Wednesday, August 1, 2007

* கபி அல்வித நா கெஹனா

Chatting எதுக்கு பண்றோம்? நட்பு வட்டத்தை பெரிசு பண்ணவும், புதுசா நட்பை ஏற்படுத்திக்கவும், இருக்கிற நட்பு தொடர்கிறதுக்கும், அப்படியே நேரத்தைக் காலி பண்ணவும்தான். ஆனா, சில நேரத்துல சேட்டிங் நட்பு தொடர்வது இல்லேங்கிறது மட்டுமில்லாம நிறைய கஷ்டத்தையும் குடுத்துட்டு போயிருது. நான் சொல்லப்போற விஷயமும் அதுல ஒன்னுதான்.

எனக்கும் இப்படியாப்பட்ட நட்புகள் கிடைச்சு இருக்காங்க. அதுல Professionalஆ உதவி பண்றா மாதிரி நட்பும் உண்டு. ஒரு Techinical Forum வழியா நட்பாகி பிறகு ஊர் பேர் தெரிஞ்சுகிட்டு சந்திச்சுகிட்டு இருக்கோம், இன்னும் Professionala பிரச்சினை வந்தா உடனே chattingla உக்காந்து சந்தேகம் கேட்டுக்குவோம், என் தொழிலுக்கு ஒரு பெரிய கேங்கே இருக்கு. ஆனா அவுங்க தனிப்பட்ட வாழ்க்கைய பத்தி இதுவரைக்கும் கேட்டுகிட்டது இல்லீங்க .


Group Chatன்னு ஒன்னு நடக்கும், அதுதான் சூப்பரான மேட்டர். ஒரு குரூப் ரூம் ஆரம்பிச்சு 10 இல்லைன்னா 20 பேர் கும்மி அடிச்சுட்டு இருப்பாங்க. நாம எல்லாரும் சேர்ந்து, ஒன்னா ஒரு இடத்துல உக்காந்து பேசிக்கிற மாதிரியே இருக்கும், அது மாதிரிதான் ஒரு நாள் சென்னைகலக்கல்ஸ்'ங்கிற பேர்ல ஒரு Group Chat நடந்துகிட்டு இருந்துச்சு. அன்னிக்கு தலைப்பு பெண்ணீயம். இதைப்பத்தி மக்கள் கும்மி அடிச்சுட்டு இருக்கும் போது ஒரு PM(Personal Message) வந்துச்சு "இதைப் பத்தி பேசாதீங்க இளா, அவுங்க பேசிட்டு போகட்டும்"னு ஒரு அன்பு கட்டளை வந்துச்சு. அப்புறமா எங்கேயாவது குரூப் சேட்ல பார்த்த PM பண்ணி பேச ஆரம்பிச்சோம். அப்படியே சாப்பிடீங்களா, காபி குடிச்சீங்களான்னு பேச ஆரம்பிச்சு நட்பான அந்தப் பொண்ணு பேரு "ஜானகி" (அவுங்க பேர மாத்தி வெச்சு இருக்கேன்).ப்படியே நாளடவில கொஞ்சம் கொஞ்சமா நட்பு
 நெருக்கம் ஆகி பொது விஷயங்களை விட்டு தனிப்பட்ட விஷயங்கள பேச ஆரம்பிச்சோம். அப்போ, ஜானகி yahoo, hotmail Chat Messengerல, Status மெஸேஜ் "Kabhi Alvida Naa Kehna" போட்டு வெச்சு இருப்பாங்க, அப்போ அதுக்கு அர்த்தம் என்னான்னு தெரியல. நட்பு & ஆண், பெண் என்கிற வட்டத்த விட்டு வராத நட்புன்னு ஆகிப்போச்சு. Chatன்னு இருந்த நட்பு நாளடைவில போனுக்கு மாற ஆரம்பிச்சது.

அவுங்க கூட போன்ல பேச ஆரம்பிச்சது 2003 ல இருக்கலாம் ஞாபகம் இல்லே. வாரத்துல 10-20 நிமிசம் பேசிக்குவோம், அந்த வாரம் என்ன நடந்துச்சுன்னும், கஷ்டங்களையும் சோகத்தையும், ஃபோனேல பேச ஆரம்பிச்சோம். என் பொறந்த நாளுக்கு நடுராத்திரியில வாழ்த்து சொல்ல கூப்பிட்டு எங்கம்மாகிட்ட திட்டு வாங்கி பின்னாடி சமாதானமாகி எங்க வீட்டுக்கு நல்லா தெரிஞ்ச, ஒரு நல்ல ஸ்னேகிதியா ஆனாங்க.

அவுங்களுக்கு கல்யாணம் நிச்சயமானப்போ நான் நொய்டாவுல இருந்தேன். நண்பர்களுக்கு எல்லாம் விருந்து குடுத்து சந்தோசப் பட்டேன். அவுங்க கல்யாணத் தேதி சொன்ன போதுதான் எனக்கும் இன்னும் கலக்கமாகிருச்சு. என்னோட கல்யாணத்துக்கு அடுத்த வாரம் அவுங்க கல்யாணத் தேதி குறிச்சு இருந்தாங்க. சரி, ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு தெரிஞ்சு போயிருச்சு, கல்யாணத்துலயாவது நேர்ல பார்த்துக்கலாம்னு இருந்தோம். ஆமாங்க நாங்க சந்திச்சுகிட்டதே இல்லே. அப்புறமா சென்னைதானே வரப்போறாங்க அப்போ குடும்ப சகிதமா பார்த்துக்குவோம்னு ரெண்டு பேருமே பேசி முடிவெடுத்து விட்டுட்டோம். கல்யாண வேலையில் நானும் பிஸியா இருந்தேன். ஃபோனோ, மெயிலோ கூட இல்லாம் 3 மாசம் ஓடிப்போயிருச்சு.


ஜானகியோட அவுங்க சென்னை நம்பர் வாங்கலாம்னு அவுங்க வீட்டுக்கு கூப்பிட்ட போது எடுத்தது அவுங்க அண்ணன் "ஜானகி, அவளோட சென்னை நம்பரை உன்கிட்ட தரவேணாம்னு சொல்றாடா, உங்களுக்குள்ள என்னடா பிரச்சினைன்னு?"ன்னு அவுங்க அண்ணன் கேட்டபோதுதான் ஏதோ பிரச்சினைன்னு தோணிச்சு . அவுங்க அண்ணன்கிட்ட அதுக்கு மேல பேச ஒன்னுமில்லைன்னு முடிவு பண்ணிட்டு, எப்படியும் ஒரு நாள் கூப்பிடதான் போறா அன்னிக்கு கேட்டுக்கலாம்னு நினைச்சுகிட்டேன். ஆனா ஜானகி என்னைக் கூப்பிடவும் இல்லே, மெயிலும் போடலை. வயித்து பொழப்புக்காக வேற நாட்டுக்கு நானும் போயிட்டேன்.


கிட்டதட்ட ஜானகியோட நட்பு முடிஞ்சுருச்சு அப்படின்னு முடிவு பண்ணி, அவுங்களைப் பத்தி சுத்தமா மறக்குற நேரத்துல தான் ஜானகிக்கிட்ட இருந்து சின்னதா ஒரு மெயில் வந்துச்சு. "இளா, நான் இப்போ 3 மாசம் முழுகாம இருக்கேன், வீட்ல சொல்லிடு, நல்லா இருக்கேன்" அவ்ளோதான். எனக்கு ஒரு சந்தோசம் மெயில் பார்க்கற வசதி வந்துருச்சு போலன்னு நெனச்சுகிட்டு "நல்லா இரு, ஒடம்ப பத்திரமா பார்த்துக்கோ" ன்னு ஒரு ரிப்ளை போட்டேன். ஒரு பத்து நாள் கழிச்சு ஒரு பெரிய மெயில் வந்துச்சு. அதுல ஜானகியோட வீட்டுக்காரர் ரொம்ப "பொஸசிவ்", வேற ஆம்பிளைங்கிட்டே பேசினா ஒரு மாதிரியா பேசறாரு, அதுக்காகதான் உன் கூட chat/mail எல்லாம் பண்ணாம இருக்கேன்" னு காரணம் சொல்லி குறைப்பட்டாலும் அவுங்க வீட்டுக்காரரை விட்டுக்குடுக்காம எழுதி இருந்தாங்க. மெயில் படிச்சதும் முடிச்சதும், ஜானகி அவுங்க அம்மா வீடல இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு. உடனே அவுங்க அம்மா வீட்டுக்கு போனடிச்சேன் எடுத்தது ஜானகிதான். நான் "ஹலோ" ன்னு சொல்றதுக்கு முன்னாடி ஜானகி "டேய் இளா, நல்லா இருக்குயா?"ன்னு ஆரம்பிக்க எனக்கு வாயடைச்சு போயிருச்சு. எனக்கு என்ன சொல்லன்னே தெரியல. வழக்கம் போல பேசுறா மாதிரி நலம் விசாரிச்சுட்டு எனக்கு வேலை இருக்குனு சொல்லி disconnect பண்ணிட்டேன்.

அவுங்களுக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் அப்பப்போ மெயில்லையோ போன்லையோ பேசிகிட்டு இருந்தோம். இதுல என்ன கொடுமைன்னா ஒரு நாள் போன்ல பேசிகிட்டு இருக்கும் போது பேச்சுக்கு நடுவுல "குழந்தை பொறந்ததுக்கப்புறம் உங்க ரெண்டு பேரையும் அவர் கிட்டே அறிமுகப்படுத்தி வெக்கிறேன். அப்புறமா நாம பேசிகிட்டா அவர் சந்தேகப்ப்ட மாட்டார் இல்லே, இளா" ன்னு ஜானகி கேட்கும்போதுதான் ஏதோ மண்டையில உறைச்சது. "நாம என்ன தப்பா பண்றோம்"னு கேட்கலாம்னு தோணிச்சு. ஆனா ஒன்னும் பேசாம இருந்துட்டேன்.

நம்மளால எதுக்கு அந்த பொண்ணுக்கு கஷ்டம்னு நான் அவுங்ககிட்டே பேசுறதை குறைச்சுட்டேன். கிட்டதட்ட அவுங்க போன் பண்ணினாலோ மெயில் வந்தாலோ சரியா பதில் சொல்லாம பட்டும் படாம பேச ஆரம்பிச்சேன். ஜானகி அமெரிக்கா போகும்போது ஒரு மெயில் போட்டுட்டுதான் போனாங்க, அதுக்கு கூட நான் பதில் அனுப்பல. இப்போ அமெரிக்காவுலதான் இருக்கேன்.


பின்னாடி ஒரு நாள், மனசு கேட்காம  நம்பர் கேட்டு ஒரு மெயில் போட்டேன், அதுக்கு ஒரு பதில் வந்துச்சு "இனிமே நாம பேசிக்க வேணாம், கூப்பிடவும் செய்யாதே" அப்படின்னு . அதுக்கு நான் பதில் எதுவும் போடவும் இல்லை.

 "கபி அல்வித னா கெஹனா" ங்கிறது கிஷோர்குமார் பாடின சல்தே சல்தேனக்ன்கிற பாட்டுல வர வரிதான். நேத்து ராத்திரி அந்த பாட்டும் கேட்கும் போதுதான் அதுக்கு அர்த்தம் புரிஞ்சது. இனிமே இந்தப்பாட்டை கேட்கவே கூடாதுன்னு நினைச்சுகிட்டு, பாட்டை நிப்பாடிட்டு தூங்க முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். ஆனா தூங்கறதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு .

29 comments:

 1. அவங்க கஷ்டம் அவங்களுக்கு. அதலாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணும். ரொம்ப எல்லாம் அப்ஸெட் ஆகக் கூடாது.

  அப்புறம் நடு நடுவுல என்னமோ திட்டி இருக்கீங்க. அதான் ஏன்னு புரியலை.

  ReplyDelete
 2. கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணுங்க தியாகம் பண்ற முதல் உறவு அவுங்க ஆண் நட்புகளைதான். இது பொண்ணுங்க வாங்கி வந்த சாபமா?

  ReplyDelete
 3. இதெல்லாம் ஒரு பய உணர்ச்சிதான் காரணம். நமது நணபர்களை இவர்தான் என்று நமது துணைக்கும அறிமுகபடுத்திவிட்டால் சங்கடங்கள் கொஞ்சம் குறையலாம. ஆனால் என் கதை வேறு. ஒரு பதிவுலக கல்யாணத்தை நடத்திவைத்த அனுபவம் எனக்கு உண்டு இளா

  ReplyDelete
 4. //ஒரு பதிவுலக கல்யாணத்தை நடத்திவைத்த அனுபவம் எனக்கு உண்டு இளா //
  அந்த ரெண்டு கதைக்கும் நான் இப்போவே Copyrights வாங்கி வெச்சுக்கிறேனே.

  ReplyDelete
 5. திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவியின் முந்தைய opposite sex நட்புகள் , ஆழமாக இருப்பதில்லை..அது இருவருக்கும் பொதுவான குடும்ப நட்பாக இருந்தாலொழிய.
  ஜானகியின் கணவரோடு, நீங்கள் முதலிலேயே அறிமுகம் ஆகியிருந்தீர்கள் எனில், உங்கள் குடும்ப நட்பு தொடர்ந்திருக்கும் என்பது என் எண்ணம்..

  ReplyDelete
 6. எல்லோரும் அப்படி இருக்கறது இல்ல இளா..
  நட்பை புரிஞ்சுக்கிட்டு வாழற சில பேரை நான் பார்த்துருக்கேன்.
  நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் இளா... :)

  சென்ஷி

  ReplyDelete
 7. //கபி அல்விதனா கெஹனா //

  அதுக்கு என்ன அர்த்தம்னு கடைசி வரைக்கும் சொல்லலையே

  ReplyDelete
 8. Anony: //கபி அல்விதனா கெஹனா //

  அதுக்கு என்ன அர்த்தம்னு கடைசி வரைக்கும் சொல்லலையே //

  ஒரு பொழுதும் போய் வருகிறேன் என்று சொல்லாதே'ங்கிறதுதான் அதுக்கு அர்த்தம்.

  நன்றி-துளசி டீச்சர்

  ReplyDelete
 9. // Anonymous said...

  //கபி அல்விதனா கெஹனா //

  அதுக்கு என்ன அர்த்தம்னு கடைசி வரைக்கும் சொல்லலையே //

  Never say Good bye :-)

  ReplyDelete
 10. இளா,

  அருமையான பதிவு. காலப்போக்கிலும் வாழ்வின் போக்கிலும் நட்பைத் தொலைப்பது இரு பாலருக்கும் பொருந்தும். என்ன? பெண்களுக்கு அதிகமாக இதுபோன்ற ஆண்களின் அற்பத்தனங்களால் நட்பு இழக்கப்பெறுகிறது. :(

  ReplyDelete
 11. ம்ம்ம்...என்ன சொல்றது இளா. இதுல பாருங்க பொசசிவ்வா இருக்காங்களே..அவங்க அன்பு உண்மையானது. அதே நேரத்துல வன்மையானது. அந்த வன்மை இருக்குறதுனாலதான் உண்மையை ஏத்துக்கிறக் கஷ்டமா இருக்கு.

  நம்ம நாட்டுல நல்ல காலத்துலயே பையனும் பொண்ணும் பேசுனா அது இது.....அப்படிப் பேசுவாங்க. இதுல இந்த மாதிரி பிரச்சனைகள் வேற.

  கண்ணுக்குத் தெரியாத ஜானகிகளுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன். உங்கள் வனவாசம் முடியட்டும்.

  ReplyDelete
 12. பாவம் அவங்களுக்கு என்ன கஷ்டமோ. எல்லாரும் எல்லாவிதத்திலயும் சரியா இருந்தர்ரதில்ல. பொசசிவ் பிரச்னை பெண்கள்லயும் உண்டுதான

  ReplyDelete
 13. சுயசோதனை செய்ய வச்சுட்டீங்க..

  எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஆனா இண்ணைக்குத்தான் அர்த்தம் புரிஞ்சது.

  ReplyDelete
 14. இந்த பொன்னுங்களோட இதே பிர்ச்சனை தான்..எப்பா, என்னால் முன்ன மாதிரி பேச முடியாது அப்படின்னு ஒரு தடவ சொல்லிட்ட பிரச்சனை இல்ல... ஆனா, அத சொல்லாம அவங்களா விருப்பட்டா பேசுவாங்க இல்லையின்னா டீல்ல விட்டுருவாங்க... இளா உங்க அனுபவம் என் கல்லூரி கால பெண் நன்பிகளை நினைவு படுத்துகிறது...

  ReplyDelete
 15. //இதுல பாருங்க பொசசிவ்வா இருக்காங்களே..அவங்க அன்பு உண்மையானது. அதே நேரத்துல வன்மையானது. அந்த வன்மை இருக்குறதுனாலதான் உண்மையை ஏத்துக்கிறக் கஷ்டமா இருக்கு//

  ஜிரா சொன்னதை நான் அப்படியே வழி மொழிகிறேன்!

  இந்த வனவாசம் முடியணும்னா மனவாசம் தொடங்கணும். அப்பத் தான் முடியும்! ஒரு துணை இப்படி இருக்காருன்னு தெரிஞ்சா..மற்ற துணைக்கு கொஞ்சம் பொறுப்பு கூடிடுது, அவரின் மனக் கூட்டைத் திறக்க!

  குழந்தைகள் சைக்காலஜி தான்! அந்தத் துணை வளர்ந்த குழந்தையா இருப்பாரு போல! கொஞ்சம் தலை கோதினா, குழந்தை புரிந்து கொண்டு அழகாச் சிரிக்கத் துவங்கி விடும்!

  குட் பை சொல்ல வேண்டாம்!
  சென்று "வருகிறேன்" ன்னு சொல்லுவோம்! :-)

  ReplyDelete
 16. //வீட்டுக்காரர் ரொம்ப "பொஸசிவ்", வேற ஆம்பிளைங்கிட்டே பேசினா ஒரு மாதிரியா பேசறாரு//

  இப்படி இருக்கும் போது என்ன செய்ய?..

  //"குழந்தை பொறந்ததுக்கப்புறம் உங்க ரெண்டு பேரையும் அவர் கிட்டே அறிமுகப்படுத்தி வெக்கிறேன். அப்புறமா நாம பேசிகிட்டா அவர் சந்தேகப்ப்ட மாட்டார் இல்லே, இளா"//

  அப்ப அவங்க எவ்ளோ தவிச்சிருப்பாங்க?

  எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

  இப்படிதான் நிறைய -பெண் நட்பு திருமணத்திற்கு பின்...

  ReplyDelete
 17. எங்களுடைய இளமைக் காலத்தில் ஆணும் பெண்ணும் பேசுவதே தவறாக எடுத்துக் கொள்வார்கள். இன்று முன்பின் தெரியாத இருவர் பழகுவதை குடும்பத்தினர் அளவிலாவது இயல்பாக கொள்வது நிகழ்கிறது. இந்த புரிந்துணர்வு தம்பதியினரிடையேயும் விரைவில் நிகழும். முன்பெல்லாமை விட ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள தற்கால நுட்பம் மிகவும் உதவுகிறது. இது பால், இனம், சாதி சார்ந்த மனச் சாய்வுகளை போக்கும் வல்லமை படைத்தது.

  ReplyDelete
 18. //கபி அல்விதனா கெஹனா
  அதுக்கு என்ன அர்த்தம்னு கடைசி வரைக்கும் சொல்லலையே //

  கபி = எப்போவும்
  அல்விதா = விடைபெற
  நா = இல்லை
  கெஹனா = சொல்லு

  கூட்டி கழிச்சி நீங்களே என்னான்னு தெரிஞ்சிக்கங்க

  ReplyDelete
 19. நல்லதொரு பதிவு..

  ReplyDelete
 20. never bid goodbye...

  சேரனுக்குப் பதிலா சினேகா ஆட்டோகிராஃபை எழுதியிருந்தா என்ன நடந்திருக்கும்னு போன வாரம் வாத்தியார் கேட்டாரு??

  தெரியலையே.....

  மாறுமா?மாறலாம்...

  ReplyDelete
 21. நம்மள்ள, சில பேருகிட்டே இருக்குற ஆணாதிக்க சிந்தனைதான் இதுக்கு காரணமுனு நினைக்கேன்.

  ReplyDelete
 22. எப்பவுமே,'ஜானகிகள்' தீக்குளிச்சு மட்டுமே நிரூபிக்கணுமுன்னு தலையெழுத்து (-:

  ReplyDelete
 23. சுதர்சன்.கோபால் said...
  never bid goodbye...

  \\சேரனுக்குப் பதிலா சினேகா ஆட்டோகிராஃபை எழுதியிருந்தா என்ன நடந்திருக்கும்னு போன வாரம் வாத்தியார் கேட்டாரு??

  தெரியலையே.....

  மாறுமா?மாறலாம்...//

  உலகமே அழியப்போவதாக..காலம் கெட்டுவிட்டதாக எல்லாரும் தூற்றி இருப்பார்கள்... :)

  ஜானகி சரியாத்தான் பேரு வச்சீங்க..இந்த ஜானகிகளும் சீதாக்களும்..கஷ்டப்படவே பிறந்தவங்களாச்சே...

  என்ன பண்ண அவங்க நிலமை அப்படி வருத்தப்படாதீங்க..

  ReplyDelete
 24. "* கபி அல்விதனா கெஹனா"
  கஹொ ஃபிர் மிலெங்ஙெ
  மங்களூர் சிவா

  ReplyDelete
 25. பார்த்தா தான் தெரியும்..பசங்க வாழ்கையில பல கட்டத்தில பல பொன்னுங்க கிராஸ் ஆகுறாங்க...
  அதே மாதிரி, பொன்னுங்க வாழ்கையில எப்படின்னு இது வரை யாரும் சொல்லல....
  ஆனா அவங்களும் மனிதிகளே...(பெண் பாலுங்க...ஹி!ஹி!)
  அவங்க அனுபவத்தை..சொல்லுறதில்லை..
  பதிவர் கூட்டத்தில் உள்ள பெண்களாவது அதை திரட்ட முயற்சிக்கலாம்....

  //*சேரனுக்குப் பதிலா சினேகா ஆட்டோகிராஃபை எழுதியிருந்தா என்ன நடந்திருக்கும்னு போன வாரம் வாத்தியார் கேட்டாரு??*//
  ஒன்னும் நடந்திருக்காது...

  ReplyDelete
 26. ம்ம்ம்... திருமணத்திற்குப் பிறகு பல பெண்கள் இழக்கும் முதல் சொத்து அவர்களது ஆண் நண்பர்கள்தான்... அதற்கு காரணமும் இன்னொரு ஆண்தான் என்பதுதான் அவமானம்...

  ReplyDelete
 27. இந்த பாடல் நான் SSLC படிக்கும் போது திரு ஜோசப் என்ற வாத்தியார் பாடி காண்பித்தார்.அப்போது தான் இந்த மாதிரி ஹிந்தி பாடல்கள் இருக்கு என்பதே தெரியும்.அர்த்தம் புரியாம கேட்டிருந்தாலும் பின்னூட்டம் மூலம் தெரிந்துகொண்டேன்.
  கொஞ்சம் சோகம் கலந்த பாடல் அது.
  பெண்கள் முதலில் இழப்பது இது தான் அதுவும் கல்யாணம் ஆனவுடன் என்று சொன்னது 99% சரி.

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)