"சாராயத்தில் பலவகை உண்டாம் ஓய்... "அடுகள்'ங்கற பெயருல சங்க காலத்திலேயே சாராயம் புழக்கத்தில் இருந்து தாம். பல வகைப் பழங்கள ஊறலாக்கி, அதை வடிச்சு சாராயம் குடிக்கும் பழக்கம் 17ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்துதாம்... "விறலி விடு தூது'ன்ற புஸ்தகத்துல இத எழுதி இருக்கா... "சாரம்'ங்கறது தான் சாராயம் ஆச்சாம்...
"பிராந்தி, விஸ்கி இதெல்லாம் முதல்ல, நெதர்லாந்து நாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு இறக்குமதி செஞ்சாளாம்... "நாட்டுச் சாராயம், கருப்பட்டி, வெல்லம், பேரீச்சம்பழம், வாழைப்பழம், தேங்காய், பனை - தென்னையிலிருந்து வடிக்கப்படும் கள், அரிசி ஊறல், கரும்புச்சாறு இதெல் லாம் ஊற வெச்சு நம்மூர்ல சாராயம் காய்ச்சினாளாம்...
"பட்டைச் சாரயம்ங்கறது என்ன தெரியுமா? "பழவகை, இனிப்புகள போட்டு, அந்த ஊறல் நாத்தமெடுத்து, சுவை கெட்டுப் போகாம தடுக்க, ஊறலோட, கருவேலம்பட்டை, வேப்பம்பட்டை போன்ற மரப்பட்டைகள் சேர்த்துப் போடுவாளாம்...
"அதனால தான் இது பட்டை சாராயம் ஆனதாம்... தேங்கா சாராயமும், பட்டைச் சாராயமும் உயர்ந்த சரக்குகளாம்... இலுப்பப் பூவை ஊற வைச்சு இலுப்ப சாராயமும் செய்தாளாம்...' என்றார்!
"இத்தோட, இப்பெல்லாம், ஊருக்கு ஊர், சுடுகாட்டிலும், வயற்காட்டிலும் காய்ச்சப்படும் கள்ளச் சாராயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்க... அப்பத் தான் சாராயப் பட்டியல் நிறைவு பெறும்...' என நான் கூற, வீரப்பா சிரிப்பு சிரித்தார் குப்பண்ணா!
சர்தார்:
இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் அது. அப்போது இந்தியாவில் விளைந்த அரிசிக்கு உலகச் சந்தையில் கிராக்கியே இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் பாஸ்மதி அரிசி அதை விடச் சுவைமிக்கது. பிரிவினையின் போது பாஸ்மதி விளைந்த நிலப்பகுதிகள் பாகிஸ்தான் வசம் சென்று விட்டன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. அவர்களின் அடிப்படைத் தொழிலே விவசாயம்தான். தங்களின் அரிசிக்கு உலக மார்க்கெட்டில் மதிப்பில்லாதது அவர்களை ரொம்பவே பாதித்தது. ஆனால் அவர்களிடம் பாஸ்மதி அரிசியின் விதைகள் கூட இல்லை. என்ன செய்வது? பஞ்சாப் மாநில சர்தார்ஜி விவசாயிகள் ரகசியமாக ஒன்று கூடினார்கள். எல்லை தாண்டி உள்ள பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி விதை நெல்லைக் கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள். அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. எல்லையில் உள்ள இருதரப்பு ராணுவத்துக்கும் கொடுக்கக் கூடிய லஞ்சப் பணமே கோடிக்கணக்கில் ஆகும்.
சர்தார்ஜிக்கள் அசரவில்லை. பஞ்சாபின் அனைத்து விவசாய கிராமங்களிலும் இதற்கான நிதி ரகசியமாகத் திரட்டப்பட்டது. தேவைப்பட்ட பணம் வசூலாகச் சில வருடங்கள் பிடித்தன..ஒரு நாள் நள்ளிரவு, பாகிஸ்தானிலிருந்து நாற்பது லாரிகளில் பாஸ்மதி விதை நெல் மூட்டைகள் எல்லை கடந்து பஞ்சாப் வந்தன. பாஸ்மதி விவசாயமும் கோலாகலமாக ஆரம்பித்தது. சர்தார்ஜிக்கள் உடனடி லாபத்தை எண்ணி அறுவடையை சந்தைக்கு அனுப்பவில்லை. எதிர்காலத்தை மனதில் வைத்து விதை நெல்லை சேமிப்பதற்காக அடுத்த சில வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அடுத்த சில வருடங்களில் அந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்தது. உலக அரிசிச் சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசி விற்பனையில் பாகிஸ்தானை ஓரம் கட்டியது. ராங் ரூட்டில் சென்றாலும் சர்தார்ஜிக்கள் சாமர்த்தியமாய் செய்துகாட்டிய பெரும் சாதனை இது. அப்படிப்பட்ட புத்திசாலி காரியக்காரர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!