
பள்ளி முடிந்து திரும்புகையில்
யார் முதலில்
நம் தெருமுனை தொடுவது
என்றொரு போட்டி,
கன மழை,
இருவரின் கையிலும் குடை,
ஆனாலும் நனைந்த படி
முதலில் தெருமுனை தொட்டேன்.
கண்ணீருடன் நீ
உன் வீடு சென்றாய்,
அன்று முதல் உன்னிடம்
தோற்க ஆரம்பித்தேன்.
தோற்ற என்னை
சில நேரங்களில்
எள்ளி நகையாண்டாலும்,
என்றுமே
ஜெயிக்க விட்டதில்லை
மழை நீரில்
நீ விட்ட கண்ணீர்.
நீ
பெரிய மனுஷியாகிவிட்ட
போது வெட்கப்பட்டதை
சேமித்து வைத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மத்திற்கும் சேர்த்து

யாருக்கும் தெரியாமல்
உன் அறையில்
நான் நுழைந்து முத்தமிட்டு,
முன் வைத்த
பந்தயத்தில் ஜெயித்தேன்,
உனக்கும் பிடிக்கும் என்பதால்!
திருமண நாள் அதிகாலை,
எல்லோரும் முழிக்கும் முன்
யாருக்கும் தெரியாமல்
நாம் இருவரும்
சமையல் அறையில்
முத்தத்துடன் காபி பருகியது
யாருக்கு தெரியும்?
அந்த காபியின்
கடைசி சொட்டு ருசி
இன்றுவரை
எங்கேயும் கிடைக்கவில்லை!
தாலி கட்டிய போது
ஏன் அழுதாய்
என்று கேட்டதற்கு
உதடு சுழித்து தெரியாதென்றாய்,
எனக்கு
பதில் கிடைக்காவிடினும்
நீ உதடு சுழித்தது
பிடித்துப் போனது

நமக்குள் ஓடிய
குதிரைகள் அடங்கிய பின்
நீ கொடுத்த முத்தம் சொன்னது
காதலையா காமத்தையா?
வியர்வை துடைத்து விட்ட போது
காதில் கேட்டாய்
"இன்னுமொருமுறை இந்த
வியர்வை வேண்டுமா
இல்லை நான் வேண்டுமா?"
எதை எடுப்பது, எதை விடுப்பது?
நமக்குள் கூடல்கள் அதிகம்,
ஊடல்களை விட!
மழலையின் புன்னகை பார்த்து
நாம் மறந்த ஊடல்கள்
அதை விட அதிகம்.

அனுப்பிய அந்த
முதல் நாளில்,
சிரித்தபடி டாட்டா சொன்னது
என் செல்ல மகள்,
கண்ணீருடன் நீ,
எனக்குள் ஐயம்
இருவரில் யார் குழந்தை?
மகளுக்கு
முதலில் தாவணி அணிய
சொல்லித் தருகையில்,
நீ வெட்கப்பட்டதை பார்த்து
மகள் திட்டியதும்,
அதற்காக என்னிடம் நீ முறையிட்டபோது
நான் சிரித்ததையும்
நம் முற்றத்து விநாயகரைத்
தவிர வேறு யாருக்குத் தெரியும்?

கண்ணீருடன் நான்,
விசும்பலுடன் நீ,
இவ்வளவு நாள் மகள்
அணைத்து உறங்கிய
டெடி கரடி
அனைத்தும் அன்றுதான்
தனிமையாய்!
பேரனுடன் கொஞ்சிய நாட்களில்
நாம் கண்ட பேரின்பம்
நாம் வணங்கிய
தெய்வங்கள் தந்ததில்ல!

நீ இறைவனிடம்
சென்ற பிறகும் பல
இரவுகள் இப்படித்தான்
இந்த கவிதைகளை
படித்து சுகம் காண்கிறேன்.
இன்னும் குறையவில்லை
நீ கொடுத்த சுகங்கள்!
இன்று
தனியறையில் நான்,
உன் நினைவுகளோடு
வாழ்ந்தபடி.
ஒரு முற்றுபுள்ளியா
நம் சுகதுக்கத்தை
முடிவு செய்யப்போகிறது?
என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த
மரணத்தால்
அழிக்கமுடியவில்லை.
உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி
கண்ணீரையும்,
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!
அறுபது வருட வாழ்கையின் உணர்வுகளை ஒரு பக்க கவிதையில் அழகாய் சொன்னதிக்கு என்னோட சலாம்...
ReplyDeleteஒரு கணவன் மனைவிக்கு இடையே உள்ள சம்பாசனைகளை இவ்வளவு இயல்பாகவும் இனிக்கவும் சொன்ன உங்கள் சிந்தனைக்கு ஒரு சபாஷ்...
இதை எதையும் அனுபவிக்காமலே இவ்வளவு அழகாக எழுதிய உங்களுக்கு ஒரு பலே..
அருமை! அவ்வளவுதான் சொல்லத்தோணுதுஒவ்வொரு வரியா திரும்பப் படிச்சு அனுபவிக்கப் போறேன்!எல்லா வரிகளும் நன்றாகஇருந்தது .நல்லா இருந்தது.போட்டியில் வெற்றி பெற நல்லதொரு உணர்வுப்பூர்வமான அனுபவும். ..வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனசுக்குள் மத்தாப்பூ ....... இதயத்தில் இனம் புரியாத ஒரு வலி...............
ReplyDeleteமிகவும் நன்று. மேன்மேலும் இதுபோன்று கவிதைகளை நோக்கி....
starting is very nice but match with period (70s).
ReplyDeleteFinish I expect something more punch.
All the way it is very touching.
arumai arumai Ila.....super! - Vijay Subramanian
ReplyDelete