காலை, வெள்ளைனைய எழுந்திருச்சி(4:45-5:00) மாடு,எருமை பாலை பீய்ச்சிருவாங்க. கருக்கல்ல இருக்கறப்பவே சொஸைட்டிக்கு போயி பாலை ஊத்தியாவனும். நம்பூட்டும் சொஸைட்டிக்கும் ஒரு ஒன்ற மைல் இருக்கும்னு நினைக்கிறேன். பால் எடுத்துட்டுப் போவ பால் லாரி வரதுக்கு முன்னாடியே போயாவனும்.
சொஸைட்டியில் ரீடிங் பார்த்து புஸ்தவுத்துவத்துல குறிச்சிட்டு கிளம்புனா விடியறாப்ல மசமசன்னு இருக்கும்போதே வீட்டு வந்துரனும். அப்புறம் பாட்டி வெக்கிற காப்பிய குடிச்சிட்டு கிளம்பிரோனும். வருசையா தேங்காய் மரத்துல இருந்து உழுந்த தேங்காயெல்லாம் பொறுக்கி ஒன்னா இரு கூட்டானா சேர்த்துட்டு அப்படியே “2” போயிட்டு வந்துரனும். வரும்போதே பல்குச்சியில பல்லு விளக்கிட்டே திரும்ப வந்து, சாப்பிட தயாராயிரோனும். இந்த நேரத்துல பாட்டி கட்டுத்தாரைய கூட்டியிருக்கும், தயிர கடைஞ்சு மோராக்கியிருக்கும். ஒரு பெரிய தேங்கா அளவுக்கு வெண்ணை எடுத்து உரில போட்டும் வெச்சிருக்கும். வந்தவுடனே பழைய சோத்துக்கு மோரும் ஊத்தி குடுச்சிபுட்டா மணி 8 ஆயிருக்கும். காட்டுல வேல இருந்தா அப்படி பார்க்க வேண்டியதுதான். என்னவேலைன்னு கேட்குறீங்களா? தண்ணி கட்டுறது, பார் புடிக்கிறது, செடிக்கு மருந்து வெக்கிறது, கரும்புக்கு சோவை எடுக்கிறது, களை புடுங்குறது, பருத்தி புடுங்குறது, வயலடிக்கிறது, செடி வெட்டியாந்து உரம்போடுறது இப்படி மொறைக்கு ஒவ்வொரு வேலை இருக்கும்.
இதெல்லாம் காலை நேரத்துல மத்தியானம் சோறுங்கிறது 12-12:30க்குள்ள முடிஞ்சிரும். பெரும்பாலும் நேத்து வெச்ச குளம்புதான் சோத்தோட திங்கனும். மோர் ஊத்தி கரைச்சி குடிச்சிபுட்டா கண்ணை சொக்கிரும்.தென்ன மரமோ, புங்க மரத்தடியிலோ, இல்ல வேப்ப மரமோ ஒவ்வொரு ஊட்டுக்கு மின்னாடியும் இருக்கும், அப்படியே தூங்கிர வேண்டியதுதான். 2 மணிக்காட்டம் எந்திருச்சு ஆட்டையும், மாட்டையும் கரட்டுக்கு ஓட்டிக்கிட்டுப் போனா சாயங்காலம் ஆகிரும். 4-4:30ரக்கு ஊட்டு திரும்ப வந்து ஆட்டை எல்லாம் பட்டியில அடைச்சிபுடனும். மறுபடியும் பால் பீச்சினதும் காப்பி வெச்சுரும் பாட்டி. குடிச்சிட்டு பாலை எடுத்துட்டு சொஸைட்டிக்குப் போயிருவோம். அங்கே கதையடிக்கிறது, பொரணி பேசறதெல்லாம் அப்பத்தான் நடக்கும்.
[ஒலக்கச்சின்னானூர்- கோட்டான்கல் கரடு]
இந்த நேரத்துல பாட்டி சோறு பண்ணி வெச்சிருக்கும். சொஸைட்டியில இருந்து திரும்ப வந்ததும் அண்டாவுல தண்ணியூத்தி சூடு பண்ண வேண்டியதுதான். அதுக்குன்னே தேங்காய் மட்டை உரிச்சி அடுக்கி வெச்சிருப்போம். தேங்காய் உரிக்கிறதைப் பத்தி இன்னொருக்கா சொல்றேங்க. குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு தூங்கிர வேண்டியதுதான்.
[ஒலக்கச்சின்னானூர்- அப்பச்சி வீட்டுல இருக்கும் குளியலறை]
சனிக்கிழமைன்னக்கே பால் சொஸைட்டியில அந்த வாரத்துக்குண்டான பால் காசு வந்துரும். சனியன்னிக்கி கொங்கணாபுரம் சந்தை, ஆடு விக்க வாங்க வேலை இருந்தாப் போவலாம், காய் போட போவோம். அதுக்கு வெள்ளிக்கிழமையன்னிக்கே காயேல்லாம் பொறிச்சு சாக்குப்பையில கட்டி வெச்சிருவொம். மொதல்ல சைக்கிள்லதா போயிட்டு இருந்தோம். இப்போ டிவிஎஸ் 50 வந்ததிலிருந்து 4-5 மூட்டை அடிக்கி எடுத்துட்டு போயிரலாம். கண்டிப்பா தனியா போவ மாட்டோம், பங்காளிங்க எல்லாம் ஒன்னு கூடிதான் போவோம். அப்பத்தான் புரோக்கரு ஏமாத்தாம காசு தருவான்.
அதுவுமில்லா நாங்க பங்காளிங்க அல்லாரும் ஒன்னாப் போனாவே அவனுக்கு 407 அளவுக்கு வந்துரும்ல. அவனுக்கும் ஒரே வேளையாப் போயிரும். சனியன்னிக்கு கொங்கணாபுரம் போவற வேலையில்லைன்னா ஞாயித்துக்கிழமை சங்கீரி (சங்ககிரி) போயிருவோம். அன்னிக்குத்தான் சங்ககிரியில் சந்தை. அன்னிக்குத்தான் பலசரக்கு சாமான் வாங்குறதெல்லாம். கோழிபுடிக்கிறது எல்லான் ஞாயித்துக்கிழமைதான்.
அப்புறம் சினிமாவுல காட்டுறாப்ல பஞ்சாயத்தையெல்லாம் என் வாழ்க்கையிலேயே பார்த்தது இல்லீங். எங்க ஐயனும் பார்த்தது இல்லியாம். இட்லி தோசை எல்லாம் தீவாளுக்கும், ஆடி அமாவாசைக்கும்தான் கிடைக்கும் இல்லாட்டினா சந்தைக்குப் போறப்ப சாப்புட்டுவந்தாதான் ஆச்சு. சனிக்கிழமை சாயங்காலம் ஆனா பஜ்ஜியோ, போண்டாவோ, கச்சாயமோ, தேங்கா வடையோ பாட்டி சுடும். ஒரு ரவுண்டு கட்டிட்டா ரவைக்கு சாப்புடவே தோணாதுங்.
இந்த வாழ்க்கை முறை, 1990 களில் என் பள்ளிப் பருவத்தை அடிப்படையா வெச்சி எழுதுனதுங்க. 2000கள்ல டிவி வந்துச்சு, நாடகம், போன் எல்லாம் வந்துருச்சு. அதைப் பத்தி இன்னொரு நாள்ல எழுதறேனுங்.