"அப்பா, நமக்கு சொந்தம்னு யாருமே இல்லையா?"
"இருக்காங்கப்பா, பங்காளி வழியில நெறைய சொந்தம் இருக்காங்க. ஒரு தலைமுறை போனவுடன் அவுங்க புள்ளைங்க எல்லாம் பழைய சொந்தங்களை தேடறதுமில்லே, பழகறதும் இல்லே. அவுங்க அவுங்க அவுங்களுக்கு வசதியான மக்களோட பழக ஆரம்பிச்சிறாங்க. ஏதாவது விசேசம்னா மட்டும் வந்து போயிட்டு இருந்தாங்க, அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வராம போக, தொடர்பில்லாமப் போச்சு. எதுக்கு கேக்குற?"
"இல்லே, எனக்கு நம்ம சொந்தங்களைப் பார்க்கனும் போல இருக்கு"
தூக்கி வாரிப்போட்டது அப்பாவுக்கு? ஏன், எபப்டின்னு கேட்காம, "சரி, உன் விருப்பம் போல செய்?"னாரு.
முதல்ல இருந்த சொந்தத்தை கேட்டேன், அப்பா சொன்ன யாருமே அந்தந்த முகவரியில இல்லே. முகவரியே மாறும்போது கூப்பிடறதுக்கு தொலைபேசி மட்டும் கிடைச்சுருமா என்ன? அப்பாவுக்கு தெரிஞ்ச ஒரே சொந்தம், கண்ணுப்பையன் சித்தப்பா மட்டும்தான். அப்பாதான் பேசினாரு. அவுங்க பையனும் புள்ளையும் அமெரிக்காவுல இருக்காங்களாம். அவுங்க நம்பரை மட்டும் வாங்கித்தந்தாங்க. என்ன பேசறதுன்னு தெரியாம அவுங்கள கூப்பிட்டேன்.
"நான் ராஜா, செல்லிக்காட்டு பெரியண்ணன் பேரன்..." அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன மொதல்ல அறிமுகம் பண்ணிக்கிட்டேன். சுரத்தில்லாம பதில் வந்துச்சு..சரி அதுக்கென்ன இப்போங்கிற மாதிரி பேசி வெச்சுட்டாங்க. அன்னிக்கு ராத்திரி முழுசும் அழுது தீர்த்தேன். அவ்வளவுதானா சொந்தம்? இதே நானும் அமெரிக்காவுல இருந்திருந்தா, இப்படி பேசி இருப்பாங்களா? எனக்கு என்ன கொறைச்சல்? இப்படி பல கேள்விங்களோட விடியற்காலையில் தூங்கிப்போனேன். காலையில அப்பா எழுப்பி சேலத்துல இருந்தே ரமேஷ் பேசுறதா சொன்னாரு.
"என்னப்பா,யாரு என்னான்னெ தெரியாம என்ன பேசறது?"
"நேத்து நீ கண்ணுப்பையன் பையனோட பேசுனியே அப்போ மட்டும் தெரிஞ்சுதா?"
சவுக்கடி மாதிரி இருந்துச்சு அப்பா கேட்டது.
ரமேஷ் கிட்ட பேச ஆரம்பிச்சேன். எங்கயோ ஒரு நுனி சொந்தம் அது. ரொம்ப்ப ரொம்ப தூரம்னு கூட சொல்ல தெரியாத ஒரு சொந்தம். நல்ல நிலைமையில இருக்கிறான் போல, என்ன விட மூணு வயசு பெரியவன். நிறைய பேசினோம், சம்பந்தமே இல்லாம. சினிமா, அரசியல், சிங்கப்பூர் வாழக்கை, என்னோட பள்ளி, புடிச்ச PS3, அவனுக்கு புடிச்ச சாப்பாடு, மணிக்கணக்குல பேசினோம். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து சொந்தத்தை தேடற நிலைக்கு வந்துட்டோம். அப்பாகிட்டே மூணு மாசம் இந்தியா போறேன்னு சொன்னேன். அப்பாவுக்கோ இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லே. ஆனா என்னோட விருப்பம் ஜெயிச்சது.
இந்தியா....
ரமேஷுக்கு அப்பா இல்லே, அம்மா மட்டும்தான்.மளிகை கடை நடத்துறாங்க. கொஞ்சம் வசதியான வீடு, அவுங்க அம்மா உழைப்பு தெரிஞ்சது. ரமேஷுக்கு காலேஜ் விட்டா கடை. அவன் உலகம் அவ்வளவுதான். கொண்டலாம்பட்டி பை-பாஸ்ல தம் போட்டுட்டு, ஏற்காட்டுல டீ சாப்புடறதுன்னு ஒரு புது வாழ்க்கை. எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.
ரமேஷ் செம கில்லாடி.அவன் மொதல்ல என்னை கூட்டிக்கொண்டு போனது குலதெயவம் கோயிலுக்கு. பண்டாரத்துக்கு தாத்தாவைத் நல்லா தெரிந்திருந்து வைத்திருந்தான்.
"தாத்தா, எங்க சொந்தக்காரவங்க யாராவது போன விசேசத்துக்கு காசு குடுத்தாங்களா?" ரமேஷ்.
"அட யார்ரா இவன் கூறுகெட்டவன். யாரு குடுக்காம போறாங்க? உங்க பெரிய மாமன் கூட, அதாண்டா நாமக்கல்ல லாரி பட்டறை வெச்சிருக்காருல்ல.. அவரு கூட மூணு லட்ச ரூவா குடுத்தாரு"
"அவுங்க போன் நம்பரு குடு தாத்தா. பேசோனும்'
"ஏன் உம்மாமன் உன்கிட்ட பேசறது இல்லையா"
"அதெல்லாம் உனக்கெதுக்கு நம்பர குடு நாம்பேசிக்கிறேன்"
இப்படி ஒவ்வொரு அடையாளத்தையும் பிடித்தோம்.
மொத்தம் 13 மாமா, 8 அத்தை, 7 சித்தப்பாக்கள், அவர்கள் வழி வந்த சொந்தங்கள் என 500 பேருக்குமேலேயே சொந்தங்களின் எண்ணிக்கை வந்தது. ஒருவருக்கும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம் என் தந்தை விட்டுவந்த தொலைவு. உறவுகள் தொலைய வெளிநாட்டிற்குச் செல்லும், சொல்லும் எல்லாம் காரணங்களும் எனக்கும் இருந்தது. எல்லார் வீட்டுக்கும் பேசினோம், சென்றோம்.
எடப்பாடி முருகேசன் மாமா, என்னை ரொம்பவே கவர்ந்தார். ஆட்டோ ஒட்டுகிறார், ஊரில் அவருக்குத் தெரியாத மனிதர்களும் இல்லை, சந்து பொந்துகளும் இல்லை. வசதி குறைந்தவரான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 45 வயசு மட்டுமே ஆகியிருந்தது.
"மாமா, நான் நம்ம ஊருக்கு போலாம்னு இருக்கேன்"
"எந்த ஊருக்குடா? சிங்கப்பூருக்கா? பின்னே இங்கேவா இருக்கப்போறே?"
"இல்ல மாமா, கொழிஞ்சிக்காட்டூருக்கு"
ஐந்து நிமிடம் மாமா ஒன்றுமே சொல்லவில்லை. பிறகு "உனக்கு யாரத்தெரியும்னு அங்கேப் போற? நம்ம காட்டை எல்லாம் வித்தாச்சு, ஊருக்குள்ள சொந்தம்னு சொல்லிக்க ஒரு பய இல்லே. அப்புறம் என்ன வேலை. வந்தமா நம்ம கூட கொஞ்ச நாள் இருந்தோமான்னு இருப்பியா அத வுட்டுப்புட்டு"
என்னுடைய வழக்கமான இருக்கம், பிடிவாதம் அங்கேயும் வென்றது. மாமா, நான், ரமேஷ் மூவரும் ஒரு நாள் என் கிராமத்துக்கு போக நாள் குறித்தாயிற்று.
அந்த நாள்..
மாமா ஏற்பாடு செய்திருந்த காரில் சென்றோம்.
"ராஜா, எங்கேடா போறது? அங்கே போயி என்னத்த பார்ப்பே? "
"போவோம் மாமா, தாத்தா பாட்டி இருந்த இடத்தை பார்ப்போம்"
"பார்த்து?"
பதில் தெரியாத கேள்வி. பார்த்து என்ன செய்யப் போகிறேன்? நான் படித்த பழைய பள்ளிக்கூடத்தை பார்க்கும் போதும், பழைய புத்தகத்தினை பார்க்கும் போதும், என் சிறுவயது நணபனைப் பார்க்கும் போதும் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு வெறுமை வரும். அது என்னவென சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத உணர்வு. சோகமே மிகுதியாய் தோன்றும். அது போலவே இதுவும் இருக்கும்.
"என்னடா பதிலே சொல்ல மாட்டேங்குற, சுடுகாட்ட பார்க்கவா அங்கே இருந்து வந்த?"
"மாமா, உங்களுக்கு எல்லாம் சொந்தம் பந்தம் கூட இருக்கன்னு ஆசை இல்லியா?"
"அடப்போடா, கல்யாணம் ஆகியிருந்தாலாவது பொண்டாட்டிங்கிற சொந்தம் வந்து இருக்கும். நமக்கு அதுவும் குடுப்பினை இல்லே"
"இல்லே மாமா, ஒரு விசேசம், எழவுன்னா கூட நம்ம சொந்தத்துக்கு தெரியாது. இதுக்கூட சொந்தம் இல்லாட்டா என்னாத்துக்கு?"
"ஏன் சொந்தக்காரன் வந்தாத்தான் பொணம் எரியுமா?" சத்தமாக சிரித்தார். "சொந்தமெல்லாம்ம்ம்... கூட இருந்தாத்தான். உனக்கும் எனக்கும் பொழப்புதான் முக்கியம். ஒரு ஜான் வயித்துக்குன்னு சொல்லிகிட்டு நாம தொலக்கிறது நெறைய அதுல மொதல்ல போறதே சொந்தந்தான்"
காசாங்காடு ஊராட்சி உங்களை வரவேற்கிறது. சிமெண்டினால் ஆனா அழுக்கேறிய பலகை. என் கிராமம். என் தாத்தன் பாட்டி, முப்பாட்டன் வாழ்ந்த இடம், முதன் முறையாய் பொதுவில் அழுதேன். காரணம் தெரியவில்லை.
"டே, இங்க பாரு? இந்த மயித்துக்குதான் வரவேணாம்னு சொன்னாரு மாமா. கேக்குறியா. என்னாத்துக்கு அழுவுற என்ன இருக்குன்னு சொல்லு?"
"என்னமோ தெரியலடா, சொந்தம் இல்லாம வளர்ந்த எனக்கு இது எல்லாம் புதுசா இருக்கு"
டீ கடை ஒன்று இருந்தது. மாமாதான் போய் விசாரித்து விட்டு வந்தார்.
"சொந்த ஊருல என்ன மாமா விசாரிச்சிகிட்டு"
"இல்லடா, நானும் சின்ன வயசுல இங்கே இருந்துப்போயிட்டேனா. அதான். மொதல்ல ஒத்தயடிதான் இருந்திச்சு. இப்போ ரோடெல்லாம் போட்டிருக்காங்க. அதான் நம்ம காட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். ஊருல இப்போ 10 இல்லைன்னா 15 பேர்தான் இருக்காங்களாம். மீதி எல்லாம் பொழப்ப தேடி நம்மள மாதிரியே வெளியூருக்குப் போயிட்டாங்களாம்"
போற வழியில் ஊரைப் பார்த்தேன் பொட்டல் காடு. ஒரு வசதியும் இல்லாமல் இருந்தது.
எப்படியோ உச்சி வெயில் நேரத்திற்கு தாத்தா இருந்த வீட்டிற்கு வந்தோம். இடிந்து சிதிலமாகி இருந்தது. கொஞ்சமாய் மண் திட்டு மட்டுமே இருந்தது. மீதி இருக்கும் என் பாரம்பரியம், என் பாரம்பரிய சொத்து, என் பூர்வீகம். மழை நீரிலும், வெய்யிலிலும் கவனிப்பாரற்று கிடந்த வீடு போல. மனதில் எதுவுமே தோன்றவில்லை. ஏதோ பொருட்காட்சிய பார்ப்பது போல் பார்த்துகொண்டிருந்தேன். ரமேஷ் யார் கூடவோ தூரமாய் இருந்த மேட்டின் மீது ஏறி தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். தாத்தாவையும் பாட்டியையும் புதைத்த இடத்தை தேடி அலைந்தோம். கடைசியாய் ஒரு பெரியவர் வழி சொன்னார். அவரும் ஒரு கேள்வி கேட்டார் "என்னாத்துக்கு தேடுறீங்க. ஏதாவது புதையல் கிதையலா?"
சிரித்தபடியே போனோம். புதைத்த இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு பள்ளமாய் இருந்தது. ஐந்து நிமிடம் மெளனமாய் இருந்தேன். ரமேஷ் மட்டும் என் கூட இருந்தான். மாமா எங்கோ பார்த்தபடி சிகரெட் பிடித்தபடி இருந்தார். சரி, அவருக்கும் என் தாத்தாவுக்கும் தூரத்து சொந்தம்தானே. ஊரை விட்டு மெயின் ரோட்டிற்கு வரும்பொழுது இருட்டத்தொடங்கி இருந்தது.
தூரமாய் ஒரு வேப்பம் மரம் தெரிந்தது, குருவிகளின் கீச்சுக்குரல்கள் கேட்டது, வேப்பம் பழங்கள் காற்றில் அசைந்து விழுந்தன, ஆடியது இலைகள், கீழே விழுந்த பழங்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள்
ஒரு நரைக்கிழவி! நாளை எப்படியும் சந்தையில் விற்றுவிடுவாள்,ஏதோ ஒரு ஊரில் மீண்டும் ஒரு மரம் வளரும், மீண்டும் பழங்கள் பழுத்து கீழே விழும்.
ஒரு நரைக்கிழவி! நாளை எப்படியும் சந்தையில் விற்றுவிடுவாள்,ஏதோ ஒரு ஊரில் மீண்டும் ஒரு மரம் வளரும், மீண்டும் பழங்கள் பழுத்து கீழே விழும்.