கூட்டத்தில் நடுநாயகமாக இருக்கும்பொழுது தனித்து இருப்பது போன்று ஒரு மனநிலை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருகிறேன், சிரிக்கிறேன், மீண்டும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனது எங்கோ இருக்கிறது. வெம்மை தணிக்க மழை பணிக்கிறது, சிறுதூறல் விழ, இடியுடன் மின்னலும் தூரமாய். நம்மைத்தாக்காத வரையில் அது எல்லாம் ஒரு சம்பவமே.
நாளைய தினத்தின் கவலையை நினைத்து இன்றைய சந்தோசத்தை இழந்துகொண்டிருக்கும் தருணமென்று மனதிடம் சொல்லிக்கொண்டிருந்தது அறிவு. அமெரிக்க மாலை நேரத்திற்கு சற்றும் ஒவ்வாமல் அனத்திக் கொண்டிருந்தது, காலை நேரத்து சென்னை பண்பலையொன்று. விழலுக்கு இறைத்த நீரைப்போல கிஞ்சித்தும் உபயோகமில்லாத விளம்பரங்கள். பிறகு தங்கம் விலை வருங்காலத்தில் ஏறுமென்றும், வாங்கி குவித்துக்கொள்ளவுமென்றும் ஒரு நிபுணர் சொல்லிக்கொண்டிருந்தார். உலோகங்களின் இழுவைக்கு இயந்து போகும் மனிதர்களை என்னவெனச் சொல்ல?
திடீரென்று ஒரு பாடல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வார்த்தையையும், துண்டு இசையையும் மனமொத்த ஒரு ஜீவனுடன் ரசித்தது நினைவுக்கு வருகிறது. அந்த ஜீவன் என்ன செய்துகொண்டிருக்குமென்று அந்த ஜீவனின் வீட்டிற்குள் புகுந்து வேவு பார்க்கிறது மனது. கற்பனை சொல்லும் அவரின் நிலையை ஏற்றுக்கொள்கிறது மனது. அது சந்தோஷமான நிகழ்வையே சொல்கிறது. மீண்டும் அந்த ஜீவனை சந்திக்கும் ஆவல் எழுகிறது. மழை வலுக்க ஆரம்பிக்கிறது. நினைவுகளை மீட்டெடுக்கும் பாடல் இன்னொருவருக்கு வேறொரு நினைவை தந்திருக்கும், சம்பந்தமேயில்லாமல் கூட இருக்கலாம். நினைவுகள் என்றும் ஒன்று போல இருப்பதில்லை, அது தேவையுமில்லை. நினைவுகளொன்றும் ரெட்டை கோடு போட்ட காகிதத்தில் எழுதப்படுவதில்லை, அதற்கு சட்டமுமில்லை, எல்லைக்கோடுமில்லை.
மீண்டும் விளம்பரம், ஏதோ ஒரு தேநீர் குடித்தால் குதூகலமாகிவிடலாமாம். சோகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தால் மனம் அப்படியொன்றும் குதூகலமாகிவிடுவதில்லை. தேநீருக்கெல்லாம் மனம் மாறுமென்றால், தேநீர் கடை அண்ணாச்சி எப்பொழுதுமே சந்தோசமாக இருக்க வேண்டும். கடை சாத்தும் அண்ணாச்சி வீட்டிற்கு போகும் வழியில் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கிப் போகையில்தான் குதூகலாமாவதைக் கண்டிருக்கிறேன். அவருக்கு பிரியாணிதான் ஊக்கம் போலும்.
ஒன்றொன்றுக்கும் சம்பந்தமேயில்லாத நினைவுகள், வாழ்க்கை நம்மை நகர்த்திக்கொண்டுதான் இருக்கிறது. நகர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். திடீரென்று சுற்றியிருந்த அனைவரும் சிரிக்கிறார்கள், நானும் சிரித்து வைக்கிறேன். அந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தமென்று எனக்கும் புரியவில்லை, அந்தச் சிரிப்பிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.