Saturday, October 11, 2014

நாலாங்கிழமையும் ஒருக்காமலையும்

இன்று புரட்டாசி நாலாங்கிழமை


ஒருக்காமலை

ருக்கல் மாமலை, இதுதான் இந்த மலையோட உண்மையான பேராம்.

ன்னுடைய குழந்தைப்பருவம் முதல், பள்ளிக்கூடம் முடிக்கிற வரை, இந்த மலைக்கு எனக்கும் ஒரு பெரிய பந்தம் இருந்தது. என் அம்மா பிறந்த இடம் இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. வீட்டிலிருந்து ஒரு ஃபர்லாங் தூரம்தான் மலை. ஆடு மேய்க்க, இலை, தழை பறிக்க, சுனை நீர் எடுக்க, கோவில் என பலதுக்கும் இந்த மலை வாழ்வின் அங்கமாகவே இருந்தது வந்தது. மலையின் உச்சியில் இருப்பது ஒரு பெரிய கல், உண்மையாகச் சொல்லப் போனால், இரண்டு பாறைகள் இருக்கின்றன. ஏன் ஒரு ஒருக்கல்லை மட்டும் சொல்றாங்கன்னு தெரியல. பெரிய கல்லின், அடியில்,20 அடி தூரம் ஒரு சாளரம் போல இருக்கும். அதில் அந்தக் காலத்திலேயே கோவில் மாதிரி அமைச்சிருக்காங்க. இப்ப வேற மாதிரி கட்டிட்டாங்க, வியாபார மயமான பின்னாடி, அதாவது அரசின் கவனத்துக்கு வந்து, சாலை அமைத்து, பேருந்து வசதி செய்து, மின்சாரம், தண்ணீர் வசதி அமைத்தப் பின். என்னுடைய பள்ளிக்காலத்தில் எந்த வசதியுமில்லை, மலையேறித்தான் போயாகனும். கல்லின் இடுக்குகளில், அதாவது பாளி(லி) என்று சொல்லும் இடங்களில்தான் தண்ணீர் எடுக்க வேண்டும். மழை வந்து தேங்கிய நீர்தான் அது. பந்தமும், விளக்குகளும்தான் வெளிச்சத்திற்கு. பாலித்தண்ணீர் அப்படிங்கிறதினாலதான் அங்கே சமைக்கும் பொங்கலுக்கும், பருப்புக்கும், ரசத்திற்கும் அவ்வளவு ருசியிருக்கும். பல நாடுகளிலும் அந்த சுவை கிடக்கவில்லை.

புரட்டாசி விரதம், எல்லாருக்கும் தெரிவது பெருமாளுக்காக விரதம் இருப்பது. எங்க ஊர்ப்பக்கத்தில் இந்த வழக்கம் வேற, முதலாங்கிழமை முதல் நாலாங்கிழமை வரை அசைவம் கிடையாது. முதலாங்கிழமை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை. புரட்டாசி என்பது விவசாயத்திற்கு சிறப்பான மாதம் , இந்த மாதம்தான்  பெரும் மழை பெய்யும், அடை மழை என்பது சாதாரணமாக இருக்கும், பள்ளத்தில் எல்லாம் தண்ணீர் ஓடும், பள்ளம் என்பது வண்டித்தடம், மாட்டு வண்டி போய் வரும் தடம், இந்த பள்ளத்தில்தான் மலையிருந்து வரும் நீர் பெருக்கெடுத்து மழைக்காலங்களில் ஓடும், தண்ணீர் ஓடாத நாட்களில் வண்டி ஓட்ட பயன்படுத்திக்கொள்வார்கள்.

ப்பாவின் தொழிலோ வெளியூர்களில் இருக்கும், தோட்டத்திலிருந்து அதிக தூரத்தில் இருக்காது. இன்று காரில் சென்றால் 10-15 நிமிடங்களில் தோட்டத்தை அடைந்துவிடுவோம். சாலை வசதி இன்று இருக்கிறது. அன்றைய நிலைமையோ வேறு. சங்ககிரி வந்து S4 பிடித்து, கீழ்க்கடையில் இறங்கி, காட்டு வழிப்பயணம், மாரியாயி கோயில் கடந்து, இரண்டு மூன்று உறவினர்கள் வீடுகள் கடந்து, ஒன்றிரண்டு வார்த்தைகளாவது பேசிவிட்டு,
கோட்டாங்கல் கரடு வழியே தோட்டத்தை வந்து சேர வேண்டும். அந்த வழிப்பயணமே ஒரு அலாதி இன்பமாக இருக்கும், அதுவும் நடைப்பயணம் வேறு,  வழியெங்கும் தண்ணீராய் ஓடும். வழக்கமாக வரும் வழியில் தண்ணீராய் இருக்க, தண்ணீரைத் தாண்டி, தாண்டி வளைந்து, நெளிந்து வந்து சேருவோம். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்தவுடனே, கிளம்பி சாயங்காலமே வந்து சேர்ந்துவிடுவதாகத்தான் இருக்கும். வந்தடவுடனே, கிணற்றில் குதிப்பதுதான் எனக்கு முதல் வேளையாய் இருக்கும். புரட்டாசி அடை மழை காரணமாக கிணற்றில் நீர் அதிகமாக இருக்கும். மேலேயிருந்து குதிப்பதுதான் என்னுடைய மிகப்பெரிய சவாலே. அதற்காகவே இந்த நாலாங்கிழமைக்காக காத்திருப்பேன்.

னிக்கிழமை காலையில் அம்மாயி, அம்மா, அத்தை எல்லாருமே பொங்கல் வைக்கத் தயாராகிவிடுவார்கள், காலை 6 மணிக்கெல்லாம் அப்பிச்சி, சொசைட்டியில் பாலை ஊற்றிவிட்டு வந்துவிடுவார். கிணற்றின் அருகே இருக்கும்  கொய்யா மரத்தின் ஓரத்தில்தான் பொங்கல், சமையல் வைப்பார்கள். அந்த இடத்தைச் சுத்தம் செய்வதை அம்மாயி பார்த்துக்கொள்வார்கள். எனக்கும் தாத்தாவிற்குமான வேலை கொலுமிச்சை  காய்களை பறிப்பதுதான், கொஞ்சம் கடிடமான வேலையும் கூட, காரணம், சரியாக கால் அடி நீளம் வரை இருக்கும் அதன் முட்கள். காய்களைப் பறித்து ஒரு மூட்டையில் கட்டிக் கொள்வார் அப்பிச்சி. நான் கிணற்றில் குதித்து கும்மாளமிட்டுக்கொண்டிருப்பேன். பிறகு அவரும் குளித்து முடித்துக் கிளம்பி, ஒருக்கா மலை ஏறத் தொடங்குவோம். ஆவாரம்பாளையத்திலிருந்து ஒரு
தடம் வரும்,அங்கேயிருந்து படி ஆரம்பிக்கும், அதுதான் ஒரு மலையடிவாரம். இன்னொரு அடிவாரம் தம்பி மாமா வீட்டிலிருந்து சற்று தள்ளியிருக்கும், அந்தப் படியில் ஏறினாலும் அடிவாரத்திலிருந்து வரும் வழியில் சேர்ந்துவிடும், படியென்பது 10-20 படிகள்தான், பிறகு எல்லாம் மண் பாதைதான். எங்களுக்கோ இந்த இருவழிகளுமே சற்று தூரம், அதனால் மலையினூடே ஏற ஆரம்பித்துவிடுவோம், வழியெல்லாம் இருக்காது,  குறுக்கில் சென்றால் சீக்கிரம் கோயில் சேர்ந்துவிடலாம்.

லையில்,  பாதிவழியில் சில கடைக்காரகள் கடை விரித்திருப்பார்கள். 3ம் கிழமையும், 4ங்கிழமை மட்டுமே வரும் வியாபாரிகள் அவர்கள், சங்ககிரி, கொங்கணாபுரத்திலிருந்து வரும் சிறு வியாபாரிகள் அவர்கள். கனமாக மழைக்காகிதம் (Plastic) சாக்குகளை விரித்து வியாபாரம் செய்வார்கள். கற்பூரம், சாமிக்குப்பூ, தேங்காய்,  பழம், ஊதுவர்த்தி, சில மிட்டாய்கள், முறுக்குகள், என்று ஒரு மூட்டையில் கட்டிவந்து பிறகு வியாபாரம் செய்பவர்கள். அவர்கள்தான் அப்பிச்சியின் குறியே இவர்கள்தான். இவர்களிடம் அப்பிச்சி கொண்டு சென்ற கொலுமிச்சை காய்களை விற்றுவிடுவார், எனக்குத் தெரிந்து அவர் அவ்வளவு பெரிய வியாபாரியெல்லாம் இல்லை. இருவரிடம் விலை கேட்பார், யார் அதிகம் கேட்கிறார்களோ அவரிடம் ரூபாய் ஒன்றோ இரண்டோ வைத்து விற்றுவிடுவார். கொலுமிச்சை புளிப்பு அதிகம் கொண்ட, எலுமிச்சைப் பழம் போல உருவத்தில்  பெரிய அளவில் இருக்கும், ஆனால் பச்சையாகத்தான் இருக்கும், பழுத்து நான் பார்த்ததேயில்லை. இதைத் தின்றால் தண்ணீர் தாகம் எடுக்காது, மலையில் நடப்பவர்களுக்கு இது உகந்தது, தண்ணீர் அதிகம் குடிக்கத் தேவையிருக்காது. மலையில் ஆங்காங்கே சுனை நீர் வேறு இருக்கும். ஆனாலும் இந்தக் காயை வாங்குபவர்கள் அதிகம், காரணம், அந்தப் புளிப்பும், அரிதாக வருடம் ஒரு முறை சாப்பிடுவதாலுமாக இருக்கலாம்.

      னக்கு ஞாபகம் இருந்த வரையில் நாங்கள் உச்சிகால பூஜைக்கெல்லாம் இருந்ததேயில்லை, போவோம், காயை விற்போம், பிறகு மலை இறங்கி வந்துவிடுவோம். வீட்டிற்கு வந்தால் சமையல் அநேகமாக முடிந்திருக்கும், அல்லது முடியும் தருவாயில் இருக்கும். அன்று எல்லாருமே ஒரு சிந்திதான், அதாவது காலையில் யாரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள், (ஒரு பொழுது). சமையல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். பச்சரியில் வைத்த பொங்கல், பச்சைப்பயிறு குழம்பு, புளி ரசம், 3 வகை காய்கள்(பெரியல்), அதிலும் கண்டிப்பாய் பூசணிக்காய் இருக்கும், புடலங்காய் இருக்கும், பீர்க்கங்காய் இருக்கும். இதைத் தவிர்த்து நான் பார்த்ததேயில்லை. வாழை இலை அறுத்து வருவது அப்பா/ மாமா வேலையாக இருக்கும். சாப்பிட ஆரம்பிக்கும் முன் “கோவிந்தா கோவிந்தோவ்வ்வ்வ்வ்” என்று உரக்கக் கத்துவோம், கண்டிப்பாய் அது அடுத்த தோட்டத்தில்/வீட்டில் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டும், அதாவது நாங்கள் விரதம் முடித்துவிட்டோம், நீங்கள் எப்படி என்பதாக இருக்கும் அந்த சத்தம்.

ன்றைய சாயங்காலம் போண்டாவோ, பஜ்ஜியோ, கச்சாயமோ, கண்டிப்பாக இருக்கும், சாயங்காலம் மதியம் வைத்த சமையல் மீதமிருக்கும், அதை உண்டு உறங்கிவிடுவோம், குடும்பமெல்லாம் ஒன்று சேர்ந்து பேசி மகிழ்ந்து தரையிலும், கயிற்றுக்கட்டிலும் உறங்கிவிடுவோம். அடுத்த நாள் காலை, அப்பிச்சி, நான், மாமா, அப்பாவென்று கோழிகளைப் பிடிப்பதுதான் முதல் வேலை. பிடித்து முடிப்பார்களோ இல்லையோ நான் கிணற்றில் குதித்திருப்பேன், 3 அல்லது நான்கு மணி நேரம் கண்ணீர் சிவக்கும் அளவுக்கு நீந்தி மகிழ்வேன். பசியுடன் நீந்தும் என்னை பெரும்பாலும் சாப்பாட்டிற்கு இழுந்துதான் வந்திருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் கோழி கொதித்திருக்கும், 10 அல்லது 10:30க்குள்ளாக சாப்பிட்டிருப்போம். வெற்றிலைப்பாக்குடன்,  நாட்கள் கட்டி காத்த விரதம் முடிவுக்கு வந்திருக்கும். மறுபடியும் அரட்டை, காய்கறிகளைப் பறித்து பைகளை நிரப்பி, சாயங்காலம் காப்பி குடித்தவுடன் கிளம்பிவிடுவோம்.

ன்று புரட்டாசியில் அடை மழை பெய்வதுமில்லை, ஊற்றெடுத்து பள்ளத்தில் தண்ணீர் ஓடுவதுமில்லை, கொலுமிச்சை மரங்களும் இல்லை, ஒருக்கா மலைக்கும் போவதில்லை, கிணற்றுக் குளியலும் இல்லை, கோவிந்தா கோவிந்தா என்று சத்தமும் இல்லை,  மணம் மணக்கும் அந்தக் கோழி குழம்பும் இல்லை, அப்பிச்சி, அம்மாயி, அம்மாவும் உயிரோடு இல்லை, ஆனால் அந்த ஈரம் படிந்த நினைவுகள் மட்டும் ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)