கொழிஞ்சிக்காட்டூர் முழுக்க ஒரே பேச்சு. அது காளியம்மாள் மகன் செந்தில்குமார் ஆஸ்கார் விருது வாங்கப் போகிறார் என்பதே. காடு, மேடு, கழனி, ஆடு மேய்க்கிறவங்கள்ல ஆரம்பிச்சு இதைப்பத்தியே பேச்சு எங்கே பார்த்தாலும். அந்த ஊர் சங்ககிரியிலிருந்து 16 மைல் தள்ளி இருந்தது. டவுன் பஸ் மட்டுமே நிற்கும், அதுவும் மேட்டுக்கடையில்தான். அங்கே இருந்து 3 கிலோமீட்டர் உள்ளே இருக்கு கொழிஞ்சிக்காட்டூர்.
அந்த கிராமத்துல பொறந்து காலேஜ் வரைக்கும் படிச்சவர் செந்தில். படிச்ச BA-Economicsக்கு வேலை கிடைக்காததால ஊரிலே இருக்கிற 3 ஏக்கர் மேக்காடை 2 வருஷமா உழுது அதுவும் வயித்துக்கு, மனசுக்கு பத்தாதால சென்னையில சினிமா டைரக்டர் ஆவனும்னு ஆவலோட பஸ் ஏறின செந்திலபத்தி இப்போதான் ஊர் மக்களுக்கு தெரிய வந்து இருக்கு. அவர் நண்பன் சின்னகண்ணுக்கும், அவுங்க அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியும் இந்த 3 வருஷத்துல என்ன நடந்துச்சுன்னு. போன வருஷம் மாரியம்மன் பொங்கலுக்கு கூட வரலை.
மணி ராத்திர் 7, ஊர்க்கவுண்டர் வீட்டுக்கு முன்னாடி ஊர்சனம் மொத்தமும் காத்து இருந்தது. அவரு வீட்டுல மட்டுந்தான் குடை வெச்சு ஸ்டார் டிவி வரும். பஞ்சாயத்து டி.வில இன்னும் பொதிகைதானே. ஊர்கவுண்டர் பையன் சின்னகண்ணு, அவர்தான் செந்தில் கூட நெருக்கம். அதுவுமில்லாம அவர்கிட்டேதான் செந்திலு அடிக்கடி பேசிக்குவாராம்.
"செந்திலு, ஒரு சினிமா எடுத்து இருக்காப்ல. அதுக்கு பேரு Documentary. சின்னப்படம்னு சொல்லலாம். அந்தப்போட்டிக்கு உலகத்துல இருந்து மொத்தம் 358 படம் வந்துருக்கு அதுல நல்லதா 5 படத்தை கடேசி ரவுண்ட் வரைக்கு வந்து இருக்கு. அதுல நம்ம செந்திலுதும் ஒன்னு. காளியம்மா இது வரைக்கும் பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்கே விடிவு காலம் வந்துரும். இந்தப்போட்டியில செந்திலு ஜெயிச்சுட்டா லட்சக்கணக்குல பணம் வந்துரும். அப்புறமா காளியம்மா காட்டுலயும் வேல பார்க்க வேணாம், கால் மேல கால் போட்டுக்கிட்டு இருக்கலாம்" அப்படின்னு முடிச்சாரு சின்னகண்ணு.
புரிஞ்சும் புரியாத மாதிரியும் பல அம்மாக்கள் வாயைப்பிளந்துகிட்டு புரியாத அந்த ஸ்டார் டி.வியப் பார்த்துக்கிட்டு இருக்க. குட்டி செவுத்து மேல உட்காந்துகிட்டு இருந்த இளவட்டங்க "ஏன் மாப்ள. செந்திலு அவ்ளொ பெரிய ஆள் ஆயிட்டானாடா? கிஸ் சீனு வெச்சு இருப்பானோ அவன் படத்துல"ன்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுது. காளியம்மாவுக்கு அன்னிக்கு சேர் போட்டு முன்னாடி உட்கார வெச்சு இருந்தாங்க. அந்தப் பெருமை போதுமே. இந்த 2 வருஷமா செந்தில் அனுப்புற 2000 ரூவா பணத்தையே காளியம்மாவால செலவு செய்ய முடியல. ஊர்கவுண்டர் வீட்டுக்கு செந்திலு வாரவாரம் தவறாம போன் பண்ணி பேசுனதனால அவர் ஊருக்கு வராததுகூட பெரிசா தெரியல.
சேர்ல இருந்து திரும்பி உட்காந்து இருந்த மக்கள பார்த்துச்சு காளியம்மா. ஆம்பளைங்க எல்லாம் கயித்துக்கட்டில்ல உட்காந்து இருக்க, பொம்பளைங்க கீழே உட்காந்து காளியம்மாவை பொறாமையா பார்த்துட்டு இருந்தாங்க. "பாழாய் போன கண் ஆப்ரேஷன் பண்ணி 10 நாள் கூட ஆவல, பெரிசா கருப்புல கண்ணாடி வேற போட சொல்லி, கழட்டவும் கூடாதுன்னுட்டாங்க. டிவி வேற மங்களாய் தெரியுது" பையனை நல்லா பார்க்கனும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு இருந்தா காளியம்மா.
யாரோ யாரோ வராங்க குத்துவிளக்காட்டம் ஒன்ன வாங்கிட்டு போறாங்க. ஏதேதோ பேசுறாங்க, மக்களுக்கு ஒன்னும் புரியல. சின்னகண்ணு திடீர்னு "செந்திலு போட்டி வந்துருச்சு, கம்னு இருங்க"ன்னு சொல்ல எல்லார் கண்ணும் டிவி மேலையே இருக்க.
The Award Goes to the Documentary Film "one and only by Senthil kumar" அப்படின்னு சொல்ல கேமரா எல்லாம் செந்திலை நோக்கி திரும்பியது. கோட் சூட் போட்ட செந்திலு சந்தோசமா எழுதிருச்சு மேடையப் பார்த்து நடக்க, ஊரு சனம் அத்தனை வாய் பிளந்து பார்த்துச்சு. ஓட்டைபனியனும், கிழிஞ்ச லுங்கியுமா பார்த்தவனை இப்படி பார்க்க காளியம்மாவுக்கே ஒரு நிமிஷம் "எம்மவனா" அப்படின்னு ஆச்சர்யப்பட்டுருச்சு. "செந்தில் படத்துகு விருது கிடைச்சு"ன்னு சின்ன கண்ணு சொல்ல "செந்திலு ஏதோ இங்கிலீசு பேசி அந்த குத்துவிளக்குக்கு முத்தம் குடுத்துட்டு கீழே இறங்கி போய்ட்டாரு. "ஆத்தா, உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சின்னகண்ணு சொல்ல,
"காளியாத்தா, செந்தில பார்த்தியா, தொரை மாதிரியே இருக்கான். சுத்தி போடுக்கா" "ஆத்தா செந்திலா இது. வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்" "பங்காளி, எப்படிடா இப்படி ஆனான் இவன், எல்லாம் பணம் பண்ற வேலை" ஊர் மக்கள் அவுங்க அவுங்க மாதிரி பேசிட்டு எழுந்திருச்சு காளியம்மா கிட்டே வர . கருப்பு கண்ணாடி வழியே இரு கண்களிலும் கண்ணீர் வழிய அசையாம டிவிவே பார்த்துட்டு இருந்தா காளியம்மா. "காளியம்மா" தொட்டு எழுப்ப "உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சொன்ன அடுத்த வினாடியே சந்தோசத்துல உசுரு போயிருந்தது காளியாம்மாவுக்கு.