இப்ப பாருங்க, யாருமே வேலை நடக்கிற இடத்துல நடக்குற சம்பவங்களை பதிவா எழுதறது இல்லே(இப்படி சொல்றதுக்காகவேதான் இந்தப் பதிவு ஹிஹி), சினிமா எப்படி எடுத்தாங்கன்னு சொன்னா தீவாளி அன்னிக்கு பட்டாசு கூட வெடிக்காம பார்குறோம், நான் இப்படி துணி தெச்சேன், நான் இப்படி வண்டி ஓட்டுனேன், இப்படி code எழுதினேன்னு சொன்னா கேட்போம்? அது ஒரு செமை மொக்கையா இருக்கும்ல. ஏன் அப்படி?
அப்புறம், இந்தப் பதிவு தொழில்நுட்பம் சார்ந்தது, server, shutdown, restart, patch, legacy application அப்படின்னு என்னான்னு தெரிஞ்சா மட்டும் படிங்க, இல்லாட்டி சோத்தங்கை பக்கம் மேல் மூலையில் X இருக்கும் பாருங்க, அதை அழுத்திட்டு வேற வேலை பாருங்க.
போன மாசம் ஒரு வெள்ளைக்கார பிக்காலி பம்பிகிட்டே வந்து “நீ Windows NTல வேலை செஞ்சிருக்கேன்னு சொன்னியே? அதெல்லாம் ஞாபகம் இருக்கா?
எனக்கு சுத்தமா மறந்து போயிருச்சு, நம்ம டீம்லயும் யாரும் சரியா ஞாபகம் இல்லேங்கிறாங்க. நீதான் மறக்காம இருக்க சுக்கு காபி எல்லாம் குடிக்கிறியே, ஒரு சர்வர் இருக்கு வந்து பார்க்கிறியா”னு கேட்டான். அடப்பாவி, சுக்கு காபிக்கும் ஞாபகத்துக்கும் எப்படி முடிச்சு போடுதுபாரு இந்த பாடு. இந்தமாதிரி கேள்வி கேட்டே இவுனுங்க பொழப்ப ஓட்டுறானுங்க. முடியாதுன்னு சொன்னா கடேசில ஒரு நாள் ஆப்பு வெப்பாங்க, முடியும்னு சொன்னா ரெடிமேட் ஆப்பு. சரி, எவ்வளோ பார்த்துட்டோம், இதை பார்க்கமாட்டோமான்னு “சரி பீட்டரு, வந்து பார்க்கிறேன், விசயத்தை மெயில்ல போட்டு”ன்னேன்.
Toவுல ஒரு அம்பது பேரு இருப்பாங்க, CCல எங்கூரு மட்டுமில்லாம உலகத்துல இருக்கிற எல்லாம் மேனேஜருக்கும் சேர்த்து, கொட்டாம்பட்டி வார்டு மெம்பர் வரைக்கும் சேர்த்து ஒரு 500 பேருக்கும் மேலேயே இருக்கும், பாவி புள்ளை ஒரு மடல் போட்டான். அப்பவே சுதாரிச்சிருக்கோனும். நமக்குத்தான் வெவரம் பத்தைலேயே. விவரம் என்னான்னா Windows NT 4.0 Server ஒன்னு இருக்கு, அதுக்கு ஒட்டுப்போடனும்(Patching). எனக்கு சிரிப்பா வந்துச்சு, Microsoft, Windows NT க்கு Support நிறுத்தியே பல வருசம், ஆச்சு, அதுவுமில்லாம Windows NT எல்லாத்தையும் upgrade பண்ணி பல வருசம் இருக்கும். இனிமே என்ன patch இருக்கும்னு பார்த்தா நிறைய இருந்துச்சு, அதுவும் தானா பண்ணிக்காது, நாமாத்தான் ஒன்னொன்னையும் புடுங்கனும். மடலோ இப்படிக்கா அப்படிக்கான்னு பறக்குது, ஒருத்தன் வேணாங்கிறான், இன்னொருத்தன் வேணுங்கிறான், பாதிபேரு நடுநிலமை வகிக்கிறா மாதிரியும் ச்சும்மா பறக்குது.
அட, அப்படி என்ன அந்த வழங்கியில இருக்குன்னு கேட்டா, மாசத்துக்கு ஒரு தடவை ஓடுற application ஒன்னு இருக்கு. மாசக்கடைசியானா ஓடோடு ஓடுன்னு ஓடி ஒரு pdf தரும். எல்லாருக்கு அந்த pdfஐ தலை மடல் போடுவாரு.
ஒருத்தனும் சீண்டாமாட்டான். நானெல்லாம அந்த மெயில் பார்த்தவுடனே DELETE பண்ணிருவேன். அந்தப் pdfக்கு ஒரு சர்வரு, அதுக்கு வேலை பார்க்கிறது ஆளு. தூ, இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தலைக்கிட்ட கேட்ட முடியுமா? சரின்னு ஒரு நல்ல ராகு காலத்துல மேனேஜரை டீ குடிக்கிற இடத்துல நிறுத்தி, ”
ஆசானே இந்த சர்வரை தொடறதும் விஜய்கிட்ட மோதுறதும், கரண்டு கம்பிய கையால தொடர்ரதும் ஒன்னுத்தான்”னேன். அதுக்கு அவரு டீய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் அப்படின்னு உறிஞ்சிகிட்டே, அதுக்குத்தான்
நீ இருக்கியே அப்புறம் என்னன்னு போயிட்டாரு.
ஏண்டா உலகத்துல நான் ஒருத்தான் கைப்புள்ளையா? நான் என்னடா உங்களுக்கு பாவம் பண்ணினேன்? இந்த சின்னப் புள்ளைய ஏண்டா இப்படி இம்சை பண்றீங்க.
ஒரு சுபயோக சுபதினம் குறிச்சாங்க, எதுக்கு? ஆப்பை எனக்குச் சொருகத்தான். இன்னிக்கு காலையில வேலைக்கு வந்தவுடனே தலை கூப்பிட்டு ”வாங்க எல்லாரும் கும்மியடிக்கலாம்”ன்னு கூட்டிட்டு போனாரு. ச்சும்மா ஒரு 45 நிமிசம், காலங்காத்தால தூங்க வெக்கிறது எப்படின்னு சொன்னாருன்னு நினைக்கிறேன்... இல்லாட்டா கைய மேல கீழ ஆட்டி வேற பேசினாரா, அநேகமா டீ எப்படி ஆத்துறதுன்னு சொல்லிக்காட்டுறாருன்னு நினைக்கிறேன். ஆனா அதுல ஒன்னு மட்டும் புரிஞ்சது,
“
அந்த அப்ளிக்கேசனை எழுதனுது ஒரு 3ர்ட் பார்ட்டி, அவன் இப்போ இல்லே, அதனால நம்மாள அத மாத்த வக்கில்லை, காசு செலவு பண்றதுக்கு வசதியில்லை. அதனால இந்த கருமாந்திரத்தையே கட்டிக்கிட்டு அழுவனும். ”
இதை 30 விநாடியில படிச்சிட்டீங்கதானே, இதைத் தான் அவரு 45 நிமிசம் ஆத்துனாரு. பாருங்க,.... சர்வர் upgrade நேரத்தை ஒரு எமகண்டத்துல 9லிருந்து 12 மணியிலையா வெக்கனும்? எமன் எப்படி வர்றான் பாருங்க. இதுல என்ன காமடின்னா இந்த சர்வரை 12 வருசமா யாரும் பேட்சும் பண்ணலை, restartம் பண்ணலை. Windows NT புதுசா வயசுக்கு வந்தப் பொண்ணு மாதிரி, தொட்டா கோச்சுக்கும் (bsod). முப்பாத்தம்மனையும், பாடிகாட் முனீஸ்வரைனையும் கும்பிட்டுகிட்டு வேலைய ஆரம்பிக்க போனா, பொது மாத்து போடுறா
மாதிரியே என்ன சுத்தி ஒரு 15 பேரு கூடி வந்து நின்னுகிட்டாங்க. கண்டிப்பா ஏதாவது பிரச்சினைன்னா என்னால எழுதிருச்சி போவ முடியாது, ஏன் என்னோட இருக்கையில இருந்துகூட எழுதிருக்க முடியாது. அவ்ளோ நெருக்கம். இதுல டோக்கன் சிஸ்டத்துல என் கியூப்புக்கு வெளியே கூட்டம் வேற. ஸ்பெஷல் பஸ்ஸும், செருப்புக்கடையும் போடாதது ஒன்னுதான் பாக்கி. காலங்காத்தால 12b பேருந்து மாதிரி அடைச்சிகிட்டு நிக்கிறானுங்க. உச்சா வேற வர்றா மாதிரியே இருக்கு.
ஏற்கனவே கொஞ்சம் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு வெச்சிதனால ஒரு batch file தட்டினேன். குடுகுடுன்னு மானிட்டர்ல ஓடுது, இதை எதிர்பார்க்காத என் தலை, இன்னொரு தலைகிட்ட “
பார்த்தியா, எப்படி வேலை செய்யறான் பாரு. என் அணியில எல்லாருமே இப்படித்தான் வேலைய சீக்கிறமா முடிக்கிறதுன்னு முன்னாடியே ப்ப்ப்ளான் பண்ணி பண்ணுவோம்” அப்படின்னு அலப்பறை வேற. எல்லாம் முடிஞ்சது, restart பண்ண வேண்டிய நேரம். வேர்த்து விறுவிறுக்க எல்லாரையும் திரும்பி பார்க்கிறேன், கையில அருவா வெச்சிகிட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு. கண்ணமூடிகிட்டு RESTARTஐ தட்டினேன். BIOS வந்துச்சு, பூட்டப் மெனு வந்துச்சு, அப்புறம் Windows NT Screen வந்துச்சு, வந்துச்சு, அப்புறம் அதுலேயே நின்னுக்கிச்சு. பேருந்தா இருந்தா, எல்லாரும் தள்ளுங்கன்னு சொல்லலாம்.. இதுக்கு? அப்பத்தான் ஒரு முந்திரிகொட்டை,
மறுபடியும் restart பண்ணலாம்னு சொல்ல, நான்
வேணாம்னுட்டேன். சுத்தி இருந்தவனுங்க எல்லாம் தன்னோட அலைபேசியில் கூகிலடிச்சு இதைப் பண்ணலாம், அதைப்பண்ண்லாம், இருக்கிற எல்லா forumல இருக்கிறதை எல்லாம் படிக்கிறானுங்க. 20 நிமிசம் ஆச்சு. ஒருத்தன், சர்வர் ஊத்திகிச்சு. கிளம்புங்க காத்து வரட்டும்ங்கிறான்.
”
யக்கா இந்தக் கதையக் கேளேன், ராசாக்கா பொண்ணு ஓடிப் போயிருச்சாம்ல.”
ஆமாண்டி அப்பவே தெரியும், அவ அலுக்குனது என்னா.. குலுக்குனது என்னா”
அப்படின்னு ஊருல எப்படி பொரணி பேசுவாங்களோ அது மாதிரியே பேசறானுங்க. பாதிப்பேரு கிளம்பிட்டாங்க, பாவம் அவுங்க மட்டும் எவ்ளோ நேரம் சும்மாவே நிப்பாங்க. நான் என் தலையப் பார்த்தேன், மொறச்சா மாதிரியே இருந்துச்சு “
நான் என்னய்யா பண்ணுவேன்?” அவரோட கையைப் பார்த்தேன், பாசக்கயிறு சுருட்டி வெச்சா மாதிரியே இருந்துச்சு. தீடீர்னு ஒரே கைதட்டல், என்னடான்னு திரும்பி மானிட்டா பார்த்தா login screen வந்துருச்சு. எல்லாரும் எனக்கு கை குடுக்கிறாங்க, தலை தட்டிகுடுத்துட்டு போனாரு.
அடுத்த மாசமும் pdf மடலுக்கு வரும், அதுல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கனும். உச்சா போவனும், வழிய விடுங்கப்பா.