நீ அழகாய்ப் பிறந்தவள், வசதியானவள், வசீகரமானவள்
பளிச்சிடும் புன்னகையுடன் பிரம்மாண்டமாய் உருவெடுத்தவள்
முதலில் உன்னை நான் படங்களில் கண்டேன், சிலாகித்தேன்
ஒரே முறை உன்னை நேரில் கண்டேன்: உற்று நோக்கினேன்
முதலில் உன்னை நான் படங்களில் கண்டேன், சிலாகித்தேன்
ஒரே முறை உன்னை நேரில் கண்டேன்: உற்று நோக்கினேன்
உனக்கது தெரிய வாய்ப்பில்லை, நம்மூரில் இப்படி ஒரு அழகியென
மனதுள் ஒரு பேரானந்தத்துடன் உன்னைக் கடந்து போனேன்.
பிறகு உன்னைப் பற்றி வந்த செய்தியெல்லாம் சோகமானவை
உன் மீது வைத்திருந்த அபிப்பிராயத்தயெல்லாம் மாற்றியமைத்தவை
அழகியென ஆர்ப்பரித்த உள்ளங்களெல்லாம்
காரணமறியாமல் உன்னை ஏச ஆரம்பித்த காலம்
நீ மட்டும் உன்னை மாற்றி கொள்ளவேயில்லை
மீண்டும் மீண்டும் உன் புத்தியைக் காட்டிக்கொண்டே இருந்தாய்.
ஆயிற்று இன்னும் இரண்டு நாட்கள்தாம்,
உன்னைக் காண எனக்கும் அமைந்திருக்கிறது ஒரு வாய்ப்பு
மனதில் திடம் வை, உன்னை அணைக்க நான் ஆசைப்படவில்லை
கண்கள் நோக்குவோம், அழகில் கரைவோம்,
எல்லை தாண்ட நினையாமல் பயணம் தொடர்வோம்,
தொட்டுவிடாமல் இருவருமே கடந்துவிடுவோம்
அது உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.
மனதில் உறுதி பூண், உடலில் திடம் கொள்,
கட்டவிழும் ஆசையை உள்மனதில் வைத்து பூட்டு,
வந்து போவோரிடம் சொல்
சில்லுகளாய் உடைய மாட்டேன்" என்று சொல்,
திரும்ப திரும்ப சொல்,
அழுத்திச் சொல்,
உன்மீது நம்பிக்கை வரும்வரை சொல்,
நான் வந்து திரும்பும் வரை உன்னைக் காத்துக்கொள்,
அதன் பிறகும் தீர்க்கமாய் இரு,
உன்னை ஏசும் ஊர் உலகத்துக்கு நீ உடையாதவள் என்று உரக்கச் சொல்
என்னைக் காணாமல் என்றும் உடைந்து விட மாட்டேன் என்று சத்தியம் செய்
என் இனிய அழகிய
சென்னை விமான நிலைய கூரையே!!!