகேசனார் தெரு பூங்காவும் விளையாட்டுத் திடலும் சிதிலமடைந்து கிடந்தன. அதை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருந்தார்கள். வருடம் முழுவதும் விதவிதமான விளையாட்டு வீரர்களுடன் உயிர்த்துடிப்போடு காணப்பட்ட சீர்திருத்தப்பள்ளி விளையாட்டுத் திடல் பாழடைந்து ரயில்வேயின் கோடவுனாகக் கிடக்கிறது. குளவாய் ஏரியைத் தூர்த்து ப்ளாட் போடவேண்டியது மட்டும்தான் பாக்கி. அதன் ஆயக்கட்டு வயல்கள் எல்லாம் பைபாஸ் சாலையினால் ஏற்கெனவே ப்ளாட்டுகளாகிவிட்டன.

ஒரு காலத்தில் நமக்குப் பெருமகிழ்ச்சி தந்த பல விஷயங்கள் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவை ஆகிவிடுகின்றன. இளம் வயதில் தினசரி மணிக்கணக்கில் அரட்டை அடித்த நண்பனை முப்பது வருடம் கழித்து சந்திக்கும்போது, பழைய சந்தோஷங்களின் தொடர்ச்சியாக இப்போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின் இருவருக்கும் பேச எதுவுமில்லை. பகிர எதுவுமில்லை. கால ஓட்டத்தில் இருவரின் மதிப்பீடுகளும் வெவ்வேறு திசைகளில் போய்விட்டதே காரணம். மாறாக ஒரு வாரம் முன்பு அறிமுகமான ஒருவருடன் மணிக்கணக்கில் பேசுகிறோம். இருவருக்கும் இடையில் பொது அக்கறைக்குரியவை நிறையவே இருப்பதே காரணம்.

உறவுகளைச் சடங்குகளாகவோ, அல்லது வெறும் பழக்கத்தினாலோ அல்லது வேறு வழியில்லாமலோ தொடரும் போது அவை சுமையாக மாறுவதுதான் நிகழும்.

உறவாடக் கற்றுக்கொள்வோம் என்பதுதான் நான் அண்மையில் குடந்தையில் நடத்திய ஒரு பயிலரங்கத்தின் செய்தி. லயன்ஸ் க்ளப் இதை ஏற்பாடு செய்திருந்தது. லயன்ஸ் மாவட்டம் 324ஏவின் இப்போதைய ஆளுநர் ராமராஜன் இந்த வருடம் வித்தியாசமான சில பயிலரங்குகளை நான் நடத்தித் தரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். நானும் என் தோழி பத்மாவும் அவற்றைச் செய்து தரப் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

லயன்ஸ் உறுப்பினர்கள் தம்பதிகளாக வந்து பங்கேற்கும் பயிலரங்கம் இது. அரசியல், கல்வி, மீடியா, வணிகம் எல்லாமே கடும் சிக்கல்களுடன் இருக்கும் சூழலில், தனி வாழ்க்கையில் உறவுகளும் எவ்வளவு சிக்கலாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர்ந்து என்ன செய்யலாம் என்ற கவலையிலும் ஏக்கத்திலும் இருக்கிறார்கள். போலி கௌரவமும் அதிகாரப் பார்வையும்தான் பல உறவுகளை நாசப்படுத்துகின்றன. அன்பும் பரஸ்பர மதிப்பும் மட்டுமே நம்மை மீட்கும்.

இன்னொரு பயிலரங்கம் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு, பத்து வாழ்க்கைத் திறன்களை அறிமுகப்படுத்துவதற்கானது. மாணவர்கள் துடிப்பாக இருக்கிறார்கள். ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வசதிகளும் வாய்ப்புகளும் மட்டும் தான் குறைவாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பயிலரங்கங்கள் அவர்களுக்கு நீந்திக் கரையேறக் கிடைக்கும் இன்னொரு துரும்பு.

மயிலாடுதுறையில், நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நூறாண்டுகளுக்கு மேலாக நடக்கும் அந்தப் பள்ளியின் வரலாறு பிரமிப்பானது. எழுத்தாளர்கள் கல்கி, துமிலன், சா.கந்தசாமி, தி.மு.க. தலைவர் பேராசிரியர் அன்பழகன், இன்னும் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகள் பலர் படித்த பள்ளி இது என்று அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்படிப்பட்ட பள்ளியில் ஒரு நூலகம் இல்லையென்று தெரிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இருநூறு கோடி ரூபாயில் ஒரு கனவு நூலகத்தை, சென்னையில் அமைக்கிறோம். இருநூறு ஊர்களில், இரண்டாயிரம் பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. அல்லது இருந்தும் இல்லாத நிலை. மயிலாடுதுறை பள்ளியில் ஆயிரக் கணக்கில் நூல்கள் உள்ளன. ஆனால் நூலகர் பதவிக்கு ஆள் நியமிக்கப்படவில்லை. பள்ளிகளில் காவலர் (வாட்ச்மேன்), துப்புரவுப் பணியாளர் பதவிகளெல்லாம் கூட அரசால் நியமிக்கப்படாத நிலைதான் பல பள்ளிகளில் இருக்கின்றன. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தொகுப்பு ஊதியத்தில் சிலரை ஒரு சில ஊர்களில் நியமிக்கிறார்கள்.

ஒவ்வொரு பயணமும் நம் சூழல் எவ்வளவு சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கூடவே அதையெல்லாம் தாண்டி எழுந்து வருவதற்கான துடிப்போடும் ஆர்வத்தோடும் தேடலோடும் இன்னொரு தலைமுறை உருவாகிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பையும் இந்தப் பயணங்கள் எனக்குத் தருகின்றன.

முசிறியில் மாணவர் பயிலரங்கம் முடிவில் அன்றைய அனுபவத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டதும் அலை அலையாக எழுந்து வந்து முதல் முறை மைக் முன்னால் பேசிய அத்தனை முகங்களும் குரல்களும் மறக்க முடியாதவை.

13 comments:

  1. அற்புதமான கட்டுரை நிச்சயம் அனைவரும் இதைப்படித்து தங்கள் ஊரைப்பற்றி எழுதவேண்டும்...

    காலங்கள் கரைந்தாலும் நினைவுகள் கரைவதில்லை...

    ReplyDelete
  2. இளா,

    வசதி வாய்ப்பில்லாத சூழலில் பிரிந்திருந்து ,பிழைப்பே பெரும் பாடாக இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் இருந்து இருக்குமானால் நெகிழ்வாக இருக்கலாம். ஆனால் அமெரிக்கா போய் அங்கே இமிக்ரேஷ்அனில் சொல்லும் போது தான் ஆஹா சொந்த பார்க்கலையேனூ ஞானம் வருதாம், அவர் என்ன இப்போ தான் கல்லூரிப்படிப்பை முடித்து வேலைக்காக அமெரிக்கா போராரா?நிறைய பேருக்கு வெளிநாடுப்போனா தான் இந்தியன் என்ற நினைவே வரும்!

    அவர் வேலையே ஊர் சுற்றுவது தானே நல்லூர் என்ன ஆப்பிரிக்காவிலா இருந்தது.ஊர் எங்கே இருக்குனு கூகிள் மேப்ல தான் தெரிய வருதாம். அவர் ஊரப்பத்திக்கூட அதிகம் வீட்டில பேசிக்கொண்டது இல்லையா?

    வெளியூரில் போய் செட்டில் ஆனவங்க சொந்த ஊருக்கு எதவாது செய்யணும் என்றால் ஏன் கோயிலுக்கு செய்யறங்க நூலகம் அமைக்கலாமே என்கிறார். ஆனால் அவர்களாவது ஊருடன் தொடர்பில் இருந்து இருக்கிறார்கள், ஆனால் இவர் இப்போ தான் நியாபகமே வருது என்னக்கொடுமை இவர் கேள்விக்கேட்கிறார்!(இதில் ஒரு லாஜிக் இருக்கு கண்டுப்பிடிங்க)

    சரி இன்னும் 10 ஆண்டுகள் கழித்து ஞாநி முயற்சியில் நல்லூரில் நூலகம் வருதா பார்ப்போமே!

    //இப்போது ஊரின் மக்கள்தொகை சுமார் இரண்டாயிரம். சரிபாதி காலனியில் தனியே வசிக்கும் தலித்துகள்.//

    இது போன்ற சூழல் இந்த காலத்திலும் இவரோட சொந்த கிராமத்திலேயே இருக்கேனு கவலை இல்லை ஆனால் கிராமத்தில நூலகம் இல்லை என வருந்துகிறார், ஏன் எனில் அங்கே தனியே வசிக்கும் காலனி மக்கள் போய்ப்படிக்க மாட்டாங்களே அதனால் இருக்குமோ?

    மேலும் மாவட்ட நூலகங்களுக்கான நிதியை எடுத்து தான் பிரம்மாண்டமான அண்ணா நூலகம் கட்டப்பட்டது அதுக்கு ஆதரவு தெரிவித்தார் , இவர், ஆனால் அப்போது ஏன் மாவட்டங்களுக்கான நிதியை எடுத்து இந்த ஆடம்பரம்னு கேட்கலையே.பிச்சைக்காரன் ஒரு பதிவு போட்டு இருக்கார் இது பத்தி.

    ReplyDelete
  3. //நிறைய பேருக்கு வெளிநாடுப்போனா தான் இந்தியன் என்ற நினைவே வரும்!.//
    அட நெசமாத்தாங்க. பிரிஞ்சாதான் அதனோட வலி தெரியும். அதுவரைக்கும் தெரியாது.

    ReplyDelete
  4. புதிய தகவல்... ஞாநி செங்கல்பட்டை சேர்ந்தவர் என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்திருந்தேன்...

    ReplyDelete
  5. எழுத்துப்பிழை!

    அவரு பேரு ஞாநி ங்க! :)

    ReplyDelete
  6. நன்றிங்க வருண்.. மாத்திட்டேன்

    ReplyDelete
  7. சொந்த ஊர்ல இருக்கறவங்க பெருமைப்பட்டுக்கலாம்.. வெளியூர் போக நேருபவர்கள் யோசிக்கலாம்.

    ReplyDelete
  8. வவ்வால் கவனத்துக்கு: நல்லூர் செல்வது பற்றி நான் ஒன்றும் அமெரிக்கா போனதும் முதல்முறையாக யோசிக்கவில்லை. அங்கே என் பாஸ்போர்ட்டிலிருந்து பெயரை உச்சரிக்கும்போது தவறாக முன்னெழுத்த் ஊர் பெயரை உச்சர்த்தபோது அந்த ஊருக்கு இன்னும் போகவில்லையே என்று தோன்ரியதைக் குறிப்பிட்டிருக்கிறேன். இதே கட்டுரையில் அப்பா உயிர்ப்ப்டு இருந்தபோது அவருடன் நாங்கள் எல்லாரும் நல்லூர் செல்வது பற்றி திட்டமிட்டு நடக்காமலே போனதையும் சொல்லியிருக்கிறேன். அப்பா இறந்தது 1997ல். நான் அமெரிக்கா போனது 2010ல். நல்லூர் செல்வது பற்றி பெரிய ஆர்வம் எங்களுக்கு நீண்ட காலமக இல்லாததற்குக் காரணம் அது எங்களுக்கு சொந்த ஊர் அல்ல. அப்பாவுக்குதான் சொந்த ஊர். என் சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் பிறந்து வளர்ந்த செங்கற்பட்டுதான் சொந்த ஊர். அப்பா கூட நல்லூரிலிருந்து புலம் பெயர்ந்து செங்கற்பட்டில் பள்ளியில் படித்திருக்கிறார்.வேலூரிலும் சென்னையிலும் கல்லூரிப்படிப்பு.பின்னர் நல்லூர் சென்றிருக்கிறார். அங்கே சுமார் 20,21 வயது வரை இருந்திருக்கிறார். அவருக்கும் அங்கே வீடு , நிலம் எதுவும் இருந்ததில்லை. அப்பா இளமைப்பருவத்தில் இருந்த ஊர் எப்படியிருக்கும் என்ற கியூரியாசிட்டியில் மட்டுமே அங்கே செல்ல நினைத்தோம். செங்கற்பட்டுதான் என் ஊர். அத்துடன் எனக்கு தொடர்ந்து தொடர்பு இருக்கிறது. நீங்கள் என்னைத் தொடர்ந்து படித்தவர் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் தவறாக நான் அண்ணா நூலகம் கட்டுவதை ஆதரித்தேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.கலைஞர் ஆட்சியில் நூலகம் கட்டும்போதே அது தேவையில்லை என்றும் மாவட நூலகங்களைத்தான் மேம்படுத்தவேண்டுமென்றும் நான் எழுதியிருக்கிறேன். இப்போது கட்டிவிட்ட நிலையில் மாற்றவேண்டியதில்லை என்று சொன்னேன்.பிச்சைக்காரன் ப்ளாகிலேயே இதெல்லம் தெளிவாக இருக்கிறது. கிராமத்தில் நூலகம் இல்லையே என்று நான் வருத்தப்படும்போது அது ஊர், காலனி இரண்டுக்கும் சேர்த்துத்தான். அப்படி பிரித்து வைத்தவன் நானல்ல.இந்த சமூகம். அதைக் கண்டித்து விமர்சித்து தலித் சமத்துவ அதிகாரப்படுத்தல் ( dalit equality and empowerment) பற்றி பல முறை பல வருடங்களாக எழுதிவருகிறேன்.. என்னைத்தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இதெல்லாம தெரியும்.

    ReplyDelete
  9. ஞாநி(இப்போ சரியா எழுதிட்டேன்) கருத்திற்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. ஒரு ஊர்ல கோவில் அப்படின இப்போ இருக்கற நூலகம், பள்ளிக்கூடம் எல்லாம் சேர்ந்ததா பல காலம் முன்னாடி இருந்தது. அதனால கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்னு சொனாங்க, எல்லோரும் வசதி வந்தப்புறம் ஊருக்கு கோவில் கட்டி இல்ல புனரமாச்சு தந்தாங்க. ஆனா இப்போ அப்படி இல்ல நிலைமை. இவர் சொல்றது போல் நூலகம் தான் சரி.

    ReplyDelete
  11. nice article... thanks to share.... www.rishvan.com

    ReplyDelete
  12. ஞாநி அவர்களுக்கு வணக்கம்,

    தங்களது பதிலுக்கு நன்றி. மிக தாமதமாக இப்போது தான் பார்த்தேன், மன்னிக்கவும்.

    நீங்கல் எண்ணியதில் தவறில்லை ஆனால் எல்லா வகையிலும் வாய்ப்புள்ள ஒருவர் இத்தனை தாமதமாக செய்வதா என்ற ஆதங்கமே நான் சொன்னது.நீங்கல் ஒரு பறவையைப்போல சுற்றி வருபவர் என்பதால் முன்னரே செய்திருக்கலாம் என்று எண்ணினேன்.

    // நல்லூர் செல்வது பற்றி பெரிய ஆர்வம் எங்களுக்கு நீண்ட காலமக இல்லாததற்குக் காரணம் அது எங்களுக்கு சொந்த ஊர் அல்ல. அப்பாவுக்குதான் சொந்த ஊர். என் சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் பிறந்து வளர்ந்த செங்கற்பட்டுதான் சொந்த ஊர். //

    ஒரு வேளை உங்கள் வாரிசுகளுக்கு வேண்டுமானால் செங்கல்ப்பட்டு சொந்த ஊர் ஆக முடியும், ஒருவரின் தந்தை, தாத்தா என மூதாதையர் பிறந்த வாழ்ந்த இடமே சொந்த ஊர் என சொல்வார்கள்.என்பது எனது எளிய கருத்து.

    இப்பவும் சென்னைல பிறந்து வளர்ந்தவர் சொந்த ஊர் எதுனு கேட்டா அவங்க அப்பா,தாத்தா என பிறந்து வாழ்ந்த ஊரை சொல்வார்கள் அப்படி சொல்லாமல் சென்னை என சொன்னாலும் விடாமல் தோண்டிக்கேட்பார்கள் மக்கள்.

    நீங்க கூட கடவு சீட்டு பெரும் போது சொந்த ஊர் செங்கை எனக்கொடுத்து இருந்தால் நீங்கள் அதுவரை போகவே போகாத நல்லூர் அமெரிக்கா வரைப்போய் இருக்காது ::-))

    //நீங்கள் என்னைத் தொடர்ந்து படித்தவர் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் தவறாக நான் அண்ணா நூலகம் கட்டுவதை ஆதரித்தேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.கலைஞர் ஆட்சியில் நூலகம் கட்டும்போதே அது தேவையில்லை என்றும் மாவட நூலகங்களைத்தான் மேம்படுத்தவேண்டுமென்றும் நான் எழுதியிருக்கிறேன். இப்போது கட்டிவிட்ட நிலையில் மாற்றவேண்டியதில்லை என்று சொன்னேன்.//

    தொடர்ந்து படித்தது இல்லை ஆனால் அவ்வப்போது படித்துக்கொண்டு இருக்கிறேன்.

    உங்கள் கருத்தென்ன என்பதை புரிந்துக்கொண்டேன்.

    உங்களது ஓ பக்கங்கள் படித்து 49-ஓ பிரிவின் படி வாக்களிக்க விரும்பவில்லை என பூத்தில் சொல்லி உரிமை பிரச்சினைக்கூட செய்தேன் . உங்கள் மூலமாக தான் எனக்கு அது பற்றிய விழிப்புணர்வே ஏற்பட்டது.நன்றி!

    //கிராமத்தில் நூலகம் இல்லையே என்று நான் வருத்தப்படும்போது அது ஊர், காலனி இரண்டுக்கும் சேர்த்துத்தான். அப்படி பிரித்து வைத்தவன் நானல்ல.இந்த சமூகம். அதைக் கண்டித்து விமர்சித்து தலித் சமத்துவ அதிகாரப்படுத்தல் ( dalit equality and empowerment) பற்றி பல முறை பல வருடங்களாக எழுதிவருகிறேன்.. என்னைத்தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இதெல்லாம தெரியும்.//

    புரிகிறது சார், ஆனால் போற போக்கில் தனியே வசிக்கும் தலித்துகள் என்று சொல்லிவிட்டு போனீர்கள். இந்த காலத்திலும் ஏன் இப்படினு ஒரு வார்த்தை சேர்த்து உங்கள் ஆதங்கத்தினை அங்கும் பதிவு செய்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.

    கிராமங்களில் உள்ள அரசு கிளை நூலகமாக இருந்தாலும் அதில் சென்று அமர்ந்துப்படிக்க தலித்துகல் அஞ்சும், அல்லது தயங்கும் சூழல் தான் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. இன்னமும் டீக்கடைகளில் இரட்டைக்குவளை இன்ன பிற ஜாதிய அடக்கு முறைகள் உள்ளது என்பது நீங்கள் அறியாதது அல்ல.

    ReplyDelete
  13. சொந்த ஊர் என்றும் பதமான நினவுகளை எழுப்புதலை
    அனைவரும் ஒத்துக் கொள்வர்.ஞானிக்கு நன்றி.உணர்வு மிகு இது போன்ற கட்டுரைகளையும் அடிக்கடி அல்லது எப்போதாவது எழுதுக.பி.கு பிரமிளுக்கு பூர்வீகம் இலங்கையாமே ? நிஜமா ? ஆரா
    kavignarara@gmail.com

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)